ஒவ்வொரு கட்டமாக பதிவான வாக்குகள் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகள்!

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (இடமிருந்து இரண்டாவது) அவரது இடதுபுறத்தில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் (தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்)
    • எழுதியவர், வினீத் கரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் 1952 ஆம் ஆண்டு முதன் முதலாக பொது தேர்தல் பற்றிய பேச்சுகள் எழுந்த போது, `எப்படி நடத்தப்படும்’ என்று பலரும் யோசித்தனர். சுமார் 17 கோடி வாக்காளர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே எழுத படிக்கத் தெரிந்தவர்கள். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீவிரவாத குழுக்கள் வகுப்புவாத பதற்றத்தை தூண்டிவிடுவார்கள் என்ற அச்சம் நிலவியது.

உலக நாடுகளின் கவனம் இந்தியாவை நோக்கி திரும்பியது. கடுமையான சவால்கள் இருந்த போதிலும் புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில் வெற்றிகரமாக தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்த இந்திய ஜனநாயக செயல்முறையை முதலில் வலுப்படுத்தியது இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென். அதன் பிறகு டி.என்.சேஷன், ஜே.எம். லிங்டோ உள்ளிட்ட தலைமை தேர்தல் ஆணையர்கள் மேலும் வலுப்படுத்தினர்.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்தும் முழுப் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது.

தேர்தலில் வாக்களிக்க சுமார் 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் தான் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளின் மையமாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. இந்த வழக்குகளில் ஒன்றின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. அந்த வழக்கில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை வெளியிட காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வெளியிடுவது குறித்த மனு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான நிலைப்பாட்டை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் காமன் காஸ் ஆகிய அமைப்புகள், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பான படிவம் 17-சியின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றுவது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், மொத்த வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை அடுத்த மாதம் 24ஆம் தேதி விசாரிக்கிறது.

இது மட்டுமின்றி, தேர்தல் ஆணையம் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அரசு துறைகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படி, தேர்தல் சமயங்களில் கூட சட்ட அமலாக்க துறைகள் தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்பட வேண்டியது இல்லை. அவர்கள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும் தேர்தல் ஆணையம் கைது நடவடிக்கை போன்ற விவகாரங்களை நெறிமுறையுடன் பார்க்க வேண்டும். அதே சமயம் சில குற்றச்சாட்டுகள் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டவை.

தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகள்!

பட மூலாதாரம், PHOTO DIVISION

படக்குறிப்பு, இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் சுகுமார் சென்

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் இதுதான்-

  • பாஜக தலைவர்களின் வகுப்புவாத பேச்சு
  • காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட செய்தி
  • தேர்தல் பத்திர விவகாரம்
  • பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா உரையில், 'ஊடுருவுபவர்' மற்றும் 'அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள்’ போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் அவருக்கு பதிலாக பாஜக தலைவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
  • தேர்தலில் மொத்த வாக்கு எண்ணிக்கைக்கு பதிலாக வாக்கு சதவீதம் வெளியிடப்பட்டது.

இதன் மூலம், பல விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. ஆளும் பாஜகவிடம் தேர்தல் ஆணையம் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறது என்றும் எதிர்க்கட்சிகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில், தேர்தல் ஆணையம் ஒரு `பாரபட்சமான நடுவர்’ போல நடந்து கொள்கிறது என்றார்.

எதிர்க்கட்சியான `இந்தியா’ கூட்டணியின் பிரதிநிதிகளும் தேர்தல் ஆணையத்தை சந்தித்து புகார் அளித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க, தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ள பிபிசி பல முறை முயற்சி செய்தது, ஆனால் அவர்கள் தரப்பு பதிலைப் பெற முடியவில்லை.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் , "தேர்தல் செயல்பாட்டின் போது, அரசியல் கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்கிறது. ஏனெனில் அது அனைத்து அரசியல் கட்சிகளுடன் மரியாதையான, ஒத்துழைப்பு அளிக்கும் உறவை மேற்கொள்வதில் நம்பிக்கை உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகள்!

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மல்லிகார்ஜுன கார்கே

'தேர்தல் ஆணையம் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும்’

ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவு பேராசிரியரும், தேர்தல்களை கண்காணிப்பதற்கான சுயாதீன குழுவின் உறுப்பினருமான டாக்டர். ராகுல் முகர்ஜி, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் அதிருப்தியுடன் உடன்படுகிறார்.

"தேர்தல் ஆணையம் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும், பாரபட்சமற்றதாக நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் எப்படி பிரதமரின் சர்ச்சையான பேச்சுக்காக அவரை கண்டிக்காமல், அதற்குப் பதிலாக கட்சித் தலைவரைப் பொறுப்பாக்கியது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்." என்றார் அவர்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21 அன்று பிரதமர் மோதி, தனது தேர்தல் உரையில், முஸ்லிம்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததோடு, 'ஊடுருவுபவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகள் பெற்று கொள்பவர்கள்’ போன்ற வாக்கியங்களை பயன்படுத்தினார். இது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.

இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர், இந்தப் பேச்சு முஸ்லிம்களுக்கு எதிரான 'வெறுப்பு பேச்சு' என்று விமர்சித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோதிக்கு பதிலாக பாஜக தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், "தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் அதிருப்தியில் உள்ளது என்றால் நீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றார்.

தேர்தல் ஆணையத்தில் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், பிபிசி உடனான உரையாடலில், "பிரதமருக்கு எதிராக புகார் வரும் போது, பிரதமருக்கு தான் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்றார்.

பாஜக தலைவர் ஜேபி நட்டா, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பதிலில் பிரதமர் மோதியின் பரப்புரை பேச்சில் தவறில்லை என்று விளக்கம் கொடுத்தார்.

ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பன்ஸ்வாரா பிரசாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோதி, "எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதிக குழந்தைகளை உடையவர்களை பற்றி ஒருவர் பேசும் போதெல்லாம், அவர்கள் முஸ்லிம்களை பற்றி தான் பேசுகிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது? முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு அநியாயம் செய்கிறீர்கள்? ” என்று விளக்கம் கொடுத்தார்.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகள்!

பட மூலாதாரம், ANI

ஆனால் ஒரு பேரணியில், பிரதமர் மோதி மீண்டும் முஸ்லிம்கள் பிரச்னையில் காங்கிரஸைக் குற்றம் சாட்டி, "பாபா சாகேப் அம்பேத்கர் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். ஆனால் எஸ்டி, எஸ்சி, ஓபிசி மற்றும் ஏழைகளின் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் சொல்கிறது. உங்களின் சொத்துகளை அபகரித்து வாக்கு வங்கிக்கு கொடுக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது” என்றார்.

பிரதமர் மோதி ஏப்ரல் 21ஆம் தேதி நிகழ்த்திய சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த சர்ச்சைக்குரிய பேச்சுகளைத் தவிர, பாஜகவின் மூத்த தலைமை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கையில் 'ஷரியா சட்டம்' அல்லது 'முஸ்லிம் லீக்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறது. இந்த கருத்துகளை தேர்தல் ஆணையம் ஏன் கண்டுகொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவது இது முதல் முறையல்ல.

கட்சிகளின் எண்ணிக்கை, வாக்காளர்கள் எண்ணிக்கை, வாக்குச் சாவடிகள், எல்லாம் அதிகரித்துவிட்டன. கட்சிகளுக்கு இடையிலான சண்டைகள் கடமையாகிவிட்டது. தேர்தல் ஆணையம் மீதான புகார்களும் அதிகரித்துள்ளது" என்றார்.

'உறுதியான நிலைப்பாட்டை காட்டுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள்'

பல அரசு சாரா நிறுவனங்கள் மே 11 அன்று, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்தன. 'முதுகெலும்பு இல்லையா? ராஜினாமா செய்யுங்கள்' , 'உறுதியான நிலைப்பாட்டை காட்டுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள்' என்ற பிரசாரத்தை தொடங்கினர். மக்களவை தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகளை பலமுறை மீறிய போதும், தேர்தல் ஆணையம் 'செயலற்ற தன்மை' யில் இருப்பதாக அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்த பிரசாரத்தின் கீழ், மக்கள் அஞ்சல் அட்டைகளில் வாக்கியங்களை எழுதி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினர்.

பிரசாரத்தின் பகுதியாக, இதுவரை 12 நகரங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் புகார் கடிதங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பிரசாரத்தில் பங்கேற்ற வினய் குமார் கூற்றுப்படி, "தேர்தல்களின் போது வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு கட்டத்திலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று கோருகிறோம்,”

மக்களவை தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள 'பெரும் நிச்சயமற்ற தன்மையை' கருத்தில் கொண்டு, சில முக்கிய பிரமுகர்கள், படிவம் 17 சி-யின் முதல் பகுதியின் தரவை அதன் இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். இதன் மூலம் சரியான வாக்கு எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும்.

தேர்தல் தொடர்பான தரவுகளின் மீது எழுப்பப்பட்ட கேள்விகள்

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகள்!

பட மூலாதாரம், TWITTER

சீதாராம் யெச்சூரி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், மொத்த வாக்கு எண்ணிக்கையை ஏன் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை? ஏன் சதவீதமாக வெளியிடுகிறது? என்று கேள்வி எழுப்பினர். எண்ணிக்கையை எண்களில் வெளியிடவில்லை என்றால், சதவீதத்திற்கு அர்த்தம் இல்லை என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "தேர்தல் ஆணையம் இந்த சந்தேகங்களை குறைக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மட்டுமின்றி ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வாக்கு எண்ணிக்கை தரவுகளையும் வெளியிட வேண்டும். “ என்றார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பிபிசியிடம், "முன்பெல்லாம் வாக்களிக்கும் நாளிலேயே வாக்கு எண்ணிக்கை தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டன. வாக்கு சதவீதம், ஆண்கள் வாக்கு சதவீதம், பெண்களின் வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதம் அல்லது மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அல்லது சதவீதம் ஆகியவை வெளியிடப்பட்டன. மேலும், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் புள்ளி விவரங்கள் மாறக்கூடும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.” என்றார்.

பத்திரிகை அமைப்புகள் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், "ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்த பின்னரும், தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும். வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள்,மொத்த வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதம் என்ன என்பதையும் ஆணையம் தெரிவிக்க வேண்டும் ” என கோரிக்கை விடுத்துள்ளன.

தேர்தல் ஆணையம் பதில்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அளித்த பதிலில் , வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடும் `voter turnout’ செயலியில் அனைத்து தகவல்களும் உள்ளன என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பதிலில் "ஒரு தொகுதி, மாநிலம் அல்லது தேர்தலின் ஒரு கட்டத்தின் தனிப்பட்ட வாக்குப்பதிவு தரவுகளை வெளியிட ஆணையத்துக்கு சட்டப்பூர்வமாக அவசியம் இல்லை. ஏனெனில் மொத்த எண்ணிக்கையாக, சட்டப்பூர்வ படிவம் 17C இல் வாக்காளர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தலைமை அதிகாரியால் தயாரிக்கப்பட்டு, தற்போது உள்ள வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்களால் கையொப்பமிடப்பட்டது. 17C படிவத்தின் நகல்கள், வெளிப்படைத் தன்மையாக வாக்குச்சாவடி முகவர்கள் உடன் பகிரப்படுகின்றன.” என்று விளக்கம் கொடுத்துள்ளது.

தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜுன கார்கே -விடம், “உங்கள் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்து, எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செயல்பட அறிவுறுத்துகிறது” என்று பதிலளித்துள்ளது.

"அரசியல் கட்சிகளிடம் இதுபோன்ற வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அவர்களை மரியாதையுடன் நடத்துகிறோம். ஆளும் கட்சியிடம் தேர்தல் ஆணையம் மென்மையாக நடந்து கொள்கிறது என்று கூறுவது சரியல்ல, அதேசமயம் ஊடகங்கள் எதற்காக இப்படி ஒரு பிம்பத்தை வெளியிடுகின்றன என்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்து செயல்பட வேண்டியது அவசியம். ” என்று முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறினார்.

காலப்போக்கில் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகளை தாக்க புதிய வழிமுறைகளை கையாள்வதாகவும், ஒரு தலைவர் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கை, கொள்கை போன்றவற்றைத் தாக்கினால் அது நடத்தை விதிகளை மீறுவதாக இருக்காது. அமெரிக்கா போன்ற பிற ஜனநாயக நாடுகளைப் பாருங்கள். அங்கு தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் நம் நாட்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை.” என்றும் ராவத் கூறுகிறார்.

தேர்தல் ஆணையத்தில் முறைகேடுகளுக்கு இடமில்லை என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

தேர்தல் ஆணையத்தின் பிம்பம்

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகள்!

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னாள் தேர்தல் தேர்தல் ஆணையர் அருண் கோயல்

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பங்கை அரசாங்கம் ரத்து செய்துள்ளது, இந்த முடிவின் மீது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் அரசாங்கம் இந்த முடிவை நியாயப்படுத்தி வருகிறது.

இப்போது தேர்தல் ஆணையம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், `சுதந்திரமாக செயல்படும் அமைப்பு’ என்ற பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லையா?

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூற்றுப்படி, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது புதிய விஷயம் அல்ல என்கிறார்.

அவர் கூறுகையில் "தேர்தல் ஆணையம் மிகக் குறுகிய காலத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். அதன் செயல்பாட்டை நீதிமன்றத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கு முடிவுகளை எடுக்க மாதங்கள், சில நேரங்களில் ஆண்டுகள் ஆகும். ஆனால் தேர்தல் ஆணையம் அப்படி அல்ல. அதே சமயம் தேர்தல் ஆணையம் தவறே செய்யாது என்றும் நான் கூறவில்லை. " என்றார்.

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கி கொள்வதாக முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு கட்டத்திலும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டுவது வழக்கமாகி விட்டதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.

"தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக மீறியதற்காக வாக்காளர் அல்லது வேட்பாளருக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கட்சி அல்லது வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவோ தேர்தல் ஆணையத்துக்கு உரிமை வேண்டும் என்று நான் நீண்ட காலமாக கூறி வருகிறேன்.” என்கிறார்.

மறுபுறம், பேராசிரியர் ராகுல் முகர்ஜி தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கிறார்.

“தேர்தல் பத்திர விவகாரத்தை உச்சநீதிமன்றம் தான் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதை முன்வைத்தது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் குறித்து ஆணையத்திற்கு சந்தேகம் இருந்த போதிலும் அது மௌனம் காத்தது. தேர்தல் ஆணையர் (அருண் கோயல்) திடீரென்று ராஜினாமா செய்தார், அதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை, பின்னர் ஆளுங்கட்சி இரண்டு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுத்தது, எனவே தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ” என்று முகர்ஜி விமர்சனம் செய்தார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், "ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் எந்தப் பிரச்னையும் இல்லை, இந்த செயல்முறை மேம்பட்டுள்ளதாக நம்புகிறேன், ஏனெனில் முன்பு புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க குடியரசுத் தலைவருக்கு அரசாங்கம் பரிந்துரைகளை அனுப்பியது, ஆனால் இப்போது ஒரு பிரத்யேக குழு முடிவுகளை எடுக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரும் இந்த குழுவில் இருக்கிறார்” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)