மத்தியபிரதேசத்தில் 2 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளரே இல்லாத நிலை உருவானது எப்படி?

பட மூலாதாரம், @AKSHAYKANTIBAM
- எழுதியவர், ஷுரே நியாஸி
- பதவி, போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக மத்திய பிரதேச பா.ஜ.க சமூக வலைதளமான எக்ஸ்-இல் ட்வீட் செய்துள்ளது.
இந்தூரில் மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று (திங்கள், ஏப்ரல் 29) கடைசி நாள்.
மத்திய பிரதேச அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியா, அக்ஷய் காந்தி பாம், பா.ஜ.க-வில் இணைந்ததாக ட்வீட் செய்துள்ளார்.
கைலாஷ் விஜய்வர்கியா, அக்ஷய் காந்தியுடன் காரில் செல்ஃபி எடுத்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீ அக்ஷய் காந்தி பாம், பிரதமர் நரேந்திர மோதி, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, முதல்வர் மோகன் யாதவ் மற்றும் மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஜி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வுக்கு வரவேற்கப்பட்டார்," எனத் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவை வாபஸ் பெற்று பா.ஜ.க-வில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளரை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வரவேற்றுள்ளார்.
அவர் தன் எக்ஸ் பதிவில், "பிரதமர் நரேந்திர மோதியின் வெற்றிகரமான வழிகாட்டுதலின் கீழ் பா.ஜ.க-வின் முற்போக்கான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, இந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம், அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் எம்.எல்.ஏ ரமேஷ் மெண்டோலா முன்னிலையில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்," என தெரிவித்தார்.
பா.ஜ.க வேட்பாளர் லால்வானிக்கு எளிதான பாதை

பட மூலாதாரம், @ISHANKARLALWANI
காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதையடுத்து, பா.ஜ.க வேட்பாளர் சங்கர் லால்வானியின் பாதை மிகவும் எளிதாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்போது அவருக்கு எந்தவித சவாலும் இல்லை என்று நம்பப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பே காங்கிரசில் உள்ள யாருக்கும் அதுகுறித்து தகவல் கிடைக்காததால் காங்கிரசுக்கு இது பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பற்றி யாரும் பேச விரும்பவில்லை.
செய்தி அறிக்கைகளின்படி, மத்திய பிரதேசத்தில் கஜுராஹோவிற்குப் பிறகு, 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர்கள் யாரும் இல்லாத இரண்டாவது மக்களவைத் தொகுதி இந்தூர் ஆகும்.
‘இந்தியா’ கூட்டணியில் சமாஜ்வாதி கட்சிக்கு கஜுராஹோ தொகுதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் வேட்பாளர் மீரா யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
சூரத் குறித்த விவாதம்

பட மூலாதாரம், RUPESH
கடந்த வாரம், குஜராத்தில் உள்ள சூரத் தொகுதியில் பா.ஜ.க-வின் முகேஷ் தலால் தேர்தலை சந்திக்காமலேயே வெற்றி பெற்றார்.
அவருக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். அதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சூரத் மக்களவைத் தொகுதியின் ஏழு தசாப்த கால வரலாற்றில் இது முதல் முறையாக நடந்தது. சூரத்தில் மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் காங்கிரசின் நிலேஷ் கும்பானி உட்பட 6 பேரின் வேட்பு மனுக்கள் ரத்து செய்யப்பட்டன.
பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் தவிர, மற்ற எட்டு வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க பா.ஜ.க-வின் உத்தரவின் பேரில் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில், பா.ஜ.க இதனை மறுத்துள்ளது.
ஏப்ரல் 23 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.க சுயேச்சைகள் மற்றும் பிற வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெறுமாறு கூறியதாக ஒப்புக்கொண்டார்.
காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதற்கு முன்மொழிந்தவர்களின் போலி கையெழுத்தே காரணம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷின் ஆதரவாளர்களாக ரமேஷ்பாய் பல்வந்த்பாய் போலரா, ஜகதீஷ் நாக்ஜிபாய் சவாலியா மற்றும் துருவின் திருபாய் தமேலியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஜகதீஷ் சவாலியா நிலேஷ் கும்பானியின் மைத்துனர், துருவின் தமேலியா அவரது மருமகன் மற்றும் ரமேஷ் போலரா அவரது வணிக கூட்டாளியாக இருந்துள்ளார்.
இந்த 3 பேரும் நிலேஷ் கும்பானிக்கு மிகவும் நெருக்கமான நபர்கள் எனும் நிலையில், கும்பானி வேட்பு மனுவில் தங்களின் கையெழுத்து பொய்யானது என அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவருடைய ஆதரவாளர்களும் தொடர்பில் இல்லாமல் இருந்ததால், ஆதரவாளர்கள் கடத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












