இமயமலை: மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறிய நேபாள கிராமம் - மொத்தமாக காலி செய்த ஊர்மக்கள்

பட மூலாதாரம், Shanta Nepali
- எழுதியவர், துல்சி ரௌனியார்
- பதவி,
நீடித்த வறட்சியின் பிடியில் சிக்கிய சாம்சோங் கிராமத்தில் வசிக்கும் மக்கள் "தங்கள் கிராமத்திலேயே வசிப்பதா? அல்லது வெளியேறுவதா?" என்று ஒரு மிகப்பெரிய முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பக்கி குருங்கின் பால்ய நினைவுகளில், நேபாளம் மற்றும் திபெத்தின் தொலைதூர, வெறிச்சோடிய எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்கில் வீசும் காற்றுக்கு எதிர்த் திசையில் உற்சாகமாக ஓடி ஆடிய தருணங்கள் நிறைந்திருந்தன. ஒரு சிறுமியாக, பரந்த மணற்பரப்பில் சுற்றித் திரிந்தபோது, நீல வானத்துக்குக் கீழே ஒரு மணல் துகள் போல தன்னை மிகவும் சிறியதாக உணர்ந்ததை பக்கி குருங் நினைவு கூர்கிறார்.
``மேல் முஸ்டாங்கில் (Upper Mustang) 4,100மீ (13,451 அடி) உயரத்தில், குளிர்காலம் கடுமையாக இருக்கும். ஆனால் கோடைக் காலத்தில், பனிப்பாறை உருகி பளபளக்கும் நீரோட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்,” என்று வர்ணிக்கிறார் குருங்.
தற்போது 70 வயது முதியவரான குருங் தனது கிராமத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
"நாம் காலங்காலமாக ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறோம் என்று எங்கள் முன்னோர்கள் கூறுவது வழக்கம். ஒரு கட்டத்தில், நாங்கள் எங்கள் கிராமமான சாம்சோங்கில் வசிக்கத் தொடங்கினோம்” என்று அவர் கூறுகிறார்.
இந்த நாடோடிக் குடும்பங்கள் பல நூற்றாண்டுகளாகத் தங்கள் கால்நடைகளை வடக்கு திபெத்தின் புல்வெளி முழுவதும் ஓட்டி, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரும் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து வருகின்றனர். மேல் முஸ்டாங்கில் வசிப்பவர்கள் ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதிக்கு வந்தவர்கள்.
வடக்கிலிருந்து வந்த இந்த மக்கள் குழு தங்களுக்கென்று தனித்துவமான உள்நாட்டு கலாசாரம், மரபுகள், மொழிகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் முஸ்டாங்கிற்குள் வசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், செங்குத்தான பள்ளத்தாக்கு சுவர்களில் குகைகளைச் செதுக்கி வாழ்ந்தனர். இப்போது அந்த வாழ்விடங்களை `வான் குகைகள்’ என்று அழைக்கிறார்கள்.
காலப்போக்கில், முஸ்டாங்கில் மண் வீடுகளைக் கட்டினர், அதே நேரத்தில் அங்கு "உப்பு வணிகம்" தலைதூக்கியது - மத்திய மலைகள் மற்றும் சமவெளிகளில் திபெத்திய உப்பு மற்றும் கம்பளி வர்த்தகத்தை முன்னெடுத்தனர். கால்நடை வளர்ப்பை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த நாடோடி மக்கள் இமயமலையின் கடுமையான காலநிலைக்குத் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றனர். இப்போது, இந்தப் பகுதி அடிக்கடி மாறும் காலநிலையால் வாழக்கூடிய நிலையை இழந்து வரும் பகுதி என்ற (ground zero) நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
சாம்சோங் மக்களைப் பொறுத்தவரை, இடப்பெயர்வு என்பது தங்கள் முன்னோர்கள் கையாண்ட உயிர் பிழைப்புக்கான ஒரு வழி என்று எண்ணினர். ஆனால் இப்போது, அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள்.
கடந்த 1990களின் முற்பகுதியில் இந்த கிராமம் முதன்முதலில் வறட்சியின் பிடியில் சிக்கியது என்கிறார் குருங். பனிப்பாறைகள் நிறைந்த நீரோடை மெதுவாக மறைந்து கொண்டிருந்தது.
காலநிலை மாற்றத்தின் கடுமையான முகத்தை எதிர்கொண்ட அவர்கள், 2012இல் தங்கள் கிராமத்திலிருந்து வெளியேறி 10 மைல் (16 கிமீ) தொலைவில் உள்ள பகுதிக்கு குடிபெயர்ந்தனர். தங்கள் மூதாதையர் நிலத்தையும் கலாசார பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றனர்.
முகம் தெரியாத எதிரி

பட மூலாதாரம், Tulsi Rauniyar
சாம்சோங் நிலப்பரப்பில், நிலத்தடியில் உள்ள பெரும்பகுதி இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. ஆற்றங்கரை வறண்டுவிட்டது. நீர்ப்பாசனக் கால்வாயில் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய தண்ணீர் இல்லை. இந்தச் சூழல் விவசாய சவால்களை அதிகப்படுத்தியது. மோசமான பயிர் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கால்நடைகள் இறந்து போனதால், அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர்.
மேலும் இப்பகுதி கோடைக் காலத்தில் மோசமான மழையைச் சந்தித்தது. திடீரென வெள்ளம் அதிகமாக வந்தது. ஓராண்டுக்கு 200மில்லிமீட்டருக்கும் (7.9in) குறைவான மழையைப் பெறும் டிரான்ஸ்-இமாலயன் பகுதியில், ஒழுங்கற்ற மழை மற்றும் பனிப்பொழிவு கடுமையான நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
அதாவது குறைவான மழை அல்லது பனிப்பொழிவு நாட்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகும். இதன் விளைவாக ஒரே இடத்தில் வெள்ளம் மற்றும் வறட்சி நிலை உருவாகும். சாம்சோங் போன்ற ஒரு மலைக் கிராமத்தில், காலநிலை மாற்றத்தின் விளைவாகப் பெரும்பாலும் அழிவுகரமான திடீர் வெள்ளம் தாக்கும்.
மற்றொரு நிகழ்வாக கோடைக் காலத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும். 1988ஆம் ஆண்டில் ஒப்பீட்டளவில் அதிக வெப்பநிலையுடன் கூடிய கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக ஒரு பனிப்பாறை நிறைந்த ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வெள்ளம் நான்கு கிராமங்களை மூழ்கடித்தது, பெரிய பாறைகள் இடிந்து விழுந்தன, 36க்கும் மேற்பட்ட வீடுகளைத் தரைமட்டமாக்கியது, எண்ணற்ற கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன, மக்கள் வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த நிலப்பரப்பில் குப்பைகள் மற்றும் கற்பாறைகள் சிதறிக் கிடக்கின்றன, இது அந்த நிகழ்வின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக இருக்கும். இதற்கிடையில், 1990களின் பிற்பகுதியில், வறட்சி மிகவும் மோசமாகத் தாக்கியது.
பக்கி குருங் கூறுகையில் "எனக்குப் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை நான் இழந்துவிட்டேன். எங்களிடம் எந்தவிதமான உதவி அல்லது மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு எந்த வழியும் இல்லை. எங்கள் கிராமத்திற்கு முகம் தெரியாத எதிரி ஒரு சாபம் கொடுத்தது போல் தோன்றியது. நான் எங்கள் தெய்வங்களுக்கும் முன்னோர்களுக்கும் பிரார்த்தனை செய்தேன். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை," என்று விவரித்தார்.
நேபாளத்தின் இந்த தொலைதூர குக்கிராமத்தில் மின்சாரம், மருத்துவமனை, காவல் நிலையம் அல்லது சுகாதார மையம் எதுவும் இல்லை. மலைப் பிரதேசங்களில் வறுமை விகிதங்கள் நாட்டின் பிற பகுதிகளைவிட அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, பல மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ்கின்றனர்.
"இங்கேயே தங்கலாமா அல்லது வெளியேறலாமா?" என்ற ஒரு முக்கியமான முடிவை இந்தக் கிராமம் எடுக்க வேண்டியிருந்தது.
கிராமத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு குழு ஒன்றுகூடி விவாதித்ததை குருங் நினைவு கூர்ந்தார். 2006 கோடையில், கிராமத்தில் இருந்த ஒவ்வொரு குடும்பமும் தயக்கத்துடன் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். அடுத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்த அக்கறையின் காரணமாக, அவர்களின் வரலாறு, நினைவுகள் மற்றும் கலாசாரத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். தங்கள் மூதாதையர் வீடுகளைவிட்டு வெளியேற விரும்பவில்லை என்று பல பெரியவர்கள் பிடிவாதமாக இருந்தபோதிலும், தங்களுக்கு வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர்.
"அத்தகைய அழிவை எதிர்கொண்டதால், எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானோம்," என்கிறார் உள்ளூர் தலைவர் பசாங் செரிங்.
இதற்கு முன்னர் வாழ்ந்த கிராமத்தில் இருந்து ஏழு மைல் (11 கிமீ) தொலைவில் உள்ள ஒரு வளமான நிலத்திற்கு இடம் பெயர்வதற்கு கிராம மக்கள் அப்போதைய முஸ்டாங் அரசு நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். இவை அனைத்திற்கும் மத்தியில், ஆகஸ்ட் 1997இல், அருகிலுள்ள நகரமான லோ மந்தாங்கை சேர்ந்த ஒரு துறவிக்கு சுவிஸ் புகைப்படக் கலைஞர் மானுவல் பாயரின் அறிமுகம் கிடைத்தது. அவரின் ஆதரவையும் பெற முடிந்தது.
சுவிட்சர்லாந்தில் விரிவுரைகள் மூலம் நிதி திரட்டி கிராம மக்கள் இடம்பெயர்வதற்கு பாயர் உதவினார். 2016 வாக்கில், 86 குடியிருப்பாளர்களைக் கொண்ட 17 குடும்பங்கள் சாம்சோங்கில் இருந்து பசுமையான புல்வெளி என்று பொருள்படும் "நமஷுங்" எனப் பெயரிடப்பட்ட புதிய பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். லோ பகுதியின் தலைநகராக இருந்த லோ மந்தாங் நகருக்கு அருகில் செல்வதில் கிராமவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர், அது அவர்களுக்கு பொருளாதார செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள்.
ஒரு கிராமம் இடம்பெயர்வதற்கான செலவு

பட மூலாதாரம், Tulsi Rauniyar
நமஷூங்கை கட்டமைக்க ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. 1988 பனி ஏரி வெள்ளத்தின் எச்சங்கள் மற்றும் பருமனான கற்பாறைகளை அகற்றும் பணியுடன் இந்தக் கட்டமைப்புப் பணி தொடங்கியது. லாட்டரி முறை மூலம் சம பரப்புகளாகக் கிடைக்கக்கூடிய பகுதிகளைப் பிரித்து அவர்கள் மத்தியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மண், சுண்ணாம்பு போன்ற உள்ளூர் வளங்கள் கிராமவாசிகளின் புதிய வீடுகளின் கட்டுமானப் பொருட்களாக மாறியது. அதே நேரத்தில் பிற அத்தியாவசிய பொருட்கள் பிராந்திய சந்தைகளில் இருந்து பெறப்பட்டன. நமாஷுங்கில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரச்சாமான்களை உடைத்து, அதில் கிடைக்கும் மரப் பொருட்களை வீடு கட்டப் பயன்படுத்தினர். பெரும்பாலான கட்டட வேலைகளை குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் செய்தனர்.
பழைய கிராமத்தில், வீடுகள் இன்னும் மணல் தூசி படிந்து பழுப்பு நிறத்தில் நிற்கின்றன. சாம்சோங்கில் இன்னும் ஐந்து பேர் மட்டுமே வாழ்கின்றனர். அவர்களில் 65 வயதான டின்சென் ஆங்முவும் ஒருவர்.
"நாங்கள் ஆண்டுக்கு இருமுறை கடுகு, மரக்கோதுமை அல்லது பப்பரை மற்றும் கோதுமை அறுவடை செய்வோம்" என்று கூறியபடி அவர் மண்ணை உழுதார்.
“இப்போது போதிய தண்ணீர் இல்லாததால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோதுமை பயிரிடுகிறோம் ஐந்து பேருக்குக்கூட விளைச்சல் போதவில்லை. அவர்களால் உற்பத்தி செய்ய முடியாத உணவுப் பொருட்களை வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த அவர்களது உறவினர்கள் அவர்களுக்கு வழங்குகிறார்கள்."
"நாங்கள் இங்கு ஐந்து பேர் மட்டுமே இருக்கிறோம், புதிய கிராமத்துக்குச் சென்று மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க முடியாத அளவுக்கு வயதாகிவிட்டது. இது எங்கள் ஒரே வீடு, இங்கே எல்லாம் சரியாக இருக்கிறது. வெறுமையைத் தவிர... சில நேரங்களில் பயமாகவும் இருக்கிறது," என்கிறார்.
சாம்சோங்கில், அழிவின் வடுக்கள் தெளிவாகத் தெரிகின்றன, மேலும் பனிப்பாறை ஏரி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சுவிஸ்-நேபாள் நிலையான வளர்ச்சிக் கூட்டாண்மையான காம் ஃபார் சுட்டின் (Kam for Sud) அறிக்கைப்படி, புதிய இடம் "புவியியல் அபாயத்தைப் பொறுத்தவரை ஆபத்து இல்லை" என்கின்றனர். இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து நீர்ப்பாசனம் மற்றும் நீர் இருப்பு மேம்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Tulsi Rauniyar
ஆயினும்கூட, குருங்கும் மற்ற கிராமவாசிகளும் கடந்த காலத்தின் நினைவுகளான மடங்கள், வீடுகள் மற்றும் வான் குகைகள் போன்றவற்றுக்காக ஏங்குகிறார்கள், அவை ஈடுசெய்ய முடியாதவை என்கின்றனர்.
புதிய குடியேற்றத்தின் அனைத்து சவால்களும் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று நமாஷுங்கின் உள்ளூர் தலைவர் செரிங் கூறுகிறார். மக்கள் தங்கள் நீர் ஆதாரத்தை அண்டை கிராமமான நென்யோல் உடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இங்கு ஏற்கெனவே வசிக்கும் சமூகத்தினர் தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதாகக் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், நமாஷுங்கில் வசிப்பவர்கள், முன்னாள் அரச குடும்பத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதால், இன்னும் பாதுகாப்பான நில உரிமை பெறாமல் உள்ளனர்.
நேபாளத்தில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற பழங்குடி மக்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த பசாங் டோல்மா ஷெர்பா, சாம்சோங் போன்ற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு நில உரிமைகளை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார். அத்தகைய உரிமைகள் இல்லாமல், அவர்கள் வெளியேற்றம், ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள்.
கிராம மக்களின் மீள்குடியேற்றத்தை முறைப்படுத்த அவர்கள் குடியேறிய பின்னர், உள்ளூர் அரசாங்கம் அந்தச் செயல்முறையைச் சரிபார்த்து நில உரிமைச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இதுகுறித்து கருத்து கேட்க `பிபிசி பியூச்சர் பிளானட்’ தொடர்புகொண்டபோது, உள்ளூர் அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
புதிய இடத்தில் குடியேறினாலும், உள்ளூர்வாசிகள் தங்கள் பாரம்பரியத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் வரலாற்று மடங்கள் மற்றும் வான் குகைகள் காலநிலை மாற்றத்தால் அழியும் நிலையில் உள்ளது.
முஸ்டாங்கில், அதிகரித்து வரும் மழையினால் மண் கட்டடக்கலை சீர்குலைந்துள்ளது. வலுவான காற்று, ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை ஏற்கெனவே 15ஆம் நூற்றாண்டின் கிராம மக்கள் உருவாக்கிய மடங்களைப் பாதித்துள்ளன, அவற்றில் ஒரு காலத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த சுவர்கள் வெளிர் சாம்பல் நிறமாக மாறிவிட்டன. இதற்கிடையில், கிராமத்தின் குகைகள் விரிவான புதைகுழிகளைக் கொண்டிருக்கின்றன, அவற்றில் இமயமலையின் பௌத்தத்திற்கு முந்தைய வரலாற்றின் எச்சங்கள் தென்படுகின்றன.
"எங்கள் பிரியத்துக்குரிய வீடுகள் மற்றும் மடாலயங்களின் இழப்பை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டோம், எங்கள் கிராமத்தில் தலைமைப் பண்பு உள்ளவர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஆடு மேய்ப்பவர்கள், நாங்கள் கல்வி கற்கவில்லை. பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் வாழ்ந்து வருகிறோம்," என்கிறார் செரிங்.
காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்வு செய்வது நேபாளம் முழுவதும் நடக்கிறது. மேலும் பல இமாலய சமூகங்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்னையின் பிரதிபலிப்பாக அடையாளமாக சாம்சோங் நிலை காணப்படுகிறது. பக்கத்து கிராமமான தியே, அவர்களின் வரலாறு, நினைவுகள் மற்றும் கடந்த கால மரபுகளைவிட்டு, முழு குடியிருப்புகளையும் வளமான மற்றும் பாதுகாப்பான நிலங்களைக் கொண்ட இடத்திற்கு மாற்றியுள்ளது. மற்றொரு கிராமமான யாராவும் நகரவேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது.

பட மூலாதாரம், Tulsi Rauniyar
மத்திய நேபாளத்தில் உள்ள நுவாகோட்டில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிட்டத்தட்ட முழு கிராம மக்களும் காலப்போக்கில் படிப்படியாக இடம்பெயர்ந்தனர். இதேபோல், ரமேச்சாப்பின் மற்றொரு மாவட்டத்தில், ஒரு மீனவ சமூகம் அவர்களின் நதி வறண்டதால் திடீரென நகர்ந்தது, மற்றவர்கள் காத்திருக்க முடிவு செய்தனர். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சிறந்த வாழ்வாதாரங்களைக் கண்டறிவதற்கும் மக்கள் தாழ்வான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். இது குடும்பங்களுக்குள் உள் மோதல்களுக்கும் வழிவகுத்தது.
"கிராமப்புறங்களில் தங்குவதற்கான சாத்தியக்கூறுகள் சவாலானதாக மாறியுள்ளது" என்கிறார் நேபாளத்தின் படானில் உள்ள ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் வாழ்வாதாரம் மற்றும் இடப்பெயர்வுக்கான மூத்த நிபுணர் அமினா மஹர்ஜன்.
"சர்வதேச ஆதரவின் மூலம் சாம்ஜோங் இடம்பெயர முடிந்தது. ஆனால் நுவாகோட் மற்றும் ரமேச்சாப் ஆகிய கிராமங்கள் சர்வதேச அல்லது அரசாங்க உதவியை அணுக முடியவில்லை."
"இந்த காலநிலை-பாதிக்கப்படக்கூடிய மக்களில் பெரும்பாலோர் அரசாங்க ஆதரவின்றி தங்கள் சொந்த முயற்சிகளில் தங்கள் சொந்த பகுதிகளில் இருந்து புதிய பகுதிகளுக்குச் செல்கின்றனர். அதற்கான செலவு சுமை பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது சுமத்தப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.
சாம்ஜோங், இங்கு நீடிக்கும் நிலைக்கு உதாரணம் என்கிறார் மஹர்ஜன்.
"நடந்துகொண்டிருக்கும் இந்த இடப்பெயர்வு வெளிப்படையானது. எண்ணற்ற நபர்கள் வறண்ட பகுதிகளிலிருந்து கிராமப்புற வாழ்வாதாரங்களில் இருந்து தப்பித்துச் செல்வதை நாங்கள் கண்டிருக்கிறோம், அவை இனி சாத்தியமில்லை," என்று அவர் கூறுகிறார்.
"கடந்த தசாப்தத்தில் உலகளாவிய புலம்பெயர்ந்த மக்கள்தொகை கணிசமாக அதிகரித்துள்ளது, இடம்பெயர்ந்த நபர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கையை நிவர்த்தி செய்வதில் உள்ள கவலையை எடுத்துக்காட்டுகிறது. காலநிலை நெருக்கடி பல அதிக ஆபத்துள்ள பகுதிகளை வாழ முடியாததாக மாற்றும், மக்களை இடம்பெயரக் கட்டாயப்படுத்துகிறது," என்றார்.
மேல் முஸ்டாங்கின் வெப்பநிலை 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் குளிர்காலத்தில் 6 செல்சியஸ் முதல் 10 செல்சியஸ் வரையிலும், பருவமழை காலத்தில் 4 செல்சியஸ் முதல் 10 செல்சியஸ் வரையிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரந்த பிராந்தியத்திற்கு இன்னும் மோசமான நிலை ஏற்படும் என்று பலர் அஞ்சுகிறார்கள்.
இந்து குஷ் இமயமலை (HKH) மலைகளில் உள்ள பனி மற்றும் பனிப்பாறை ஆசியாவில் இரண்டு பில்லியன் மக்களுக்கு நன்னீரை வழங்குகிறது. 2023 ஆய்வின்படி, இங்குள்ள பனிப்பாறைகள் 2100ஆம் ஆண்டளவில் அவற்றின் தற்போதைய அளவின் 80% வரை இழக்கக்கூடும்.

பட மூலாதாரம், Shanta Nepali
ஆப்கானிஸ்தானில் இருந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வரை, கிராமப்புற மக்கள் நீண்டகால வறட்சி மற்றும் பாசனத்திற்கு உருகும் தண்ணீரை வழங்கும் பனிப்பாறைகள் காணாமல் போனதன் விளவுகளை அனுபவித்து வருகின்றனர்.
``உலகளவில், இயற்கைக்கு மிக நெருக்கமான சூழலில் வசிக்கும் சமூகங்கள், குறிப்பாக இயற்கை வளங்களைத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருப்பவர்கள், காலநிலை மாற்றத்தின் அதீத விளைவுகளை முதலில் சந்திக்கிறார்கள். வெப்பநிலை, ஒழுங்கற்ற மழைப்பொழிவு, பருவகால வடிவங்களில் ஏற்படும் மாற்றங்கள், மாற்றப்பட்ட இடப்பெயர்வு பாதைகள், தீவிரமடைந்த காற்று மற்றும் அலைகள், பனிப்பாறைகள் குறைதல், வறட்சி மற்றும் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்” என்று நேபாளத்தின் கிர்திபூரில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்தின் காலநிலை மீள்திறன் நிபுணரும் ஆய்வாளருமான தரம் உப்ரேடி கூறுகிறார்.
"ஆனால் ஒரு காலத்தில் சிறிய மாற்றங்களாக இருந்தது, இப்போது தீவிர நெருக்கடியாக மாறிவிட்டது. இதன் விளைவாக உலகளவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் பலவீனமான மனித சமூகங்களுக்கு முன்னோடியில்லாத மற்றும் நீடித்த பேரழிவுகள் ஏற்படுகின்றன," என்று அப்ரேடி கூறுகிறார்.
இந்தக் குளிர்காலத்தில் முஸ்டாங்கில் பனிப்பொழிவு இல்லை, கிராமவாசிகள் இப்போது மோசமான வறண்ட பருவத்திற்குத் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்கிறார்கள், ஏற்கெனவே குறைந்த நீர்ப்பாசனம் மேலும் குறையக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். மீண்டும் சாம்சோங்கில், கிராமம் அமைதியாக இருந்தது; வறண்ட, பரந்த நிலப்பரப்பைச் சுற்றித் திரியும் கால்நடைகள் அல்லது குழந்தைகள் தென்படவில்லை. காற்றினால் அடித்துச் செல்லப்படும் சிறிய பாறைகள் அல்லது குப்பைகளின் சத்தம் மட்டுமே அவ்வப்போது கேட்கிறது. அது அந்த இடத்தின் அமைதியைக் கலைக்கிறது.
குருங் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த சாம்சோங்கில் உள்ள தனது பழைய வீட்டின் முன் நன்கு தெரிந்த காய்ந்த புல்வெளியில் அமைதியாக நடந்து செல்கிறார். அவருக்கும் அவரது சமூகத்திற்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது, குருங் தலைகுனிந்து பார்த்துக் கூறுகிறார்: "எங்கள் நிலம் எங்கள் வரலாற்றைக் கொண்டுள்ளது. எங்கள் வரலாறு எங்கள் இருப்புக்கு உயிரூட்டுகிறது. எங்கள் மூதாதையர் நிலம், எங்களின் அடித்தளம், ஆபத்தில் உள்ளது. பேராபத்தில் உள்ளது" என்றார் கவலையுடன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












