சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: 'அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்' - சட்டம் சொல்வது என்ன?

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: 'மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்' - சட்டம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், MOHAMED IRFAN/FB

படக்குறிப்பு, முகமது இர்ஃபான், யூடியூபர்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் பிரபல யூடியூபரான இர்ஃபான் தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை துபாய் சென்று பரிசோதனை செய்து தெரிந்துகொண்டு, கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதைக் கூறும் ஒரு குடும்ப நிகழ்வின் (Gender Reveal party) மூலம் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதை அறிவித்திருந்தார்.

அதுகுறித்த ஒரு காணொளியையும் தனது ‘இர்பான்ஸ் வியூ’ (Irfan’s View) என்ற யூடியூப் சேனலில் மே 19 அன்று பதிவிட்டிருந்தார்.

இந்தியாவில், கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வு தடைச்சட்டம் 1994இன் படி (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற சில வெளிநாடுகளில் குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறியவோ அதை அறிவிக்கவோ எந்தத் தடையும் இல்லை.

‘இர்பான்ஸ் வியூ’ சேனலில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட அந்தக் காணொளி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இர்ஃபானும் இன்று (22.05.2024) தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரனைச் சந்தித்து விளக்கம் அளித்து, மன்னிப்பு கேட்டுள்ளார்.

இர்ஃபானின் காணொளி மிகப்பெரிய சர்ச்சையானது ஏன்? இந்தியாவில் தடை இருக்கும்போது, வெளிநாட்டில் போய் பரிசோதனை செய்து சிசுவின் பாலினத்தை அறிவதும் குற்றமா?

பாலின தேர்வு தடைச்சட்டம்

பாலின தேர்வு தடைச்சட்டம்

பட மூலாதாரம், Getty Images

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1994ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதுதான் கரு என்ற வார்த்தையும் முதன்முதலில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் கருப்பையில், சினைமுட்டையுடன் விந்து இணைந்த 8வது வாரத்தில், அதாவது 57வது நாளில் இருந்து குழந்தை பிறக்கும்வரை, அது 'கரு' (Foetus) என்று வரையறுக்கப்பட்டது.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே விரும்புவதாகக் கூறப்படும் சமுதாயத்தில், கருவுற்றிருக்கும் பெண்ணின் கருப்பை திரவம் சோதனை (Amniocentesis test) செய்யப்பட்டு, கருவில் உருவாகியிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால், கருவை கலைத்துவிடும் நடைமுறைகள் பல இடங்களில் இருந்தன.

கரு உருவாவதற்கு முன்னதாகவோ, பிறகோ பாலின தேர்வைத் தடை செய்யவும், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் தொழில்நுட்பத்தைச் சீரமைக்கவும், பரம்பரை மாறுபாடுகள், வளர்சிதை மாறுபாடுகள், குரோமோசோம் மாறுபாடுகள், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றுக்காகச் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளை முறைப்படுத்தவும் இந்தச் சட்டம் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கருவில் இருப்பது பெண் என பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டதால், 1980 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக 'லேன்செட்' (Lancet) என்ற சர்வதேச மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது. 1990களில் கருக்கலைப்பு விகிதம் அதிகமாக இருந்தது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுளளது.

பெண் சிசுக்களைக் கொல்வதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட பாலின தேர்வு தடைச் சட்டத்தை மீறும் மருத்துவருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

யூடியூபர் இர்ஃபானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: 'மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்' - சட்டம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், @TNDIPRNEWS

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று இரவு (21.05.2024) வெளியிட்ட அறிக்கைப்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் மாநில அமலாக்க அலுவலர் மற்றும் இயக்குநர் சார்பாக இர்ஃபானுக்கு மே 21ஆம் தேதியன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

"இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது," என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, இர்ஃபான் பதிவிட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டுமென யூடியூப் தளத்திற்கும் சைபர் குற்றப் பிரிவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள இர்ஃபானின் அலுவலகத்திற்குச் சென்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் இந்த நோட்டீஸை வழங்கியுள்ளனர்.

தமிழக அரசு கூறுவது என்ன?

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: 'மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்' - சட்டம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், BSIP

இந்தப் பிரச்னை தொடர்பாக பிபிசியிடம் பேசிய தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், “இந்தியாவில் பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் மிக முக்கியமானது பாலினத் தேர்வு தடைச்சட்டம். குழந்தையின் பெற்றோராக இருந்தால்கூட சிசுவின் பாலினத்தை பொது வெளியில் சொல்வது குற்றம்,” என்று கூறினார்.

இர்ஃபான் துபாய் சென்று சிசுவின் பாலினத்தை சோதனை மூலம் தெரிந்துகொண்டது தவறு இல்லையென்றாலும், அதை லட்சக்கணக்கானோர் பார்க்கும் வகையில் காணொளியாகப் பதிவிட்டது மிகப் பெரிய தவறு என்கிறார் இளங்கோ மகேஸ்வரன்.

அதோடு "சமூகத்தில் பிரபலமாக உள்ள நபர்கள் செய்யும் செயல்களை மக்கள் அதிகமாகக் கவனிக்கிறார்கள் என்பதால், இதை அவர் செய்திருக்கக் கூடாது,” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க இன்று தங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்த யூடியூபர் இர்ஃபான், வீடியோ பதிவிட்டது தொடர்பாக மன்னிப்பு கேட்டதாகவும், சர்ச்சைக்குரிய காணொளியை அவர் நீக்கிவிட்டதாகவும் இளங்கோ மகேஸ்வரன் தெரிவித்தார்.

"பாலின தேர்வு தடைச்சட்டத்தின் தீவிரத்தன்மை குறித்து இர்ஃபானுக்கு எடுத்துச் சொன்னோம். அதைப் புரிந்துகொண்டு இது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு காணொளியையும் விரைவில் தனது சேனலில் பதிவிடுவதாக உறுதியளித்துள்ளார்,” என்று கூறினார் அவர்.

சட்டம் சொல்வது என்ன?

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: 'மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்' - சட்டம் சொல்வது என்ன?
படக்குறிப்பு, வழக்கறிஞரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தன்பாலின உரிமைகள் ஆர்வலருமான பி.எஸ்.அஜிதா.

இந்த சர்ச்சை தொடர்பாக, இர்ஃபான் மீது சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து வழக்கறிஞரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தன்பாலின உரிமைகள் ஆர்வலருமான பி.எஸ்.அஜிதாவிடம் கேட்டோம்.

“இந்தியாவில் சிசுவின் பாலினத்தைத் தெரிந்துகொள்ள தடை உள்ளது, ஆனால் துபாய் சென்று அவர் இதைச் செய்துள்ளார். எனவே சட்டரீதியாக இதற்கு அவரைத் தண்டிக்க முடியாது. அதேபோல காணொளி வெளியிட்டதற்கும் சட்டப்படி தண்டனை கிடையாது. ஆனால் தார்மீக ரீதியாக இது மிகப்பெரிய தவறுதான்,” என்று கூறுகிறார் அஜிதா.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய சட்டப்படி பாலின தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது என்ற முறையில் அவருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை கொடுக்கலாம். சட்டத்தின்படி அவர் ஒரு கடுமையான குற்றவாளியாக இல்லாதபோது அவரைச் சட்டம் தண்டிக்கவோ அல்லது அவர் மீது வழக்குத் தொடரவோ முடியாது."

"அவர் மன்னிப்பு கோரியது போதுமானது என்று நினைக்கிறேன். யாராக இருந்தாலும் பாலின தேர்வை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது,” என்று கூறினார்.

‘இன்றும் தொடரும் பெண் சிசுக் கொலைகள்’

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: 'மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்' - சட்டம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெளிநாட்டில் இருக்கும் ஆண்- பெண் சமத்துவ நிலைக்கும், இந்தியாவில் உள்ள நிலைக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார் அ.தேவநேயன்.

ஆண்- பெண் விகிதாச்சாரம் குறைவாக இருக்கும் இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில் இத்தகைய விஷயங்களை பொது வெளியில் ஒரு கொண்டாட்ட நிகழ்வாகக் காண்பிப்பது மிகப்பெரிய தவறு என்று கூறுகிறார் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன்.

“இன்றும்கூட இந்தச் சமூகத்தில் ஆண் குழந்தை வேண்டும், பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் சிலர்கூட இப்படி நினைக்கிறார்கள்,” என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசுகையில், “ஆணோ அல்லது பெண்ணோ, இரண்டுமே குழந்தைதான், பிறப்புக்கு முன்பே பாலின ரீதியில் அந்தக் கருவை பிரித்துப் பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த பாலின தேர்வு தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் தொடர்பாகப் பல பதிவுகள் உள்ளன."

"திருவண்ணாமலையில் சில வருடங்களுக்கு முன்புகூட ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் சில ஸ்கேன் மையங்கள் கூட்டாகப் பல கருகலைப்புகளைச் செய்ததாக செய்தி வெளியாகி தமிழகத்தை உலுக்கியது. எனவே பெண் சிசுக் கொலை என்பது எப்போதோ நடந்த ஒன்று அல்ல, இன்றும் அது நடக்கிறது” என்று கூறுகிறார் அ.தேவநேயன்.

கடந்த 2018ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில், ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் மூன்று ஸ்கேன் மையங்களில் கருவில் இருப்பது பெண் குழந்தையா என்று சோதனைகள் நடத்தி, ஒரு மருத்துவர் பத்து ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் கருக்கலைப்புகளைச் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று ஸ்கேன் மையங்களும் விதிகளை மீறி கருக்கலைப்பில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனையும் சீல் வைக்கப்பட்டதோடு, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: 'மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்ஃபான்' - சட்டம் சொல்வது என்ன?
படக்குறிப்பு, குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன்

“வெளிநாட்டில் இருக்கும் ஆண்- பெண் சமத்துவ நிலைக்கும், இந்தியாவில் உள்ள நிலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே அங்கு நடக்கும் நிகழ்வுகளை (Gender reveal parties) இங்குள்ள சூழ்நிலையோடு ஒப்பிட முடியாது. இத்தகைய நிகழ்வுகளை இந்தியாவில் நடத்துவது ஏற்புடையதல்ல," என்று வலியுறுத்துகிறார் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன்.

மேலும் அவர், "அவரைப் பார்த்து பிறரும் இதைச் செய்யாமல் இருக்க, பெண் சிசுக் கொலை தொடர்பாகவும், இந்தச் சட்டம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்,” என்று, கூறினார்.

இந்த சர்ச்சை குறித்தும், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரிடம் அவர் அளித்த விளக்கம் குறித்தும் யூடியூபர் இர்ஃபானை தொடர்புகொள்ள முயன்றபோது, எங்களது அழைப்புக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)