இரானில் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் இவர்கள் யார்?

பட மூலாதாரம், GETTY
- எழுதியவர், ஃபரன் தகிசாதே
- பதவி, பிபிசி பெர்ஷிய சேவை
இரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு மக்கள் மத்தியில் கலவையான எதிர்வினை நிலவுகிறது. ஒருதரப்பு துக்கம் அனுசரித்து வருகிறது. மற்றொரு தரப்பு கொண்டாடி வருகிறது. ரைசியின் மரணத்திற்குப் பிறகு இரான் சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் இதனை பிரதிபலிக்கின்றன.
இப்ராஹிம் ரைசியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி பதிவுகள் குவிந்து வருகின்றன. நாட்டிற்கு அவர் செய்த சேவைகளை நினைவுகூர்ந்து பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தள பயனர் ஒருவர், "நாங்கள் அனைவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் : "நீங்கள் ஒரு சிறந்த ஆளுமை. நாட்டு மக்களின் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளீர்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். சில பிரபல இரானிய கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்ராஹிம் ரைசிக்கு அஞ்சலி செலுத்தினர்.
கால்பந்து வீரர் கமல் கம்யாபின்யா ரைசியின் புகைப்படத்தை பகிர்ந்து இஸ்லாமிய வாக்கியத்தை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினார். கமல் கம்யாபின்யாவை இன்ஸ்டாகிராமில் 24 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
ஹெலிகாப்டர் விபத்து பற்றிய செய்திக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள அரசாங்க ஆதரவாளர்கள் ரைசிக்காக பிரார்த்தனை செய்ய கூடினர். திங்கட்கிழமை டெஹ்ரானில் ரைசியின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனால் இரானில் ரைசிக்கு அஞ்சலி செலுத்தவும், கௌரவிக்கவும் பெருந்திரளான மக்கள் கூட்டம் எங்குமே கூடவில்லை.
மற்றொரு புறம் மக்கள் பலர் ரைசியின் மரண செய்திக்கு மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தினர். கொண்டாட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிலர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோக்களில் மக்கள் மகிழ்ச்சியாக பட்டாசு வெடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
யாருக்கு நல்ல செய்தி?

பட மூலாதாரம், GETTY
ரைசியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பழைய பதிவுகளின் கீழ், மக்கள் அவரது மரணத்தை நல்ல செய்தி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
"நல்லவேளை ஹெலிகாப்டர் விபத்தில் எந்த மரமும் சேதமடைவில்லை என நம்புகிறேன்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ரைசிக்கு எதிரான சில கடுமையான கருத்துகள் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இரானின் பெரும்பான்மையான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சமூக ஊடகங்களில் இருந்து கணிக்க முடியாது. இரானில் , பெரும்பாலான இளைஞர்கள் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் அதிகம் பயன்படுத்துவது இளம் தலைமுறையினர் தான் என்பதால், ரைசியின் மரணத்தை கொண்டாடுபவர்களில் கணிசமானோர் இளைஞர்கள்தான்.
எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களும் இரானில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் கூட சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்கிறார்கள்.
இரானில் முக்கிய சமூக வலைத்தளங்களுக்கு தடை இருந்தபோதிலும், பெரும்பாலான இளைஞர்கள் `VPN’ மூலம் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், சமூக ஊடகங்களில் ரைசி மரணத்தை கொண்டாடும் வகையில் பதிவிட்டுள்ள இரானியர்கள் இரானில் இருந்து பதிவிட்டுள்ளனரா அல்லது இரானுக்கு வெளியில் இருந்து செய்துள்ளார்களா என்று உறுதியாக கூற முடியாது.
1980களில் ஆணையம் அமைத்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு மரண தண்டனை விதித்த விவகாரம் தொடர்பாகவும் ரைசி தற்போது விமர்சிக்கப்படுகிறார். அந்த ஆணையத்தில் துணை வழக்கறிஞராக ரைசி இருந்தார். இந்த நான்கு பேர் கொண்ட குழுவை மக்கள் `மரணக் குழு’ என்று அழைத்தனர். இந்தக் குழு, இரானின் அப்போதைய உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி தீர்ப்பின்படி ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை தூக்கிலிட்டது.
கடந்த கால பதிவுகள்

இரானில் உள்ள சில சமூக வலைத்தளப் பயனர்கள் ரைசியின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் துருக்கிய ஜனாதிபதியுடன் இணைந்து பிரபல இரானிய கவிஞர் ஹபீஸின் கவிதையிலிருந்து பிரபலமான வரியை வாசித்துள்ளார்.
ரைசி பாலத்தீனர்களுக்காக இந்த வரியை பேசியிருந்தார். அந்த வரிகளின் அர்த்தம் "கொடுங்கோல் ஆட்சி செய்யும் சர்வாதிகாரி வீட்டிற்கு வரமாட்டார் என்பதில் மகிழ்ச்சியாக இருங்கள்”.
யுக்ரேன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 இல் 167 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் சிலர் நினைவுபடுத்தி பதிவிட்டனர். இந்த விமானம் ஜனவரி 2020 இல் இரானின் புரட்சிகர காவல்படையால்(ஐஆர்ஜிசி) சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது யுக்ரேன் விமானம் மீது தவறுதலாக ஏவுகணை பாய்ந்ததாக ஐஆர்ஜிசி கூறியது. பின்னர், இரான் இந்த வழக்கில் 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் கீழ்மட்ட அதிகாரிகள் தான், உயர்மட்ட அதிகாரிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று சிலர் தங்களது பதிவுகளில் தெரிவித்தனர்.
யுக்ரேன் விமான விபத்தில் இரானைச் சேர்ந்த ஹமாத் இஸ்மாயிலின் தனது மகள் மற்றும் மனைவியை இழந்தார்.
ஹமாத் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவர் தனது எக்ஸ் தளத்தில், "மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ரைசி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டார்.
இஸ்மாயிலின் தற்போது சமூக ஆர்வலராக இருக்கிறார். 1980களில் இரானில் ஆயிரக்கணக்கான மக்கள் தூக்கிலிடப்பட்டதை அவர் குறிப்பிடுகிறார்.
"யுக்ரேன் விமானம் இரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, ரைசி உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான உரிமை வழங்கப்படவில்லை, ரைசியின் பெயர் எப்போதும் வரலாற்றில் குற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கும்" என்று இஸ்மாயிலின் கூறுகிறார்.
இரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினியின் மரணத்திற்குப் பிறகு 2022 இல் இரானில் வெடித்த கிளர்ச்சியையும் மக்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். 22 வயதான மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்தார். ரைசி அந்த ஆண்டுதான் இரானின் அதிபரானார்.
ஹெலிகாப்டர் விபத்தில் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனும் உயிரிழந்தார். அவர் முன்னர் பகிர்ந்த கருத்து ஒன்று மறுபகிர்வு செய்யப்பட்டது. அதில் அவர் ஒரு நிருபரிடம், "இரானில் நடந்த போராட்டங்களில் எந்த உயிரிழப்பும் இல்லை" என்று கூறுகிறார்..
ஆனால் உண்மையில், 2022ல் இரானில் நடந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இரான் அதிபர் இறந்தால், ஆடையில்லாப் புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்வேன் என்று எக்ஸ் தளத்தில் சமூக ஊடக பிரபலம் @Banafshehviola, ஞாயிற்றுக்கிழமை இரவு கூறியிருந்தார். பின்னர் அவர் "ஓ இது உண்மையில் மரணம் தானா’’ என்று பதிவிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












