பசு சாணத்தில் புதிய திட்டம் - மத்திய அரசின் எண்ணம் ஈடேறுவது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ப்ரீத்தி குப்தா
- பதவி, பிபிசி நிருபர்
ருக்மணி பாபுராவ் கும்பார், ஒவ்வொரு நாளும் வெறும் கைகளால் சுமார் 50 கிலோ மாட்டுச் சாணத்தைச் சேகரிக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறிய ஆசிரமம் நடத்தி வரும் ஆன்மீக அமைப்பு ஒன்றின் பங்குதாரராக உள்ளார் ருக்மணி.
பயோமீத்தேன் அல்லது உயிரிவாயு தயாரிக்க இந்தப் பசுவின் சாணம் சேகரிக்கப்படுகிறது. "எரிபொருள் செலவு மிகவும் உயர்ந்துள்ளது. பயோகேஸ் அதற்கு ஒரு நல்ல மாற்று. அதை உருவாக்கத் தேவை சிறிது இடம் மற்றும் பசுக்கள் மட்டுமே. எங்களிடம் இரண்டும் உள்ளன," என்கிறார் ருக்மணி.
சேகரிக்கப்பட்டப் பசுவின் சாணத்தை தண்ணீரில் கலந்து உயிரிவாயு உலைகளில் (Bioreactor) போடுகிறார்கள். அங்கிருந்து ஆசிரமத்தின் சமையலறைக்குத் தேவையான மீத்தேன் தயாரிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் நிறுவப்பட்ட இந்த உயிரிவாயு உலை மூலம், ஆசிரமத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் 20 லிட்டர் சமையல் எரிவாயுவுக்கான செலவு மிச்சமாகிறது.
'நிதி ஆயோக்' புள்ளிவிவரங்களின்படி, இந்தியக் கால்நடைகள் ஒரு நாளைக்கு 30 லட்சம் டன் சாணத்தை உற்பத்தி செய்கின்றன. இந்தச் சாணம் மற்றும் பிற விவசாயக் கழிவுகளை மீத்தேன் வாயுவாக மாற்ற முடியும் என அரசு நம்புகிறது.

பட மூலாதாரம், HAIBOWAL DAIRY COMPLEX

பட மூலாதாரம், RUKMINI KUMBHAR
உயிரிவாயு உற்பத்தி மையங்கள்
ஆசிரமத்திற்கான பயோமீத்தேன் செயல்முறை என்பது பெருமளவு மாட்டு சாணத்தை தினமும் சேகரிக்கும் கடினமான பணியை உள்ளடக்கியது. ஆனால், ருக்மணி அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
"இந்தியாவின் பெரும்பாலான கிராமப்புறங்களில், விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. எனவே, மாட்டுச் சாணத்தை அள்ளுவது பெரிய விஷயமல்ல," என்று அவர் கூறுகிறார்.
ஆசிரமத்தில் தங்க வரும் சிலருக்கு இந்தப் பணியில் ஆர்வம் இருப்பதில்லை.
“ஊரிலிருந்து எங்களோடு தங்க வரும் சில பெண்கள், இந்த மாட்டுச்சாண வாடைக்கே ஓடிவிடுகிறார்கள். பசுவின் சாணத்தைத் தொடவே பயப்படுகிறார்கள். நாங்கள் அவர்களை வற்புறுத்துவதில்லை," என்கிறார்.
“பின்னர் கொஞ்சம்கொஞ்சமாகப் பழகி எங்களுக்கு உதவத் தொடங்குகிறார்கள். இங்குள்ள பசுக்கள் நல்ல தரம் வாய்ந்தவை, எனவே மாட்டுச் சாணத்தில் அவ்வளவு மோசமான நாற்றம் இருக்காது" என்று விளக்குகிறார் ருக்மணி.
உயிரிவாயு உற்பத்தி மையங்களில் (Biogas plants) காற்று புகாத தொட்டிகளில் கழிவுகள் செலுத்தப்படுவதால், இயற்கை பாக்டீரியா கரிமப் பொருட்களைச் சிதைக்கிறது.
இந்தச் செயல்முறை மூலம் வாயுக்களின் ஒரு கலவை உருவாகிறது. அந்தக் கலவையில் இருக்கும் முக்கியமான வாயுக்கள், மீத்தேன் (சுமார் 60%) மற்றும் கார்பன் டை ஆக்சைடு.

பட மூலாதாரம், Getty Images
பயோமீத்தேன் அளவை அதிகரிக்க அரசு உத்தரவு
தற்போது, இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் கிட்டத்தட்டப் பாதியை இறக்குமதி செய்கிறது. வெளிநாட்டிற்குச் செல்லும் பணத்தை உள்நாட்டில் செலவழிக்க அரசு விரும்புகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பின்னணியில், இந்தியாவின் எரிசக்தித் தேவைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது, குறைய வாய்ப்பே இல்லை.
உயிரிவாயு தொழில்துறையை மேம்படுத்துவதற்காக, 2025 முதல் இயற்கை எரிவாயுவில் 1% பயோமீத்தேன் சேர்க்க வேண்டும் என்றும், 2028-க்குள் அதை 5% ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் எரிவாயு வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது இந்தியாவின் எரிவாயு இறக்குமதியைக் குறைப்பதுடன் காற்று மாசுபாட்டையும் குறைக்கும். ஏனெனில் இதற்கு முன்பாக விவசாயக் கழிவுகள் எரிக்கப்பட்டன, ஆனால் அவற்றை இப்போது உயிரிவாயு ஆலைகளில் பயன்படுத்தலாம்.
கூடுதலாக, உயிரிவாயு ஆலைகளில் செயல்முறை முழுமையடைந்ததும் கிடைக்கும் எச்சங்களை உரமாகவும் பயன்படுத்தலாம்.
இத்தகைய வணிக மையங்களில் உற்பத்தி செய்யப்படும் வாயு அழுத்தப்பட்ட வாயுவாக மாற்றப்படும்போது, அதை எடுத்துச் செல்வது அல்லது வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவது எளிதாகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய அழுத்தப்பட்ட உயிரிவாயுவுக்கான (Compressed biogas) ஆலை பஞ்சாபில் உள்ள லெஹ்ராககாவில் (Lehragaga) அமைந்துள்ளது.
2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலை ஒவ்வொரு நாளும் 300 டன் வைக்கோலை 33 டன் உயிரிவாயுவாக மாற்றக்கூடிய திறன் கொண்டது. ஆனால் அவ்வளவு எரிபொருளுக்கான தேவை இல்லாததால் தற்போது அங்கு ஒரு நாளைக்கு எட்டு டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிக தேவை இல்லாததற்கு முக்கிய காரணம், பெரிய நகரங்கள் மற்றும் முக்கியச் சாலைகளில் இருந்து இந்த ஆலை வெகு தொலைவில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மாட்டுச் சாணம் மற்றும் விவசாயக் கழிவுகள்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாட்டுச் சாணம் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. இப்போது அங்கு மற்றொரு புதிய பிரச்னையும் உருவாகியுள்ளது.
லூதியானா நகரம் பால் உற்பத்தியின் மையமாக உள்ளது, சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 6,000 பசுக்கள் உள்ளன. ஆனால், பால் பண்ணை உரிமையாளர்கள் கழிவுகளை நேரடியாகக் கழிவு நீர் ஓடைகளில் விடுகின்றனர். இதனால் ஆறுகளின் நீர் மாசுபாடு அதிகரித்து வருகிறது.
ஹைபோவால் பால் பண்ணை வளாகத்தில் ஒரு நாளைக்கு 225 டன் எருவை உயிரிவாயுவாக மாற்றக்கூடிய திறன் கொண்ட ஒரு பெரிய உயிரிவாயு உலை இருப்பதால் இந்தக் கழிவுப் பிரச்னை மேலும் மோசமாகாமல் இருக்கிறது.
இந்த உயிரிவாயு உலை 2004-இல் கட்டப்பட்டது. ஆனால் தேவை அதிகரித்துள்ளதால் உயிரிவாயு உற்பத்தியை இரட்டிப்பாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆலையின் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மாட்டு சாணத்தை சேகரிக்கும் பொறுப்பு ராஜீவ் குமாருக்கு உள்ளது. "ஆரம்பத்தில் நாங்கள் ஏன் மாட்டுச் சாணத்தை சேகரிக்கிறோம் என்பதை விவசாயிகள் யாரும் புரிந்துகொள்ளவில்லை. மாட்டுச் சாணத்தை எங்களிடம் விற்கச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது," என்கிறார் அவர்.
"அவர்கள் எங்களைச் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆனால் இப்போது கழிவுகள் அவர்களுக்கு வருமானமாக மாறிவிட்டன. அதை அவர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. இது இருதரப்புக்குமான வெற்றி," என்று கூறுகிறார் ராஜீவ் குமார்.
இந்த வேலை கடினமாக இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு ஓரளவு வருமானம் தருகிறது. "இந்த வேலைக்காக பசு, எருமை என இரண்டு வித சாணங்களையும் சேகரிக்கிறேன். இதன் நாற்றத்தை என்னால் தாங்க முடியாது. ஆனால் நம் அனைவருக்கும் உயிர் வாழ பணம் தேவைப்படுகிறது அல்லவா, எனவே இதைச் செய்கிறேன்," என்கிறார் ராஜீவ் குமார்.
உயிரிவாயு தொழில்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்

பட மூலாதாரம், Getty Images
உயிரிவாயு தொழில்துறையில் உள்ள வேலை வாய்ப்புகளைப் புரிந்து கொண்டவர்களில் பல்ஜீத் சிங்கும் ஒருவர்.
அவர் பஞ்சாபில் கோதுமை மற்றும் அரிசியை பயிரிடும் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். உயிரிவாயு ஆலைகளின் கட்டுமானத்தைப் பார்த்தபோது, அதில் உள்ள நன்மைகளை அவரது குடும்பத்தினர் புரிந்துகொண்டனர். அன்றிலிருந்து, அறுவடைக்குப் பின் மிச்சமாகும் கழிவுகளை ஆலைக்கு விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
அதன் பிறகு மற்ற விவசாயிகளிடமும் சென்று விவசாயக் கழிவுகளை தனக்கு விற்க ஒப்புக்கொள்ளவைக்க முயன்றார் பல்ஜீத் சிங். "ஆனால் அது எளிதானது அல்ல. அறுவடை முடிந்த பின், அடுத்த விதைப்புக்காக நிலத்தைச் சரிசெய்ய விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, அதனால் அவர்கள் கழிவுகளை உடனே எரிக்கவே விரும்புகிறார்கள். ஆனால் அந்தக் கழிவுகளை உயிரிவாயு ஆலைக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று நான் அவர்களை சமாதானப்படுத்தினேன்," என்கிறார் பல்ஜீத் சிங்.
இன்று 10 கிராமங்களில் இருந்து விவசாயக் கழிவுகளை சேகரிக்கிறார் பல்ஜீத் சிங். சுமார் 200 பேர் இதற்காக அவரிடம் வேலை செய்கிறார்கள்.
"இது கடினமான வேலை. அறுவடைக் காலம் தொடங்கும் முன் நான் பல கிராமங்களுக்குச் செல்வேன், தங்கள் பண்ணைகளில் எஞ்சும் பயிர்க் கழிவுகளை என்னிடம் விற்கச் சொல்லி விவசாயிகளிடம் கோரிக்கை வைப்பேன்,” என்கிறார் பல்ஜீத் சிங்.
இந்தப் பயிர் கழிவுகள் பயோகாஸ் ஆலையில் சிறப்பான முறையில் எரிக்கப்பட்ட வேண்டும் என்றால், அவற்றை ஒரு குறிப்பிட்ட முறையில் வெட்ட வேண்டும். அதேபோல வைக்கோல் சேகரிப்பின் போது அதன் ஈரப்பதம் குறித்தும் உரிய கவனம் செலுத்தப்படுவதாக பல்ஜீத் விளக்கினார்.
இயற்கை வாயுவுக்கு மாற்றாகுமா உயிரிவாயு?

பட மூலாதாரம், Getty Images
உயிரிவாயு திட்டம் முழு வெற்றியடைந்தாலும் கூட, அது ஒரு முக்கியமான எரிபொருளாக மாறுமா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் இடப்பற்றாக்குறையும், சாணத்தின் நாற்றமும் சேர்ந்து உயிரிவாயு திட்டத்தை செயல்படுத்துவதை கடினமாக்குகிறது என்கிறார் கிரண் குமார் கூடரவல்லி. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான எஸ்.கே.ஜி-யின் செயலாளராக உள்ளார் கிரண் குமார்.
அதேபோல, கிராமப்புறங்களில் இதற்கு ஆகும் செலவை சாதாரண மக்களால் தாங்க முடியாது என்று கூறுகிறார்.
"கிராமப்புற மக்கள் காடுகள் அல்லது விவசாய நிலங்களில் இருந்து எரிபொருள் பெறுகின்றனர். அது இலவசமாக கிடைக்கும். எனவே, எரிபொருளுக்கு அதிக விலை கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. தவிர, பயோகேஸ் ஆலைகளை அமைக்க அவர்களிடம் நாம் பணம் வசூலிக்க முடியாது," என்கிறார் கிரண் குமார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












