புனேவில் காரை மோதி இருவரை கொன்ற சிறுவன்: 'கட்டுரை எழுதும்' நிபந்தனையுடன் ஜாமீன் - முழு விவரம்

- எழுதியவர், பிராச்சி குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்திக்காக, புணேயில் இருந்து
புனேவில் கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மைனர் ஒருவரின் தந்தையை சத்ரபதி சம்பாஜிநகர் குற்றப்பிரிவு போலீசார் புனேவில் கைது செய்துள்ளனர். கூடவே இந்தச் சிறுவன் மது அருந்திய கோஜி மற்றும் பிளாக் பாரின் உரிமையாளர், மேலாளர் மற்றும் பார்டெண்டர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (மே 18) புபுனேவில் உள்ள கல்யாணிநகர் பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்ற மைனர் ஒருவர் பைக் மீது காரை மோதியதில் பைக்கில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்கள் அனீஷ் துதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
இதையடுத்து சிறுவனின் தந்தை மற்றும் அவர் மது அருந்திய பப்பின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இறுதியாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனின் வயதை உறுதி செய்யாமல் மது வழங்கியதற்காக மதுபான விடுதி ஊழியர்கள் மீதும், மைனரை கார் ஓட்ட அனுமதித்த தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கல்யாணி நகர் அருகே உள்ள இரண்டு பப்களுக்குச் சென்று சிறுவன் மது அருந்தியிருப்பது எஃப்ஐஆரில் தெளிவாகத் தெரிகிறது. அதன்பிறகு இரவு நேரத்தில் லைசென்ஸ் இல்லாமல் அஜாக்கிரதையாக கார் ஓட்டியபோது பல்சர் பைக் மீது மோதினார்.
எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?

மைனர் ஒருவர் சாம்பல் நிற காரை பைக் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சிறுவனின் நண்பர்கள் சிலரும் அவருடன் இருந்துள்ளனர் என்று முதல் தகவல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
"சனிக்கிழமை (மே 18) இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அனைவரும் விருந்துக்கு புனேவின் முண்ட்வா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு பல்வேறு வகையான மதுபானங்களை குடித்துள்ளனர். ஆனால் பார்ட்டி அத்துடன் முடியவில்லை.
இதன் பிறகு அந்தச் சிறுவர்கள் அனைவரும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் முண்ட்வா பகுதியில் உள்ள மற்றொரு ஹோட்டலுக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் அங்கும் மது அருந்தியதாக" எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
"பிறகு அதிகாலை 2:30 மணியளவில் விலையுயர்ந்த சாம்பல் நிற காரை ஓட்டிச் சென்றபோது இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த இருவர் உயிரிழந்தனர்."
இந்த காரின் இருபுறமும் நம்பர் பிளேட் இல்லை என்றும், காரை ஓட்டிய மைனர் குற்றவாளியின் வயது '17 ஆண்டுகள் 8 மாதங்கள்' என்றும் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து நிபந்தனைகளுடன் ஜாமீன்!
கவனக் குறைவாக வாகனம் ஓட்டி இருவரைக் கொன்ற மைனர் குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்
- குற்றம் சாட்டப்பட்ட மைனர் 15 நாட்களுக்கு போக்குவரத்து போலீசாருடன் நாற்சாலை சந்திப்பில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளைப் புரிந்துகொண்ட பிறகு அறிக்கை தயாரித்து ஆர்.டி.ஓ-விடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- சாலை விபத்துகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும்.
- குற்றம் சாட்டப்பட்டவர் மதுவைக் கைவிட மனநல நிபுணர்களிடம் சிகிச்சை பெற வேண்டும்.
- மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட முக்தாங்கன் போதை ஒழிப்பு மையத்தின் உதவியைப் பெற வேண்டும்.
- எதிர்காலத்தில் ஏதேனும் விபத்து நடப்பதை அவர் கண்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் மைனரா இல்லையா?

இதுகுறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, முழு தகவலையும் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் என்பதால் அவருக்கு ஜாமீன் கிடைத்ததாக அமிதேஷ் குமார் கூறினார். எனினும், அதை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்தச் சிறுவன் குடிபோதையில் வாகனம் ஓட்டியது மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் யாரும் தப்ப முடியாது,” என்று அமிதேஷ் குமார் குறிப்பிட்டார்.
"சிறுவன் உண்மையில் மைனரா என்பது பற்றி அவரது பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நம்பர் பிளேட் இல்லாத காரை கொடுத்த டீலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அவர்.
சிறுவனின் தந்தை மற்றும் மதுபானம் வழங்கிய மதுபான விடுதி உரிமையாளர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கல்யாணி நகர், கோரேகான் பார்க் பகுதியில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பப்கள் மீது நடவடிக்கை எடுக்க கலால் துறையுடன் இணைந்து பணியாற்றப் போவதாகவும் அமிதேஷ் குமார் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை, காவல்துறை உதவி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாராவது அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்தார்களா என்று கண்டறிய காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவு - ஃபட்னவிஸ்
அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி இருவரின் உயிரைப் பறித்த வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தேவேந்திர ஃபட்னவிஸ், புனே போலீஸ் கமிஷனருக்கு போன் செய்து இந்த விஷயம் குறித்து தகவல் பெற்றார். கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக ஃபட்னவிஸ் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காவல்நிலையத்தின் சிசிடிவியை ஆய்வு செய்த பின்னர் ஏதேனும் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஃபட்னவிஸ் கூறினார்.
அரசியல் எதிர்வினைகள் தீவிரம்

பட மூலாதாரம், X/RAVINDRA DHANGEKAR
புனேவில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து அரசியல் ரீதியில் எதிர்வினைகள் வரத் தொடங்கியுள்ளன.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு புனே காவல்துறை ஆணையருக்கு பாஜக திங்கள்கிழமை (மே 20) கடிதம் எழுதியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு ’இரவு வாழ்க்கை கலாசாரமே காரணம்’ என இந்தக் கடிதத்தில் பாஜக குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் 'இரவு வாழ்க்கை கலாசாரத்தை' ஊக்குவிக்கும் பப்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பப்களில் டிஜேக்களில் பாடல்கள் ஒலிப்பதையும், சாலை சந்திப்புகளில் அமர்க்களம் செய்வதையும் தடை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
மறுபுறம், காங்கிரஸ் எம்எல்ஏ ரவீந்திர தாங்கேகர், ஹிட் அண்ட் ரன் வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பப்கள் மற்றும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
ரவீந்திர தாங்கேகர் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து ஏர்வாடா காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினார்.
சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்த முழு சம்பவம் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதை மூத்த வழக்கறிஞர் அசீம் சரோடேயிடம் நாங்கள் கேட்டறிந்தோம்.
”சிறுவனுக்கு மது வழங்கிய பப் ஊழியர்களுடன் கூடவே காரை கொடுத்த பெற்றோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக புனே போலீசார், மோட்டார் வாகன சட்டம் 199ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிறுவன் ஓட்டிச்சென்ற காரில் நம்பர் பிளேட் இல்லை. எனவே "இந்த விவகாரத்தில் புதிய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விதியின்படி மைனர் காரணமாக விபத்து ஏற்பட்டால், பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் கிடைக்கலாம்."
இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு மைனர் குற்றம் செய்திருந்தால், அந்தக் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவு 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். மேலும் மைனர் ஒருவர் குற்றம் செய்திருந்தால் அவர் 25 வயதை அடையும் வரை ’கற்றல் உரிமத்திற்கு’ (learner license) தகுதி பெறமாட்டார்.
சிறார் அல்லது சட்டத்திற்கு முரண்பட்ட சிறார் ஏதேனும் குற்றம் செய்தால், அவர் சட்டப்படி அபராதத்துடன் தண்டிக்கப்படுவார். அதேநேரம் சிறார் நீதிச் சட்டம், 2000இன் விதிகளின்படி அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்படலாம். இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, இந்தத் தண்டனை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












