புதுக்கோட்டை: ஊர் கட்டுப்பாட்டை மீறி போலீஸ், நீதிமன்றத்தை நாடினால் ஒதுக்கிவைப்பா? பிபிசி கள ஆய்வு

- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிப்பட்டியில் ஊர் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகக் கூறி தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சில குடும்பங்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வேறு சாதியில் திருமணம் செய்துக் கொண்டது, ஊரில் பேசி தீர்க்காமல் நீதிமன்றத்துக்கு சென்றது, மாற்று சாதியில் திருமணம் செய்தவர் வீட்டில் தங்கியது, ஊரால் ஒதுக்கி வைத்தவர்களிடம் பேசியது என ஊர் தலைவர்களின் கட்டுப்பாட்டை மீறி நடப்பவர்கள் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று ஊர் தலைவர்கள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் பல முறை சமாதானக் கூட்டங்கள் நடத்தியும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இது குறித்த தகவல்களை திரட்ட பிபிசி தமிழ் களத்துக்கு சென்றிருந்தது. புதுக்கோட்டை நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில், பொன்னமராவதியிலிருந்து திருமயம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இடதுபுறத்தில் உள்ளது கட்டையாண்டிப்பட்டி கிராமம். இங்கு சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இரு குடும்பங்களை தவிர மற்ற எல்லா குடும்பங்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.
காலை 6.30 மணிக்கே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது கட்டையாண்டிப்பட்டி. அந்த ஊரில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ஊருக்கு வெளியே கூலி வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். நெடுஞ்சாலை ஓரத்தில் உணவு கூடைகளுடன் வேலைக்கு செல்ல வாகனத்துக்காக காத்திருக்கின்றனர் பெண்கள்.
ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் குடும்பங்களை ஊருக்கு வெளியே சந்தித்து பேசினோம். ஊர் ஒதுக்கிவைப்பது தொடர்பாக தொடர்ந்து சில மாதங்களாக பகிரங்கமாக குரல் எழுப்பி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வருபவர் ராஜாமணி என்ற பெண். அவரும் அவரது கணவரும் கடந்த மூன்று வருடங்களாக கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

“நான் என் கணவருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக ஊருக்கு வெளியில் எனது சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்தேன். எங்கள் ஊரில் பெண்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வெளியில் தங்கக் கூடாது. நான் மூன்று நாட்கள் தங்கிவிட்டேன். அதோடு, நான் தங்கியிருந்தது வேறு சாதியில் திருமணம் செய்துக் கொண்ட எனது அக்கா மகள் வீட்டில்” என்கிறார் கூலி தொழிலாளரான ராஜாமணி. பள்ளிப்படிப்பை முடித்திராத அவர், தனக்கு 30 வயது தாண்டியிருக்கலாம் என்கிறார்.
கட்டையாண்டிப்பட்டியில் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்பது சமூக ஒதுக்குதலாக கடைபிடிக்கப்படுகிறது என்கிறார் அவர்.
அவரது கூற்றின்படி, ' ஒதுக்கப்பட்ட குடும்பம் கிராமத்துக்குள்ளேயே தான் வசிக்கும். ஆனால் அவர்களுடன் யாரும் பேச மாட்டார்கள், பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் உட்பட யாரும் தங்கள் வீட்டு சுப, துக்க நிகழ்வுகளுக்கு அழைக்க மாட்டார்கள்; ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு செல்லவும் மாட்டார்கள்.'
கட்டட கூலித் தொழில் செய்யும் ராஜாமணியின் கணவர் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் இப்போது மன்னிப்புக் கேட்டால் என்னை ஏற்றுக் கொள்ள ஊர் தயாராக இருக்கும். ஆனால் பெண்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் எனது அண்ணன் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. நான் தூக்கி வளர்த்த குழந்தை, ஆனால் எங்களை திருமணத்துக்கு அழைக்கவில்லை. நாங்கள் பார்த்து விடக் கூடாது என்று வீட்டின் முன் திரையிட்டனர்.” என்றார்.
ஊரில் மீண்டும் சேர்த்துக்கொள்ள ‘அவதாரம்’(அபராதம்) கட்ட வேண்டும் என்கிறார் குமார். “20 ஆயிரம், 30 ஆயிரம் என வாயில் வந்த தொகையை சொல்வார்கள். அதை கட்டினால் தான் மீண்டும் திருவிழா வரி மற்றும் கட்டமொய் வாங்குவார்கள். அப்போது தான் ஊரில் உள்ளவர்கள் பேசுவார்கள். ஒதுக்கி வைக்கப்பட்டவருடன் பேசினால் அதற்கு ரூ.2500 அவதாரம்” என்கிறார்.
“எனது முதல் கணவருடன் என்னால் ஒற்றுமையாக வாழ முடியவில்லை. எனவே என்னை ‘தீத்துவிட்டார்கள்’ (திருமண முறிவு). அதன் பின் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஊருக்கு ரூ.25ஆயிரம் அவதாரம் செலுத்தினேன். அந்த பணம் எனது முதல் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டது” என்கிறார் ராஜாமணி.
நிலத்தகராறு ஒன்றில், ஊர் தலைமையின் முடிவை ஏற்றுக் கொள்ளாத முருகன் மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேரின் குடும்பங்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முருகன் கூறுகிறார்.
“ஊர் கோயில் இருப்பது எங்களுக்கு சொந்தமான நிலத்தில். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் ஊர் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு சொந்தம் என்று கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு, எங்களிடம் ஊரில் யாரும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

தலித் சமுதாயத்தை சேர்ந்த மேஸ்திரி ஒருவரிடம் கட்டுமான வேலைக்கு சென்ற காரணத்தால், நாச்சம்மை என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்.
“என் அம்மா எனது பக்கத்து வீட்டில் தான் இருந்தார். எனது மகனுக்கு திருமணம் செய்த போது ஊர் கட்டுப்பாடு காரணமாக திருமணத்துக்கு வரவில்லை. அன்றிரவு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்து பேரனை பார்த்து விட்டு சென்றார். அவர் இறந்த போது என்னை அவரிடம் நெருங்கவிடவில்லை. இப்போது என் அப்பா உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்கிறார்.

நாச்சம்மை பிறந்த ஊர் கட்டையாண்டிப்பட்டி. அவரை அடுத்த ஊரில் ஒரே சமூகத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்துள்ளனர். அவர் தற்போது கணவர் ஊரில் வசித்து வருகிறார்.
“எனது மாமனார் கட்டையாண்டிப்பட்டி வந்து, என்னை ஒதுக்கி வைப்பது சரியல்ல என்று கூறினார். நாச்சம்மை எங்கள் ஊர் மருமகள், எனவே அவர் மீது கட்டையாண்டிப்பட்டி ஊர் எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்று கூறி எனக்காக ஊர் சபையின் முன் விழுந்து கும்பிட்டு என்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் படி கேட்டார், அப்போதும் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை” என்கிறார். ஊர் கட்டுப்பாட்டை மீறியவர்கள் ஊர் சபையின் முன் விழுந்து கும்பிடுவது அங்கு வழக்கமாக உள்ளது.
தங்கள் ஊர் மிகவும் கட்டுப்பாடான ஊர் என்று கட்டையாண்டிப்பட்டியின் ஊர் தலைவர்களில் ஒருவர் அடைக்கண் பிபிசி தமிழிடம் கூறுகிறார்.
“எங்கள் ஊர் 1600களில் உருவானதாக எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர். இங்கு இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் நான்கு ஐந்து தலைமுறைகளாக இங்கு வசிக்கின்றனர். எங்கள் ஊரின் சிறப்பே நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பது தான். எங்கள் ஊரில் போலீஸ், நீதிமன்றம் என்று யாருமே செல்ல மாட்டார்கள். அதற்கு முன்பு, ஊருக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்வோம். ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், அன்று ஊரில் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.
சுமார் 350 குடும்பங்கள் இருக்கும் எங்கள் ஊரில் வேலைக்கு செல்லாவிட்டால் ஒரு நாளுக்கு சுமார் 2 லட்சம் வரை நட்டமாகும். இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆதரவு அளிக்கவும், தேவையான உதவிகளை செய்யவும், யாரும் ஊரைவிட்டு வெளியேற மாட்டார்கள். ஊரிலிருந்து அனைத்து குடும்பத்திடமிருந்தும் ‘கட்டமொய்’ எனப்படும் ஒரு சிறு தொகையை வாங்கி, ஊர் சார்பாக இறந்தவரின் குடும்பத்துக்கு வழங்குவோம்” என்கிறார்.
ஊரின் பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக புகார் அளித்தவர்களை சாடினர் அங்கு குழுமியிருந்த பெண்கள்.
ஊரில் நடைபெறும் திருவிழாவுக்கு அனைத்து குடும்பத்திடமிருந்தும் வருடத்துக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்படும். எந்தவித பாகுபாடும் கிடையாது என்று மாவட்ட நிர்வாகத்திடம் உறுதி அளித்த பிறகும், தங்களிடம் வரி வசூலிக்கவில்லை என்கின்றனர் புகார் அளித்தவர்கள். “ஊரில் சேர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கையெழுத்து போட்டு விட்டு, ஊருக்குள் வந்து அது வெறும் வெள்ளை தாள், அது செல்லாது என்று கூறுகின்றனர்” என்கிறார் முருகன்.
“இந்த முறை பொதுவான ஊர் பணத்திலிருந்தே திருவிழா மற்றும் நாடகத்தை நடத்தினோம். எனவே யாரிடமிருந்தும் வரி வசூலிக்கவில்லை. திருவிழா நாளன்று முழுவதும் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. திருவிழாவுக்கு பின் பிரசாதம் கொடுப்போம். அதை வாங்குவதற்கு அவர்கள் வரவில்லை. நாங்கள் யாரையும் வற்புறுத்தி அழைக்க முடியாது” என்கிறார் அடைக்கண்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் உட்பட தனது குடும்பத்தினர் ஒன்பது பேரை வாக்களிக்க விடவில்லை என்று புகார் அளித்துள்ளார் முருகன். “ஓட்டு போடும் தினத்தில் வீட்டு வாசலுக்கு மூன்று பேர் வந்தனர். பள்ளிக்கூடம் ஊருக்குள் இருப்பதால் நாங்கள் வாக்களிக்கக் கூடாது என மிரட்டினர்” என்கிறார்.
ஆனால், தாங்கள் யரையும் அப்படி தடுக்கவில்லை என்கிறார் அடைக்கண்.

ராஜாமணியும் குமாரும் பொன்னமராவதிக்கு வந்தே கட்டட வேலை செய்கின்றனர். “சில இடங்களில் நாங்கள் பணிக்கு சென்றால், கட்டையாண்டிப்பட்டி மக்கள் வரமாட்டார்கள் என்று கூறி எங்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது” என்கிறார் ராஜாமணி.
“எங்கள் ஊரில் திருமணம் செய்துக் கொண்ட பிறகு, மாப்பிள்ளை நெல் குத்தி செய்த பொங்கலை காகத்துக்கு மூன்று கவளைகள் மாடியில் வைக்க வேண்டும். காகம் அந்த உணவை உண்டால் தான் அவர்களின் திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அர்த்தம். இல்லையென்றல் 10-15 நாட்கள் ஆனாலும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ முடியாது” என்கிறார் அடைக்கண்.
மேலும், தங்கள் நம்பிக்கைகளில் பல்லி முக்கியமான இடத்தை பெற்றுள்ளது என்றும் அதற்கு பெயர் ‘திருவலம் கேட்பது’ என்றும் அடைக்கண் கூறினார். “ஊரில் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு திருவலம் கேட்போம். ஊர் கூடியிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து பல்லி சத்தமிட வேண்டும். திருவலம் கேட்கவில்லை என்றால் திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறாது” என்கிறார் அடைக்கண்.
கட்டையாண்டிப்பட்டிக்கு பிபிசி தமிழ் சென்று பார்த்த போது, ஊர் தலைவர்களில் ஒருவரான அடைக்கண் குடங்களில் தண்ணீர் எடுத்து சென்றுக் கொண்டிருந்தார். பேசுவதற்கு சம்மதித்து மேல் சட்டை அணிந்துக் கொண்டு வந்தவர்,
“நாங்கள் யாரையும் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கவில்லை. சில நேரங்களில் ஊர்க்காரர்கள் பேசுவதற்கு விருப்பப்பட மாட்டார்கள். கடந்த வாரம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் ஊருக்குள் எந்தவித பாகுபாடும் இருக்காது என்று கூறி கையெழுத்திட்டுள்ளோம்” என்கிறார் அடைக்கண்.
சாலையின் ஒரு புறத்தில் அமர்ந்து அடைக்கண் பேசிய போது, அவரை சுற்றி ஊர் மக்கள் பலர் குவிந்தனர். தங்கள் ஊரைப் பற்றி தவறாக பேசப்படுவதாக புகார் எழுப்பியவர்கள் மீது அவர்கள் கோபத்துடன் இருந்தனர்.
இந்த விவகாரம் காரணமாக தங்கள் ஊரின் நம்பிக்கைகள் கேலி செய்யப்படுவதாகவும், தங்களை படிப்பறிப்பு இல்லாதவர்கள், காட்டுமிராண்டிகள் என்றும் சிலர் கூறி வருவதாக ஆவேசமாக கூறினர்.
வேலைக்கு செல்ல தயாராகி, பேருந்துக்காக காத்திருந்த அடைக்கணின் மகள் அகல்யா, “ நான் கணிதத்தில் இளங்கலை முடித்துள்ளேன். தற்போது பி எட் கரெஸ்-ல் படித்து வருகிறேன். அருகில் உள்ள நிறுவனத்தில் மனிதவளத் துறையில் பணியாற்றி வருகிறேன். எங்கள் ஊரை படிக்காத ஊர் என்று கூறுவது சரியல்ல” என்றார்.
எனினும் இளைஞர்கள் வேலை தேடி வேறு நகரங்களுக்கு செல்வது, மேற்படிப்புக்காக வெளியூர்களில் தங்கி படிப்பது போன்றவை மிகமிக அரிதான நிகழ்வாக கட்டையாண்டிப்பட்டியில் உள்ளது. எனவே, பட்டம் பெற்ற சில இளைஞர்களும் கூட வேலை கிடைக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் 12ம் வகுப்பு முடித்த ஐந்து மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக கூறிய போதிலும், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிப்பதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும், மற்றவர்கள் வேலைக்கு சென்று விட்டதாகவும் அடைக்கண் கூறுகிறார்.
ஊருக்குள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று அடைக்கணிடம் கேட்டபோது, இரு சக்கர வாகனத்தில் உள்ளே செல்ல ஒருவரை உடன் அனுப்பி வைத்தார். ஊரின் நுழைவாயிலிலிருந்து சில மீட்டர் தூரத்தில் எட்டாம் வகுப்பு வரை கொண்ட அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அது மட்டுமே ஊருக்குள் இருக்கும் அரசு கட்டடமாகும். அங்கு வரும் ஆசிரியர்கள் மட்டுமே ஊருக்குள் வரும் அரசு ஊழியர்கள் ஆவார். அருகில் உள்ள அரசு மருத்துவமனை கட்டையாண்டிப்பட்டியிலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் உள்ளது.
செய்தி சேகரிக்கும் போது, அருகில் வந்து நின்ற அடைக்கண், “எங்கள் ஊரின் சாலைகளை பாருங்கள், எவ்வளவு மோசமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த சாலையை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டனர். இது குறித்து செய்தி வெளியிடுங்கள்” என்றார்.
இரு சக்கர வாகனத்தில் ஊரின் உள்ளே கூட்டிச் சென்ற செல்வம் மிக சமீபத்தில் தான் கட்டையாண்டிப்பட்டியில் இருப்பவர்கள், விவசாயத்தை விடுத்து வேலைக்காக வெளியில் செல்கிறார்கள் என்றார். தென்னை மரங்கள் சூழ, மண் சாலைகள் நெளிந்து ஓட, மரத்தின் கிளைகளில் புடவையில் ஊஞ்சல் கட்டி சிறார்கள் பலர் ஒன்றாக கூடி விளையாடிக் கொண்டிருக்க, மிக ரம்மியமான இயற்கை காட்சிகளுடன் அமைந்திருந்தது கட்டையாண்டிப்பட்டி. “முன்பு இதுவரை தான் ஊர் இருந்தது. இப்போது தான் விரிவடைந்துள்ளது” என்கிறார் அவர்.
கிராமத்தின் நடுவே இருந்த ஒரு சிறிய மண்டபத்தில் ஊர் சபைக் கூட்டங்கள் நிகழ்கின்றன. 1984-ல் கட்டையாண்டிப்பட்டியில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பல வீடுகள் நாசமாகின. “தற்போது சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதி தான் அப்போது உதவினார்” என்று செல்வம் கூறுகிறார்.

ஊருக்குள் இருந்த மூதாட்டியும் ஊர் பூசாரியின் மனைவியுமான அழகி இயல்பாக பேச தொடங்கினார். “நாங்கள் யாருடனும் கலக்க மாட்டோம். அது எங்கள் தெய்வதுக்கு சுத்தப்படாது. யாராவது மீறி சென்றால் அவர்களாகவே ஊருக்குள் வரமாட்டார்கள்.
ஒதுக்கி வைத்தவர்களுடன் பேசினால் ஊருக்குள் நிச்சயம் கண்டிப்பார்கள். கண்டிக்கவில்லை என்றால் ஊர் என்னவாகும்? முன்பெல்லாம் பெண்கள் தவறாக நடந்து கொண்டதற்காக கண்டித்தால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இப்போது யார் கேட்கிறார்கள்? ” என்கிறார்.

ஒதுக்கப்பட்ட குடும்பங்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களை அணுகிய போது, இந்த விவகாரத்தை தாங்கள் கையில் எடுத்ததாக கூறுகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன். நாங்கள் உயிருடன் இருப்பதே கம்யூனிஸ்ட் கட்சியால் தான் என்று ஒதுக்கப்பட்டவர்கள் கூறினாலும், கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சிக்காரர்கள் தான் தங்கள் கிராம அமைதியை கெடுப்பதாக ஊரார் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய நாராயணன், “அந்த கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். தினமும் வேலைக்கு சென்றால் தான் கூலி. அவர்களுக்கு முதலில் கல்வி வழங்க வேண்டும். 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் மிக அரிதாக தான் கல்லூரிக்கு செல்கிறார்கள். பல மூடநம்பிக்கைகளுக்குள் மூழ்கி கிடக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சமூக ஒதுக்குதல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அவ்வப்போது புகார் வழங்கப்பட்டு வருவதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இது வரை நான்கு முறை சமாதானக கூட்டத்தை அரசு நடத்தியுள்ளது.
இந்த பிரச்னை குறித்து சமாதானக் கூட்டத்தை நடத்திய தாசில்தார் கூறுகையில், “திருவிழா நடத்துவதற்கான வரியை தங்களிடம் வாங்கவில்லை என்று சில குடும்பங்கள் புகார் அளித்தன. எனவே இரு தரப்பினரையும் அழைத்து நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் இறுதியில், திருவிழாவின் போது எந்தவித பாகுபாடும் இருக்காது என்று ஊர் தலைவர்கள் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
எனினும் பிரச்னையின் முழு விவரம் அறிய, ஊருக்குள் சென்று வீடு வீடாக விசாரித்த போது, அப்படி எதுவும் இல்லை என்று கூறிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே புகார் அளிக்க வந்தனர். திருவிழா நடைபெறும் நேரத்தில் பாகுபாடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய, காவல்துறை கண்காணிப்பு செய்தனர். அப்போது எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. யாராவது பாரபட்சமாக நடந்து கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார் .
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












