திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம்?

திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்?
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, இரு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஒன்பது பேர் கைதாகியுள்ளனர். கர்ப்பமாக உள்ள சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன?

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, 17 வயது சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த போது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்த போது சிறுமியை மூன்று சிறார் உள்பட, ஒன்பது பேர் பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. மேலும், சிறுமியின் தோழியான 14 வயதான மற்றொரு சிறுமியையும் இந்தக் கும்பல் வன்புணர்வு செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

தமிழகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள இந்தச் சம்பவத்தில், போக்சோ வழக்கின் கீழ் மூன்று சிறார் உள்பட ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்து, இரு சிறுமிகளையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமிகளின் குடும்பத்தினர் சொல்வது என்ன, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டு, போலீசார் மற்றும் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியது.

வழக்கு குறித்து போலீசார் சொல்வது என்ன?

திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்?
படக்குறிப்பு, பாலியல் வன்புணர்வு வழக்கில் 3 சிறார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உடுமலைப்பேட்டை காவல்துறை தெரிவித்துள்ளது.

உடுமலை அனைத்து மகளிர் போலீசார், நம்மிடம் வழக்கு விவரத்தையும் முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

நம்மிடம் பேசிய போலீசார், ‘’பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு 17 வயதான சிறுமி 14 வாரம் கர்ப்பமாக உள்ளார். இந்தச் சிறுமியை பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் உறவினர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். " என்றனர்.

சிறுமிகளின் வழக்கில் தொடர்புடைய, ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். காவல்துறை அளித்த விவரங்களின்படி, மூன்று சிறார்கள் உள்பட ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), யுவபிரகாஷ் (24), பவபாரதி (22), நந்தகோபால் (19) ஆகிய 6 பேர் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு?

திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)

வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.பி சுகுமாறன், ‘‘2 சிறுமிகள் பாதிக்கப்பட்ட வழக்கில், வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு, மிரட்டல் விடுத்தது உள்பட போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 இளைஞர்கள் மற்றும் ஒரு சட்டத்திற்கு முரண்பட்ட சிறார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மூன்று சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை காப்பகத்தில் வைத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நலத்துறையினர் பராமரித்து வருகின்றனர்,’’ என்றார்.

‘‘தனியார் தங்கும் விடுதிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்குவதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஒரு தனியார் விடுதியில் வைத்து சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். விடுதி மீதும் நடவடிக்கை எடுத்து, வேறு விடுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கிறதா எனக் கண்காணிக்கிறோம்,’’ எனவும் டிஎஸ்பி சுகுமாறன் தெரிவித்தார்.

"இவ்வழக்கில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? கைது எண்ணிக்கை அதிகரிக்குமா?" என்று டிஎஸ்பி சுகுமாறனிடம் கேட்டபோது, ‘‘இரு சிறுமிகளிடமும் வாக்கு மூலம் பெற்று நாங்கள் ஒன்பது பேரை கைது செய்துள்ளோம். சிறுமிகள் நீதிபதி முன்னிலையிலும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதிலும், ஒன்பது பேரைத்தான் குற்றவாளிகளாகக் கூறியுள்ளனர். இதனால், கைது அதிகரிக்க வாய்ப்பில்லை,’’ என்றார்.

சிறுமியின் குடும்பத்தினர் சொல்வது என்ன?

திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இரண்டாவது சிறுமியின் பாட்டி இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, ‘‘ எனது பேத்தி சிறு வயதாக இருக்கும் போதே அவளது தந்தை இறந்துவிட்டார். என் மகள் வேலைக்குச் சென்று விடுவதால் நான்தான் பேத்தியைப் பார்த்துக் கொள்வேன்." என்றார்.

"கடந்த வாரம் உள்ளூர் திருவிழாவிற்கு வீட்டில் அனுமதியின்றி சென்றுவிட்டார். கோபத்தில் நானும் என் மகளும் பேத்தியை அடித்து அறிவுரை கூறினோம். அப்போது, எங்களிடம் கோபித்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்,’’ என்றும் அவர் கூறினார்.

'எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை’

இருநாட்கள் தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் அப்போதுதான் பேத்தி பாதிக்கப்பட்டது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.

‘‘இரு நாட்கள் எங்கு தேடியும் பேத்தியைக் காணவில்லை என்பதால் காவல்துறையில் புகாரளித்தோம். அப்போது, போலீசார் எங்களை அழைத்து, வீட்டில் கோபித்துக்கொண்ட என் பேத்தியை, அந்த 17 வயதான சிறுமி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாகத் தெரிவித்தனர்," என்று கூறும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, தனது பேத்தி பாதிக்கப்பட்டதே போலீசார் சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வந்தது என்றும் கூறினார்.

"எங்களுக்கு அதற்கு முன் எதுவுமே தெரியாது, என் பேத்தி குழந்தை அவளுக்கு எதுவுமே தெரியாது. குற்றவாளிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்,’’ என, தழுதழுத்த குரலில் பேசினார் அவர்.

மற்றொரு சிறுமியை அவரது பாட்டிதான் பராமரித்து வருகிறார், சிறுமியுடன் அவரும் காப்பகத்தில் உள்ளதால் 17 வயதான சிறுமி தரப்பு தொடர்பாக யாரிடமும் பேச முடியவில்லை.

குற்றவாளிகளாக உள்ள ஒன்பது பேரின் குடும்பத்திடமும், அவர்கள் தரப்பு குறித்து விசாரிக்க பிபிசி தமிழ் பலமுறை முயன்றது. ஆனால், அவர்கள் யாரும் பேச முன்வரவில்லை.

சிறுமிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்!

திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்?
படக்குறிப்பு, ‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம்,’’ என்று கூறுகிறார் மாதர் சங்கத் தலைவர் சுகந்தி.

இரு சிறுமிகளின் குடும்பத்தினரை நேரில் பார்வையிட்ட மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, ‘‘பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாழ்க்கை, அவர்களின் பின்புலம், குடும்பம் என அனைத்தையும் பார்வையிட்டோம். சிறுமிகளின் குடும்ப சூழல், அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை பாலியல் ரீதியில் குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்," என்று கூறினார்.

தமிழகத்தில் பல போக்சோ வழக்குகள் உரிய நேரத்தில் விசாரணை முடிக்கப்படாமல் விடப்பட்டதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிப்பதாகக் கூறும் சுகந்தி, "இதன் காரணமாக இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, விரைவில் விசாரணை முடித்து தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

அதுமட்டுமின்றி, ‘‘பாலின சமவத்துவம் குறித்து பாடத்திட்டம் உருவாக்கி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் உள்ளோம். பாலின சமத்துவக் கல்வியை போதிக்க வேண்டும்,’’ எனவும் சுகந்தி தெரிவித்தார்.

போக்சோ வழக்கில் சிறுமி கர்ப்பமானால் அரசு என்ன செய்யும்? சட்டம் சொல்வது என்ன?

திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போக்சோ வழக்கின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் வயது மற்றும் உடல்நலத்தைப் பொறுத்து அவரது கரு கலைக்கப்படுமா, படாதா என்று சட்டபூர்வமாக முடிவு செய்யப்படும்.

உடுமலை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக உள்ளதால், அரசு என்ன செய்யப் போகிறது? சட்டம் சொல்வது என்ன?

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சுப.தென்பாண்டியனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் வினவியபோது, ‘போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படும் சிறுமி கர்ப்பமானால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிக்கு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறினார்.

"முதலில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில், கருக்கலைப்பு செய்யும் அளவிற்கு சிறுமியின் உடல்நிலை ஆரோக்கியமாக கருவின் அளவும் ஏற்றபடி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும். சிறுமி வயிற்றில் கரு வலுவாகியிருந்தால் அது கலைக்கப்படாது, பிரசவம் பார்க்கப்பட்டு அந்தக் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு சட்டப்படி தத்து கொடுக்கப்படும்,’’ என்கிறார் அவர்.

மேலும், ‘‘ஒருவேளை பாதிக்கப்பட்ட சிறுமி 17 வயதாக இருந்து குழந்தை பெறும்போது அவர் 18 வயதை அடைந்தால், குழந்தையைப் பெற்றெடுத்தவரே வளர்க்க விரும்பினாலும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படாது. நீதிபதிகள் விசாரணை முடித்து சட்டப்படிதான் குழந்தை அந்தத் தாயிடம் ஒப்படைக்கப்படும்,’’ எனவும் நம்மிடம் தெரிவிக்கிறார் வழக்குரைஞர் சுப.தென்பாண்டியன்.

‘சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்படும்’

திருப்பூர் சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மீட்கப்பட்ட கர்ப்பிணி சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)

சிறுமிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவதாக உறுதியளிக்கின்றனர் மாவட்ட சமூக நலத்துறையினர்.

நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்ஜிதா, ‘‘போக்சோ வழக்கில் பாதிக்கப்படும் சிறுமிகளைக் காப்பகத்தில் வைத்து பராமரித்து அவர்களின் மனநலம், உடல்நலத்தை மேம்படுத்தி, கல்வி வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்."

"அவர்கள் சந்தித்த துயர சம்பவத்தில் இருந்தும், வன்புணர்வு சம்பவத்தில் இருந்தும் மன ரீதியாக அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். உடுமலை வழக்கில் உள்ள இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

’21 வயது வரையில் பராமரிப்போம்’

‘‘காப்பகத்தில் உள்ள 17 வயதான சிறுமி 10ஆம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளார். நாங்கள் அறிவுரை வழங்கிய பின், அவர் படிப்பைத் தொடர விருப்பம் தெரிவித்து, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காகத் தயாராகி வருகிறார்."

"புத்தகங்கள் பெற்று படித்து வருகிறார், வரவுள்ள இடைத்தேர்வு எழுத உள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் படிப்பைத் தொடர அறிவுரை வழங்கியுள்ளோம்,’’ என்கிறார் ரஞ்ஜிதா.

மேலும் தொடர்ந்த அவர், ‘’17 வயதான சிறுமிக்கு குடும்பத்தில் போதிய கவனிப்பு இல்லாததால், 21 வயது வரையில் அவரது கல்விக்கு உதவவும், அவர் விருப்பப்பட்டால் காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். போக்சோவில் பாதிப்பேருக்கு 18 வயது வரையில் மட்டுமல்ல 21 வயது வரையில் பராமரிக்க அரசு நிதியுதவி அளிக்கிறது,’’ என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)