பிளேஆஃபில் எந்தெந்த அணிகள் மோதும்? கோலியின் கனவை தகர்ப்பாரா சாம்ஸன்?

RCB vs RR

பட மூலாதாரம், sportzpics

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரின் 2024ஆம் ஆண்டு சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் எந்தெந்த அணிகள் யாருடன் மோதுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தற்காலிகமாக 2வது இடத்தை 17 புள்ளிகளுடன் பிடித்திருந்தது.

அதேசமயம், குவஹாட்டியில் கொல்கத்தா அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டம், 2வது இடத்தை பிடிப்பவர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக இருந்தது. ஆனால் குவஹாட்டியில் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

RCB vs RR

பட மூலாதாரம், sportzpics

கொல்கத்தா அணி முதலிடம்

கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 2 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் 20 புள்ளிகளுடன் 1.428 நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்தது. ராஜஸ்தான் அணியும், சன்ரைசர்ஸ் அணியும் சரிசமமாக 17 புள்ளிகள் பெற்றன.

ராஜஸ்தான் அணியின் நிகர ரன்ரேட் 0.273 ஆக இருந்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் 0.414 ஆக உயர்வாக இருந்ததால், அந்த அணி 2வது இடத்தைப் பிடித்தது. ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

குவஹாட்டியில் நடக்கவிருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதாக அறிவித்த நடுவர்கள் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கினர்.

ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் வெற்றிகளைக் குவித்து முதலிடம் மற்றும் 2வது இடத்தில் நீடித்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்தது. கொல்கத்தா அணியும் கடந்த 2 ஆட்டங்களாக விளையாடாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது.

RCB vs RR

பட மூலாதாரம், sportzpics

படக்குறிப்பு, ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.

ராஜஸ்தான் Vs ஆர்சிபி

அகமதாபாத்தில் நரேந்திர மோதி மைதானத்தில் (21ஆம் தேதி) நாளை நடக்கும் முதல் தகுதிச்சுற்றில், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து 2வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

நாளை மறுநாள் (22ஆம் தேதி) நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 3வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து 4-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.

(வெளியேற்றுதல் சுற்று)எலிமினேட்டர் சுற்றில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணி தனது முதல் 8 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வென்றிருந்தது. ஆர்சிபி அணி தனது முதல் 8 ஆட்டங்களில் 7 போட்டிகளில் தோற்றிருந்தது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தானும், கடைசி இடத்துக்கு சரிந்த ஆர்சிபியும், தற்போது எலிமினேட்டரில் மோத இருக்கிறது.

RCB vs RR

பட மூலாதாரம், Getty Images

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

ராஜஸ்தான் அணியில் வெளிநாட்டு வீரர்கள் கடந்த சில போட்டிகளாக பெரிதாக ஸ்கோர் செய்யாதது பெரிய பின்னடைவாகும். அந்த அணி பெற்ற பல வெற்றிகளில் உறுதுணையாக இருந்த ஜாஸ் பட்லர் உலகக் கோப்பைத் தொடருக்காக இங்கிலாந்து புறப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட டாம் கோஹ்லர் காட்மோர் 2 போட்டியில் ஆடி பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டமும் நிலையாக இல்லை. நடப்பு சீசனில் 14 போட்டிகளில் 152.63 ஸ்ட்ரைக் ரேட்டில் 348 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும். கடந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் அவர் 4, 24 மற்றும் 4 ரன்களே எடுத்துள்ளார். துருவ் ஜூரல் 13 போட்டிகளில் 131 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும்.

அதேபோல சிம்ரன் ஹெட்மயரும் கடந்த சில போட்டிகளாக பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபினிஷ் செய்யாமல் ஏமாற்றினார். இதனால் ரோவ்மென் பாவெலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அவரும் சொதப்பி வருகிறார்.

RCB vs RR

பட மூலாதாரம், Getty Images

சாம்ஸன், பராக் சிறப்பான ஆட்டம்

குவாஹாட்டியில் பிறந்த 22 வயதான ரியான் பராக், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடப்பு சீசனில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். பராக் இதுவரை 14 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 531 ரன்கள் எடுத்துள்ளார். எலிமினேட்டர் போட்டியில், அணியின் பேட்டிங்கில் பராக் முக்கிய பங்கு வகிப்பார். எலிமினேட்டர் போட்டியில் அவரிடமிருந்து அணி சிறப்பான இன்னிங்சை எதிர்பார்க்கும்.

கேப்டன் சஞ்சு சாம்சனிடமிருந்தும் மீண்டும் ஒருமுறை வலுவான கேப்டன்சி இன்னிங்சை அந்த அணி எதிர்பார்க்கிறது. சஞ்சு 504 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் சீசனில் அவர் முதல்முறையாக 500 ரன்களுக்கும அதிகமாக சேர்த்துள்ளார்.

RCB vs RR

பட மூலாதாரம், Getty Images

கோலியின் கனவை சாம்ஸன் கலைப்பாரா?

ராஜஸ்தான் ராயல்ஸின் வலுவான அம்சம் அவர்களின் பந்துவீச்சு ஆகும். இது கிட்டத்தட்ட இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்டது. டெத் ஓவர்களில் சந்தீப் சர்மாவின் எகானமி ரேட் 8.07 ஆகவும், பவர் பிளேயில் டிரென்ட் போல்ட்டின் எகானமி ரேட் 8.38 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், நடப்பு சீசனில் அதிகபட்சமாக 708 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலியை தடுப்பது ராஜஸ்தான் ராயல்சுக்கு எளிதாக இருக்காது.

ராஜஸ்தான் ராயல்ஸின் வலுவான பந்துவீச்சு யூனிட்டுடன் தோனி போன்று வியூகங்களை வகுப்பதில் சிறந்தவரான கேப்டன் சாம்ஸனின் சாதுர்யமும் சேர்ந்து கோலியின் 16 ஆண்டு கோப்பை கனவுக்கு முட்டுக்கட்டை போடுமா?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)