இரான் அதிபர் மரணம் - விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துவிட்டதாக இரானிய அரசு ஊடகம் மே 20-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதற்கான ‘அறிகுறி எதுவும் இல்லை’ என்று அரசு தொலைக்காட்சி கூறியிருந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரைசி, இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் மேலும் சிலர் இந்த விபத்தில் உயிழந்துள்ளதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, விபத்தில் ஹெலிகாப்டர் ‘முற்றிலும் எரிந்துவிட்டது’ என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
"விபத்தில் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது," என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.
இரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை மே 19ஆம் தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறியது.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஈடுபட்டிருந்தது.
தேடுதல் பணியில் முதல் கட்டமாக, துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்ததாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட நீண்ட தூர ட்ரோனின் காட்சிகள் இரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.
இதனைத் தொடர்ந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இரானின் ரெட் கிரசன்ட் அமைப்பு படமெடுத்த காட்சிகளில், ஒரு மலைப்பகுதியில் சிதிலங்களுக்கு நடுவே ஹெலிகாப்டர் ஒன்றின் வால் பகுதி மட்டும் தெரிந்தது.
அந்த இடத்தில் யாரும் உயிரோடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த இரானைச் சேர்ந்த ஃபார்ஸ் செய்தி முகமையின் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து பற்றிய செய்திகளைக் கேட்டதும், தான் ‘ஆழ்ந்த கவலை’ அடைந்ததாக அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ் கூறியுள்ளார்.
இரான்- அஜர்பைஜான் எல்லையில் இரண்டு அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசியுடன் அலியேவும் உடனிருந்தார்.
இரானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான உரையாடல்களின் அடிப்படையில் தற்போது விபத்திற்கு ஏதேனும் சதி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் கூறினார். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அவையின் ஆயுதப்படை சேவை கமிட்டிக்கான குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் ‘இது நல்லதே’ என்று கூறியுள்ளார்.
"ரைசி அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.
தேடுதல் பணி நடந்துகொண்டிருக்கையில், இரான் தலைநகர் தெஹ்ரானின் வீதிகளில் இரானிய மக்கள் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
நகரின் மையத்தில் உள்ள வாலி-அஸ்ர் சதுக்கத்தில் மக்கள் மண்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சரி, யார் இந்த இப்ராஹிம் ரைசி?
இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார். 2019ஆம் ஆண்டில், ஆயத்துல்லா காமனெயி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார். பின்னர் ஜூன் 2021இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரைசி.

பட மூலாதாரம், REUTERS
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



