டெல்லி: பாஜக அலுவலகம் நோக்கி பேரணி - கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸ்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பாஜக தலைமையகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினரோடு பேரணியாக செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது பிணையில் உள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு ஜூன் 1வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை அழிக்கும் நோக்கில் பாஜக செயல்படுவதாக் குற்றம் சாட்டும் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக தலைமையகத்தை முற்றுகையிட உள்ளதாக சனிக்கிழமை அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் பிரதமர் மோதி சிறையில் அடைக்கும் விளையாட்டை விளையாடுகிறார். நாளை எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ, எம்.பி.க்களுடன் பாஜக தலைமையகத்திற்கு வருகிறேன். எங்கள் அனைவரையும் நீங்கள் சிறையில் அடைத்துக்கொள்ளலாம். எங்களை சிறையில் அடைப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க முடியும் என நினைக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனால், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அறிவித்தது போலவே கேஜ்ரிவால் இன்று பாஜக அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட தயாரானார்.
அப்போது ஆம் ஆத்மி தலைமையகத்தில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடிவு செய்துவிட்டார். அவரை சந்திக்க சென்றவர்களிடம் ஆம் ஆத்மி வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்கள் திட்டங்கள் நாடு முழுவதும் பேசப்படுகின்றன. வரும் காலங்களில் தேசிய அளவில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி சவாலாக இருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். எனவே ஆம் ஆத்மியை ஒழித்துவிட வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என கேஜ்ரிவால் கூறினார்.
மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், என்னுடைய உதவியாளர் என கடந்த 2 ஆண்டுகளாக ஆம் ஆத்மியினரை தொடர்ந்து கைது செய்கிறார்கள். ஒவ்வொருவராக கைது செய்யும் நீங்கள், இன்று நாங்கள் மொத்தமாக வருகிறோம், எங்களை கைது செய்துகொள்ளுங்கள் என்றுஅரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
பிரதமரே நீங்கள் ஒரு கேஜ்ரிவாலை கைது செய்தால் ஆயிரம் கேஜ்ரிவால் பிறப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
பின்னர், பாஜக தலைமையகத்தை நோக்கி புறப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் அறிவிப்பை விமர்சித்துள்ள பாஜக, எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் அதற்காக கேஜ்ரிவாலின் உதவியாளர் கைது செய்யப்பட்டதை மடை மாற்றும் செயல் இது என்று கூறியுள்ளது.
அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் அக்கட்சி ராஜ்யசபா எம்.பி. தாக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலளிக்காமல், பிரச்னையை மடைமாற்ற அரவிந்த் கேஜ்ரிவால் முயற்சிக்கிறார் என்று பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளரால் தான் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால், எழுப்பிய குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



