திரிணாமூல் vs பாஜக: மேற்கு வங்கத்தில் வாக்காளர் மனநிலை என்ன? பிபிசி கள ஆய்வு

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தங்கவேல் அப்பாச்சி
    • பதவி, ஆசிரியர், பிபிசி தமிழ் சேவை

மேற்கு வங்க மாநில வாக்காளர்கள், அரசியல் ஆர்வமும் விழிப்புணர்வும் அதிகம் கொண்டவர்கள். மக்களவைத் தேர்தலில் அந்த வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்துகொள்ள பிபிசி இந்திய மொழிகளின் ஆசிரியர் குழு அங்கு பயணம் செய்தது.

முதலாவதாக, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளராகக் கருதப்படும் மஹூவா மொய்த்ரா போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதிக்குச் சென்றோம். அங்கு கண்ட பல காட்சிகள் நமக்கு வியப்பாகவே தெரிந்தன.

டெல்லி உள்பட, பல வட இந்திய மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களில் தேர்தல் நடப்பதற்கான ஆரவாரங்களைப் பெரிய அளவில் காண முடியாது. ஆனால், கிருஷ்ணா நகர் தொகுதி அதற்கு நேர்மாறாக இருந்தது.

சிறிய நகரப்பகுதிகளிலும், கிராமங்களிலும் கூட முக்கிய அரசியல் கட்சிகளின் கொடிகள், தோரணங்கள், கட்-அவுட்டுகள் என கோலாகலமாக இருந்தது. தமிழ்நாட்டில் காண முடியாத காட்சியாக, ஒரே கம்பத்தில் அல்லது அருகருகே திரிணாமூல், பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் கொடிகளைப் பார்த்தபோது, வியப்பாகத்தான் இருந்தது.

சிறு சிறு வாகனங்களில் கொடிகளைக் கட்டிக் கொண்டு, ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. தெருமுனைகளில், பெரிய அளவிலான ஒலிபெருக்கிகளை வைத்து, அரசியல் கட்சிகள் தங்கள் தலைவர்களின் புகழ்பாடிக் கொண்டிருந்தன.

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, மேற்குவங்கத்தில் சிறு சிறு வாகனங்களில் கொடிகளைக் கட்டிக் கொண்டு, ஒலிபெருக்கிகள் மூலம் பிரசாரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது

மக்கள் நலத் திட்டங்கள்

நாதியா மாவட்டத்தில் உள்ள இந்தத் தொகுதியின் பொதுமக்கள், வியாபாரிகள் என பலரிடம் பேசினோம். மஹுவா மொய்த்ராவைப் பற்றிக் கேட்டால், “அவர் எப்போதும் டெல்லியில்தான் இருக்கிறார். இங்கு என்ன நடக்கிறது என்பதே அவருக்குத் தெரியாது,” என்று குறைபட்டுக் கொண்டவர்களும் உண்டு.

அதே நேரம், மமதா பானர்ஜியைப் பற்றி ஆர்வமாகப் பேசினார்கள். குறிப்பாக, பெண்களுக்காக அவரது அரசு செயல்படுத்திவரும் லஷ்மிர் பண்டார் திட்டம் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஆயிரம் ரூபாய். தேர்தலுக்குப் பிறகு இந்தத் தொகை பொதுப்பிரிவினருக்கு 1,000 ரூபாயாகவும், எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு 1,200 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.5 கோடி பெண்கள் பலனடைவதாகக் கூறப்படும் நிலையில், முதியோர் உதவித் தொகை உள்பட மேலும் சில மக்கள் நலத் திட்டங்கள் மூலமாகவும் நேரடியாக உதவித் திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன. ஒரு குடும்பத்துக்கு சுமார் 4,000 முதல் 5,000 ரூபாய் வரை இத்தகைய உதவிகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய திட்டங்கள் தொடர வேண்டுமானால், திரிணாமூல் வெற்றி பெறவேண்டும் என்ற பொதுவான எண்ணம் மக்களிடம் இருப்பதாக நாம் சந்தித்த பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அந்த எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பில் எந்த விவரங்களும் இல்லை.

அதே நேரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரங்கள், பல மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல திட்டங்களால் இந்த நாடு முன்னேற்றமடைவதாக சிறு வியாபாரிகள் சிலர் நம்மிடம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால், எந்தத் திட்டம் என்பதை அவர்களால் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை.

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல திட்டங்களால் இந்த நாடு முன்னேற்றமடைவதாக சிறு வியாபாரிகள் சிலர் நம்மிடம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்

அதே நேரத்தில், 'இந்த நாடு நன்றாக இருந்தால், மேற்கு வங்கமும் நன்றாக இருக்கும்’ என்ற பாஜக-வின் கோஷத்தை அவர்களில் சிலர் எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது.

கிராமங்களில் பல பெண்களிடம் பேசியபோது, எல்லோருமே அரசியலை அலசுவதில் ஆர்வமாகக் காணப்பட்டார்கள். தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்டையாகச் சொல்லத் தயங்கினாலும், தங்கள் நிலைப்பாட்டில் அவர்கள் தெளிவாக இருப்பதை உணர முடிந்தது.

நாம் எந்த இடத்தில் நின்று ஒரு சிலரிடம் பேசினாலும், அடுத்த சில நிமிடங்களில் மேலும் பல ஆண்கள் அந்த விவாதத்தில் இணைந்து ஆர்வமுடன் விவாதித்தது, அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படையாக உணர முடிந்தது.

நாம் அந்தத் தொகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நகாஷிபாரா பகுதியில் பங்கோடியா என்ற கிராமத்தில் பாஜக வேட்பாளரை சந்தித்தோம். அம்ரிதா ராய் என்பது அவரது பெயராக இருந்தாலும், 'ராணி அம்மா’ என்றே அவரை அத்தொகுதி மக்கள் அழைக்கிறார்கள். காரணம், அவரது கணவர் , அரச வம்சத்தைச் சார்ந்தவர்.

"பாஜக-வில் சேருமாறு கடந்த 10 வருடங்களாக அந்தக் கட்சியினர் என்னை வற்புறுத்தி வந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த முறை, பிரதமர் மோதியே என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது மறுக்க முடியவில்லை. இந்த மக்களுடன் 20 வருடங்களாக பழகி வருவதால், அவர்கள் படும் வேதனை எனக்குத் தெரியும். எனது வேலையை திரிணாமூல் காங்கிரஸ் எளிதாக்கிவிட்டது. பல ஊழல்களால் மக்களை அவர்கள் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்,” என்றார்.

நிலைமையை கவனிக்கும்போது, மஹூவா மொய்த்ரா கடும் போட்டியைச் சந்திக்கும் நிலையே காணப்படுகிறது. மஹுவா பிரசாரத்தில் தீவிரமாக இருப்பதால், அவரை நேரில் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயை 'ராணி அம்மா’ என்றே அத்தொகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

முஸ்லிம்கள் செல்வாக்கு

மேற்கு வங்க மக்கள் தொகையில், முஸ்லிம் மக்கள் சுமார் 30%. ஆனால், பாஜக தொடர்பாக முஸ்லிம் வாக்காளர்களிடம் உள்ள அச்ச உணர்வு, அந்த வாக்காளர்களை திரிணாமூல் கட்சிக்கு ஆதரவாகவே மாற்றும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஹிராக் பந்தோபாத்யாய.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, வங்கதேசப் பிரிவினை எப்போதும் அதன் பின்னணியில் இருந்து கொண்டே இருக்கிறது.

பிரிவினையின்போது, ஏராளமானவர்கள் இந்தியாவுக்குள் வந்தார்கள். அவர்களுக்கு குடியுரிமை இல்லை. குறிப்பாக, மத்வா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 1.5 கோடி பேர், பல தொகுதிகளில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக உள்ளனர்.

எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த இவர்களை மையமாக வைத்து பிரதான கட்சிகள் மோதிக் கொண்டிருக்கின்றன. அதனால், குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் யாருக்கு குடியுரிமை கிடைக்கும், அச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பிரசாரத்தின் மையக் கருத்தாக மாறியிருக்கிறது.

"மத்வா உள்பட வங்கதேசத்திலிருந்து வந்த இந்துக்கள் பலர் வெளியேற்றப்படுவார்கள் என்ற உணர்வு ஒரு பிரிவினரிடம் இருக்கிறது. இன்னொரு புறம், வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம்கள், நமக்கு எது நடந்தாலும் மமதா நமக்கு அரணாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், மத ரீதியாக வாக்காளர்களிடம் ஒரு பிளவை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியுள்ளன. அது ஹிந்து வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்," என்கிறார் ஹிராக் பந்தோபாத்யாய.

மத்வா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே மாநில அமைச்சரவையில் இருக்கிறார்கள். உயர் அதிகாரிகளாகப் பலர் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் ஓர் அங்கமாக மாறிவிட்ட அவர்களை, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், குடியுரிமை கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்வது மத்திய பாஜக அரசு மீது அவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஹிராக் கருதுகிறார்.

முஸ்லிம்களின் வாக்குகள் முழுமையாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சேரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மெல்ல மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்வதற்கான அறிகுறிகளும் தென்படுவதாக நம்பப்படுகிறது.

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, முஸ்லிம்களுக்கு சமூக ரீதியாக அங்கீகாரம் அளித்து, அவர்களை தனது பக்கம் ஈர்ப்பதில் மமதா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் சலிம் கருதுகிறார்

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த மூன்று மாவட்டங்களில் திரிணாமூல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 67 சதம் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட முர்ஷிதாபாத்தில் மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 20 தொகுதிகளை திரிணாமூல் கைப்பற்றியது.

அதாவது 54 சதம் வாக்குகளை வென்றது. மால்டா மாவட்டத்தில் 34 சதம் வாக்குகளுடன், 12-இல் எட்டு தொகுதிகளில் திரிணாமூல் வெற்றி பெற்றது. வடக்கு தினாஜ்பூரில் 53 சதம் வாக்குகளுடன் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளை வென்றது.

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கும், முர்ஷிதாபாத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சலிமை நேரில் சந்தித்தபோது, தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரத்தில், முஸ்லிம்களுக்குச் சமூக ரீதியாக அங்கீகாரம் அளித்து, அவர்களை தனது பக்கம் ஈர்ப்பதில் மமதா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

ராமர் கோவில், புல்வாமா தாக்குதல் போன்ற உணர்வு ரீதியான பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தேர்தல் நடக்கவில்லை என்று நம்பும் அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 முதல் 6 இடங்களிலும், காங்கிரஸ் 3 தொகுதிகள் வரையிலும் வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கிறார். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை என்கிறார் சலிம்.

மார்க்சிஸ்ட் கட்சி பலம் பெற்றால், அது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை, குறிப்பாக முஸ்லிம் வாக்குகளையே பிரிக்கும் என்றும், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பாஜக நம்புகிறது என பத்திரிகையாளர் ஹிராக் பந்தோபாத்யாய தெரிவிக்கின்றார்.

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, மக்கள் நலத்திட்டங்கள் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் கணிசமான அளவு மக்கள் ஆதரவைப் பெறும் என்று கூறப்பட்டாலும், பெரும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறது

திரிணாமூல் சந்திக்கும் சவால்கள்

"ஒருபுறம், புதிய தொழில் முதலீடுகள் எதையும் திரிணாமூல் அரசு ஈர்க்கவில்லை. இன்னொருபுறம், பல காரணங்களால் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்கவில்லை. அதனால், வேலையின்மை பெரும் சவாலாக உள்ளது. மேற்குவங்க இளைஞர்கள், வேலைவாய்ப்பு தேடி, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களுச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது," என்று சுட்டிக்காட்டுகிறார் கொல்கத்தாவில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர் எஸ்.வெங்கடேசன்.

“தொழிலாளர் வேலைநிறுத்தம் போன்ற இடையூறுகள் இல்லாவிட்டாலும், திரிணாமூல் காங்கிரஸ் அரசால் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால், தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புக்களை பெருமளவில் உருவாக்கியிருக்க முடியும்,” என்ற கருத்தை முன்வைக்கிறார் ஹிராக் பந்தோபாத்யாய.

இன்னொரு பக்கம், பல மக்கள் நலத்திட்டங்கள் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் கணிசமான அளவு மக்கள் ஆதரவைப் பெறும் என்று கூறப்பட்டாலும், பெரும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறது.

ஆசிரியர் நியமனம் உள்பட அக்கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள், நிர்வாக அமைப்புகளில் கட்சியினரின் அபரிமிதமான தலையீடு போன்றவை மக்களிடம் குறிப்பிடத்தக்க அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதாகப் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

என்ன பிரச்னையாக இருந்தாலும், அரசுத்துறைகளை நாடுவதை விட, கட்சி நிர்வாகிகள்தான் எல்லா அமைப்புக்களையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.

“ஒரு பக்கம் அரசுத் திட்டங்களால் பலன் கிடைத்தாலும், மறுபுறம் ஒவ்வொரு நிலையிலும் கட்சியினரின் தலையீடுகள் மக்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆட்சிக்காலத்தில் இப்படித்தான் நடந்துவந்தது. தற்போது, திரிணாமூல் அதைவிட ஒரு படி மேலே போய்விட்டது என்பது கவலைக்குரிய விஷயம். கீழ் மட்டம் வரை தொண்டர்கள், நிர்வாகிகளைக் கட்டுப்படுத்த தலைமையால் முடியவில்லை. மமதாவை அடுத்து, அவரது வளர்ப்பு மகனான அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி இன்னொரு அதிகார மையமாக மாறியிருக்கிறார்,” என நம்மிடம் பேசிய பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்கள் சிலரும் கருத்துத் தெரிவித்தனர்.

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, வங்கதேசத்தை ஒட்டி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பசிர்ஹத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தீவு கிராமம் சந்தேஷ்காலி.

சந்தேஷ்காலி சம்பவத்தின் தாக்கம்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய சம்பவம், சந்தேஷ்காலியில் அரங்கேறியிருக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஷேக் உள்ளிட்ட சில பிரமுகர்கள், பல ஆண்டுகளாக அங்குள்ள பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக குற்றச்சாட்டுக்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தன.

வங்கதேசத்தை ஒட்டி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பசிர்ஹத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தீவு கிராமம் சந்தேஷ்காலி. சுந்தரவனக் காடுகளை ஒட்டியுள்ள இப்பகுதி வளம்மிக்க பூமி.

காளிந்தி ஆற்றைக் கடந்து படகில் சென்றபோது, அக்கிராமத்தில் ஏராளமான கட்சிக்கொடிகள் காணப்பட்டன. நாங்கள் செல்வதற்கு முன்தினம்தான், அங்கு ஒரு வன்முறை சம்பவம் நடந்திருந்தது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் அங்குள்ள சில பெண்கள் தாக்கப்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

அங்குள்ள நிலப்பகுதி வித்தியாசமாகக் காணப்பட்டது. சிறுசிறு பகுதிகளாக, வரப்புகள் அமைக்கப்பட்டு, மீன்வளர்ப்புக்காக அவற்றில் உப்புநீர் நிரப்பப்பட்டிருந்தது. அந்த வரப்புகளில் ஒரு ஆள் நடந்து செல்லும் அளவுக்கு மட்டுமே இடம் இருந்தது. ஒரு பகுதியில் மட்டும் பேட்டரியால் இயக்கப்படும் சைக்கிள் ரிக்ஷா செல்லும் அளவுக்கு தடம் இருந்தது.

ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்களால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அங்குள்ள சில பெண்களிடம் பேசினோம். ஊடகங்களில் வந்த தகவல் உண்மைதான் என்று கூறிய அவர்கள், பல சம்பவங்கள் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு தர்மசங்கடமானவை என்று கவலைப்பட்டார்கள்.

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, சந்தேஷ்காலியில் உள்ள நிலங்கள் சிறுசிறு பகுதிகளாக, வரப்புகள் அமைக்கப்பட்டு, மீன்வளர்ப்புக்காக அவற்றில் உப்புநீர் நிரப்பப்பட்டிருந்தது

பாலியல் துன்புறுத்தல்கள்

அங்குள்ள நிலங்கள் எல்லாமே, நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஷாஜஹான் ஷேக் அந்த நிலங்களை வலுக்கட்டாயமாக தங்களிடமிருந்து எடுத்து, அவற்றில் உப்புநீரை நிரப்பி மீன்வளர்ப்புக்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்கள் அப்பகுதி பெண்கள்.

“அந்த நிலத்துக்கான குத்தகைப் பணம் தருவோம் என்று சொன்ன அவர்கள், அதையும் தரவில்லை. பிழைப்புக்காக எங்கள் வீட்டு ஆண்கள் எல்லோரும் வெளியே கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை வந்தது. குத்தகைப் பணம் கேட்டால், அதை வாங்குவதற்காக இரவு ஏழு மணிக்கு மேல் தனது இடத்துக்கு பெண்களை ஷாஜஹான் ஷேக் வரச்சொல்வார் என்று அங்கிருந்து நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ள ஒரு பகுதியைக் காட்டினார்கள். பல பெண்களுக்கு நீண்ட காலமாக கொடுமைகள் நேர்ந்த காரணத்தால்தான், ஒரு கட்டத்தில் பெண்கள் வெளிப்படையாக போராட வேண்டிய நிலை வந்தது,” என்று, தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒரு பெண், நம்மிடம் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்ற அவர்கள், அந்த வீடுதான், பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் ரேகா பத்ராவின் வீடு என்று சொன்னார்கள். வீடு பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டின் அருகே இருந்த இன்னொரு குடிசையின் முன்பு இரண்டு ஆண்கள் திறந்த வெளியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு இளைஞர், தான் ரேகா பத்ராவின் கணவர் சந்தீப்பின் சகோதரர் என்று தெரிவித்தார். சந்தீப்பும், தானும் இந்த ஊரைச் சேர்ந்த வேறு சில ஆண்களும், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலைபார்த்து வருவதாகச் சொன்னார். அங்கு நிம்மதியான வாழ்க்கையும், நல்ல சம்பளமும் கிடைப்பதாகக் கூறினார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்களில் ஒருவர் என்றும், பிரதமர் மோதியே அவருடன் தொலைபேசியில் பேசியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தங்கள் கட்சி மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பாஜக-வால் உருவாக்கப்பட்டவை என்று, அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்கெனவே பிபிசியிடம் மறுத்திருக்கிறார் திரிணாமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அரூப் சக்ரவர்த்தி.

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, சந்தேஷ்காலி பகுதியில் பாஜகவுக்கு ஆதரவான சுவர் விளம்பரங்கள் காணப்படுகின்றன

திரிணாமூல் vs பாஜக

அங்கிருந்த காவல் நிலையத்தில், பொறுப்பு அதிகாரியைச் சந்தித்தபோது, முந்தைய தினம் நடந்த மோதலில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக இருந்தார். இயல்பு நிலையைக் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருவதாகச் சொன்னார்.

சந்தேஷ்காலியில் உள்ள மக்கள், வெளிப்படையாகவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினார்கள். அங்கு பாஜக போஸ்டர்களும், சுவர் விளம்பரங்களும் ஆக்கிரமித்திருந்தன.

ஆனால், அந்த மக்களவைத் தொகுதியின் மற்ற பகுதிகளிலும், இதுபோன்ற மனநிலை இருப்பதாகச் சொல்ல முடியாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. மேலும், சந்தேஷ்காலி சம்பவம் மாநிலம் முழுவதும் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் சந்தேகமே என்கிறார்கள் கொல்கத்தாவில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் சிலர்.

ஆனால், அமைப்பு ரீதியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வலுவான கட்டமைப்பு அதன் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள், முஸ்லிம்கள் வாக்கு முழுமையாகக் கிடைக்கும் என்றும் அக்கட்சி நம்புகிறது. பல எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், மமதா பானர்ஜியின் தலைமை, மக்கள் நலத் திட்டங்கள் அக்கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. பாஜக-வுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ள அதே நேரத்தில், அக்கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு அவ்வளவு வலுவானதாக இல்லை என்கிறார்கள்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 43% வாக்குகளுடன் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது திரிணாமூல் காங்கிரஸ். 40% வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. இந்த முறை, பாஜக அந்த எண்ணிக்கைக்கு மேல் பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக மேற்கு வங்க அரசியலை உன்னிப்பாக கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)