மலேசியாவில் விற்கப்பட்டு, துன்புறுத்தப்படும் வங்கதேசத் தொழிலாளர்கள் - பின்னணியில் இருப்பது யார்?

மலேசியாவில் விற்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள்
படக்குறிப்பு, மலேசியாவில் உள்ள தனது கணவர் குறித்து ஒரு மாதமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்கிறார் வங்கதேசத்தைச் சேர்ந்த ரத்னா பேகம்.
    • எழுதியவர், தப்சீர் பாபு
    • பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை

வங்கதேசத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் தொழிலாளிகளாக பணிபுரிய பலர் மலேசியா செல்கின்றனர். தோராயமான மதிப்பீடுகளின்படி, இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான வங்கதேச மக்கள் கூலி வேலை பார்க்க மலேசியா சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலையோ அதற்கான சம்பளமோ கொடுக்கப்படுவதில்லை. என்ன நடக்கிறது இந்த விஷயத்தில்?

வங்கதேசத்தில் உள்ள குஸ்தியா மாவட்டத்தின் பெடமாரா பகுதியைச் சேர்ந்தவர் மசூம் அலி. இவர் கடந்த ஜனவரி மாதம் வேலைக்காக மலேசியாவுக்குச் சென்றார்.

முதல் இரண்டு மாதங்கள் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. அந்த இரண்டு மாதங்களும் மலேசியாவில் அவர் கிட்டத்தட்ட ஒரு கைதி போல தனது நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் வெவ்வேறு தரகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார்.

மூன்றாவது மாதத்தில் மசூமுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் வேலை கிடைத்தவுடன் பாஸ்போர்ட் மற்றும் அனைத்து ஆவணங்களும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. வங்கதேசத்தில் வசிக்கும் தனது மனைவியிடம் தனக்கு நடக்கும் சம்பவங்களை தினமும் கூறி வந்தார் ​​மசூம். அதிக வேலை அழுத்தத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் அவர் தன் மனைவியிடம் கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய மசூமின் மனைவி ரத்னா பேகம், "அங்கு அவர் காலை முதல் இரவு வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. அடிக்கடி நள்ளிரவிலும் வேலைக்கு அவரை அழைத்துள்ளனர். அடுத்த வேளை உணவுக்குக் கூட உத்தரவாதம் இல்லை, நிரந்தர வேலைக்கான உத்தரவாதமும் இல்லை. இந்நிலையில் அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது," என்றார்.

சுமார் ஒரு மாத காலம் அந்தப் புதிய நிறுவனத்தில் பணிபுரிந்த பின்னர், தனது கணவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றதாகவும், ஆனால் நிர்வாகத்திடம் பிடிபட்டதாகவும் ரத்னா பேகம் தெரிவித்தார். அதன் பிறகு தான் மசூம் மீதான தொடர்ச்சியான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு மாதமாக தனது கணவர் குறித்து எந்த தகவலும் ரத்னா பேகத்திற்குக் கிடைக்கவில்லை.

வேலைக்காக மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படும் வங்கதேசத் தொழிலாளர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது?

தரகர் மூலம் மலேசியா சென்ற மசூம் அலி

மலேசியாவில் விற்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

"ஏப்ரல் மாதத்தில் ரமலான் பண்டிகைக்குச் சில நாட்களுக்கு முன்பு, திடீரென்று என் கணவரிடமிருந்து எனக்கு ஒரு வீடியோ அழைப்பு வந்தது. தன்னை அவர்கள் மிகவும் அடிப்பதாக அவர் கூறினார். அவர் காதில் இருந்து ரத்தம் வடிந்தது. அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினார். இப்போது ஒரு மாதத்திற்கு மேலாகியும் என் கணவரைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை,” என்கிறார் ரத்னா பேகம்.

மசூம் அலியை மலேசியா அழைத்துச் சென்ற தரகரும் அங்குதான் வசிக்கிறார். தனது கணவரின் உயிரைக் காப்பாற்றவும், அவரைக் குறித்து தெரிந்து கொள்ளவும் அந்தத் தரகரைத் தொடர்புகொண்டார் பேகம். ஆனால் அவருக்கும் மசூம் குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை.

இப்போது தன் கணவரைக் காப்பாற்ற என்ன செய்வது, யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவிக்கிறார் ரத்னா பேகம்.

வங்கதேசத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் தொழிலாளிகளாக பணிபுரிய பலர் மலேசியா செல்கின்றனர். தோராயமான மதிப்பீடுகளின்படி, இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான வங்கதேச மக்கள் கூலி வேலை பார்க்க மலேசியா சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பிறகு, இந்தத் தொழிலாளர்கள் பலரால் எழுப்பப்படும் மோசடி மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மலேசியாவிற்குப் புதிதல்ல. ஆனால் சமீபகாலமாக இதுபோன்ற பல தொழிலாளர் துன்புறுத்தல் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சர்வதேச அமைப்புகள் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

மலேசியா செல்லும் வங்கதேசத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் என்ன என்பதும், அவர்கள் ஏன் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான் இந்தப் பிரச்னையின் முக்கியமான கேள்விகள்.

விற்கப்படும் தொழிலாளிகள்

மலேசியாவில் விற்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மன்னன் மியான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து எட்டு மாதங்களுக்கு முன்பு மலேசியா சென்றுள்ளார். அவருடன் மேலும் 35 பேர் அதே நிறுவனத்தில் பணிபுரிய அந்த விமானத்தில் சென்றனர்.

அங்கு செல்வதற்கு முன், வேலை வாங்கிக் கொடுத்த அமைப்புடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மியான். அதில் தான் பணிபுரியப் போகும் நிறுவனத்தின் பெயர் மற்றும் சம்பளம் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் மலேசியாவை அடைந்த பிறகு அந்த ஒப்பந்தம் காற்றில் பறக்கவிடப்பட்டது. வங்கதேசத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் அனைவரும் வெவ்வேறு மலேசிய நிறுவனங்களுக்கு தலா இரண்டு லட்சத்திற்கு விற்கப்பட்டதாகவும், அந்த நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட மிகக் குறைவான சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் மன்னன் மியான் கூறுகிறார்.

"எங்கள் சம்பளம் 25 ஆயிரம் வங்கதேச டாக்கா (இந்திய மதிப்பில் 17 ஆயிரம் ரூபாய்). முன்னதாக எங்களுக்கு 50 ஆயிரம் டாக்காவுக்கு மேல் மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் நிறுவனத்தின் மேற்பார்வையாளரிடம் கூடுதல் நேரம் வேலை பார்த்ததற்கு சம்பளம் கேட்டோம். ஆனால் சம்பளம் குறித்துக் கேள்வி கேட்டவுடன், சூப்பர்வைசர் எங்களை இரும்புக் கம்பியால் அடிக்கத் தொடங்கினார். இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்படுவோம் என்று மிரட்டினார்,” என்று பிபிசி பங்களாவிடம் கூறுகிறார் மன்னன் மியான்.

மன்னன் மியான் உள்ளிட்ட 7 பேர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். ஆனால் அவர்களிடம் இந்த புதிய வேலைசெய்யத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லை. காவல்துறையினரால் எப்போது கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் தான் அவர்கள் மலேசியாவில் நாட்களைக் கடத்துகின்றனர்.

மலேசியாவில் விற்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மலேசியாவில் வங்கதேச தொழிலாளர்கள் (கோப்புப் படம்)

தொழிலாளர்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர்?

வங்கதேசத் தொழிலாளர்கள் மலேசியாவை அடைந்த பிறகு சந்திக்க வேண்டிய முதல் மோசடியே, அவர்கள் எந்த வேலைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்களோ அது அங்கு கிடைக்காது.

இதற்குப் பிறகு, கிடைக்கும் வேலையிலும் போதிய சம்பளம் கிடைக்காத பிரச்னை ஏற்படுகிறது. வேலை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்படும் சம்பளம் உண்மையில் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை.

மூன்றாவது பிரச்னை, அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் பறிக்கப்படுவது. தொழிலாளர்கள் மலேசியாவை அடைந்த பிறகு, ஏஜென்சி நபர்கள் விசா சம்பிரதாயங்களை முடிக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொள்கிறார்கள். அதன் பிறகு அதைத் திருப்பித் தருவதில்லை.

பெரும்பாலான வழக்குகளில் பாஸ்போர்ட் மற்றும் விசாவை மீட்டெடுக்க ரூபாய் 70,000 முதல் 1 லட்சம் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதைத் தவிர, ஒரு சிறிய அறையில் பலர் தங்கவைக்கப்படுவதும், மூன்று வேளைக்குப் பதிலாக இரண்டு வேளை மட்டுமே, அதுவும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உணவு கிடைப்பதும் பிரச்னையாக உள்ளன. இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகும் நடக்கும் வேறு துன்புறுத்தல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளும் உள்ளன.

கோலாலம்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியான கலேக் மண்டல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசுகையில், “இங்கு வந்த பிறகு, பெரும்பாலான தொழிலாளர்கள் பணயக்கைதிகள் போன்ற சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உண்மையில், இங்கு வேலை இல்லை," என்றார்.

"ஆனால் தொடர்ந்து தொழிலாளர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வருகிறார்கள். வங்கதேசம் மற்றும் மலேசியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இது ஒரு வணிகமாக மாறிவிட்டது. அங்கிருந்து இங்கு தொழிலாளர்களை அனுப்பி அவர்கள் நல்ல லாபம் பார்க்கிறார்கள். வேலைவாய்ப்புகள் இல்லாதபோதும் புதிதாக ஆட்களை வேலைக்கு அனுப்புவது ஏன்?” என்கிறார்.

இங்கு வருவதற்கு முன் தான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று கலேக் மண்டல் கூறுகிறார். இப்போது அவர் வேறு நிறுவனத்தில் பணிபுரிகிறார், ஆனால் மலேசிய சட்டப்படி ஆவணத்தில் குறிப்பிடாத நிறுவனத்தில் பணிபுரிவது குற்றமாகும். இதன் காரணமாக சட்டவிரோதமாக அங்கு வசிக்கும் அவர், தற்போது பணயக்கைதி போன்ற நிலையில் உள்ளார்.

​​"நான் இங்கு வருவதற்கு சுமார் ஆறு லட்சம் டாக்கா (இந்திய மதிப்பில் 4.29 லட்சம் ரூபாய்) செலவழிக்க வேண்டியிருந்தது. தற்போது நான் வேலை செய்யும் இடத்தில், பணத்தை மிச்சப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. குடும்ப கஷ்டத்திற்காக நான் இங்கே வந்தேன். எனக்கு வேறு வழியில்லை. இந்த வேலையை விட்டால், குடும்பத்தின் கடனை எப்படி அடைக்க முடியும்?” என்று கூறுகிறார் கலேக் மண்டல்.

மலேசியாவில் விற்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள்
படக்குறிப்பு, பிபிசி பங்களாவிடம் பேசிய ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா

பின்னணியில் உள்ள கும்பல்

வங்கதேசத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக மக்கள் இடம்பெயரும் வழக்கம் 1976-ஆம் ஆண்டு தொடங்கியது.

மனிதவளம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பணியகத்தின் (BMET- பி.எம்.இ.டி) தரவுகளின்படி, 1976-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை, வங்கதேசத்திலிருந்து 1.6 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதில், அதிகபட்சமாக, 57 லட்சம் பேர், சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர். இது தவிர, 26 லட்சம் தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், 18 லட்சம் தொழிலாளர்கள் ஓமனுக்கும் சென்றுள்ளனர். இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக மலேசியா உள்ளது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.

குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் மட்டும் வங்கதேசத்தில் இருந்து 3.51 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மலேசியாவுக்குச் சென்றுள்ளனர். அதே ஆண்டில் இருந்து தான், தொழிலாளர்களுக்கு அங்கு வேலை கிடைக்காதது, அவர்கள் மீதான வன்கொடுமைகள், தொழிலாளர்கள் காணாமல் போவது குறித்த புகார்கள் அதிகமாக வெளிவரத் தொடங்கின.

2023-ஆம் ஆண்டு, மலேசியாவில் வசிக்கும் வங்கதேசத் தொழிலாளர்களின் அவல நிலை விவகாரம் தான் மலேசியாவின் முக்கிய ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளில் தலைப்புச் செய்தியாக இருந்தது.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக அந்தச் செய்திகளில் கூறப்பட்டது. இது தவிர, குறைந்த ஊதியம், வேலையில்லாமல் இருப்பது, துன்புறுத்தல்கள் மற்றும் சட்டவிரோதச் சூழ்நிலைகளில் சிக்குவது போன்ற விஷயங்களும் ஒரே நேரத்தில் வெளியே வந்தன.

மலேசியாவில் விற்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மலேசியா

'செயல்முறையை மாற்ற வேண்டும்'

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விஷயம் தொடர்பாகக் கவலை தெரிவித்திருந்தது.

இந்த நவீன அடிமைத்தனம் தொடர்பாக பிபிசி பங்களாவிடம் பேசிய ஐ.நா-வின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, "மலேசியாவில் வசிக்கும் வங்கதேசத் தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை குறித்துக் கவலைப்படுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. இந்த வழக்கில் இரு நாடுகளிலும் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலுக்கு பங்கு உள்ளது," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஒபோகாடா, "வங்கதேசம் மற்றும் மலேசியாவில் ஒரு சக்திவாய்ந்த கிரிமினல் கும்பல் உருவாகியுள்ளது. நல்ல வேலை, நல்ல சம்பளம் எனக் கூறி தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று ஏமாற்றுகிறார்கள். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இதற்காக நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்," என்றார்.

"இதன் காரணமாகத் தொழிலாளர்கள் கடனில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தும் நபர்களால், இந்தச் சிக்கல் மேலும் தீவிரமானதாக மாறுகிறது,” என்கிறார் ஒபோகாடா.

வங்கதேசம் மற்றும் மலேசியாவின் அரசுகள், தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான முழு செயல்முறையையும் மாற்ற வேண்டும், அப்போது தான் தொழிலாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாமல் பாதுகாக்க முடியும், என்றும் அவர் கூறினார்.

மலேசியாவில் விற்கப்படும் வங்கதேச தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச ஹைகமிஷன் என்ன சொல்கிறது?

விரிவான விசாரணைக்குப் பின்னரே இந்த நபர்களுக்கு வங்கதேச அரசு இறுதி அனுமதி அளிக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மலேசியாவில் வேலைகள் வழங்கும் நிறுவனங்களின் உண்மையான நிலையைக் கண்டறிவது மலேசியாவில் உள்ள வங்கதேச ஹைகமிஷனின் பொறுப்பாகும்.

ஆனால் இந்த விஷயத்தில் மலேசியாவில் உள்ள வங்கதேச ஹைகமிஷன் என்ன செய்கிறது? தவறான நிறுவனங்களை ஏன் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை?

ஆறு மாதங்களுக்கு முன்பாக வங்கதேச ஹைகமிஷனராக பதவியேற்ற ஷமிம் அஹ்சன் முன் இந்த கேள்விகள் வைக்கப்பட்டன.

பிபிசி வங்காள மொழிச் சேவைக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததை அவர் ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்றும் அவர் கூறினார்.

“இதுபோன்ற வழக்குகள் கவனிக்கப்பட்டு வருகின்றன. சில நிறுவனங்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் போலி நிறுவனங்களால் மக்கள் மோசடிக்கு ஆளாகிறார்கள் எனக் கூற முடியாது. காரணம் இதுபோன்ற பல நிறுவனங்கள் இங்கு சட்டப்படி இயங்குகின்றன," என்றார்.

"அவர்களின் தவறான நடத்தை மற்றும் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தூதரகத்தால் மட்டுமே இது போன்ற விஷயங்களை விரைவில் தீர்க்க முடியாது," என்றார்.

தொடர்ந்து பேசுகையில், "மலேசிய நிறுவனங்களின் முதலாளிகளும் இந்த விவகாரத்தில் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவது மலேசிய அரசாங்கத்தின் பொறுப்பு," என்றார்.

"வங்கதேசமும் இந்த விஷயத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதிகளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில், சில பிரச்னைகள் இருக்கலாம். அவற்றைத் தீர்க்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்," என்றார் வங்கதேச ஹைகமிஷனர் ஷமிம் அஹ்சன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)