SRH vs RR: பேட் கம்மின்ஸ் ஷாபாஸ், அபிஷேக்கை வைத்து போட்ட திட்டம் - சுழலில் சுருண்ட ராஜஸ்தான்

பட மூலாதாரம், SPORTZPICS
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
“மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் சத்தத்தை நிசப்தமாக்குவதில் இருக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை.”
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக, 2023, நவம்பர் 18ஆம் தேதி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்படிப் பேசினார். மறுநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தி மைதானத்தில் இருந்த ஒரு லட்சம் ரசிகர்களையும் நிசப்தமாக்கினார்.
“எங்களுக்கு ஐபிஎல் கோப்பையை வெல்ல உரிமை இருக்கிறது, அந்த நாட்களும் உள்ளன. அடுத்தடுத்து வெற்றி பெறுவோம்.”
ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தாவிடம் தோற்றபோது 2024, மே 21ஆம் தேதி சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியது. பேட் கம்மின்ஸ் தான் கூறியதைச் செய்து காட்டும் பணியில் இறங்கிவிட்டார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களின் குறைந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 2016, 2018ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றிருந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு கோப்பைக்காக பலப்பரிட்சை சன்ரைசர்ஸ் அணி நடத்தவுள்ளது.
இதற்கு முன் 2016, 2017 எலிமினேட்டர் சுற்றுகளிலும் 2018ஆம் ஆண்டு 2வது தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது 5வது முறையாக கொல்கத்தா அணியை நாக்-அவுட்டில் சன்ரைசர்ஸ் சந்திக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஹீரோ சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டம்

பட மூலாதாரம், SPORTZPICS
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனித்துவமான சுழற்பந்துவீச்சாளர்கள் யாருமின்றி பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ராஜஸ்தான் கதையை முடித்துள்ளார் கேப்டன் கம்மின்ஸ்.
இந்த ஆட்டத்தில் பந்துவீசிய ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மா இருவரும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீசிய அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், இருவரையும் சரியாகப் பயன்படுத்தி, ராஜஸ்தான் பேட்டிங் வரிசையை கம்மின்ஸ் உலுக்கிவிட்டார். ஷாபாஸ், அபிஷேக் இருவரின் பந்துவீச்சு மீதும் கம்மின்ஸ் வைத்திருந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்றினர்.
இருபது ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 9 ஓவர்கள் வீசினர். இதில் ஷாபாஸ், அபிஷேக் தலா 4 ஓவர்கள், மார்க்ரம் ஒரு ஓவர் 3 பேரும் சேர்ந்து 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் ஷாபாஸ், அபிஷேக் இருவரும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் மட்டுமே வழங்கினர்.
கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியும், கிளாசனுடன் கூட்டணி அமைத்து ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்த ஷாபாஸ் அகமது ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'இலக்கை அடைந்துவிட்டோம்'

பட மூலாதாரம், SPORTZPICS
வெற்றிக்குப் பின் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், “2023ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருவதைப் பார்த்து வருகிறார்கள். எங்களின் இலக்கு இறுதிப் போட்டிதான் அதை அடைந்துவிட்டோம்."
"எங்கள் பேட்டிங் வலிமை, பந்துவீச்சு திறமை எங்களுக்குத் தெரியும். அதேநேரம், எதிரணியின் பலத்தையும் குறைவாக மதிப்பிடவில்லை. இறுதிப்போட்டி நிச்சயம் கடினமானதாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
பொய்யான ராஜஸ்தான் கணிப்பு
ராஜஸ்தான் அணி டாஸ் வென்றவுடன் சேப்பாக்கம் ஆடுகளத்தை தவறாகக் கணித்து இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
அது மட்டுமல்லாமல் சேப்பாக்கத்தில் ஸ்குயர் பவுண்டரி அளவு 62 மீட்டராக சிறியதாக இருப்பதால் சேஸிங் செய்துவிடலாம், எளிதாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கலாம் என்று ராஜஸ்தான் அணியினர் கணித்தனர். ஆனால், எதுவுமே ராஜஸ்தான் அணி நினைத்தது போன்று நடக்கவில்லை.
சேப்பாக்கத்தில் எதிர்பார்த்த அளவு நேற்று பனிப்பொழிவு இல்லாததால், பந்து காய்ந்தவாறே இருந்ததால் சுழற்பந்துவீச்சுக்கு சிறப்பாக ஒத்துழைத்தது. இதனால்தான் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள் வீசும் பந்து நன்றாகச் சுழன்று, பேட்டர்களை திணறடித்தது. சேப்பாக்கத்தில் பனிப்பொழிவு நேற்று பெரிதாக இல்லாததால் ஆடுகளமும் வறண்டிருந்தது, பந்தும் காய்ந்திருந்ததால் சன்ரைசர்ஸ் அணி பெரிய அதிசயத்தை நிகழ்த்தியது.
சன்ரைசர்ஸ் வெற்றிக்குக் காரணம் என்ன?

பட மூலாதாரம், SPORTZPICS
சன்ரைசர்ஸ் அணியின் நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது கிளாசனின்(50) பொறுமையான பேட்டிங்கும், ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவின் பந்துவீச்சும்தான். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பையே உடைத்துவிட்டனர்.
குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு தங்களின் ஸ்கோரை டிபெண்ட் செய்ய உதவியது.
அதிலும் இம்பாக்ட் ப்ளேயராக வந்த ஷாபாஸ் அகமது பேட்டிங்கில் 17 ரன்கள் சேர்த்து கிளாசனுடன் சேர்ந்து 45 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தார்.
அது மட்டுமல்லாமல் பந்துவீச்சில் ராஜஸ்தான் பேட்டர் ஜெய்ஸ்வாலை(41) செட்டில் ஆகவிடாமல் விக்கெட்டை வீழ்த்தி ஷாபாஸ் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 2022க்குப் பின் ஜெய்ஸ்வால் முதல்முறையாக சுழற்பந்துவீச்சில் தனது விக்கெட்டை நேற்று இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ரியான் பராக், அஸ்வின் இருவரது விக்கெட்டையும் ஷாபாஸ் வீழ்த்தி ஆட்டத்தின் துருப்புச்சீட்டாக இருந்தார்.

பட மூலாதாரம், SPORTZPICS
ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பின் ஐபிஎல் தொடரில் பந்துவீச வாய்ப்பு பெறாத ஷாபாஸ் நேற்றுதான் பந்துவீசினார். ஆனால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். அதேபோல அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் 4 ஓவர்களை முழுமையாக 2வது முறையாக நேற்றுதான் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதிரடி பேட்டரும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவையும் கம்மின்ஸ் நேற்று நன்றாகப் பயன்படுத்தினார். அபிஷேக் ஷர்மா ஓரளவுக்கு பந்துவீசக் கூடியவர் என்றாலும் அவர் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் முழு ஓவர்களையும் வீசியதில்லை.
ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவை சிறப்பாகப் பயன்படுத்தி 4 ஓவர்கள் வீச வைத்து 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த கம்மின்ஸ் காரணமாக அமைந்தார்.
பேட்டிங்கில் இரு தகுதிச்சுற்றுகளிலும் ஜொலிக்காத அபிஷேக் நேற்று பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். இந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் ஆடிய அபிஷேக் ஷர்மா 482 ரன்கள் குவித்து, 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
“இந்திய அணியின் சொத்தாக மாறிவரும் அபிஷேக்கை எவ்வாறு தேர்வாளர்கள் உலகக் கோப்பைக்கு தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார். அபிஷேக், ஷாபாஸ் இருவரும்ம் பந்துவீச வந்த பிறகு 33 பந்துகளாக ராஜஸ்தான் அணி ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை. 4 விக்கெட்டுகளையும் இழந்தது.
கிளாசன் எனும் ‘கேம் சேஞ்சர்’

பட மூலாதாரம், SPORTZPICS
ஹென்ரிச் கிளாசன் இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறந்த பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும், ஃபினிஷராகவும் கிளாசன் இருக்கிறார்.
கிளாசன் நேற்று களமிறங்கியபோது, சன்ரைசர்ஸ் 99 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது கிளாசன் களமிறங்கி ஆங்கர் ரோல் செய்து, தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.
இருபது பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து நிதானமாக ஆடிய கிளாசன், சஹல் ஓவரை குறிவைத்து 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வெளுத்து 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
கிளாசன் அடித்த 50 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி கௌரவமான ஸ்கோரை பெறக் காரணமாக அமைந்தது. ஒருவேளை கிளாசன் ஸ்கோர் செய்யாமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களுக்குள்கூட சுருண்டிருக்கலாம். ஆகவே, கிளாசனின் ஆட்டம்தான் கேம் சேஞ்சராக இருந்தது.
ராஜஸ்தான் செய்த தவறுகள்

பட மூலாதாரம், SPORTZPICS
ராஜஸ்தான் அணி, ஆடுகளத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி சேஸிங் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டது. தொடக்கத்தில் டிரென்ட் போல்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸை சுருட்ட வாய்ப்பை ஏற்படுத்தியும் அதைப் பயன்படுத்தவில்லை.
பேட்டிங்கில் ஜெய்ஸ்வால்(42), துருவ் ஜூரெல்(56) தவிர வேறு எந்த பேட்டர்களும் பங்களிப்பு செய்யவில்லை. ராஜஸ்தான் பந்துவீச்சைப் பொருத்தவரை டிரென்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, ஆவேஷ்கான் ஆகியோர் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்து சன்ரைசர்ஸ் அணியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. அந்தத் தருணத்தை இறுகப் பிடித்திருந்தால், நிச்சயம் ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கும். ஆனால், அதன் பிறகும் 55 ரன்கள் சேர்க்கவிட்னர்.
'ஆடுகளத்தை தவறாகக் கணித்தோம்'

பட மூலாதாரம், SPORTZPICS
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “எங்களின் பந்துவீச்சாளர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பனிப்பொழிவு இருக்கும் என நாங்கள் கணித்துவிட்டோம். ஆனால், 2வது இன்னிங்ஸில் விக்கெட் வேறுவிதமாகத் திரும்பிவிட்டது."
"எங்களுக்கு எதிராகத் தரமான சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தினர். அனைவருமே சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். இந்திய அணிக்கு செறிவு, திறமை மிகுந்த இளைஞர்கள் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.
சேஸிங்கில் சிறப்பாக ஆடக்கூடிய ராஜஸ்தான் அணி நேற்று சொதப்பியது. ஜாஸ் பட்லருக்கு பதிலாக வந்த காட்மோர் குறிப்பிடத்தக்க வகையில் ஆடவில்லை.
கேப்டன் சாம்ஸன் போட்டியின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தவறான ஷாட்டை அடித்து 10 ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். நம்பிக்கை நாயகன் ரியான் பராக் 6 ரன்னில் ஷாபாஸ் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் துருவ் ஜூரெல் மட்டுமே 35 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












