RR vs RCB: எலிமினேட்டரில் தொடரும் ஆர்சிபியின் தோல்விகள் - ராஜஸ்தானின் ராஜதந்திரம்

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து 17 ஐபிஎல் சீசன்களாக கோப்பையை வெல்ல ஆர்சிபி முயன்று வருகிறது. அது இந்த முறையும் நடக்கவில்லை.

அதேநேரம், தொடக்கம் முதல் வெற்றிகளைக் குவித்து, பிறகு தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்த ராஜஸ்தான் அணிக்கு, திடீரென தன்னம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த எலிமினேட்டர் வெற்றி, மீண்டும் ஃபார்முக்கு அழைத்து வந்துள்ளது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான பாதை தெளிவாகியுள்ளது. சென்னையில் நாளை நடக்கும் 2வது தகுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் பலப்பரிட்சை நடத்தும்.

ஆர்சிபி-யும் எலிமினேட்டர் சுற்றும்

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

அதேநேரம் ஆர்சிபியின் போராட்டம், விடாமுயற்சி இந்த ஆட்டத்தோடு முடிவுக்கு வந்தது. கடந்த 17 சீசன்களாக கோடிக்கணக்கான ரசிகர்கள், ஆதரவாளர்கள், சிறந்த ஆட்டம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தியும் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாத நிலை இந்த சீசனிலும் தொடர்கிறது.

ஐபிஎல் தொடர்களில் மட்டும் 5 முறை எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோற்றுள்ளது. 2015ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ், 2020ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ், 2021ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தாவிடம், 2022 சீசனில் லக்னெளவிடம் தோற்ற நிலையில் இப்போது மீண்டும் ராஜஸ்தானிடம் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தோற்றுள்ளது ஆர்சிபி அணி.

ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம்

நேற்று ஃபீல்டிங்கும், பந்துவீச்சும் மிக சொதப்பலாக அமைந்திருந்ததே ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பவர்ப்ளே ஓவருக்குள் இரு கேட்சுகளை மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் தவறவிட்டனர். இரு கேட்சுகளை பிடித்திருந்தால், ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். அதேபோல ஸ்வப்னில் சிங், சிராஜ் பல ஃபீல்டிங்குகளை கோட்டைவிட்டு ரன்களை வழங்கினர். இதுபோன்ற தவறுகளைத் திருத்தியிருந்தாலே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கலாம்.

விராட் கோலி 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். லீக் சுற்றுகளில் சிறப்பாக ஆடிய கோலி, இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டங்களில் தவறவிட்டுள்ளார்.

பந்துவீச்சிலும் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். பனிப்பொழிவு ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மாவின் பந்துவீச்சிலும் ராஜஸ்தான் பேட்டர்கள் திணறியபோது தொடர்ந்து பந்துவீச அனுமதித்திருக்கலாம்.

'நம்பிக்கை வந்துவிட்டது'

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

வெற்றிக்குப் பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில், “எங்களுக்கு மிகப்பெரிய சிறந்த நாட்களும் இருக்கிறது, மோசமான நாட்களுக்கும் இருக்கிறது. ஆனால், அனைத்திலும் மீண்டு வருவது முக்கியம்," என்று தெரிவித்தார்.

"பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் அனைத்திலும் எங்கள் அணியின் செயல்பாடு அருமை. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணம் வீரர்கள்தான். திட்டமிட்டபடி ஃபீல்டிங் அமைத்தோம், திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினோம், உத்திகளைச் சிறப்பாக சப்போர்ட் ஸ்டாஃப் வகுத்துக் கொடுத்தனர்."

"அஸ்வின், ஆவேஷ், போல்ட் பந்துவீச்சு அருமையாக இருந்தது. இளம் வீரர்கள் பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட்டனர். எங்களின் ஓய்வறையில் மீண்டும் நம்பிக்கை வந்துவிட்டது,” எனத் தெரிவித்தார்.

ராஜதந்திர ராஜஸ்தான்

ஆமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்றவுடன் சிறிதுகூட சிந்திக்காமல் பந்துவீச்சை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் இந்த மைதானத்தில் ஸ்குயர் பவுண்டரி பெரிதானது, ஒருபுறம் சிறிதாக இருக்கும். அதாவது வலதுகை பேட்டர்கள் லெக் திசையில் பவுண்டரி அடிப்பது கடினமாகவும், இடதுகை பேட்டர்கள் ஆஃப்சைட் பவுண்டரி அடிப்பது சிரமமாகவும் இருக்கும். இந்தக் கணிப்பை சரியாக ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி, ஆர்சிபி பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுத்தனர்.

இதனால் பவர்ப்ளே ஓவர்களில் ஆர்சிபி அணியால் 56 ரன்களுக்கு மேல் சேர்க்க முடியவில்லை. வலதுகை பேட்டர்களுக்கு வேண்டுமென்றே லெக் திசையில் பந்துவீசி அவர்களால் பவுண்டரி அடிக்க முடியாத வகையில் ரன்ரேட்டை குறைத்தனர்.

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

டிரென்ட் போல்ட், அஸ்வின், ஆவேஷ் கான் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் ஆர்சிபியின் விக்கெட் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் குறிப்பாக அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இதில் அஸ்வின் வீசிய 4 ஓவர்களிலும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட ஆர்சிபி பேட்டர்களை அடிக்க அனுமதிக்கவில்லை.

அதேபோல டிரென்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கவிட்டார். ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் என சிறிது அதிகமாக ரன்கள் வழங்கினாலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்குத் துணையாக இருந்தார்.

ஆர்சிபி பேட்டர்களை திணறவிட்ட போல்ட்

புதிய பந்தில் பந்துவீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் போல்ட் வல்லவர். ஐபிஎல் தொடர்களில் மட்டும் புதிய பந்தில் முதல் ஓவரில் 30 முறைக்கும் மேலாக போல்ட் விக்கெட் எடுத்துள்ளார். அதேபோல நேற்றும் போல்ட் தனது பந்துவீச்சில் ஆர்சிபி பேட்டர்களை திணறடித்தார்.

போல்ட் தனது 3 ஓவர்களிலும் இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என சரியான லென்த்தில் வீசி ஆர்சிபி பேட்டர்களுக்கு செக் வைத்தார். 3 ஓவர்களில் 6 ரன்கள், அதில் 2 லெக்பை மட்டுமே போல்ட் வழங்கி, ஆர்சிபிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால், ஆர்சிபி அணி தனது பந்துவீச்சின்போது 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியை 42 ரன்கள் அடிக்கவிட்டது.

அஸ்வினின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

இந்த சீசனில் அஸ்வினின் பந்துவீச்சு பல பேட்டர்களால் அடித்து விளாசப்பட்டாலும், நேற்றைய ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சு சிம்ம சொப்னமாக அமைந்திருந்தது. பந்தை டாஸ் செய்வதிலும், சரியான லென்த்தில் பிட்ச் செய்வதிலும் அஸ்வின் அற்புதமாகச் செயல்பட்டார்.

ஆர்சிபி பேட்டர்கள் அடித்து விளையாட எந்த சந்தர்ப்பத்தையும் அஸ்வின் வழங்கவில்லை. ஒருபுறம் சஹல் பந்துவீச்சில் ரன்கள் சென்றபோதிலும், அஸ்வின் அதை ஈடு செய்து கட்டுப்படுத்தினார். சஹலும் தனது பங்கிற்கு கோலி விக்கெட்டை வீழ்த்தினார்.

அஸ்வின் பந்துவீசிய 4 ஓவர்களும் ஆர்சிபி பேட்டர்களுக்கு நேற்று தலைவலியாக இருந்து, ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது. ஒரு தவறான பந்தைக்கூட அஸ்வின் வீசாததால்தான் ஒரு பவுண்டரிகூட அடிக்க விடாமல் தடுத்தார்.

ஆர்சிபிக்கு நடுவரிசையில் நங்கூரமிட்ட கேமரூன் கிரீனை(27) வீழ்த்திய அடுத்த பந்தில் ஆபத்தான பேட்டர் மேக்ஸ்வெலையும் அஸ்வின் வெளியேற்றினார்.

ஆர்சிபியின் வலதுகை பேட்டர்கள் லெக்திசையில் பவுண்டரி அடிக்க சிரமப்பட்டு, மறுபுறம் ஸ்ட்ரைக் கிடைக்கும்போது ரன்சேர்க்க பயன்படுத்தினர். இதனால், ஆவேஷ் கான் வீசிய 12வது ஓவர், சஹல் வீசிய 10வது ஓவரில் தலா 13 ரன்கள் சென்றது.

தினேஷ் கார்த்திக் அவுட் சர்ச்சை

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

ஆவேஷ் கான் வீசிய 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக் கால்காப்பில் வாங்கியபோது அதற்கு களநடுவர் ஆனந்தபத்மநாபன் அவுட் வழங்கினார். இந்த முடிவுக்கு எதிராக டிகே உடனடியாக அப்பீல் செய்யவில்லை, மாறாக களத்தில் இருந்த லாம்ரோருடன் பேசிவிட்டு டிஆர்எஸ் அப்பீல் செய்தார்.

மூன்றாவது நடுவர் ரீப்ளேவில் பந்து கால்காப்பில் படுவது போலவும், பேட்டில் பட்டு அதன்பின் கால்காப்பில் படுவது போலவும் இருந்தது. ஆனால் அல்ட்ரா எட்ஜில் பார்த்தபோது, உறுதியாகத் தெரியாத நிலையில் 3வது நடுவர் அனில் சவுத்ரி, அவுட் இல்லை என அறிவித்து களநடுவர் முடிவை மாற்றுமாறு கூறினார்.

எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாத நிலையில் அவுட் இல்லை என்று கூறிய 3வது நடுவர் முடிவை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்கராவும் இந்த முடிவால் ஆவேசமடைந்து சேனல்களிடம் பேசினார்.

வலுான அடித்தளமிட்ட ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் அணி சேஸிங் செய்யும்போது ஜெய்ஸ்வால், டாம் காட்மோரின் இரு கேட்ச் வாய்ப்புகளை ஆர்சிபி ஃபீல்டர்கள் நழுவவிட்டு அந்த அணி வெற்றிக்கு வாய்ப்பளித்தனர். இதைப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 45 ரன்கள் விளாசினார்.

பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழந்து 47 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது. ஆனால், காட்மோர் 20 ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அடுத்த சில ஓவர்களில் கரன் ஷர்மா ஓவரில் கேப்டன் சாம்ஸன்(17) வெளியேறினார். ஆட்டம் திடீரென ஆர்சிபி பக்கம் சாய்வதைப் போல் இருந்தது. 14-வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு 36 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்டது.

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ரியான் பராக், ஹெட்மயர், இருவரும் கேமரூன் ஓவரை குறிவைத்தனர். கரீன் வீசிய 4வது ஓவரில் 17 ரன்களை விளாசினார். தயால் வீசிய 17வது ஓவரில் ஹெட்மயர் இரு பவுண்டரிகளை விளாச பந்துகளும்,தேவைப்படும் ரன்களும் ஏறக்குறைய சமமானது.

கடைசி நேரத்தில் சிராஜ் திருப்பம் ஏற்படுத்தினார். சிராஜ் வீசிய ஓவரில் ரியான் பராக் 36 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிலைத்து பேட் செய்த ஹெட்மயரை 26 ரன்களில் சிராஜ் வெளியேற்றினார். மிகவும் கடினமான கேட்சை டூப்ளெஸ்ஸி பிடித்து ஹெட்மயரை பெவிலியன் அனுப்பினார்.

ரோவ்மென் பாவெல், அஸ்வின் களத்தில் இருந்தனர். ஆனால், பாவெல் கடந்த பல போட்டிகளில் சொதப்பினாலும் இந்த ஆட்டத்தில் இரு பவுண்டரி, ஒரு பெரிய சிக்ஸர் அடித்து வெற்றி பெறச் செய்தார். பாவெல் 16 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர்.

தோல்விக்கு காரணம் என்ன?

IPL 2024: RR vs RCB Eliminator

பட மூலாதாரம், SPORTZPICS

ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில், “பனிப்பொழிவால் எங்களால் போதுமான அளவு சிறப்பாகப் பந்துவீச முடியவில்லை. ராஜஸ்தானை டிபெண்ட் செய்ய இன்னும் 20 ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும்."

"இந்த ஆட்டத்தில் போராடிய வீரர்களுக்கு வாழ்த்துகள். இது 180 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம்தான், எங்கள் அணியில் இன்னும் ஒரு பேட்டர் நிலைத்து ஆடியிருந்தால் ஸ்கோர் பெரிதாக வந்திருக்கும், சவாலாக மாறியிருக்கும்.

எங்களால் முடிந்த அளவு சிறந்த ஆட்டத்தை வழங்கினோம். தொடர்ந்து 6 வெற்றிகள் பலரின் பாராட்டையும், இதயத்தையும் கைப்பற்றினோம்,” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)