இறுதிப்போட்டியில் கொல்கத்தா: சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த 'அந்த' முடிவு

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

முதல் ஓவரின் 2வது பந்து அது. சரியான லென்த்தில் வீசப்பட்ட அந்த பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஸ்டெம்பை சிதறடிக்க தனது பேஸ்பால் ஆட்டத்தால் எதிரணிகளை கலங்கடித்து வந்த டிராவிஸ் ஹெட் டக்அவுட் ஆகி வெளியேறினார். 75 ஆயிரம் பேர் நிறைந்திருந்த ஆமதாபாத் அரங்கில் சன்ரைசர்ஸ் அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை கொல்கத்தா வீரர்கள் அந்த அதிர்ச்சியியில் இருந்து கடைசி வரை மீளவே விடவில்லை.

அடுத்த ஓவரில் மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். 5வது ஓவரில் நிதிஷ் குமர் ரெட்டி, ஷாபாஸ் அகமது என இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழவே சன்ரைசர்ஸ் அணி நெருக்கடியில் சிக்கியது.

அவை அனைத்துக்கும் காரணம் ஒரே நபர் மிட்ஷெல் ஸ்டார்க். ரூ.24 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் தன்னை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கியது சரியே என்பதை இந்த ஒரு போட்டியில் அவர் நிரூபித்துவிட்டார்.

மிட்ஷெல் ஸ்டார்க்கின் வலிமையே புதிய பந்தில் பந்தை காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை வீசுவதும், துல்லியம் தான். கிரிக் இன்ஃபோ வலைதள புள்ளிவிவரங்கள்படி, டி20 கிரிக்கெட்டில் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவர்களில் 67.5 சதவீதம் ஸ்டெம்ப்பை நோக்கி வந்து போல்டாக்கும் அல்லது பேட்டர்களுக்கு அவுட்சைட் எட்ஜாகி கேட்சாகும்.

இதே பாணியை நேற்றும் கடைபிடித்து சன்ரைசர்ஸ் அணியை ஸ்டார்க் சிதறடித்தார். மிட்ஷெல் ஸ்டார்க்கின் ஆகச்சிறந்த பந்துவீச்சால், ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப்போட்டிக்கு 4வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

அந்த அணி ப்ளே ஆஃப் தகுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

4வது முறையாக இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம், sportzpics

படக்குறிப்பு, கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இதற்கு முன் 2012, 2014ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2021ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் ஒருதரப்பாக நடந்து முடிந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்டார்க் தனது மந்திர பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் அணியை பாதி சாய்த்தார். பிற்பகுதியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தனது பங்களிப்பை செய்து ஒட்டுமொத்தமாக வீழ்த்தினார்.

பேட்டிங்கில் கொல்கத்தா அணியின் குர்பாஸ், நரைன் இருவரும் பவர்ப்ளே ஓவருக்குள் எதிரணியின் நம்பிக்கையை குலைத்துவிட்டனர். 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் இருவரும் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை வசமாக்கினர்.

‘எனக்கு தமிழ் தெரியாது, ஆனால் அவர் தமிழில் பேசுவார்’

இறுதிப்போட்டியில் 4வது முறையாக கொல்கத்தா

பட மூலாதாரம், sportzpics

படக்குறிப்பு, கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “ஒவ்வொரு வீரரும் பொறுப்புடன் செயல்பட்டனர். இந்த புத்துணர்ச்சி முக்கியமானது. பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து புத்துணர்ச்சி குறையாமல் வைத்திருப்பது சாதாரணது அல்ல. ஒரேமாதிரியாக விளையாடுவது மிக முக்கியம்.

கிடைக்கும் ஒவ்வொரு வாயப்பையும் சரியாகப் பயன்படுத்தினோம். சூழலுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சிறப்பாக செயல்பட்டனர். ஒவ்வொரு வீரரும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளாமல், பொறுப்புடன் செயல்பட்டனர். குர்பாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பந்துவீச்சின் போது நடுப்பகுதி ஓவர்களை சுனில், வருண் பார்த்துக்கொண்டனர்.

எனக்கும் வெங்கேடஷுக்கும் இடையே ஒரே வித்தியாசம் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் என்னிடம் அவர் தமிழில் பேசுவார். இருவரும் சேர்ந்து சந்தோஷமாக பேட் செய்தோம்” என்றார்.

சன்ரைசர்ஸ் ஏமாற்றம்

இறுதிப்போட்டியில் 4வது முறையாக கொல்கத்தா

பட மூலாதாரம், sportzpics

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. குறைந்த ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்யவும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டதால், எளிதாக வெற்றியை கொல்கத்தா வசமாக்கியது.

சன்ரைசர்ஸ் அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. முக்கிய கட்டங்களில் பல கேட்சுகளை அந்த அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். ஸ்ரேயாஸ் ஷாட் அடித்த போது, கையில் விழுந்த பந்தைக் கூட டிராவிஸ் ஹெட் பிடிக்காமல் கோட்டை விட்டார்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சு வழக்கத்துக்கு மாறாக மோசமாக இருந்து. நடராஜன் மட்டுமே ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்திருந்தார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு இரட்டை இலக்க ரன்களில் தான் வாரி வழங்கினர்.

நடுப்பகுதியில் எதிரணி ரன்சேர்ப்பைக் கட்டுப்படுத்த ஸ்பெலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. பகுதி நேரப் பந்துவீச்சாளர்களான நிதிஷ் ரெட்டி, ஹெட், விஜயகாந்த் ஆகியோரின் பந்துவீச்சு அந்த அணிக்கு கைகொடுக்கவில்லை.

சன்ரைசர்ஸ் அணிக்கு இதோடு வாய்ப்பு முடிந்துவிடவில்லை. ஆமதாபாத்தில் இன்று நடக்கும் ராஜஸ்தான்-ஆர்சிபி இடையேயான வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதி, அதில் வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம். வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் மீண்டும் கொல்கத்தாவை எதிர்கொண்டு சன்ரைசர்ஸ் பழிதீர்க்க முடியும்.

ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு

ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு

பட மூலாதாரம், sportzpics

படக்குறிப்பு, மிட்ஷெல் ஸ்டார்க்கை பாராட்டும் சக கொல்கத்தா வீரர்கள்

சன்ரைசர்ஸ் அணியின் முதுகெலும்பை முதல் 6 ஓவர்களிலேயே மிட்ஷெல் ஸ்டார்க் முறித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஸ்டார்க் 3 விக்கெட், அரோரா ஒரு விக்கெட் என 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அப்போதே தோல்வியை நோக்கி நடைபோடத் தொடங்கிவிட்டது எனலாம்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிராவிஸ் ஹெட்டை முதல் ஓவரின் 2வது பந்திலேயே கிளீன் போல்டாக்கி டக்அவுட் ஆக்கினார் ஸ்டார்க். டி20 ஃபர்மெட்டில் டிராவிஸ் ஹெட்டை டக்அவுட்டில் ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்தது 4வது முறையாகும்.

டிராவிஸ் ஹெட் தொடர்ந்து 2வது முறையாக இந்த சீசனில் டக்அவுட் ஆகினார். கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டக்அவுட் ஆனார்.

அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசினார். நிதானமாக பேட் செய்த அபிஷேக் ஷர்மா 3 ரன்களில் ரஸலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2024 சீசனில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக இருந்து, மிரட்டல் விடுத்த இரு பேட்டர்களும் ஒற்றை ரன்னிலும், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தது சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியதில் பெரும்பங்கு ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரையே சாரும். அவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் ஆட்டமிழந்த போதே ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்பது அந்த அணி ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது.

5வது ஓவரில் ஸ்டார்க் வீசிய 5வது பந்து அவுட்சைட் ஆஃப்சைடில் சென்றதை நிதிஷ் குமார் ரெட்டி தட்டிவிட விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்சானது. அடுத்து களமிறங்கிய ஷாபாஸ் அகமது க்ளீன் போல்டாகி வெளியேற, ஸ்டார்க்கிற்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கிடைத்தன.

பவர்ப்ளே ஓவருக்குள் 45 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியின் முதுகெலும்பை உடைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

நம்பிக்கையளித்த திரிபாதி

நம்பிக்கையளித்த திரிபாதி

பட மூலாதாரம், sportzpics

படக்குறிப்பு, ராகுல் திரிபாதி

3வது வீரராகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஓரளவுக்கு நிதானமாக ஆடி சன்ரைசர்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹர்சித் ராணா, அரோரா பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டர்களாக வெளுத்த திரிபாதி, 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

வழக்கத்துக்கு மாறாக பொறுமையாக பேட் செய்த கிளாசன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்த நிலையில், 32 ரன்களில் வருண் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று எல்லைக்கோடு அருகே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்த திரிபாதி, நரைன் வீசிய 14-வது ஓவரில் ரஸலால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி மீண்டும் நெருக்கடியில் சிக்கியது. இம்முறை அந்த அணியை காப்பாற்ற யாரும் இருக்கவில்லை.

அடுத்த வந்த சன்வீர் சிங், அதே ஓவரில் நரைன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். அதன்பின் அப்துல் சமது(30), புவனேஷ்வர்(0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 30 ரன்கள் சேர்த்து கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.

101 ரன் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 58 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த மோசமான முடிவு

ஆடுகளத்தை கணிக்காத சன்ரைசர்ஸ்

பட மூலாதாரம், sportzpics

ஆமதாபாத்தில் நேற்று பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், சிவப்பு, கறுப்பு மண் கலந்த ஆடுகளம். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் சிறிது ஈரப்பதத்துடன் இருந்ததால், பந்து நன்றாக ஸ்விங் ஆகி, வேகமாக பேட்டர்களை நோக்கி வந்ததால், விக்கெட்டுகள் மளமளவென சன்ரைசர்ஸ் அணிக்குச் சரிந்தது.

ஆனால், பிற்பகுதியில் பந்து பழையதான பிறகு சன்ரைசர்ஸ் பேட்டர்கள் அடித்து ஆடவும் உதவியாக இருந்தது. ஆக சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியில் ஆடுகளத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் விட்டதும், டாஸ் வென்றதும் வழக்கம்போல் பேட்டிங்கை தேர்வு செய்ததும் தவறான முடிவாக அமைந்துவிட்டது.

"விரைவில் மீண்டு வருவோம்"

விரைவில் மீண்டுவருவோம்

பட மூலாதாரம், sportzpics

படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ்

முக்கியமான ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் சிறிது கூட மனம் தளராமல் பேசி, உற்சாக ஊற்றை வற்றாமல் பார்த்துக்கொண்டார்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த தோல்வியிலிருந்து விரைவாக மீண்டு வருவோம். சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் இதுபோன்ற தோல்விகள் டி20 போட்டியில் வரத்தான் செய்யும். பேட்டிங்கில் சரியான தொடக்கம் அமையவில்லை, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படவில்லை.

உம்ரான் மாலிக்கை கொண்டுவர திட்டமிட்டோம், ஆனால் சன்வீர் பேட்டிங் செய்வார் என்பதால் வைத்திருந்தோம். கொல்கத்தா அணியினர் நன்றாக பேட் செய்தனர், பந்துவீசினர். இந்த தோல்வியிலிருந்து விரைவில் வெளியேவருவோம். புதிய இடம் எங்களுக்காக காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பவர் ப்ளேயில் பாதி வெற்றி

159 ரன்கள் எனும் குறைந்த இலக்கை துரத்திய அணிக்கு பில் சால்ட்டுக்குப் பதிலாக களமிறங்கிய குர்பாஸ் நல்ல தொடக்கம் அளித்து 23 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆபத்தான பேட்டர் சுனில் நரைன் 4 பவுண்டர்கள் உள்பட 21 ரன்களில் கம்மின்ஸ் பவுன்சரில் விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் 63 ரன்கள் சேர்த்து இருவரும் ஆட்டத்தை பாதி முடித்துக் கொடுத்தனர்.

வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் அரைசதம்

வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் அரைசதம்

பட மூலாதாரம், sportzpics

படக்குறிப்பு, அரைசதம் அடித்த வெங்கடேஷ்

3வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வெங்கடேஷ் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்று 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் வெங்கடேஷ் கணக்கில் சேரும்.

வெங்கடேஷ் அரைசதம் அடித்ததும், பொறுமையிழந்த கேப்டன் ஸ்ரேயாஸும் அதிரடியைக் கையில் எடுத்தார். டிராவிஸ் ஹெட் வீசிய 14வது ஓவரில் ஸ்ரேயாஸ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து 23 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். வெங்கடேஷ் 51, ஸ்ரேயாஸ் 58 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)