இளையராஜா பெயரில் இசை ஆராய்ச்சி மையம் - சென்னை ஐஐடி என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், IIT MADRAS
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் அமையும் 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய'த்துக்கு இளையராஜா நேற்று மாலை (மே 20) அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “மொசார்டுக்கு பிறகு 200 ஆண்டுகளாக உலகம் மற்றொரு மொசார்ட்டை உருவாக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும். ஒருவனுக்கு தண்ணீர் கொடுக்காதே, தாகம் கொடு, தண்ணீரை அவன் தேடிக்கொள்வான். இசைகற்க கிராமத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த போது எனது அம்மா எனக்கு நான்கு ரூபாய் கொடுத்து அனுப்பினார். இசை என் மூச்சானது. நான் சாதித்ததாக கூறுகிறார்கள், ஆனால் இப்போதும் அந்த கிராமத்திலிருந்து கிளம்பி வந்த சிறுவன் போலவே உணர்கிறேன்,” என்று பேசினார்.
இந்த முயற்சி நாடு முழுவதுமே கவனத்தை ஈர்த்துள்ளது, அதேசமயம் தொழில்நுட்பம் சார்ந்த ஐ.ஐ.டி படிப்புகளில் இசையமைப்பாளர் பெயரிலான ஆராய்ச்சி மையம் என்ன செய்ய முடியும் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

பட மூலாதாரம், IIT MADRAS

பட மூலாதாரம், IIT MADRAS
'அனைவருக்குமான இசை'
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் புதிய வளாகத்தின் நோக்கம் ‘அனைவருக்குமான இசை’ என்று கூறப்படுகிறது. இந்த மையம், மனிதனுக்கும் இசைக்குமான தொடர்பை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள பயன்படும், இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இசை தொடர்பான படிப்புகளும், இசைக் கருவிகளை வடிவமைத்து ஆராயும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி கூறுகிறது.
இது தொடர்பாக ஐ.ஐ.டி இயக்குநர் டாக்டர். வி காமகோடி பிபிசி தமிழுடன் பேசுகையில், “சென்னை ஐ.ஐ.டி-யில் தொழில்நுட்பப் படிப்புகளைத் தாண்டிப் பிற கலைகளுக்கும் இடமுண்டு. வளாகத்தில் கலை நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன. இசைக்குழுக்கள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்துகிறார்கள்,” என்றார்.

செயற்கைத் நுண்ணறிவில் சங்கீதம்
இந்த இசை ஆராய்ச்சி மையத்தில், “புதிய இசைக்கருவிகளை உருவாக்குவது, மின்னணு இசைக்கருவிகளை (சிந்தசைசர் - synthesiser) பயன்படுத்தி புதுமைகள் படைப்பது, இசையை ஆழமாகப் புரிந்து கொள்வது, மேள வாத்திய த்வனிகளை உருவாக்க மென்பொருள் எழுதுதல் என தொழில்நுட்பத்தின் தாக்கம் இசையின் மீதும், இசையின் தாக்கம் தொழில்நுட்பத்தின் மீதும் எவ்வாறு உள்ளது என ஆராய விரும்பினோம்,” என்கிறார் காமகோடி.
இந்தத் துறையில் தற்போது ஆர்வம் அதிகரித்து வருவதால் புதிதாக ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியதாகவும் வரும் நாட்களில் கர்நாடக இசைக் கச்சேரியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பற்றியெல்லாம் ஆராய முடியும் என்றும் சொல்கிறார் அவர்.
“இதற்கான தீர்வுகள் எளிதல்ல, நாங்கள் இது குறித்து மிகத் தீவிரமாக யோசித்த போது, வழக்கமான முறையில் இசை கற்றுத் தருவது இது போன்ற ஆராய்ச்சிக்கு உதவாது என்று உணர்ந்தோம். அதன் அடிப்படையில் இப்போது புதிய மையம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பட மூலாதாரம், ILAYARAJA / INSTAGRAM
இளையராஜா ஏன் தேர்வு செய்யப்பட்டார்?
கல்வியை ஜனநாயகப்படுத்தும் நோக்கில், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி' என்ற பெயரில் சென்னை ஐ.ஐ.டி பல புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மையமும் துவங்கப்பட்டுள்ளது என்கிறார் காமகோடி.
அவர் மேலும் பேசுகையில், “இப்படி ஒரு முயற்சிக்காக இசையமைப்பாளர் இளையராஜாவை நான் நேரில் சந்தித்த போது அவர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். இளையராஜா, எந்தவித இசைப் பயிற்சியும் இல்லாமல் இசையமைக்கத் தொடங்கினார். அவரது இசைப் பயணத்தில் பல வியக்கத்தக்கப் பாடல்களை வழங்கியுள்ளார். சாஸ்த்ரிய சங்கீதத்தை கிராமப்புற பாடல்களுடன் இணைத்து சாதாரண மக்களிடம் கொண்டு சென்றார். மேற்கத்திய இசை, சூஃபி பாடல்கள் ஆகியவற்றுடன் இணைத்து இசையமைத்துள்ளார் இளையராஜா. எனவே அவர் இந்த ஆராய்ச்சி மையத்துக்கு வழிகாட்டுவது மிகவும் பொருத்தமானது,” என்று குறிப்பிட்டார்.
பாடத்திட்டம் இன்னும் இறுதியாகவில்லை
இசை தொடர்பான இந்தப் புதிய படிப்பு மாற்றங்களுக்கு ஆளாகி வருவதாக ஐ.ஐ.டி தெரிவிக்கிறது. உடனடியாக பட்டப்படிப்பு உருவாக்கப்படவில்லை. பாடத்திட்டத்தை படிப்படியாக மெருகூட்டி, இந்த ஆராய்ச்சி மையத்தில், சான்றிதழ் படிப்புகள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது ஐ.ஐ.டி.
இந்தத் துறையில் பட்டப்படிப்பு உருவாக்குவது படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். எதிர் காலத்தில் பாடத்திட்டங்களை வளர்த்தெடுக்கும்போது, இசைக்கான புதிய, நவீன கருவிகளை உருவாக்குதல், இசை ஸ்வரங்களை ஒன்றாக கலப்பது (synthesising of notes), மேலும், புதிதாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இசையில் புதுமைகள் உருவாக்குதல், அதே போல மனிதர்களின் மனநலனுக்கு எப்படி இசை உதவியாக உள்ளது என்பதெல்லாம் ஆராயப்படும். அதே போல நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும், தொன்மையான இசைக் கோர்ப்புகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும் என ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவிக்கிறது.
இசையமைப்பாளர் இளையராஜா, தன்னை போன்று பல இசையமைப்பாளர்களை கண்டறிந்து உருவாக்க வேண்டும் என விரும்புகிறார். அதே போல புதிய இசைக்கருவிகளை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி சில காலமாகவே முயற்சிகளை எடுத்து வருகிறது. புதிய இந்த மையத்தில் அந்த இரண்டு விருப்பங்களும் இணைகின்றன என்று ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், IIT MADRAS
இளையராஜா முழுநேரம் வழிநடத்துவாரா?
“ஒரு நேர்த்தியான கமகம் (கர்நாடக இசை ஒலிகள்) எவ்வாறு இசைக்கப்படுகிறது என்பதை இன்னும் சின்தசைஸ் செய்ய முடியவில்லை. அதைப் போலவே இசையின் மொழியை ஆராய்ந்து தெரிந்து கொள்ள இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன,” என காமகோடி தெரிவித்தார்.
இசை மாணவர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், “அனுபவத்தில் இருந்து இசை கற்றுக் கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவோடு இணைந்து இதுபோன்ற முயற்சிகள் நடப்பது இசையை ஜனநாயகப்படுத்தும். இந்த மையத்தில் செயல்படுத்தப்படும் பாடப்பிரிவின் நோக்கங்கள் என்ன? மாணவர் சேர்க்கைக்காக தகுதிகள் என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இசையமைப்பாளர் இளையராஜாவிடமே கற்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்,” என்று தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி-யில் அமையவிருக்கும் இந்த மையத்தில் முழு நேரப் பாடப்பிரிவை இளையராஜா வழிநடத்துவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஐ.ஐ.டி நிர்வாகம், “முழு நேர பாடப்பிரிவை நடத்த முடியாவிட்டாலும், இளையராஜா அவர்கள் மிக நெருக்கமாக ஐ.ஐ.டி-யுடன் பணியாற்றுவார், இந்த மையத்துக்கு தொடர்ந்து வழிகாட்டுவார். இந்த மையத்தில் பிற இசைக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றுவோம்,” என தெரிவித்துள்ளது
'பாடல்கள் குறித்து இளையராஜா நேரடியாக விளக்குவார்'
இந்த மையத்தின் மூலம் இசை கற்றலை விரிவுபடுத்த முயல்வதாக சென்னை ஐ.ஐ.டி-யில் பொறியியல் வடிவமைப்புத் துறையின் பேராசிரியர் எம்.ராமநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள் இருப்பது போல் பள்ளிகளில் இசை ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளும் வகையிலான, மாணவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் பயிற்சிப் பட்டறைகள் தொடங்கவுள்ளன. இளையராஜா அவரது குழுவினருடன் இணைந்து ஒரு பாடலை எப்படி இசையமைத்தார்கள் என்று நேரடியாக விளக்குவார்கள்,” என்றார்.
"இளையராஜாவின் பாடல்களை கேட்கும் போது மனதில் ஒருவித விவரிக்க முடியாத உணர்வு ஏற்படும். இசைக்கும் மனித உணர்வுகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும்," என்றார்.
'3டி பிரிண்டிங்' முறையில் இசைக் கருவிகள்

பட மூலாதாரம், Getty Images
பல விதமான கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் நூற்றுக்கணக்கான இசைகருவிகள் உள்ளன. இவற்றில் பல இன்று அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அந்தக் கருவிகளின் வரலாறு, அவற்றின் வடிவமைப்பு பற்றிய ஆய்வுகள் நடைபெறும் என்கிறார் பேராசிரியர் எம்.ராமநாதன். “தமிழ்நாட்டின் யாழ் இன்று பயன்பாட்டில் இல்லை. இது போன்று பல கருவிகள் இந்தியா முழுவதும் இருந்தன, சிலவற்றின் பெயர் கூட நமக்கு தெரியாது,” என்கிறார்.
இசைக் கருவிகளைத் தயாரிப்பதையும் அவற்றை இசைக்கக் கற்றுக் கொள்வதையும் தொழில்நுட்பத்தைக் கொண்டு எளிமையாக்கலாம் என்கிறார் ராமநாதன். “எப்படி விமானம் ஓட்டுவதற்கு முன்பாக, flight simulator (உண்மையான விமானத்தை ஓட்டுவதை போன்ற மெய்நிகர் அனுபவத்தை தரக்கூடிய தொழில்நுட்பம்) பயன்படுத்துகிறார்களோ அதே போன்று வயலின் போன்ற கருவிகளை மெய்நிகர் அனுபவத்தில் இசைத்து பழகலாம். இசைக்கருவிகளைத் தயாரிப்பதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்க 3டி தொழில்நுட்பம் கொண்டு அவற்றை அச்சிடலாம். சோதனை முறையில் சென்னை ஐ.ஐ.டி-யில் வயலின் மற்றும் யுகலெலே ஆகிய இசைக்கருவிகளை 3டி பிரிண்டிங்க் முறையில் ஆச்சிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மையத்தின் மூலம் முற்றிலும் புதிதான இசைக்கருவிகளை படைப்பதற்கு வாய்ப்புண்டு,” என்கிறார்.
சென்னை ஐ.ஐ.டி-யில் விருப்பப் பாடங்களாக ‘இசைக் கருவிகளின் அறிவியல்’ மற்றும் ‘கர்நாடக இசைக்கான அறிமுகம்’ ஆகிய பாடங்கள் உள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












