பல ஆயிரம் கோடி ரூபாய் 'தங்கச் சுரங்க' மோசடி - 2 நாடுகளில் ஏமாற்றியவர் அமெரிக்க நிறுவனத்தால் சிக்கியது எப்படி?

- எழுதியவர், லூசி வாலிஸ்
- பதவி, பிபிசி செய்திகள்
இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகளில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றைத் தாங்கள் கண்டுபிடித்ததாக கனடா நாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து பலர் அந்த சுரங்க நிறுவனத்தின் மீது முதலீடு செய்ய முன்வந்தனர். ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல, இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த பல உண்மைகள் பின்னர் வெளிவந்தன.
அவை இப்போது ஒரு புதிய பாட்காஸ்ட் தொடர் மூலம் விவாதிக்கப்பட்டன.
ஆனால் இன்று வரை அந்த சுரங்க நிறுவனத்தின் தலைமை புவியியலாளரின் மர்மமான மரணம் குறித்த உண்மை மட்டும் வெளிவரவில்லை.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
மார்ச் 19, 1997. அன்று காலை கனடிய சுரங்க நிறுவனமான ப்ரீ-எக்ஸ் மினரல்ஸின் (Bre-X Minerals) தலைமை புவியியலாளர் மைக்கேல் டி குஸ்மான் ஒரு ஹெலிகாப்டரில் தனது குழுவுடன் ஏறினார். இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகளின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அவர்கள் சென்றடைய வேண்டும். அது தங்கம் நிறைந்த பகுதி என்று சொன்னார்கள்.
இதற்கு முன்னரும் பலமுறை இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் மைக்கேல். இருப்பினும், இந்த முறை அங்கு சென்ற மைக்கேல் திரும்பி வரவில்லை. பயணத்தின் போது ஹெலிகாப்டரின் பின்புற இடது கதவை திறந்து, அடர்ந்த காடுகளுக்குள் மைக்கேல் குதித்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.
மைக்கேல் தற்கொலை செய்து கொண்டதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். அவர் ஹெபடைடிஸ்-பி, சி மற்றும் தீவிரமான மலேரியாவுடன் தொடர்ச்சியாக போராடியதால் ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கனேடிய பத்திரிகையாளர் சுசானே வில்டன், மைக்கேல் குஸ்மானின் மரணம் குறித்து விசாரிக்க, கல்கரி ஹெரால்டு செய்தித்தாளின் சார்பாக அங்கு அனுப்பப்பட்டார்.
"அந்த செய்திக்காக உலகின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நான் அனுப்பப்பட்டேன், அன்றிலிருந்து இன்று வரை என் மனதில் அந்தக் கதை அப்படியே இருக்கிறது," என்கிறார் சுசானே.
ஒரு புதிய பாட்காஸ்ட் தொடருக்காக அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீண்டும் ஒன்று கூடினார்கள். உண்மையில் அந்த ஹெலிகாப்டர் பயணத்தின் போது என்ன நடந்தது? மைக்கேல் குஸ்மானின் மரணம் தற்கொலை தானா?
காதலர் தினத்தன்று பிறந்த மைக்கேல்

பட மூலாதாரம், Richard Behar
மைக்கேல் டி குஸ்மான், 1956ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பிலிப்பைன்ஸில் பிறந்தார். அவர்கள் வாழ்க்கையில் பலமுறை காதலில் விழுந்தார். அவருக்கு வெவ்வேறு நாடுகளில் மூன்று அல்லது நான்கு மனைவிகள் இருந்தனர்.
பீர் குடிப்பது, ஆபாச கிளப்களுக்கு செல்வது மற்றும் தங்கம் அணிவது ஆகியவற்றை அவர் விரும்பினார். அவர் ஒரு அனுபவ மிக்க புவியியலாளர். இந்தோனேசியா செல்வதன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் நம்பினார்.
1990களில், தங்கத்தின் அடிப்படையில் ஒரு நம்பிக்கைக்குரிய நாடாக இந்தோனேசியா இருந்தது என்கிறார் சுசானே வில்டன்.
ஜான் ஃபெல்டர்ஹாஃப், ஒரு டச்சுக்காரர். புவியியலாளர்களின் இந்தியானா ஜோன்ஸ் என்று பலரால் அழைக்கப்பட்டவர். போர்னியோ தீவின் கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள புசாங்கின் ஒரு தொலைதூர பகுதியில், யாராலும் தோண்டப்படாத ஒரு தங்கச் சுரங்கம் இருப்பதாக அவர் நம்பினார். ஆனால் அந்த திட்டத்தைத் தொடர முதலீடு தேவைப்பட்டது.
தங்கத்திற்கான கனவு

பட மூலாதாரம், Warren Irwin
ஏப்ரல் 1993இல், ஃபெல்டர்ஹாஃப், ப்ரீ-எக்ஸ் மினரல்ஸின் தலைவரான டேவிட் வால்ஷுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். தங்கச் சுரங்கக் கனவையும், அது ஈட்டும் லாபத்தையும் முதலீட்டாளர்களுக்கு விற்க முடிவு செய்தார் வால்ஷ்.
ஃபெல்டர்ஹாஃப் களத்தில் வேலை செய்யத் தொடங்கிய பிறகு, இந்த வேலையில் தனது நண்பர் மைக்கேல் குஸ்மானின் உதவியும் தேவை என்பதை அவர் புரிந்துகொண்டார்.
ஆனால் தங்கம் உண்மையில் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்க்க ஃபெல்டர்ஹாஃப், குஸ்மான் மற்றும் அவர்களது குழுவினருக்கு 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வரை மட்டுமே இந்தோனேசிய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதற்குப் பிறகு, இந்தோனேசிய அரசு சுரங்கத் தொழிலுக்கு வழங்கிய உரிமம் காலாவதியானது. காலக்கெடுவுக்கு சில நாட்களுக்கு முன்பு, இரண்டு சுரங்கங்கள் தோண்டப்பட்டன, ஆனால் தங்கத்தின் எந்த அறிகுறியும் இல்லை.
பின்னர் எங்கு தோண்டினால் தங்கம் கிடைக்கும் எனத் தனக்கு தெரியும் என்றும், அதை தான் கனவில் கண்டதாகவும் குஸ்மான் ஃபெல்டர்ஹாஃப்பிடம் கூறியதாக சுசானே வில்டன் விளக்கினார்.
குஸ்மான் சொன்ன இடத்தில் சுரங்கம் தோண்டிய குழு, தங்கத்தைக் கண்டுபிடித்தது. நான்காவது சுரங்கம் தோண்டிய பின்னர் மேலும் அதிக தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அடுத்த மூன்று ஆண்டுகளில், தளத்தில் வேலை தொடர்ந்தது. அங்கு புதைந்து இருக்கக்கூடிய தங்கத்தைப் பற்றிய ஊகங்கள் அதிகரித்ததால், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
ப்ரீ-எக்ஸ் மினரல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் உயரத் தொடங்கியது. 75 பைசா என்று இருந்த பங்குகளின் விலை உயர்ந்து 17 ஆயிரம் ரூபாய் என மாறியது. காலப்போக்கில், நிறுவனத்தின் மதிப்பீடு 6 பில்லியன் கனடிய டாலர்களை எட்டியது (இந்திய மதிப்பில் ரூ.33,600 கோடி).
கனடாவில் உள்ள பல சிறிய ஊர்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சேமிப்பை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
நேரம் செல்லசெல்ல, மின்னுவதெல்லாம் பொன்னல்ல எனத் தெரிந்தது.
இந்தோனேசிய அரசின் தலையீடு

பட மூலாதாரம், Warren Irwin
1997ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தோனேசியாவின் அப்போதைய ஜனாதிபதி சுஹார்டோ, ப்ரீ-எக்ஸ் மினரல்ஸ் போன்ற ஒரு சிறிய நிறுவனம் இந்த மொத்த தங்க சுரங்கங்களின் ஒரே உரிமையாளராக இருந்து, அனைத்து நன்மைகளையும் பெற முடியாது என்று கூறினார்.
இந்தோனேசிய அரசாங்கத்துடன் இது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் மற்றும் அனுபவம் வாய்ந்த ஒரு பெரிய நிறுவனத்துடன் ப்ரீ-எக்ஸ் கூட்டு சேர வேண்டும் என்றும் கூறப்பட்டது. எனவே அமெரிக்க நிறுவனமான ஃப்ரீபோர்ட்-மெக்மோரானுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தில் உள்ள நிதி சார்ந்த அபாயங்களை ஏற்பதற்கு முன், ஃப்ரீபோர்ட் நிறுவனம் அதன் சொந்த, சுதந்திர விசாரணையை நடத்த வேண்டியிருந்தது.
புசாங் பகுதியில் இரட்டைத் துளை முறை மூலம் சோதனையிட புவியியலாளர்கள் அனுப்பப்பட்டனர். இரட்டைத் துளை முறை என்பது ஒரு இடத்தில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்த, தங்கம் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மீண்டும் துளையிடுவது.
இது ஒரு பொதுவான சுரங்க செயல்முறை தான், ஆனால் ப்ரீ-எக்ஸ் நிறுவனம் அதை இதுவரை செய்யவில்லை.
இரட்டை துளை சோதனையில் கிடைத்த மாதிரிகள் இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன, ஆனால் முடிவுகள் ஒரே மாதிரியாக வந்தன. தங்கத்தின் தடயங்கள் எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தத் திட்டத்திலும் நிறுவனத்திலும் தங்கள் பணத்தை முதலீடு செய்த மக்களுக்கு இது பெரும் புதிராக இருந்தது.
வால்ஷ் மற்றும் ஃபெல்டர்ஹோஃப் ஆகியோருக்கு ஃப்ரீபோர்ட்-மெக்மோரான் மூலம் இந்த புதிய முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. டொராண்டோவில் ஒரு மாநாட்டில் இருந்த குஸ்மானிடம், ஃப்ரீபோர்ட்-மெக்மோரான் குழுவைச் சந்தித்து விளக்கமளிக்க புசாங்கிற்குத் திரும்பும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.
மைக்கேல் டி குஸ்மானின் இறுதி தருணங்கள்

பட மூலாதாரம், Genie de Guzman
டி குஸ்மான் கனடாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக பயணம் செய்தார், அங்கு அவர் தனது மனைவி ஜெனியுடன் நேரத்தை சிறிது செலவிட்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர்.
அவரது இறுதி தருணங்களை மற்றொரு கனேடிய பத்திரிகையாளர் ஜெனிபர் வெல்ஸ் தொகுத்துள்ளார்.
டி குஸ்மான் தனது கடைசி தருணங்களை புசாங் சுரங்கத்திற்கு தெற்கே 100 மைல் (161 கி.மீ) தொலைவில் உள்ள பாலிக்பாபன் நகரில் ப்ரீ-எக்ஸ் மினரல்ஸ் ஊழியர் ரூடி வேகாவுடன் கழித்ததாக அவர் கூறுகிறார்.
ப்ரீ-எக்ஸ் நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் ஆய்வுக் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தார் வேகா. ஃப்ரீபோர்ட்-மெக்மோரான் குழுவை எதிர்கொள்ள டி குஸ்மானுடன் அவரும் பயணிக்க வேண்டியிருந்தது.
இந்தோனேசிய காவல்துறையிடம் வேகா கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் இருவரும் கரோக்கி பாருக்குச் சென்றனர். பின்னர் தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பிறகு, டி குஸ்மான் தற்கொலைக்கு முயன்றார் என வேகா கூறியுள்ளார்.
மறுநாள் காலை, டி குஸ்மானும் வேகாவும் ஹெலிகாப்டரில் புசாங்கிற்கு அருகில் உள்ள மற்றொரு நகரமான சமரிண்டாவுக்குச் சென்றனர்.
டி குஸ்மான் சுரங்கத்திற்குச் செல்ல ஹெலிகாப்டரில் ஏறினார், ஆனால் வேகா அவருடன் செல்லவில்லை.
விமானத்தில் டி குஸ்மானுடன் இரண்டு ஆண்கள் இருந்தனர், ஒரு பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஒரு விமானி. ஆனால் விமானி இந்தோனேசிய விமானப்படையைச் சேர்ந்தவர். வழக்கமாக புசாங் சுரங்கத்திற்கு குஸ்மானை அழைத்துச் சென்றவர் அல்ல.
பின்னர் அந்த விமானி அளித்த வாக்குமூலத்தில் இந்தப் பயணம் பற்றி அதிகம் பேசவில்லை. டி குஸ்மானின் மரணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு என்ன நடந்தது என்பதை தான் பார்க்கவில்லை என்றும் அந்த விமானி கூறியதாக சுசானே வில்டன் கூறுகிறார்.
மார்ச் 19, 1997 அன்று உள்ளூர் நேரப்படி 10:30 மணிக்கு, டி குஸ்மான் இறந்தார்.
ஹெலிகாப்டரில் அவரது கையால் எழுதப்பட்ட தற்கொலைக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு தான் அந்தக் காட்டில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

குஸ்மான் தற்கொலை தான் செய்து கொண்டாரா?
டி குஸ்மான் இறந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு, புசாங் தங்கக் கனவு கனவாகவே முடிந்து போனது. முதலீட்டாளர்களை இது பெரும் விரக்தியில் ஆழ்த்தியது.
ப்ரீ-எக்ஸ் மினரல்ஸின் மதிப்பீடு பூஜ்ஜியத்திற்கு சென்றது. ஒரு புதிய அறிக்கை புசாங் தளத்தில் தங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
1995ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை கண்டெடுக்கப்பட்ட பாறை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. தங்கத்துகள்கள் அந்தப் பாறைகள் மீது சால்டிங் என்ற முறை மூலம் தூவப்பட்டு, போலியாக அறிக்கை அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏறக்குறைய 30 ஆண்டுகள் கடந்த பிறகும், இந்த மோசடிக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ப்ரீ-எக்ஸ் மினரல்ஸின் தலைவரான வால்ஷ் இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். 1998இல் பக்கவாதத்தால் இறந்து போனார் வால்ஷ். 2007ஆம் ஆண்டில், கனேடிய நீதிபதி ஒருவர், ஃபெல்டர்ஹாஃப் இந்த மோசடி பற்றி அறிந்திருக்கவில்லை என்றும், அவர் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பளித்தார். டச்சுப் புவியியலாளர் ஃபெல்டர்ஹாஃப் 2019இல் இறந்தார்.
ஆக இந்த வழக்கு நம்மை மீண்டும் டி குஸ்மானிடம் கொண்டு செல்கிறது. மோசடியின் மூளையாக தான் இருந்ததை, உலகம் அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக தான் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டாரா?
சந்தேகங்களை எழுப்பும் தற்கொலை கடிதம்
அவரது தற்கொலைக் கடிதம் பல கேள்விகளை எழுப்புகிறது என்கிறார் சுசானே வில்டன். உண்மையில் அந்த கடிதத்தை டி குஸ்மான் தான் எழுதியிருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது என்று அவர் கூறுகிறார்.
அந்த கடிதத்தில் குஸ்மானின் உடல் உபாதைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உபாதைகளைப் பற்றி அவர் ஒருமுறை கூட யாரிடமும் சொல்லவில்லை என்று அவரது உறவினர்கள் கூறினார் என்கிறார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வெளியானவுடன், சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆய்வு செய்ய டி குஸ்மானின் குடும்பத்தினரால் பணியமர்த்தப்பட்டவர் தான் டாக்டர் பெனிட்டோ மோலினோ. அப்போது இவர் பிலிப்பைன்ஸ் புலனாய்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
காட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் புகைப்படங்களில், கழுத்தில் காயங்களைக் கண்டதாக மோலினோ கூறுகிறார். அதிலிருந்து டி குஸ்மான் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக அவர் முடிவு செய்தார்.
"அவர் இறந்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தோற்றத்தை ஏற்படுத்த ஹெலிகாப்டரில் இருந்து காட்டிற்குள் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும்" என்று மோலினோ அந்த பாட்காஸ்டில் கூறுகிறார்.
"பெரிய குற்றங்களில், எப்போதும் ஒரு பலியாடு இருப்பார், அதனால் உண்மையான குற்றவாளி உலகின் கண்களுக்கு புலப்பட மாட்டார் என்பதால் தான்” என்கிறார் மோலினோ.

உண்மையில் அந்த உடல் குஸ்மானுடையது தானா?
முதற்கட்ட விளக்கங்களின் அடிப்படையில், உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர் இறந்து நான்கு நாட்களுக்கும் மேலாகியிருந்தது என்பது தெரிந்தது என மோலினோவுடன் பணிபுரிந்த தடயவியல் மானுடவியலாளர் டாக்டர் ரிச்சர்ட் தடுரன் கூறுகிறார்.
கண்டுபிடிக்கப்பட்ட அந்த உடலில் பற்கள் அப்படியே இருந்ததாகவும், ஆனால் தனது கணவருக்கு போலி பற்கள் பொருத்தப்பட்டிருந்தது எனவும் கூறுகிறார் டி குஸ்மானின் மனைவி ஜெனி. டி குஸ்மானின் பல் மருத்துவப் பதிவுகள் அவரது குடும்பத்தினரால் இதுவரை வெளியிடப்படவில்லை என்று சுசானே வில்டன் கூறுகிறார்.
புவியியலாளர் மன்சூர் கெய்கர், ஜெனி டி குஸ்மானின் நண்பர். தனது கணவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தென் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றதாகவும், அவர் இப்போது கேமன் தீவுகளில் வசித்து வருவதாகவும் ஜெனி டி குஸ்மான் நம்புவதாக கெய்கர் கூறுகிறார்.
தான் தற்கொலை செய்துகொண்டதாக உலகை நம்பவைக்க, டி குஸ்மானே ஒரு உடலை ஏற்பாடு செய்திருக்க முடியுமா?
தனது தாய் ஜெனி கூறியதை வைத்து, தந்தை குஸ்மான் ன்னும் உயிருடன் தான் இருப்பதாக நம்புகிறார் மைக்கேல் டி குஸ்மான் ஜுனியர். தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு புவியியலாளர், மேலும் தனது தந்தையின் பாரம்பரியத்தைத் தொடரும் உறுதியுடன் இருக்கிறார், ஆனால் இந்த முறை நேர்மையான வழியில்.
"ஒருவேளை நான் எதிர்காலத்தில் என்னுடைய சொந்த சுரங்க தொழிலைத் தொடங்கலாம். சில முதலீட்டாளர்களைப் பெற்று, ஒரு சிறந்த மைக் டி குஸ்மானாக வாழ முடியும்" எனக் கூறுகிறார் மைக்கேல் டி குஸ்மான் ஜூனியர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












