காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள்

பட மூலாதாரம், FAMILY HANDOUT
- எழுதியவர், அமைரா மதாபி
- பதவி, பிபிசி அரபு சேவை
ஒருபுறம் காஸாவில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மறுபுறம் 13,000த்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பலரும் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், பல மனிதநேய சேவை குழுக்களும், அவர்கள் வலுக்கட்டாயமாக இங்கிருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அப்படியாக தொலைந்தவர்களில் ஒருவரான முஸ்தஃபாவை, அவரது சகோதரர் அகமது அபு துக் பல மாதங்களாக தேடி வருகிறார்.
போரிலிருந்து தப்பிப்பதற்காக தெற்கில் உள்ள நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகத்தில் இவர்களது குடும்பம் தஞ்சம் புகுந்துள்ளது. ஆனால் இவர்களது பக்கத்து வீடு தீயில் எரிவதாக கேள்விப்பட்ட முஸ்தஃபா தங்களது வீட்டின் நிலை குறித்து பார்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால், அதற்கு பிறகு அவர் திரும்பி வரவே இல்லை.
"எங்களால் முடிந்த வரை அவரை தேடினோம்" என்கிறார் அகமது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "முன்பு வீடுகள் இருந்த இடத்தில், தற்போது எரிந்த குப்பைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எங்கள் பகுதி முழுவதும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு, பல மாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன."
ஆம்புலன்ஸ் டிரைவரான முஸ்தஃபாவின் உடலை எங்கெங்கோ தேடியும் பலனில்லை. காஸாவில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்த உடல்கள் தொடங்கி அருகில் இருந்து குழிகள் உட்பட அனைத்து இடத்தில் தேடியும் முஸ்தஃபாவின் உடல் கிடைக்கவே இல்லை.
மருத்துவமனைக்கு வரும் ஏதாவது ஒரு அவசர ஊர்தியிலாவது அவரை கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் தங்கள் குடும்பம் இருப்பதாக கூறுகிறார் அகமது.
காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐத் தாண்டியுள்ளதாகக் கூறுகிறது. இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அடிப்படையிலானது.

பட மூலாதாரம், Getty Images
10,000 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனரா?
முஸ்தஃபாவைப் போலவே காணாமல் போன ஏராளமான நபர்களின் குடும்பங்கள் கடந்த ஏழு மாதங்களாக அவர்களது நிலை குறித்து எந்த தகவலும் இன்றி தவித்து வருகின்றனர்.
அக்டோபர் 7, 2023இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய முன்னறிவிப்பற்ற தாக்குதலில் 1200 பேர் இறந்தது மட்டுமின்றி 252 பேர் பணையக்கைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.
போர் தொடங்கியதற்கு பிறகு காஸா மக்கள் மற்றும் ஹமாஸ் வீரர்கள் உட்பட 13,000 பேர் எந்தவித தடயமும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக, ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும் யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
அதிகாரப்பூர்வ பாலஸ்தீன பாதுகாப்பு சேவையின் ஒரு பகுதியாக காஸாவில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்பு பிரிவு, காணாமல் போனவர்களில் 10,000 பேர் வரை இடிபாடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று கூறுகிறது.
ஐ.நா. மதிப்பீட்டின்படி, காஸாவில் 37 மில்லியன் டன் இடிபாடுகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழ் பல உடல்கள் புதையுண்டுள்ளன. இது தவிர, காஸாவில் சுமார் 7,500 வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆங்காங்கே உள்ளன. இது நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலாக உள்ளது.
சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ள உடல்களை மீட்பதற்கு தன்னார்வலர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களிடம் சாதாரணமான உபகரணங்களே உள்ளதால் அவர்களால் மீட்புப்பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
இதைத்தாண்டி, இந்த முறை காஸாவில் மோசமான வெப்பநிலை நிலவுவதால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் பிணங்களில் இருந்து ஏதாவது தொற்று நோய் பரவலாம் என்றும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

பட மூலாதாரம், EPA
இஸ்ரேலிய ராணுவம் கைது செய்துள்ளதா?
அப்துல் ரஹ்மான் யாகி தனது குடும்பத்தை இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கான சவாலான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.
மத்திய காஸாவில் உள்ள டெய்ர் அல்-பாலா பகுதியில் இவரது குடும்பத்தின் மூன்று அடுக்கு மாடி வீடு இருந்தது. பிப்ரவரி 22 ஆம் தேதி, இந்த வீட்டின் மீது ஏவுகணை விழுந்த போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் அந்த வீட்டிற்குள் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 17 பேர் மட்டுமே இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டதாகவும், அதிலும் கூட முகங்கள் மோசமாக சிதைந்திருந்ததால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார் யாகி.
மேலும், "வீட்டில் இருந்த பெரும்பாலான குழந்தைகளின் உடல்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார் அவர்.
இதுபோன்று சிக்கியுள்ள உடல்களை மீட்க உதவிக்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அனுபவம் உள்ள நாடுகளின் சர்வதேச உதவியை கோரியுள்ளது சிவில் பாதுகாப்பு அமைப்பு.
இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, காஸாவுக்குள் கனரக இயந்திரங்களை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் தர சர்வதேச அமைப்புகளையும் அது கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அதன் மீதான எந்த ஒரு பதிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
காணாமல் போனதாகக் கருதப்படும் நபர்கள் அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்று நம்புகிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International). இதைத்தான் 'அரச அமைப்புகளால் காணாமல் ஆக்கப்படுவது' என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்..
யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மதிப்பீட்டின்படி, காஸாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் அவர்களது குடும்பத்தினருக்குக் கூட தெரியாமல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவரை காவலில் வைத்திருக்கும் நாடு அந்த நபரின் அடையாளம் மற்றும் அவரது இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கண்டிப்பாக அவரை சார்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஜெனிவா ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு பிறகு, இதுபோன்ற தடுப்பு காவல் மையங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் வருவதையும் தடை செய்துள்ளது இஸ்ரேல்.

பட மூலாதாரம், Getty Images
'வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள்'
காசாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை அதிகாரி ஹிஷாம் முஹன்னா பேசுகையில், அந்த அமைப்பு "தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களை சந்திக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இதுவரைஅனுமதி கிடைக்கவில்லை" என்று கூறினார்.
அதேபோல் இஸ்ரேலிய பணயக்கைதிகளை சந்திக்கவும் ஹமாஸிடம் அனுமதி கிடைக்கவில்லை என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையிடம் பிபிசி கருத்து கேட்ட நிலையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஆனால் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் சதனது எக்ஸ் பக்கத்தில், “ஹமாஸால் கடத்தப்பட்ட பணையக்கைதிகள் குறித்து எந்த தகவலும் இஸ்ரேலுக்கு கிடைக்காத நிலையில், இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹமாஸ் வீரர்கள் குறித்து செஞ்சிலுவை சங்கமும் எந்த தகவலையும் சேகரிக்க கூடாது” என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மத்திய காஸாவின் மற்றொரு நகரமான அல்-ஜவைடாவில் உள்ள மற்றுமொரு குடும்பம், காணாமல் போன தங்கள் இரண்டாவது மகனான முஹம்மது அலியைத் தேடி வருகிறது. "வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில்" தங்களது மகனும் இருக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
அவர்களது மகன் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் காவலில் இருப்பதாக யாரோ சொல்லும் வரை , முஹம்மது அலியின் தாயார், தனது மகனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவனைத் தேடிக் கொண்டிருந்தார்.
கடைசியாக முஹம்மது அலியை பார்த்தவர்கள் அவர் உயிரோடு இருந்ததாகவும், அதற்கு பின் என்ன ஆனது என்று எந்த ததகவலும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், REUTERS
நம்பிக்கையில் தொடரும் தேடல்
கடுமையான குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, வடக்கு காஸாவின் ஜபாலியாவில் உள்ள பள்ளியில் தஞ்சம் அடைவதற்காக டிசம்பர் 23 அன்று அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து முகமதுவைக் காணவில்லை.
ஆனால் அந்த பள்ளிக்குள் நுழைந்த இஸ்ரேலிய வீரர்கள், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் வெளியேற உத்தரவிட்டதாக முகமதுவின் மனைவி அமானி அலி கூறுகிறார்.
மேலும், முகமதுவைத் தவிர அனைத்து ஆண்களும் அன்று இரவே திரும்பிவிட்டதாகவும், ஆனால் முகமது மட்டும் திரும்பவில்லை என்றும் கூறுகிறார் அவரது மனைவி.
அவருக்கு என்ன நடந்தது, எங்கு சென்றார் என்று யாருக்குமே தெரியவில்லை.
தனது கணவர் இறந்துவிட்டதாக கருதுவதா அல்லது இஸ்ரேலிய படையின் காவலில் இருக்கிறார் என்று நினைப்பதா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அமானி கூறுகிறார்.
இருப்பினும், இஸ்ரேலிய படைகளால் கைப்பற்றப் பட்டிருந்தால் அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான இணையவழி படிவத்தை உருவாக்கி, அக்டோபர் 7க்குப் பிறகு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உறுதியான பதிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதிலிருந்து, சரியான தகவல் கிடைக்கும் வரை காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து அவர்களை தேடிக்கொண்டிருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












