தமிழ்நாட்டிற்கு தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு விற்றதா? பிபிசிக்கு அதானி குழுமம் பதில்

தமிழ்நாடு, அதானி குழுமம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த 2014ஆம் ஆண்டு அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO) விற்ற நிலக்கரியில் மோசடி நடந்திருப்பதாகவும், இதனால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சுமார் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ஆதரங்களுடன் கூடிய புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் அடிப்படையற்றவை என அதானி குழுமம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படவில்லை என்ற கூற்றை மறுப்பதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்புகொண்டபோது, அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

அதானி குழுமம் 2014ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் இருந்து சென்னைக்குக் கொண்டு வந்த 69,925 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி, தரம் குறைந்தது என்றும், ஆனால் அது உயர்தரக் கரி என்று சொல்லப்பட்டு, அதன் விலை மும்மடங்கு உயர்த்தப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு விற்கப்பட்டதாகவும் அந்தப் புலனாய்வு அறிக்கை சொல்கிறது.

'ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் திட்டம் (Organized Crime and Corruption Reporting Project)' என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் இவ்வறிக்கை குறித்த செய்தியை பிரிட்டனை சேர்ந்த 'ஃபினான்ஷியல் டைம்ஸ்' பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், 2016-2017ஆம் ஆண்டே புலனாய்வு செய்து இந்த முறைகேட்டைக் கண்டறிந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ஊழலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை புதன்கிழமை (மே 22) வெளியானதில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அறிக்கை சொல்வது என்ன?

தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு அதானி குழுமம் தமிழகத்திற்கு விற்றதா? - புலனாய்வு அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தோனீசியாவில் இருந்து 69,925 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சென்னை வந்த கப்பல், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களைச் சுற்றிக்கொண்டு வந்ததாக ஒசிசிஆர்பி (OCCRP) அறிக்கை கூறுகிறது.

இந்தப் பயணத்தின்போது தரம் குறைந்த நிலக்கரி, உயர்தர நிலக்கரி என்று தகவல் மாற்றப்பட்டு, அதன் விலை மும்மடங்காகி, ஒரு மெட்ரிக் டன்னுக்கு 91.91 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 7,655 ரூபாய்) ஆனது என்று தெரிவிக்கிறது.

இதற்கான தரவுகள், பல இடங்களில் இருந்து பெறப்பட்ட வங்கி ஆவணங்கள், இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், இந்தோனீசியாவில் அதானி குழுமம் நிலக்கரி வாங்கும் ஒரு முக்கிய நிறுவனம் கசியவிட்ட ஆவணங்கள், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இருந்து பெற்ற பல ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், அதானி குழுமம் வாங்கிய நிலக்கரி நிறுவனங்களுக்கிடையே கைமாறியபோது அதன் தரம் படிப்படியாக உயர்த்திக் காட்டப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தோனீசியாவை சேர்ந்த ஜோன்லின் என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு குறிப்பிடப்படவில்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் அந்த நிறுவனத்திடம் இருந்து கசிந்த ஆவணங்கள் அந்த நிலக்கரியின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 28 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2,332 ரூபாய்) என்று தெரிவிக்கின்றன. இது அன்று ஜோன்லின் நிறுவனம் தரம் குறைந்த நிலக்கரியை இந்த விலைக்குத்தான் விற்றது என்ற தகவலுடன் பொருந்திப் போவதாகவும் ஒசிசிஆர்பி அறிக்கை கூறுகிறது.

ஜோன்லின் நிறுவனம், 'அதானி குளோபல் பிடிஈ சிங்கப்பூர் என்ற நிறுவனத்திற்கு அளித்த விலைப் பட்டியலில் அந்த நிலக்கரியின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 33.75 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2,811 ரூபாய்) என்று தெரிவித்திருந்தது. மேலும் இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு 'ஒரு கிலோவுக்கு, 3,500 கிலோ கலோரிகளுக்கும் குறைவானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தரம் குறைந்த (லோ கிரேட்) நிலக்கரி என்று வகைப்படுத்தப்படுகிறது.

ஆனால், சுமார் ஒரு மாத காலத்திற்குப் பிறகு அதே நிலக்கரியில் இந்தத் தகவல்கள் அனைத்தும் மாறியிருந்தன, என்கிறது இந்த அறிக்கை. ஒரு யூனிட் நிலக்கரியின் விலை 91.91 அமெரிக்க டாலர்களாகி இருந்தது. அதேபோல் அதன் கலோரிஃபிக் மதிப்பு ஒரு கிலோவுக்கு 6,000 கிலோகாலரிகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.

அதானி குழுமம் 2014ஆம் ஆண்டு வழங்கிய இரண்டு டஜன் நிலக்கரி டெலிவரிகளை ஆய்வு செய்து அவற்றிலும் இதே போக்கு இருப்பதை ஒசிசிஆர்பி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இறுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தரம் குறைந்த நிலக்கரியை, அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இழப்பின் அளவைக் கணித்தது எப்படி?

தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு அதானி குழுமம் தமிழகத்திற்கு விற்றதா? - புலனாய்வு அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், ARAPPOR IYAKKAM

படக்குறிப்பு, இந்த முறைகேட்டை 2016-2017ஆம் ஆண்டிலேயே கண்டறிந்ததாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன்.

இந்த முறைகேட்டை 2016-2017ஆம் ஆண்டிலேயே கண்டறிந்ததாகக் கூறும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, 2016இல் பல தகவல் அறியும் உரிமை சட்டக் கோரிக்கைகள் மூலம் இதைக் கண்டறிந்ததாகக் கூறினார்.

"அதன்மூலம், நிலக்கரி இறக்குமதித் தரவுகள், டெண்டர் ஆவணங்கள், கொள்முதல் ஆவணங்கள் ஆகியவற்றைப் பெற்று, அவற்றிலுள்ள தகவல்களை இந்தோனீசிய சந்தை நிலவரத்துடன் ஒப்பிட்டோம்," என்கிறார் ஜெயராமன்.

அதோடு, தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனமும் (Tamil Nadu Newsprint & Paper Limited - TNPL) இதே நிலக்கரியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்தார்.

"அவர்களது தரவுகளையும் பெற்று விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். அந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி டிஎன்பிஎல் சொந்தமாக வாங்கிய நிலக்கரிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 70 அமெரிக்க டாலர்கள் என்ற விலையைக் கொடுத்தது. ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் கழித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதே நிலக்கரிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 91 அமெரிக்க டாலர்கள் என்ற விலைக்கு அதானி குழுமத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கியது," என்றார்.

அதேபோல் இந்தோனீசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலக்கரி விலைகளையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்த முறைகேடு தெரிய வந்ததாகவும் ஜெயராமன் தெரிவித்தார்.

இந்தத் தரவுகளை வைத்துதான் இந்த முறைகேடுகளால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3,000 கோடி என்பதைக் கணித்ததாகச் சொல்கிறார் அவர்.

"சுங்கத்துறையின் தரவுகள் இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு 4,000 கிலோகாலரிகள் என்கின்றன. இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகமும் (Comptroller and Auditor General - CAG) இந்த நிலக்கரியில் மூன்றில் ஒரு பங்கு தரமற்றது என்று தெரிவித்திருக்கிறது," என்றார் ஜெயராமன்.

இதுகுறித்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ-க்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளித்ததாகவும், ஆனால் அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார் அவர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் பொதுத் துறையிலும், மின்சாரத் துறையிலும் புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் இன்னும் அரசு இதில் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறது என்றும் கூறினார்.

அப்போதைய மின்துறை அமைச்சரின் பதில் என்ன?

தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு அதானி குழுமம் தமிழகத்திற்கு விற்றதா? - புலனாய்வு அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்தக் குற்றச்சாட்டுகளை அப்போது தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதை நத்தம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதனிடம் முன்வைத்தோம்.

"இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை," என்று கூறினார் நத்தம் விஸ்வநாதன்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் "நிலக்கரி கொள்முதல் குறித்த முடிவுகள் தனியொரு நபரால் எடுக்கப்படுவதில்லை, அது ஒரு குழுவால் எடுக்கப்படுபவை. அதனால் எந்தவொரு தனிப்பட்ட நபரும் இதற்குப் பொறுப்பாக முடியாது" என்றார்.

இதுபோன்ற முடிவுகளை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பல அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்துதான் எடுப்பார்கள் என்றும். தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், "இன்று நடக்கும் பல ஊழல்களை மறைக்க இதுபோன்ற பழைய விஷயங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் முகாந்திரமின்றி முன்வைக்கப்படுகின்றன," என்றார்.

அதானி குழுமத்தின் பதில் என்ன?

தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு அதானி குழுமம் தமிழகத்திற்கு விற்றதா? - புலனாய்வு அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி குழுமத்தின் பதிலை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அந்நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டது. அதற்கு அந்நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக பதிலளித்துள்ளது.

அதன்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் 'பொய்யானவை, மற்றும் அடிப்படையற்றவை' என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், அதானி குழுமம் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படவில்லை என்ற கூற்றை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரசாணை எண் 89இன் படி இந்த ஒப்பந்தம் நிலையான விலையின் அடிப்படையிலானது. வெளிப்படையான, போட்டி ரீதியான நடைமுறையின் மூலம் இந்த ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றது. அதன்படி, அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் நிலக்கரியை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனவே, சந்தை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம், விலை உள்பட எந்த வகையான விநியோக அபாயங்களில் இருந்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டது,” எனக் குறிப்பிட்டுள்ளது.

விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏதேனும் எதிர்மறையாக இருந்தால், அதை விநியோகிப்பவரே முழுமையாக ஏற்க வேண்டும் எனத் தனது பதிலில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதோடு, 7.2.2014 தேதியிட்ட அரசாணை 89இன் படி, மொத்த ஒப்பந்த அளவான 3.7 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில், 2.1 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கும் ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு அதானி குழுமம் தமிழகத்திற்கு விற்றதா? - புலனாய்வு அறிக்கை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த ஒப்பந்தத்தின்படி, “விநியோகிக்கப்படும் நிலக்கரியின் மொத்த கலோரிஃபிக் மதிப்பு, ஒரு கிலோவுக்கு 5,800 முதல் 6,700 கிலோ கலோரி (kcal/kg) இருக்க வேண்டும். நிலக்கரி காற்றில் உலர அனுமதிக்கப்பட்ட பிறகே அதன் தரம் கணக்கிடப்படுகிறது (air dried basis - ADB). மேலும், நிலக்கரி விநியோகிப்பவர் கலோரிஃபிக் மதிப்பு 5,800க்கும் குறைவாக உள்ள நிலக்கரியைக்கூட விநியோகிக்க முடியும். ஆனால், அதற்கு செலுத்தப்பட வேண்டிய தொகையில் இருந்து அதிகமான அபராதம் சரிசெய்யப்படும்,” என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் மற்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட தரம் குறைந்த நிலக்கரியை அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கியதாகக் கூறுவதும் தவறானது என விளக்கம் அளித்துள்ளது.

நிலக்கரியின் தரம் அது விநியோகிக்கப்படும் ஆலைகளில் மட்டுமல்லாமல், அவை ஏற்றப்படும் துறைமுகம், இறக்கி வைக்கப்படும் துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளால் பல்வேறு நிலைகளில் சோதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அதானி நிறுவனம், இந்தச் சோதனை முறை சுயாதீனமானது மற்றும் வெளிப்படையானது எனத் தெரிவித்துள்ளது.

எனவே, பல்வேறு நிலைகளில் இத்தகைய விரிவான தரச் சோதனை முறைகளைக் கடந்து விநியோகிக்கப்படும் நிலக்கரி, தரம் குறைந்தது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பது மட்டுமல்லாமல், நியாயமற்றதும் அபத்தமானதும்கூட என அதானி குழுமம் கூறியுள்ளது.

மேலும், அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமம், அந்த அமைப்பின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளித்துள்ளதாகவும் அத்துடன் அந்த விவகாரம் முடிவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

அதானி குழுமம் மீதான இக்குற்றச்சாட்டுகள் குறித்தும், இதுகுறித்து தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற 'அறப்போர் இயக்கத்தின்' புகார் குறித்தும் விளக்கத்தைப் பெற தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பிபிசி தமிழ் பலமுறை தொடர்புகொண்டது. எனினும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானியின் கருத்தைப் பெறவும் பிபிசி தமிழ் முயன்றது. ஆனால் அவரைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயன்றும் பலனளிக்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் கட்டுரையில் சேர்க்கப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)