கோடையில் ஏற்படும் நீரிழப்பு எப்போது ஆபத்தாக மாறும்? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
கோடைகாலம் தொடங்கியவுடன் பலரும் வீட்டிலிருந்து கையோடு எடுத்துச் செல்லும் ஒன்று, குடிநீர் நிரம்பிய பாட்டில். அது மட்டுமல்லாது தர்பூசணி, மோர், இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கண்டால், 'சரி வெயிலுக்கு நல்லது' என வாங்கி பருகுவது அல்லது உண்பதும் பலரது வழக்கம்.
ஆனால் 'இந்த வெயில் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது' என்று நினைத்துக்கொண்டு, வெயிலில் சுற்றுபவர்களுக்கு தொண்டை வறட்சி, தலைசுற்றல், மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர், சிவந்த கண்கள் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். அப்படியென்றால் அவர்கள் நீரிழப்பு அல்லது நீர்வற்றலால் (Dehydration) பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம். மனித உடல் எடுத்துக்கொள்ளும் நீரை விட அதிக நீர் உடலை விட்டு வெளியேறும்போது இது நடக்கிறது.
நீரிழப்பு என்பது உடலில் இருந்து நீர் வற்றிப்போகும் நிலை மட்டுமல்லாது, உடலுக்கு அத்தியாவசியமான கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளும் வெளியேறிவிடும். மிகச் சாதாரணமான விஷயமாகப் பார்க்கப்படும் இந்த நீரிழப்பு சில நேரங்களில் உயிரிழப்பு வரை கொண்டு சென்றுவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
கோடைகாலங்களில் வெப்ப பக்கவாதம் (Heat Stroke) குறித்த செய்திகளையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதுவும் 50 வயதைத் தாண்டியவர்கள் இதை அதிகம் எதிர்கொள்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக நீர்ச்சத்து குறைபாட்டால் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு (வயது 58) வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு, அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீரிழப்பால் நம் உடலுக்குள் என்ன நடக்கிறது?
அதை எப்படித் தடுப்பது? தொடர்ந்து நீரிழப்பு ஏற்படும் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images
இதயம் முதல் மூளை வரையிலான பாதிப்பு
இதுகுறித்து அறிந்துகொள்ள, பிபிசி தமிழ் சென்னை, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் சிறுநீரியல் பிரிவின் ஆலோசகராகப் பணிபுரிகிறார் மருத்துவர் ஆர்.ஸ்ரீவத்சனிடம் பேசியது.
“உடலின் ரத்தக் குழாய்களில் உள்ள நீர் மற்றும் உப்புகளின் சமநிலை தவறும்போது நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் உடலின் ரத்த அழுத்தம் குறைந்து உடனே வியர்க்கத் தொடங்குகிறது. உடலில் நீர் வற்றிப் போனால் அது இதயம் முதல் மூளை வரை அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளையும் பாதிக்கும்,” என்கிறார் மருத்துவர் ஆர்.ஸ்ரீவத்சன்.
உடலில் நீர் வற்றத் தொடங்கியவுடன், அதீத தாகம் எடுத்து நம் உடல் தண்ணீர் கேட்கும், அதைப் புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து வேலை செய்வது தான் பிரச்னை என்கிறார் மருத்துவர் ஸ்ரீவத்சன்.

“சில நேரங்களில் திறந்த வெளிகளில் வேலை செய்பவர்கள், காலை நேரத்தில் வயிறு முட்ட தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் மணிக்கணக்காக தண்ணீர் குடிக்காமல் வேலையைத் தொடர்வார்கள். ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அது வியர்வையாகவோ அல்லது சிறுநீரகவோ சற்று நேரத்தில் வெளியேறிவிடும்.
"அதுவும் வெயில் காலங்களில் வழக்கத்தை விட அதிகமாகவே வெளியேறும், உடல் அதை தேக்கி வைக்காது. நாம் தான் காலையில் தண்ணீர் குடித்துவிட்டோமே, அது போதும் என நினைத்து அவர்களும் தொடர்ந்து வேலை செய்வார்கள்," என்கிறார் மருத்துவர் ஆர்.ஸ்ரீவத்சன்.
தொடர்ந்து பேசிய அவர், "ரத்தக் குழாய்களில் இருந்து நீருடன், எலெக்ட்ரோலைட்டுகளும் வெளியேறுகின்றன. உதாரணமாக மூளை வழக்கம் போல இயங்க சோடியம் தேவைப்படுகிறது. அது குறையும்போது மூளை தடுமாறத் தொடங்கும். தொடர்ச்சியான தீவிர நீரிழப்பு சிறுநீரக செயலிழப்புக்குக் கூட வழிவகுக்கும்,” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நீரிழப்பின் மூன்று கட்டங்கள்
“நம் உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது, மீதம் 40 சதவீதம் தான் மற்ற திசுக்களின் எடை. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அது நேரடியாக ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. மூளை, சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். நீர்ச்சத்து குறைவதற்கு ஏற்ப பாதிப்புகள் கூடும்,” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.
உடலில் உள்ள 60 சதவீத நீர்ச்சத்தில் 5 சதவீதம் குறைந்தால் கூட நீரிழப்பு தீவிரமாகும் என்று கூறிய அவர், தொடர்ந்து நீரிழப்பின் மூன்று கட்டங்களை விளக்கினார்.
“முதல் கட்ட நீரிழப்பு என்றால், தாகம் ஏற்படும், உடல் வியர்க்கத் தொடங்கும். உடலுக்கு தண்ணீர் தேவை என்பதைப் புரிந்துகொண்டு நீர் அருந்தினால் கவலை இல்லை. இல்லையென்றால் அடுத்த கட்ட நீரிழப்புக்கு இட்டுச் செல்லும்.
"இரண்டாவது கட்டம் என்பது 5 சதவீத நீர்ச்சத்து இழப்பு. உடல் சோர்வு, அதீத தாகம் மற்றும் வியர்வை, தலைவலி, ஒருவித எரிச்சல் எண்ணம், நாக்கு மற்றும் தொண்டை வறண்டு போகுதல், அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்,” என்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/DRARUNKUMAR
தொடர்ந்து பேசிய அவர், "மூன்றாவது கட்டம், 10 சதவீத நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவது. மனக்குழப்பம், தெளிவில்லாத வார்த்தைகள், சிறுநீர் கழிக்க இயலாமை, கண்களின் நீர் கூட வற்றிவிடுதல், தோல் சுருக்கம், அதிகப்படியான இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பின்னர் மயக்கம்,” என்று கூறினார்.
குழந்தைகளுக்கு தான் 10 சதவீத நீர்ச்சத்து குறைந்தால், மூன்றாம் கட்ட அறிகுறிகள் தோன்றும் என்றும், அதுவே பெரியவர்கள் என்றால் 5 சதவீத நீர்ச்சத்து குறைந்தாலே இந்த அறிகுறிகள் தோன்றும் என்றும் எச்சரிக்கிறார் மருத்துவர் அருண் குமார்.
“இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்துக்கூடாது, முக்கியமாக பெரியவர்கள். இதனால் தான் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழப்பால் வெப்ப பக்கவாதம் ஏற்படுகிறது,” என்கிறார் அவர்.
‘அதீத வியர்வை ஒரு எச்சரிக்கை’

பட மூலாதாரம், Getty Images
“அதீத வியர்வையை பலரும் உடலுக்கு நல்லது என்றே நினைக்கிறார்கள். வியர்த்தால் உடல் எடை குறையும் என்று நினைத்து, அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அது தவறு. அதிகமாக வியர்த்தால், அதுவும் வெயில் காலம் என்றால், உடல் நமக்கு ஒரு எச்சரிக்கையைக் கொடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று கூறுகிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ்.சந்திரசேகர்.
வியர்வை என்பது வெறும் நீர் மட்டுமல்ல என்றும் அதனுடன் சேர்த்து சோடியம், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் வெளியேறுவதால், அதீத வியர்வை உடலுக்கு நல்லதல்ல என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
“வெயில் காலத்தில் இருக்கும் மற்றொரு பிரச்னை, உணவுகள் எளிதாகக் கெட்டுப்போகும். வேலைக்காக அடிக்கடி பயணம் செய்பவர்கள் அப்படிப்பட்ட உணவைச் சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு உண்டாகும். இதனாலும் அதிக நீரிழப்பு ஏற்படும். வயிற்றுப் போக்கு சரியானாலும் கூட சில நாட்களுக்கு தொடர்ந்து நீர்ச்சத்துள்ள பழங்களைச் சாப்பிடுவது நல்லது,” என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர்.
இது மட்டுமல்லாது வெயில் காலங்களில் மது, காபி மற்றும் கார்பனேடட் குளிர்பானங்களை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, உடலிலிருந்து சிறுநீர் அதிகமாக வெளியேறி, அது நீரிழப்புக்கு வழிவகுக்கும், என்றும் எச்சரிக்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

நீரிழப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மேலே உள்ள கேள்வியைப் படித்தவுடன், பலரின் மனதில் தோன்றுவது, 'நீரிழப்பிற்கு தண்ணீர் குடித்தால் சரியாகப்போகிறது, அவ்வளவு தானே' என்பது தான், ஆனால் வெறும் தண்ணீரால் மட்டுமே பயன் இல்லை என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
நீரிழப்பின் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே தண்ணீர் குடிப்பது பயன் தரும் என்றும், அதுவே அடுத்தடுத்த தீவிரமான கட்டங்களில் உடலின் எலெக்ட்ரோலைட்டுகளும் வெளியேறிவிடும் என்பதால், உப்புச் சத்துகள் மற்றும் குளுக்கோஸ் கலந்த ஓ.ஆர்.எஸ் கரைசலை (Oral Re-hydration Salts) உட்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் அவர்.
உலக சுகாதார நிறுவனமும் யுனிசெஃப் அமைப்பும் அனைத்து விதமான வயிற்றுப்போக்குக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல் என்று கூறப்படும் உப்பு - சர்க்கரை கரைசலையே பரிந்துரை செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, சோடியம் சிட்ரேட் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவையே ஓ.ஆர்.எஸ் கரைசல்.
“உப்புச் சத்து தேவை என்பதற்காக வெறும் உப்பை தண்ணீரில் கலந்து குடிக்கக்கூடாது, அதை உடலும் ஏற்றுக்கொள்ளாது. உப்புச் சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ள வேண்டும் என்றால் அதனுடன் குளுக்கோஸ் கலந்திருக்க வேண்டும். எனவே தான் மருத்துவர்கள் நீரிழப்பிற்கு ஓஆர்எஸ் கரைசலை பரிந்துரை செய்கிறார்கள்.
"அரசு சார்பாக அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன,” என்று கூறுகிறார் மருத்துவர் அருண்குமார்.

பட மூலாதாரம், Getty Images
நீரிழப்பைத் தடுப்பது எப்படி?
ஒரே சமயத்தில் வயிறு முட்ட தண்ணீர் குடிக்காமல், அவ்வவ்போது தண்ணீர் பருகுவது அவசியம் என்று கூறுகிறார் மருத்துவர் ஆர்.ஸ்ரீவத்சன்.
“முன்பே கூறியது தான், ஒரே சமயத்தில் அதிக தண்ணீர் குடிப்பதால் அது பெரும்பாலும் சிறுநீராக வெளியேறிவிடும். எனவே ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம்.
"அதுவும், வெயிலில் வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் என்றால் 500 மில்லி லிட்டர் தண்ணீரை கூடுதலாகவே எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நீரிழப்பு மட்டுமல்லாது, சிறுநீரகக் கற்கள் தொடர்பான பிரச்னையும் ஏற்படும்,” என்று கூறுகிறார் அவர்.
பெரியவர்கள் வெளியில் செல்லும்போது தண்ணீருடன், ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகளையும் கையில் வைத்துக்கொள்வது நல்லது என்றும், அது இல்லாத பட்சத்தில் இளநீர் மற்றும் நீர்மோர் மிகவும் நல்லது என்கிறார் மருத்துவர் ஆர்.ஸ்ரீவத்சன்.
“ஆனால் லஸ்ஸி, மசாலா மோர், ஐஸ்க்ரீம், கார்பனேடட் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்,” என்றும் கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பெரியவர்கள், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர்.
“வெயில் காலங்களில் தளர்வான பருத்தி உடைகளை அணிவது நல்லது. உணவில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோடைகாலங்களில் எண்ணெய், மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் தயார் செய்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்,” என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












