மிடாஸ் - தொட்டதெல்லாம் தங்கமாகும் 'வரம்' பெற்ற மன்னர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பெல்லா ஃபால்க்
- பதவி, பிபிசி
துருக்கி என்றாலே அதன் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தவறியதே இல்லை.
எபேசஸில் உள்ள செல்சஸ் நூலகத்தின் உயரமான நீள்வரிசைகள் முதல் நெம்ரூட் மலையில் உள்ள மகத்தான தலை சிலைகள் வரை அந்நாட்டில் எண்ணற்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.
இதில் சமீபத்தில் துருக்கியின் 20வது பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பண்டைய நகரம் ஒன்று உள்ளது. எந்தவித ஆரவாரமும் இன்றி, தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்தும் நகரம் இது.
கோர்டியஸ் என்ற இந்த இரும்புக் காலத்தைச் சேர்ந்த இந்த பண்டைய நகரம் 4500 ஆண்டுகள் பழமையானது. இது ஃபிரிஜியா ராஜ்ஜியத்திற்குட்பட்டது.
அங்காராவில் இருந்து தென்மேற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் வறண்ட காற்று வீசும் சமவெளியில் அமைந்துள்ள இந்நகரம், ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த நகரமாக இருந்ததற்கான அடையாளங்களை காட்டிலும், ஒரு கல்குவாரி அல்லது அழிந்துபோன எரிமலையின் பள்ளம் போல் காட்சியளிக்கிறது.
135,000 சதுர மீட்டர் அளவுள்ள கோட்டையின் புதையுண்ட எச்சங்கள், சுற்றியுள்ள நிலப்பரப்பில் இருந்து மெதுவாக மேலெழும்பும் மணல் பாதையுடன், பெரிய மேடு ஒன்றை சென்றடைகிறது.
அதன் எஞ்சியுள்ள பண்டைய நகரத்தின் எச்சங்களான சிதைந்த சுவர்கள், கிடங்குகள் மற்றும் இதர தடயங்களை பார்க்க முடியும்.
மேலிருந்து பார்க்கும்போது அந்த நிலப்பரப்பு நெடுகிலும், சிறு விலங்குகளால் உருவாக்கப்பட்ட குழிகள் போன்று மணல் மேடுகள் நிறைந்து காணப்படுகின்றன.
அங்கிருந்த 10 மீட்டர் உயரமுள்ள பெரும் கல் சுவர்களால் எழுப்பப்பட்ட நினைவுச்சின்ன வாயில் மட்டுமே, இது ஒரு காலத்தில் இரும்பு காலத்தின் மிகப்பெரிய ராஜ்யங்களில் ஒன்றின் தலைநகராக இருந்திருக்க கூடியதற்கான ஆதாரமாக இருக்கிறது.
"பலரும் ஃபிரிஜியன்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், ஆனால் கிமு 9 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை தற்போதைய துருக்கியாக இருக்கும், மேற்கு ஆசிய பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்," என்று 2007 ஆம் ஆண்டு முதல், கார்டியனில் நடைபெற்ற அகழாய்வுக்கு தலைமை தாங்கிய பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான பிரையன் ரோஸ் கூறுகிறார்.
"கிழக்கு-மேற்கு வர்த்தக பாதைகளின் முக்கிய சந்திப்பில் கார்டியோ அமைந்துள்ளது: கிழக்கே அசீரியா, பாபிலோன் மற்றும் இட்டைடு பேரரசுகளும், மேற்கில் கிரீஸ் மற்றும் லிடியாவின் பேரரசுகளும் இருந்தன. இந்த புவிசார் அனுகூலத்தால் கிடைத்த பலன்களை ஃபிரிஜியர்கள் பயன்படுத்திக் கொண்டு வசதி படைத்தவர்களாகவும் மற்றும் அதிகாரம் மிக்கவர்களாகவும் உருவெடுக்க முடிந்தது."
ஃபிரிஜியா என்ற பெயர் உங்களுக்குத் தெரியாமல் போனாலும் கூட, இந்த நகரத்தோடு தொடர்புடைய ஒருவர் நம்மில் பலருக்கும் பரிட்சயமானவராக இருக்கலாம்.
கார்டியாவை மிடாஸ் எனும் மன்னர் ஆண்டு வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவரையே பலரும் ‘தி மேன் ஆஃப் கோல்டன் டச்” என்று அழைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உண்மை என்ன?
மிடாஸின் கதை ஒரு பாரம்பரிய நீதிக்கதையாகும். டியோனிசஸ் என்ற கடவுளுக்கு இந்த மன்னர் உதவி செய்ததாகவும், அதற்கு கைமாறாக கடவுள் மன்னருக்கு ஒரு வரம் வழங்கியதாகவும் இந்த கதை கூறுகிறது.
ஆனால், பேராசைப் பிடித்த அந்த மன்னர் பயனுள்ள எதையும் கேட்காமல், தான் தொட்டதெல்லாம் தங்கமாக மாற வேண்டும் என்ற வரத்தை கேட்டு வாங்கியுள்ளார்.
இதனால் அவர் உணவு உண்ணுவதற்கு முன்பே அதை தொட்டவுடன் தங்கமாக மாறியது. அவரது மகளை ஆசையாக கட்டியணைக்கும் போது அவரும் தங்க சிலையாக மாறி விட்டார். இதை பார்த்த மன்னர் உடனேயே தன்னுடைய தவறை உணர்ந்து விட்டார்.
இந்த கதையின் நீதி நாம் அனைவரும் அறிந்ததே: 'நீங்கள் எதற்காக ஆசைப்படுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.'
1979 ஆம் ஆண்டு முதல் கார்டியோ குறித்து படித்து வரும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லின் ரோலர், "இந்த கதை உண்மை இல்லை" என்கிறார்.
"ஆனால் பல கதைகளும் வரலாற்று ரீதியாக துல்லியமான அடிப்படையை கொண்டுள்ளன. இருப்பினும் அவை பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருவதால் அதன் உண்மை சிதைந்து போகிறது."
ஆனால் யார் இந்த மிடாஸ், "கோல்டன் டச்" என்ற சிந்தனை எங்கிருந்து வந்தது?
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புனைவுகளில் இருந்து உண்மையைப் பிரித்தெடுக்க , முதலில் மிடாஸ் ராஜா ஒரு உண்மையான நபர் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது .
இதைச் செய்வதற்கான எளிமையான வழி, பண்டைய நூல்களில் ஆதாரத்தை தேடுவதாகும்.
அப்படி "மிடாஸ் என்ற பெயருடைய ஒரு ஃபிரிஜியன் அரசர் குறித்து பல்வேறு பழங்கால ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அசீரிய அரசர் இரண்டாம் சர்கோனின் வரலாற்று தகவல்களும் அடங்கும்" என்று கூறுகிறார் ரோலர்.
"கிமு 8 ஆம் நூற்றாண்டில் தங்கள் பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் அசீரியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மிடாஸை ஒரு சக்தி வாய்ந்த மன்னராகவும் முக்கியமான போட்டியாளராகவும் கருதினர்."
மிடாஸ் குறித்த கூடுதல் ஆதாரங்கள், கார்டியோவிற்கு மேற்கே உள்ள யாசிலிகாயா என்ற இடத்தில் காணப்படுகிறது. பொதுவாக இது "மிடாஸ் நகரம்" என்று அழைக்கப்படுகிறது.
மலை உச்சியில் காணப்படும் இந்த இடம் அழகானதாக இருந்தாலும், இங்கு எரிமலை கூறுகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், மக்கள் அரிதாகவே வந்து செல்கின்றனர்.
பழங்கால குகைகள் மற்றும் கல்லறைகள் நிறைந்துள்ள இந்த இடத்தில் உள்ள பாறையாலான படிக்கட்டுகள், 3000 ஆண்டுகள் பழமையான கடும்பாறைகளில் செதுக்கப்பட்ட சுரங்கங்களுக்கு நம்மை அழைத்து செல்கின்றன.

ஆனால் இங்குள்ள அனைத்து நினைவு சின்னங்களை விடவும், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ள 17 மீட்டர் உயரமுள்ள கோவிலின் முகப்பே அற்புதமானதாக கருதப்படுகிறது.
அதன் மேலே பண்டைய ஃபிரிஜியன் மொழியில் ஒரு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், "ஏட்ஸ் […] இராணுவத்தின் தலைவரும் ஆட்சியாளருமான மிடாஸுக்கு [இதை] அர்ப்பணித்துள்ளார்" என்று எழுதப்பட்டுள்ளது.
உள்ளூர் பிரபுவான அட்ஸு தனது கோவிலை மிடாஸுக்கு அர்ப்பணித்துள்ளார் என்பதே மிடாஸ் ஒரு சக்தி வாய்ந்த ராஜாவாக இருந்ததற்கு போதுமான ஆதாரமாகும்.
"மிடாஸ் ஒரு சக்தி வாய்ந்த ராஜாவாக இருந்ததால், அவர் கார்டியோவில் எங்காவது புதைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறார் ரோஸ்.
"அவரது கல்லறையைக் கண்டறிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பாக இருக்கும். அதை நகரத்தை சூழ்ந்துள்ள மேடுகளில் தேட வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
கல்லறை மேடுகள்
இந்த இடத்தில் இருக்கும் 125 க்கும் மேற்பட்ட மேடுகள் கி.மு. 9 முதல் 6 ஆம் நூற்றாண்டு வரையிலானவை.
சமதளமான நிலப்பரப்பில் வேற்றுக்கிரகவாசிகளால் உருவாக்கப்பட்ட மேடுகளைப் போல தோற்றமளிக்கும் இந்தப் பிரமாண்டமான மணல்மேடுகள், எகிப்திய பிரமிடுகளைப் போலவே முக்கியமானவர்களின் கல்லறைகளைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க கட்டப்பட்டவை.
இங்கிருக்கும் சிகரங்களிலேயே, பெரிய செங்குத்தான சிகரம் களைகள் மற்றும் மஞ்சள் புற்களால் நிரம்பியுள்ளது. இதன் உயரம் 53 மீட்டர் ஆகும். இது துருக்கியின் இரண்டாவது பெரிய மேடாக அறியப்படுகிறது.
இதை உருவாக்க 1,000 பணியாளர்கள் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை எடுத்திருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
"முந்தைய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 'மிடாஸ் மவுண்ட்' என்று அழைத்தனர், காரணம் மிடாஸ் அதற்குள் தான் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பினர். ஆனால் அது உண்மையா என்று அவர்களுக்கே தெரியாது , "என்கிறார் ரோஸ்.
"அந்த மேட்டை தோண்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது, காரணம் அது ஒரு பெரிய மண்குவியல் மட்டுமே என்பதால், ஏதாவது சிறிய தவறு நடந்தாலும் ஒட்டுமொத்த மணல்மேடும் உங்கள் மீது சரிந்து விழுந்துவிடும்."
இதுபோல் 1957 ஆம் ஆண்டில், துருக்கிய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் குழுவுடன் இணைந்து பணிபுரிந்த நிபுணர்கள் குழு, அந்த மேட்டில் சுரங்கம் ஒன்றை தோண்டினர்.
உள்ளே, 3000 ஆண்டுகளாக காற்றுகூட புகாத அளவு மிகச்சரியாக பாதுகாக்கப்பட்ட, பைன் மற்றும் ஜூனிபர் மரக்கட்டைகளால் கட்டப்பட்ட ஒரு பெரிய புதைகுழியை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பட மூலாதாரம், ALAMY
இன்றைய தேதியில், உலகின் மிகப் பழமையான இந்த மரக் கட்டுமானமான கல்லறையை அகழாய்வுக்காக தோண்டப்பட்ட அதே சுரங்கப்பாதையை பயன்படுத்தி ப் பார்வையாளர்கள் உள்ளே சென்று பார்க்க முடியும்.
மிகவும் உடையக்கூடிய அளவில் இருந்ததால், தற்போது உலோக கம்பங்கள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டு இது பாதுகாக்கப்படுகிறது. அதற்காக அது உங்களுக்கு ஆச்சரியத்தை தராது என்று அர்த்தம் அல்ல. அதன் கட்டமைப்பு கண்டிப்பாக உங்களுக்கு பிரமிப்பை தரும்.
குறிப்பாக அந்த கல்லறையில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் இருக்கிறது. உடலைச் சுற்றிலும் வெண்கல ஜாடிகள், அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள் மற்றும் குடங்கள், செதுக்கப்பட்ட மர சாமான்கள், தரமான துணிகள் மற்றும் ஒரு மன்னரின் அடக்கத்தின் போது படைக்கப்படும் விலையுயர்ந்த காணிக்கைகள் ஆகியவை இருந்தன.
ஆனால் அது மிடாஸ்தானா?
அதை கண்டுபிடிப்பதற்காக கோர்டியோ தொல்பொருள் ஆய்வாளர்கள் டென்ட்ரோக்ரோனாலஜி (dendrochronology) எனும் மரத்தின் வளையங்களை வைத்து அதன் காலத்தை கண்டறியும் முறையை பயன்படுத்தினர்.
அதில் தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
"அந்த மரத்தின் காலம் கிமு 740 என்று முடிவுகள் வந்தது. ஆனால் அசிரிய வரலாற்று பதிவுகளின்படி, மிடாஸ் அதிலிருந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு கிமு 709 இல் உயிருடன் தான் இருந்தார்" என்று ரோஸ் கூறினார்.
எனவே "இந்த கல்லறை மிடாஸுக்கு சொந்தமானது அல்ல."
அப்படியானால் அந்த கல்லறையில் இருக்கும் நபர் யார்?
அவரை அடக்கம் செய்திருந்த முறையே அவர் ஒரு ராஜா என்பதை நமக்கு தெளிவுபடுத்தினாலும், உண்மையில் அவர் யார்?
யார் இந்த மன்னர்?
அந்த கல்லறையில் இருப்பவரின் இறந்த தேதியின்படி, "மிடாஸ் ஆட்சிக்கு வந்த ஆண்டில் தான் இந்த நபரும் இறந்துள்ளார்" என்று கூறுகிறார் ரோஸ்.
"எனவே, அவர் மிடாஸின் தந்தை கார்டியாஸாக இருக்கலாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."
மகனைப் போலவே, கார்டியாஸும் புகழ் பெற்றவராக இருந்துள்ளார்.
கார்டியாஸுக்கு முந்தைய அரசர் வாரிசு இல்லாமல் இறந்தபோது, நகர மக்கள் ஆரக்கிளிடம் உதவி கேட்டதாகக் ஒரு கதை சொல்லப்படுகிறது.
அப்போது, இந்த ஊருக்குள் அடுத்து யார் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வருகிறார்களோ அவர்களே ராஜா என்று ஆரக்கிள் கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த கார்டியாஸ் என்ற விவசாயியையே மக்கள் ராஜாவாக முடிசூட்டியுள்ளனர். அவரது நினைவாக அந்த ஊருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதை கொண்டாடும் விதமாக அவரது வாகனம் கோவிலில் வைக்கப்பட்டு, அதில் ஒரு சிக்கலான முடிச்சு ஒன்றும் போடப்பட்டது. அதுதான் ‘தி ஃபேமஸ் கார்டியன் நாட்’ என்று அறியப்படுகிறது.
கதையின்படி, இந்த முடிச்சை அவிழ்ப்பவரே அடுத்து ஆசியா முழுவதும் ஆட்சி செய்வார் என்று கூறப்படுகிறது.
பலரும் பல ஆண்டுகள் முயற்சித்தும் அதை அவிழ்க்கமுடியவில்லை.
"ஆனால் அந்த வாகனம் அல்லது முடிச்சு குறித்தான எந்த ஆதாரமும் இல்லை" என்று ரோஸ் கூறுகிறார்.
"பல பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்கள் கிமு 333 இல் பாரசீக இராணுவத்தை தோற்கடிப்பதற்காக அலெக்சாண்டர் இங்கு வந்ததாகவும், அப்போது இந்த முடிச்சை சாதாரணமாக தனது வாளால் வெட்டியதாகவும்” கூறுகின்றனர்.
"எனவே, அப்படி ஒரு முடிச்சு உண்மையில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம். அதற்கு பின், ஆசியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி மன்னரின் வார்த்தைகளை உண்மையாக்கினார் அலெக்சாண்டர்.”
ஆனால் "கோல்டன் டச்" என்பது என்ன? இந்த சிந்தனை எங்கிருந்து பிறந்தது?
ஆச்சரியப்படும் வகையில், கார்டியோவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 40,000 கலைப்பொருட்களில் பெரியளவு தங்கம் எதுவும் இல்லை. அவற்றில் சில நகைகள், சில தங்க நாணயங்கள் மற்றும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரு ஸ்பிங்க்ஸ்(sphinx) சிலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அப்படி இந்த நகரத்தில் தங்கம் இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம், அல்லது இன்னும் தோண்டப்படாத கல்லறை மேடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம்.
ஆனால் இந்த கட்டுக்கதை குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் வேறு கருத்து ஒன்றையும் கொண்டுள்ளனர்.
"இந்த கதையை வேறு ஒரு விஷயத்தோடு தொடர்புபடுத்தி உருவகமாக கூறியிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்" என ரோலர் கூறுகிறார்.
"மிடாஸ் ஆட்சியின் கீழ், கார்டியோ நகரம் செல்வச் செழிப்பாகவும், சக்தி வாய்ந்த நகராகவும் உருவெடுத்தது. எனவே இந்த கதை அதன் அதீத வளர்ச்சியை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம்.”
"ஒருவர் எதை தொட்டாலும் தங்கமாக மாறி விடும் என்று நாம் சொல்வது, அவர் எளிதில் அனைத்திலும் வெற்றி பெறுவதையோ, அல்லது செல்வம் சேர்ப்பதையோ குறிக்கத்தான்.”
"அப்படி ராஜா மிடாஸுக்கு அந்த வரம் கிடைத்ததாகத் தெரிகிறது". என்கிறார் ரோலர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












