சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்?

ரம்யா தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சமூக ஊடகங்களில் யாரோ எங்கோ பகிர்ந்த வெறுப்பு கருத்துகள் சென்னையில் மாடியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் உயிரைப் பறித்துள்ளது.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் வெங்கடேஷ் (37), இவரது மனைவி ரம்யா (33). ஐ.டி துறையில் பணியாற்றி வந்த இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளன.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரம்யா உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராத விதமாக நான்காவது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அருகில் குடியிருந்தவர்கள் ஜன்னல் கம்பியில் நின்றபடி, பெரும் போராட்டத்திற்குப் பின் குழந்தையை உயிருடன் மீட்டனர்.

குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூகஊடகங்களில் அதிவேகத்தில் பரவியது. பகிரப்பட்ட வீடியோக்களில், குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்ததற்காக அவரது தாயைக் குற்றம்சாட்டி வெறுப்புக் கருத்துகளைப் பலரும் பதிவிட்டிருந்தனர். இதுபோன்ற இணையவழி தொல்லையால் (Cyber bullying) ரம்யா மனரீதியில் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளார்.

இந்த மன உளைச்சலில் இருந்து மீள, கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த ரம்யா, அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்.

ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறியும் பிபிசி தமிழ் முயற்சியில், ரம்யா மகப்பேறுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழி தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

'அதீத மனச்சோர்வுதான் தற்கொலைக்கு காரணம்'

வழக்கு விசாரணை அதிகாரியான காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன், ‘‘ரம்யா அதீத மனச்சோர்வில் இருந்ததால் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார்,’’ என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘குழந்தை விழுந்த சம்பவத்தால் வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதியினர் மன விரக்தியில் இருந்துள்ளனர். மன அமைதிக்காக கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரம்யா குடும்பத்துடன் வந்துள்ளார்.

ஆனாலும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையாமல் அவர் அதீத மன அழுத்தத்தில் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். ரம்யா குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் இவை தெரிய வந்துள்ளன,’’ என்கிறார் ஆய்வாளர் ராஜசேகரன்.

குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு ஏற்படும் மனச்சோர்வு அதாவது மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (Postpartum Depression) பாதிப்பில் ரம்யா இருந்ததாகவும், குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிறகு மன உளைச்சல் அதிகரித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ரம்யாவின் தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பின் மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல் இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,’’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாடியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை; தாயின் உயிரை பறித்த சமூக வலைதள பதிவுகள்!
படக்குறிப்பு, சென்னையில் குழந்தை மீட்பு

ரம்யாவின் உலகம் எத்தகையது?

‘ரம்யா தைரியமான பெண் அவர் தற்கொலை முடிவை எடுப்பார் என நாங்கள் நினைக்கவில்லை" என நம்மிடம் பேசிய ரம்யாவின் சித்தப்பா கூறினார்.

பெயரை வெளியிட வேண்டாமென்ற நிபந்தனையுடன் பேசிய அவர், ‘‘ரம்யா குடும்பத்திலும், உறவினர்களிடமும் அதீத அன்பு கொண்டவர். சிறு வயது முதலே தைரியமாக இருப்பவர். குடும்பத்தில் யாருக்கு பிரச்னை என்றாலும் தீர்வு சொல்லக்கூடிய பக்குவம் உள்ளவர். மாற்று சாதியைச் சேர்ந்தவரை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அனைத்தும் நன்றாகச் சென்ற நிலையில் ரம்யா தற்கொலை செய்வார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை,’’ என்கிறார் அவர்.

ரம்யாவின் தந்தை அரிசி வியாபாரம் செய்பவர். அவர்களின் குடும்பமே அதிக கடவுள் பக்தி உடையது. குழந்தை மீட்கப்பட்ட பின் ரம்யாவின் தந்தை கெடா வெட்டி சிறப்பு பூஜையே நடத்தியுள்ளார் என்கிறார் ரம்யாவின் சித்தப்பா.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘எங்கோ யாரோ பதிவிட்ட வெறுப்புக் கருத்துகள் எங்கள் மகள் உயிரைப் பறித்துள்ளது. ஏதாவது சம்பவம் நடந்தால் இனியாவது அனைவரும் சம்பவத்தில் நடந்த நன்மைகளைக் குறிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு மன ஆறுதல் தரும் வகையில் பேச முன்வர வேண்டும். வெறுப்புக் கருத்துகளால் யாருக்கு என்ன பயன்? பாதிப்புதான் அதிகமாகிறது’’ என வருத்தத்துடன் நம்மிடம் தெரிவித்தார்.

‘யாரென்றே தெரியாதவர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும், யார் மீது வழக்கு தொடுப்பது?’ என்கிறார் ரம்யாவின் சித்தப்பா.

‘எந்த தாயும் குழந்தையை பாதிப்பில் விடமாட்டார்கள்’

‘இணையவழித் தொல்லை’ காரணமாக ரம்யா தற்கொலை செய்தது தொடர்பாக சில பெண்களிடம் நாம் பேசினோம்.

நம்மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த விமலா, ‘‘எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. எந்தத் தாயும் தன் குழந்தையை ஆபத்தான சூழலில் விடமாட்டார். சிறிதாக காயம் ஏற்பட்டாலே பதறிப் போவார்கள், அதுதான் தாய்மை உணர்வு."

"குழந்தை மாடியிலிருந்து விழுந்தபோது மனரீதியில் ரம்யா மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார். அவருக்கு ஆதரவாக, மன உறுதி கொடுப்பது போலத்தான் அனைவரும் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவரின் தாய்மை குறித்துப் பலரும் விமர்சித்ததைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது,’’ என்றார்.

நம்மிடம் பேசிய மற்றொரு பெண்ணான அமுதா, ‘‘அப்படி ஒரு சம்பவத்தில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது மிகப்பெரிய விஷயம். உயிருடன் அந்தக் குழந்தை தாய்க்கு மீண்டும் கிடைத்தது வரம். ஆனால், அந்தத் தாயின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் பதிவிடப்பட்ட கருத்துகளால் இன்று அந்த குழந்தைக்கு தாய் இல்லாமல் போய்விட்டது.

உண்மையில் குழந்தை பிறந்து அதை வளர்க்கும்போது தாய்மார்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படும். இப்படியான சூழலில் வெறுப்புக் கருத்துகள் அவரை அதிகம் பாதித்திருக்கும்,’’ என்கிறார் அவர்.

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம்

ரம்யா தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்தே ரம்யா அதிக மன உளைச்சலில் இருந்ததாக புகாரில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்தப் பாதிப்பின் தீவிரம் என்ன?

"பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் 30 சதவீதம் பேர்தான் மகப்பேற்றுக்குப் பிறகான மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்” என்கிறார், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையின் இயக்குநர் கலைவாணி.

நம்மிடம் பேசிய இயக்குநர் கலைவாணி, ‘‘இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பிரசவத்துக்குப் பிறகான பதற்றம் (Postpartum Blues) எனப்படும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பிரசவித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி, மயக்கம், குழந்தை வளர்ப்பு தொடர்பான பயம், வறுமை, குடும்ப ஆதரவு போன்ற பல எண்ணங்கள் மனதில் தோன்றி, அவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பிரசவத்துக்குப் பிறகான பதற்றம் (Postpartum Blues) என அழைக்கப்படுகிறது."

இரண்டு வாரங்களுக்கு மேல் `போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ பாதிப்பு இருந்தால் அது, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (Postpartum depression) என அழைக்கப்படும். இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் அதிகபட்சமாக 1 –2 சதவீதம் பேருக்கு தான் இத்தகைய பாதிப்பு ஏற்படும்.

பிரசவித்த தாய்மார்கள் இரண்டு வாரத்திற்கு மேல், சோர்வாக, மன உளைச்சலில் தனிமையாக இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரிடமும், மனநல மருத்துவரிடமும் ஆலோசனை பெற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த பாதிப்பை கண்டறிந்து மனநலத்தை காக்க முடியும்,’’ என்கிறார் அவர்.

மன அழுத்தம் தீவிரமடைந்தால் தாய் தன் குழந்தையை கொலை செய்யும் அளவிற்கான சம்பவங்களும், தாய் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளதாகவும், அந்த அளவிற்கு இது தீவிர மன உளைச்சலை தரும் எனவும் தெரிவிக்கிறார் மருத்துவர் கலைவாணி.

இந்தியாவில் மகப்பேறுக்கு பிறகான மன அழுத்த பாதிப்பு கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத குறைபாடுகளில் ஒன்றாகும் என சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

"ரம்யாவின் உயிரைப் பறித்த பலவித மன அழுத்த பாதிப்புகள்"

மாடியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை; தாயின் உயிரை பறித்த சமூக வலைதள பதிவுகள்!
படக்குறிப்பு, மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி

ரம்யா ‘இணையவழித் தொல்லை’ (Cyber Bullying) , பிரசவத்துக்கு பிறகான மன அழுத்தம் மட்டுமின்றி அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) காரணமாகவும் மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்கிறார், கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி.

நம்மிடம் பேசிய அனிஷா, ‘‘ஒருவரை மையப்படுத்தி அவரை தவறான முறையிலோ, குற்றம்சாட்டியோ அல்லது அவரின் சமூக அடையாளத்தை கொச்சைப்படுத்தும் படி விமர்சிப்பதை ‘இணையவழித் தொல்லை’ என்கிறோம். இது நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அதிகரிப்பதுடன், இதனால் மன நலம் பாதிப்போரும் அதிகரித்து வருகின்றனர்’’ என்கிறார் அவர்.

நம்மை அதிகம் பாதிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அதை அடிக்கடி நினைத்து பார்த்து நாம் மனவிரக்தி அடைவதையும், நம்மை நாமே குற்றம் சொல்லிக்கொள்வதையும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) என அழைக்கப்படுகிறது. தற்கொலை செய்த ரம்யாவும் இந்த பாதிப்பையும் எதிர்கொண்டிருப்பார் என்கிறார் அனிஷா.

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தம் ( Post Traumatic Stress)

மேலும் தொடர்ந்த அனிஷா, ‘‘ரம்யா தைரியமான பெண் என அவர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தாலும், குழந்தை மீட்கப்பட்ட சந்தோஷத்தை விட ரம்யா குறித்தான மோசமான கருத்துகள் அவரை மிகவும் பாதித்துள்ளது. இது அவரது தற்கொலைக்கான காரணமாக அமைந்திருக்கும்,’’ என்கிறார் அவர்.

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் மனநல ஆலோசகர் அனிஷா விளக்குகிறார்.

‘‘ரம்யாவிற்கு நடந்ததைப்போல சம்பவம் நடந்தால், சில வாரங்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தன் மன உறுதியை அதிகப்படுத்தி, தனக்கு ஆதரவாக உள்ளவர்களிடம் அதிகம் பேசுவது இந்த பாதிப்பில் உள்ளோரின் மனநிலையை பலப்படுத்த உதவும்.

யாரேனும் இப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அவர் உடனடியாக மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி, அவர்களை கண்காணித்து அவர்களின் மனநலத்தை பாதுகாப்பது மட்டுமே அவரை காப்பதற்கான தீர்வு,’’ என்கிறார் மனநல ஆலோசகர் அனிஷா.

ரம்யா தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

இந்திய இணைய பயனாளர்களில் 38% பேர் ‘இணையவழித் தொல்லை’ செய்பவர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ‘இணையவழித் தொல்லை’ பாதிப்பை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், சமீப நாட்களாக சாமானிய மக்களும் இந்த பாதிப்பை எதிர்கொள்வதும், அதனால் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.

ரம்யாவிற்கு முன்னரும் இந்தியாவில் சில மாநிலங்களில், ‘இணையவழித் தொல்லை’ காரணமாக சிலர் தற்கொலை செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயின் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பிரியன்சு யாதவ், பலவித மேக்கப் அணிந்து ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வந்தார். 2023 நவம்பர் மாதம் அவர் பெண் வேடம் அணிந்து ரீல்ஸ் வெளியிட்ட போது, பலரும் பிரியன்சுவை கிண்டல் செய்து வெறுப்பு கருத்துக்களை பகிர்ந்தனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த முதல் மாற்றுப்பாலின உடற்கட்டமைப்பாளராக (bodybuilder) இருந்தவர் பிரவீன் நாத். இவர் 2021 மாநில அளவிலான பாடி பில்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதுடன், மிஸ்டர் கேரளா போட்டியிலும் வென்றிருந்தார். மிஸ் மலபார் அழகுப்போட்டியில் வெற்றி பெற்றிருந்த மாற்றுபாலினத்தை சேர்ந்த ரிஷானா ஐசு திருமணம் செய்தார். இவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால், மனமுடைந்து பிரவீன் தற்கொலை செய்து கொண்டார்.

‘ இணைய வழித்தொல்லை’ இந்தியாவில் வளர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது.

தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளை நாம் சேகரித்த போது, இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான இணைய வழித்தொல்லை, (சைபர் புல்லியிங்) சம்பவங்கள் தொடர்பாக 2022ம் ஆண்டில் மட்டுமே 9,821 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2018ம் ஆண்டி 8,986 வழக்குக்கள் பதிவாகியிருந்தன.

இந்தியாவில் பத்தில் நான்கு இணைய பயனாளர்கள் ‘இணையவழித் தொல்லை கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த இணைய பயனாளர்களில் 38 சதவீதம் பேர் ‘இணையவழித் தொல்லை’ செய்வதாகவும், இதில் இளைஞர்கள் தான் அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிலர் ‘இணையவழித் தொல்லை’, ‘பப்ளிக் ஷேமிங்’கில் ஈடுபடுவது ஏன்?

சமூக வலைதளத்தில் ‘இணையவழித் தொல்லை, பப்ளிக் ஷேமிங்’ செய்வது ஒருவித மனநோய் என்கிறார், கோவை குமரகுரு கல்லூரியின் உளவியல் துறை உதவிப்பேராசிரியர் தாரணி.

இதை விளக்கிய உதவிப்பேராசிரியர் தாரணி, ‘‘சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நிரூபிக்க நினைத்து தான், எது நடந்தாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் பதிவு மற்றும் கருத்துகளை பகிர்கின்றனர்.

ஒரு சம்பவம் தொடர்பாக அல்லது ஒரு நபர் தொடர்பாக கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு கருத்துகளை பகிர்வதை பாராசோஷியல் உறவு (Parasocial Relationship) என்கிறோம். ஒருவர் மீது கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் தன் இருப்பை பதிவு செய்ய நினைத்து தான் பலரும் ‘இணையவழித் தொல்லை’, ‘பப்ளிக் ஷேமிங்’ செய்கின்றனர், இது ஒரு வித மனநோய்,’’ என்கிறார் அவர்.

ரம்யா தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

‘இணையவழித் தொல்லை’ குறித்து சட்டம் சொல்வது என்ன?

சமூக வலைதளங்களில் இணையவழித் தொல்லைகளால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டுமென விளக்கியுள்ளார், கோவை மாவட்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அருண்.

நம்மிடம் பேசிய அருண், ‘‘சமூக வலைதளங்களில் ‘இணையவழித் தொல்லை, பப்ளிக் ஷேமிங்’ போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும், அவதூறு வழக்கு பதிய முடியும், பெண்களாக இருந்தால் பெண் வன்கொடுமை சட்டத்திலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

அது தெரிந்த நபர்கள் மூலம் நடந்திருந்தால் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும், அறிமுகம் இல்லாத நபர்கள் என்றால் அவர்கள் மீது புகார் கொடுத்தாலும், குற்றவாளியின் சமூக வலைதள கணக்கை கண்டறிந்து, அவர்களின் ஐ.பி முகவரி (Internet Protocol), அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இவர்களுக்கு அபராதத்துடன் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

‘இணையவழித் தொல்லை, பப்ளிக் ஷேமிங்’ போன்றவை ஒரு நபரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தாலோ, ஒருவரின் சமூக அந்தஸ்தை குறைத்தாலோ, அவதூறு வழக்கு மட்டுமின்றி, தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையில் தண்டனை கிடைக்கும்’’ என்கிறார் அவர்.

குறிப்பு:

இணைய துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவிக்க தேசிய அளவிலான இணையதளம் உள்ளது.

www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக காவல் நிலையத்திற்குச் செல்லாமலே புகார் அளிக்கலாம்.

மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம், சென்னை - 044 -2464000 (24 மணிநேர சேவை)

தமிழ்நாடு தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)

மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.