தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன?

போக்குவரத்துக் கழகம் Vs காவல்துறை - திடீர் அபராதங்களும் அரசுப் பேருந்து பணியாளர்களின் குறைகளும்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் காவலர் - நடத்துநர் இடையிலான வாக்குவாதம் இரு துறைகளுக்கு இடையே மோதல் போக்கிற்கு வழிவகுத்தது. அரசுப் பேருந்தில் காவலர்கள் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதியில்லை என்ற போக்குவரத்துக் கழகத்தின் அறிவிப்புக்குப் பிறகு மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இதுவரையில்லாத அளவுக்கு அரசுப் பேருந்துகள் விதிகளை மீறியதாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரிகள் மட்டத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்தது. அதேநேரத்தில், இந்த சர்ச்சையின் தொடக்கப்புள்ளியாக அமைந்த காவலரும், அரசுப்பேருந்து நடத்துநரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வருத்தம் தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து, மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்டாலும், இந்த சர்ச்சை இரு துறைகளிலும் நிலவும் பல பிரச்னைகளையும் உண்மைகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது.

அரசுப் பேருந்தில் என்ன நடந்தது?

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் ஆறுமுகப்பாண்டி என்பவர் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் புழல் சிறையில் இருந்த கைதியை நெல்லை மாவட்டம் நாங்குநேரி கிளைச் சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்து, கடந்த மே 21ஆம் தேதி சிறையில் ஒப்படைத்துள்ளார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தில், திருநெல்வேலி செல்வதற்காக ஏறியுள்ளார்.

பேருந்தின் நடத்துநர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு தாம் பணியில் இருப்பதால் பயணச்சீட்டு வாங்க முடியாது என மறுத்து வாக்குவாதம் செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.

அந்தக் காணொளியில் காவலர் ஆறுமுகப்பாண்டி, “உங்கள் ஸ்டாஃப்புக்கு (போக்குவரத்து பணியாளர்கள்) எப்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளிக்கிறீர்கள்? அவர்கள் பணிக்குச் செல்வதாக நீங்கள் கூறுகிறீர்கள், நானும் பணிக்குத்தான் செல்கிறேன்."

"டிக்கெட் எடுக்க முடியாது. 50 கி.மீ. தொலைவிற்குள் பயணம் செய்ய, காவலர்கள் பயணச் சீட்டு எடுக்க வேண்டிய அவசியமில்லை,” என வாக்குவாதம் செய்வதைக் காண முடிகிறது.

அதைத் தொடர்ந்து, சக பயணிகள் அவரை சமாதானம் செய்யவே காவலர் ஆறுமுகப்பாண்டி டிக்கெட் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் பேருந்து திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. பேருந்தின் நடத்துநர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார், அது உடனே வைரலானது.

இதுதான் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி.

போக்குவரத்துக் கழக அறிவிப்பும் காவல்துறை நடவடிக்கையும்

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது. “வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க முடியும். இல்லையென்றால், பயணச்சீட்டு வாங்க வேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசுப் பேருந்துகளுக்கு காவல் துறையினர் அடுத்தடுத்து அபராதம் விதித்தனர். சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகள் மீது பல இடங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

உள்துறை செயலாளர் - போக்குவரத்து செயலாளர் சந்திப்பு

நாங்குநேரி சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக காவல்துறையினர் இவ்வாறு அபராதம் விதிப்பதாக போக்குவரத்துப் பணியாளர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சம்மேளனம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியது.

இதைத்தொடர்ந்து, தமிழக உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டியுடன் சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

மறுபுறம், வைரலான காணொளியில் சம்பந்தப்பட்ட காவலர் ஆறுமுகப்பாண்டியும் நடத்துநரும் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, ஒருவரையொருவர் ஆரத்தழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

போக்குவரத்துக் கழகம் Vs காவல்துறை - திடீர் அபராதங்களும் அரசுப் பேருந்து பணியாளர்களின் குறைகளும்
படக்குறிப்பு, சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி சமாதானம் செய்துகொண்டனர்.

வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

அரசுப்பேருந்து ஓட்டுனர்கள் சீட் பெல்ட் போடுவதில்லை என்று கூறி பல இடங்களில் காவல்துறையினர் அபராதம் விதித்த நிலையில், பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் இருப்பதே இல்லை என போக்குவரத்து கழக ஊழியர்கள் குறை கூறுகின்றனர்.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சம்மேளனத்தின் கௌரவ தலைவர் ஜே. லட்சுமணன், “நடத்துநர், ஓட்டுநர் சீருடையை அயர்ன் செய்து போடவில்லை, ஓட்டுநர் சீட் பெல்ட் போடவில்லை என்றெல்லாம் கூறி காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். பேருந்தில் சீட் பெல்ட் இருந்தால் போடப் போகின்றனர்.

கடந்த பட்ஜெட் தாக்கலின்போது கூறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 22,300 பேருந்துகள் இயங்குகின்றன. அவற்றில் அதிகளவில் நகர பேருந்துகள் 13,000-14,000 உள்ளன. மொத்தம் உள்ள பேருந்துகளில் 2,000-3,000 பேருந்துகளில் தான் சீட் பெல்ட் இருக்கிறது. பேருந்துகளில் சீட் பெல்ட் இருக்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சீட் பெல்ட் இல்லையென்றால் என்ன செய்வது?” என்கிறார்.

இதுதவிர, பேருந்துகளில் முதலுதவி பெட்டி, மாற்று டயர் (ஸ்டெப்னி) கூட இருப்பதில்லை என்பது போக்குவரத்து ஊழியர்களின் புகாராக உள்ளது. சம்பள பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றை தவிர்க்கவே நடத்துநர்கள் காவலர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு வலியுறுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மோட்டார் வாகன விதிமுறைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், “மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒவ்வொரு ஓட்டுநரும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளை சரியாக வைத்திருக்க வேண்டும். சீருடையை முறையாக அணிந்திருக்க வேண்டும். வேக கட்டுப்பாடு விதிகள் அரசுப் பேருந்துகளுக்கும் பொருந்தும்.

போக்குவரத்து விதிமுகளை மீறும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் உரிமை காவல்துறைக்கு உள்ளது. இப்போது தயாரிக்கப்படும் பேருந்துகள் சீட் பெல்ட் உடன் தான் இருக்கின்றன. அந்த பேருந்துகளில் கூட ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது இல்லை. நாங்குநேரி சம்பவத்திற்குப் பிறகு இவை பெரிதாக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகின்றன” என்றார்.

இப்போது மட்டும் அபராதம் ஏன்?

போக்குவரத்துக் கழகம் Vs காவல்துறை - திடீர் அபராதங்களும் அரசுப் பேருந்து பணியாளர்களின் குறைகளும்

வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறுவது போன்று, பல்வேறு போக்குவரத்து விதிகளை சுட்டிக்காட்டி தற்போது அபராதம் விதிக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர், இதற்கு முன்பு அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இவ்வளவு நாளும் அரசுப்பேருந்துகள் விதிகளை மீறுவதை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி, “போக்குவரத்துக் கழகங்கள் - காவல்துறைக்கும் இடையேயான ஒரு புரிதலின் அடிப்படையில்தான் முன்பு அபராதம் விதிக்காமல் இருந்தனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. சாலையில் அரசுப் பேருந்தை நிறுத்தி விசாரித்தாலே இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்துவிடும். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கவே காவல்துறையினர் ஒவ்வொரு பேருந்தாக நிறுத்தி சோதித்து அபராதம் விதிப்பதில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,”பல சமயங்களில் காவல்துறையை சேர்ந்தவர்கள் பேருந்துகளில் ஒரு நிறுத்தத்திலேயே இறங்கிவிடுவர் அல்லது அதிகாரிகள் அழைத்தார்கள் என அவசரமாக செல்ல வேண்டியிருக்கும்.

டிக்கெட் கட்டணத்தை மீண்டும் துறையில் பெறுவதும் நடைமுறையில் சாத்தியமில்லை. காவல்துறை சீருடையில் செல்பவர்களிடம் நடத்துநர்கள் யாரும் டிக்கெட் எடுக்குமாறு கூறுவதில்லை. போக்குவரத்து ஊழியர்களின் நடைமுறை பிரச்னைகளை புரிந்து கொண்டு காவல்துறையினர் விட்டுக்கொடுப்பது போன்று காவல்துறையினரின் பிரச்னைகளை போக்குவரத்துத் துறையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

அமைச்சரின் பதில் என்ன?

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
படக்குறிப்பு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாதது, பேருந்துகளில் சீட் பெல்ட் இல்லாதது குறித்த கேள்விகளுக்கு பிபிசி தமிழிடம் பதிலளித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நான் இதுகுறித்து ஏதும் பேச முடியவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் இந்த விவகாரம் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 பேரை புதிதாக நியமித்துள்ளோம். மற்ற கழகங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. முடிவுக்கு வந்ததும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அரசுப் பேருந்தில் ஒரு மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணம் செய்ய காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

காவல்துறைக்கான இலவச பேருந்துப் பயணம் தொடர்பான அரசாணை எப்போது வெளியாகும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் முன்பு பிபிசி தமிழ் கேட்டதற்கு, "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், போக்குவரத்துத் துறையின் அறிவிப்பின்படிதான் காவலர்கள் பயணம் செய்ய முடியும்," என்று கூறினார்.

"ஒரு மாவட்டத்திற்குள் காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் அறிவித்த திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தெளிவுபடுத்துகிறேன்,” என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.