நுரையீரல் புற்றுநோய்: புகை பிடிப்பவருக்கு பக்கத்தில் நின்றாலே ஆபத்து - எப்படி தடுப்பது?

தன்முனைப்பற்ற புகைத்தல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள், பக்கவாதம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

சிகரெட் அட்டையிலும் அது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் குறித்த பரவலான விளம்பரங்களையும் பார்த்திருப்போம்.

ஆனால் புகைப்பிடிப்பதால் வரும் நோய்கள் அனைத்தும், தன் வாழ்நாளில் சிகரெட்டை தொட்டுக்கூட பார்க்காத ஒருவருக்கும் வரும் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு காரணம் ‘தன்முனைப்பற்ற புகைத்தல்’.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புகையிலை சார்ந்த பழக்கங்களால் உயிரிழக்கிறார்கள். இதில் சுமார் எழுபது லட்சம் பேர் நேரடி புகையிலை பயன்பாட்டினால் இறக்கிறார்கள், அதே சமயம் புகைப்பிடிக்காதவர்கள் 10 முதல் 13 லட்சம் பேர் தன்முனைப்பற்ற புகைத்தல் காரணமாக இறக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் பெண்கள்.

அனைத்து வகையான புகையிலை பயன்பாடும் தீங்கு விளைவிக்கும், புகையிலையைப் பொறுத்தவரை பாதுகாப்பான அளவு என்ற ஒன்றே இல்லை என்றும், உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பொது சுகாதார அச்சுறுத்தல்களில் புகையிலை தொற்றுநோய் ஒன்றாகும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

சரி, பலரும் இதெல்லாம் தெரிந்தே தான் புகைக்கிறார்கள், உடலுக்கு கேடுகள் வந்தால் அனுபவிப்பார்கள். ஆனால் புகைப்பிடிக்காதவர்களுக்கும் ஏன் பிரச்னை வருகிறது என்ற கேள்வி இந்தக் கட்டுரையை படிப்பவர்கள் மனதில் எழலாம். அதற்கான பதிலையும், இதிலிருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் தீர்வுகளையும் பார்க்கலாம்.

தன்முனைப்பற்ற புகைத்தல்

பட மூலாதாரம், Getty Images

தன்முனைப்பற்ற புகைத்தல் என்றால் என்ன?

“ஒருவர் நேரடியாக சிகரெட் கொண்டு புகைப்பது ஆக்டிவ் ஸ்மோக்கிங் (Active smoking), அவர் உள்ளிழுத்து வெளியே விடும் புகையையும், சிகரெட்டிலிருந்து வரும் புகையையும் அருகிலிருக்கும் ஒருவர் சுவாசித்தால் அது பாஸிவ் ஸ்மோக்கிங் (Passive smoking) அல்லது தன்முனைப்பற்ற புகைத்தல்” என்கிறார் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் மருத்துவர் மற்றும் மூத்த ஆலோசகர் அஜய் நரசிம்மன்.

தொடர்ந்து பேசிய அவர், “அவ்வாறு அந்த புகையை சுவாசிக்கும்போது, சிகரெட் பிடிப்பவருக்கு என்னென்ன தீங்குகள் வருமோ அது எல்லாம் இவருக்கும் வரும். பொதுவாக கணவர் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவராக இருந்தால், அவருடன் பல வருடங்களாக வாழும் மனைவிக்கு இந்த தன்முனைப்பற்ற புகைத்தலால் பிரச்னைகள் ஏற்படும்”

“தனக்கு இது தீங்கு எனத் தெரியாமலே, பல வருடங்கள் அதைத் தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருப்பார்கள். இதில் பரிதாபமான விஷயம் என்னவென்றால் எந்தத் தவறும் செய்யாமல், பிறரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் மோசமான பாதிப்புகள் தான்” என்கிறார் மருத்துவர் அஜய் நரசிம்மன்.

தன்முனைப்பற்ற புகைத்தல்
படக்குறிப்பு, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் மருத்துவர் மற்றும் மூத்த ஆலோசகர் அஜய் நரசிம்மன்.

தன்முனைப்பற்ற புகைத்தலால் என்னென்ன பிரச்னைகள் வரும்?

“மருத்துவ ரீதியாக பார்க்கையில் நுரையீரல் புற்றுநோய், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், இதய நோய்கள், பக்கவாதம், தொண்டைப் புற்றுநோய், ஆஸ்துமா, என புகையிலை தொடர்பான அனைத்து நோய்களும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கும் வரும்”

“முக்கியமாக குழந்தைகளுக்கு அந்தப் புகை உடலில் அதீத எரிச்சலை ஏற்படுத்தும். புகையில் இருக்கும் நிக்கோட்டின் கூறுகள், அவர்களது நுரையீரலில் படிந்து சுவாச அமைப்பில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்”, என்று எச்சரிக்கிறார் மருத்துவர் அஜய் நரசிம்மன்.

தன்முனைப்பற்ற புகைத்தல்

பட மூலாதாரம், Getty Images

தன்முனைப்பற்ற புகைத்தலால் எளிதில் பாதிக்கப்படும் பெண்கள்

வீட்டில் ஒருவர் புகைப்பிடிப்பதால், அது அவரது குடும்பத்திற்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விளக்குகிறார் புற்றுநோயியல் நிபுணர் அனிதா.

“சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் என்னிடம் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு வயது 45. மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டதால் அவர் ஒரு மருத்துவரை அணுகியுள்ளார். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் நுரையீரலில் அடினோகார்சினோமா (Adenocarcinoma) எனும் புற்றுநோய்க்கட்டி இருப்பது தெரிந்தது.”

“அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அவர் ஒருபோதும் புகைப்பிடித்ததில்லை. ஆனால் அவரது கணவருக்கு அந்தப் பழக்கம் இருந்துள்ளது. கணவர் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தான் புகைப்பிடித்துள்ளார்.”

“கழிவறை, படுக்கையறை, சமையலறை என வீட்டின் அனைத்து இடங்களிலும் அந்த சிகரெட் புகையை சுவாசித்தவாறே பல வருடங்களாக அந்தப் பெண் வாழ்க்கை நடத்தியுள்ளார். சில ஆண்டுகளாக சுவாசக்கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர் மருத்துவரை நாடவில்லை.”

“ஒருமுறை மூச்சு விடுவதில் கடும் சிரமத்தை சந்தித்தப் பிறகு மருத்துவரை அணுகி, பின்னர் அவர் பரிந்துரைத்து என்னிடம் வந்தார். அவரது கணவரிடம், நீங்கள் தான் உங்கள் மனைவியின் புற்றுநோய்க்கு காரணம் என கூறியபோது, அவர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். இப்படி உலகம் முழுக்க, தன் வாழ்நாளில் ஒருமுறை கூட புகைபிடிக்காத எத்தனையோ பெண்கள் நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். காரணம் அருகில் இருப்பவர்கள் வெளியிடும் சிகரெட் புகை. ஆனால் புகைப்பிடிப்பவர்கள் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல், மிக ஸ்டைலாக புகையை ஊதிவிட்டு செல்கிறார்கள்” என்கிறார் புற்றுநோயியல் நிபுணர் அனிதா.

“கொரோனா காலத்தில் பலரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து புகைப்பிடித்திருப்பார்கள். பல வீடுகளில் கணவர் சிகரெட், பீடி, சுருட்டு எனப் பிடிக்கும்போது மனைவி, குழந்தைகள் என அனைவரும் அருகில் இருந்து சகஜமாக பேசிக்கொண்டு இருப்பார்கள். அது எவ்வளவு ஆபத்தானது என அவர்கள் அறிவதில்லை. எனவே தன்முனைப்பற்ற புகைத்தல் குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வரவேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

தன்முனைப்பற்ற புகைத்தல்
படக்குறிப்பு, புற்றுநோயியல் நிபுணர் அனிதா.

தன்முனைப்பற்ற புகைத்தல் எவ்வளவு தீவிரமானது?

தன்முனைப்பற்ற புகைத்தலின் தீவிரம் குறித்தும், அதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பது குறித்தும் அடையாறு புற்றுநோய் மையத்தின் உளவியல்-புற்றுநோயியல் பிரிவின் தலைவரும் பேராசிரியருமான சுரேந்திரன் வீரய்யாவிடம் பேசினோம்.

“இதில் உள்ள சிக்கல் என்றால், புகையிலை சார்ந்த நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தாலும் அதை அவர்கள் புறக்கணித்து விடுவார்கள், காரணம் எனக்கு தான் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையே என்ற எண்ணம் தான். அதனால் தான் புகைப்பிடிக்காதவர்கள் பலரும் நோய் தீவிர நிலையை எட்டிய பிறகே மருத்துவரிடம் செல்கிறார்கள்” என்கிறார் சுரேந்திரன் வீரய்யா.

தொடர்ந்து பேசிய அவர், “புகையிலை பொருட்களை புகைப்பதால் உண்டாகும் புகை உணவகங்கள், அலுவலகங்கள், வீடுகள் அல்லது பிற மூடப்பட்ட இடங்களில் இருந்து உடனே வெளியேறாமல் அங்கேயே தான் சுற்றிவரும். அத்தகைய புகையில் பாதுகாப்பான அளவு என்பதே இல்லை. குறைவாக சுவாசித்தலும் கூட சிக்கல் தான்.”

“உதாரணத்திற்கு ரயிலில் புகைப்பிடிக்கத் தடை, ஆனால் சிலர் கழிவறையில் சென்று புகைப்பிடிப்பார்கள். அவர்கள் வெளியே வந்த பிறகும் கூட அந்தப் புகையின் நச்சுக் கூறுகள் அங்கேயே தான் இருக்கும். இப்படித் தான் நம்மை அறியாமல் இந்தப் புகையும், அதன் நச்சும் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது. இதன் விபரீதம் குறித்த தெளிவான புரிதல் பலருக்கும் இல்லை” என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், “கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்தப் புகையை சுவாசித்தால், அது கருவை நேரடியாக பாதிக்கும். நீண்ட நாள் சுவாசிப்பதன் விளைவாக குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்கலாம். அதனால் அந்தக் குழந்தைக்கு பல பிரச்னைகள் ஏற்படும்.

சாதாரண நபர்களுக்கும் இந்தப் புகையால் நுரையீரல் புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை பல பிரச்னைகள் ஏற்படும். எனவே நீங்கள் புகைப்பிடிப்பவருடன் அல்லது புகையிலை சார்ந்த பழக்கங்களுக்கு அடிமையான ஒரு நபருடன் வாழ்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது” என்று கூறினார் பேராசிரியர் சுரேந்திரன் வீரய்யா.

தன்முனைப்பற்ற புகைத்தல்
படக்குறிப்பு, அடையாறு புற்றுநோய் மையத்தின் உளவியல்-புற்றுநோயியல் பிரிவின் தலைவரும் பேராசிரியருமான சுரேந்திரன் வீரய்யா.

தீர்வு என்ன?

“தன்முனைப்பற்ற புகைத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த தீர்வு. ஏனென்றால் தேநீர் கடைகளில் கூட பார்க்கிறோம், புகைப்பிடிக்காத ஒரு நபர் வெகு சாதாரணமாக புகைபிடிப்பவருடன் சேர்ந்து பேசிக்கொண்டு தேநீர் அருந்துவார். சிகரெட் புகை மிகவும் மோசமானது என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்கிறார் சுரேந்திரன் வீரய்யா.

“பெண்கள், குழந்தைகள் கண்டிப்பாக இதைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். புகையிலை குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் இருக்கிறது ஆனால் அந்தப் புகையை ஒருவர் சுவாசிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பல அறிவியல் ஆதாரங்கள் இருந்தும் மக்கள் அதை கண்டுக்கொள்வதில்லை.

பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்று சட்டம் இருந்தாலும், அது எளிதாக மீறப்படுகிறது. எனவே சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து முடிந்தவரை புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். புகையிலை இல்லா இந்தியாவை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இதற்கு ஒரு முழுமையான தீர்வு காணப்பட வாய்ப்புகள் குறைவு” என்று கூறுகிறார் பேராசிரியர் சுரேந்திரன் வீரய்யா.

தன்முனைப்பற்ற புகைத்தல்

பட மூலாதாரம், Getty Images

புகையிலை தொடர்பான சட்டங்கள்

2014ஆம் ஆண்டில், புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு சிகரெட் பாக்கெட்டுகளில், 'புகைப்பிடிப்பது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்' என்ற எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் சிகரெட் தயாரிப்பாளர்கள் அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அரசின் முடிவை உறுதி செய்தது.

புகைப்பிடிப்பதை தடுக்கும் விதமாக, பொது இடங்களில் புகைக்கத் தடை, குட்காவுக்குத் தடை, புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்குத் தடை, 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கத் தடை, பள்ளி, கல்லுாரிகள் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)