பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது ஏன்? எப்படிக் கட்டுப்படுத்துவது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கியூலியா கிராஞ்சி
- பதவி, பிபிசி செய்திகள், பிரேசில்
சிலருக்குப் பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு இது அதிகமாக ஏற்பட்டாலும், ஆண்களுக்கும் இது ஏற்படக்கூடும்.
இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இதன் பெயர் கேன்டிடியாஸிஸ் (Candidiasis).
கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை, பொதுவாக மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளோடு இணைந்து வாழும். இது உடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளில் ஒன்றாகும்.
ஆனால் இந்த உயிரினம் ‘சந்தர்ப்பவாதியாகக்’ கருதப்படுகிறது. அதாவது, தனக்கு நிலைமை சாதகமாக இருக்கும்போது அது தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.
ஏதாவது ஒரு காரணத்தால் இந்தப் பூஞ்சையின்களின் அளவு அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை சீர்குலைந்து கேன்டிடியாஸிஸ் தொற்று ஏற்படும்.

பட மூலாதாரம், Getty Images
ஆண்களுக்கு இந்தத் தொற்று ஏன் ஏற்படுகிறது?
பெண்களுக்கு இந்தப் பூஞ்சையின் அளவு அதிகரிப்பதற்கு சில பொதுவான காரணங்கள் உள்ளன.
மாதவிடாய் சுழற்சி, கருத்தரித்தல், கருத்தடை மாத்திரைகள் உபயோகித்தல், ஹார்மோன் மாற்று சிகிச்சை ஆகியவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் பெண்களின் பிறப்புறுப்பின் யோனி pH-ஐ பாதிக்கலாம். இது பூஞ்சையின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகிறது.
கூடுதலாக, பெண்களின் பிறபுறுப்பு ஈரப்பதத்துடனும் சூடாகவும் இருப்பதால், அதிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதுவும் கேன்டிடா பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது.
ஆனால், ஆண்கள், தங்கள் பிறப்புறுப்பை நீண்ட நேரம் குளியல் உடைகள், டயப்பர்கள் போன்ற ஈரமான ஆடைகளால் மூடிவைத்திருந்தால் இந்தத் தொற்று ஏற்படுகிறது, என்கிறார் பிராசிலின் சிறுநீரியல் சங்கத்தின் நோய்த்தொற்றுத் துறை உறுப்பினர் பியான்கா மாசிடோ.

பட மூலாதாரம், Getty Images
பிறப்புறுப்பு அரிப்பு ஏற்படுவதன் காரணங்கள்
இந்தத் தொற்று ஏற்படுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன.
மாசிடோ பின்வருபவற்றைக் கூறுகிறார்:
ஆண்களுக்கு:
- சரியான பிறப்புறுப்பு சுகாதாரம் இல்லாதது
- ஆணுறுப்பின் நுனியில் அதிகப்படியான தோல் இருப்பது
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு:
- நீரிழிவு நோய் (குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பின் பூஞ்சை அதிகமாக வளரும்)
- அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துதல் (இது கேன்டிடா பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பிற நல்ல நுண்ணுயிரிகளைக் கொல்லும்)
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் நோய்கள். அத்துடன் கீமோதெரபி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவையும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும்
முக்கியமாக கேன்டிடியாஸிஸ் பாலியல் மூலம் பரவும் தொற்றாகக் (sexually transmitted infection) கருதப்படுவதில்லை. ஏனெனில் அது மேலே குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.
"இருந்தாலும், தொடர்ச்சியாக தோலோடு தோல் தொடர்புகொள்ளும்போது, குறிப்பாக நெருக்கமான சூழ்நிலைகளில், இந்தத் தொற்று ஏற்படலாம்," என்கிறார் மாசிடோ.

பட மூலாதாரம், Getty Images
இந்தத் தொற்றின் அறிகுறிகள் என்ன?
மாசிடோவின் கூற்றுப்படி கீழ்கண்டவை இந்தத் தொற்றின் அறிகுறிகள்.
பெண்களுக்கு:
- பிறப்புறுப்பிலிருந்து பால் நிறத்தில், கெட்டியான ஒரு வகை வெள்ளை பொருள் வெளியேறும்.
- சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படும்
- உடலுறவின் போது வலி ஏற்படலாம்
ஆண்களுக்கு:
- ஆண்குறியில் சிறிய சிவப்பு புள்ளிகள், லேசான தடிப்பு மற்றும் புள்ளி வடிவ புண்கள்
மேலும் இரு பாலினரும் கடுமையான அரிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்களுக்கு ஏற்படும் தொற்றை எப்படிக் கண்டறிவது?
இந்தத் தொற்று பொதுவாக மருத்துவமனைகளில் கண்டறியப்படுகிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பரிசோதனைக்கான அவசியமின்றி, பார்வையின் மூலமே இந்தத் தொற்றைக் கண்டறிந்து விடுவார்கள்.
இருப்பினும், சந்தேகத்திற்கிடமான சந்தர்ப்பங்களில், அல்லது சிகிச்சையளிக்கக் கடினமாக இருக்கும் புண்கள் இருந்தால், நுண்ணுயிரிகளை ஆராய்தல் அல்லது பயாப்ஸி போன்ற சோதனைகள் செய்வதன்மூலம் இந்த நோய் கண்டறியப்படலாம்.
தொற்று ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தசை அல்லது திரவங்களைச் சேகரித்து அவற்றைச் சோதிப்பதன்மூலம் பூஞ்சைகளின் இருப்பைக் கண்டறியலாம், என்கிறார் பிராசிலில் உள்ள சான்டா பவுலா மருத்துவமனையின் சிறிநீரியல் நிபுணர் அலெக்ஸ் மெல்லர்.
“இருப்பினும், பொதுவாக, இந்தப் பரிசோதனைகளுக்கு அவசியமிருப்பதில்லை. சிகிச்சை உடனே தொடங்கப்படுகிறது," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
என்ன சிகிச்சை?
"கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை மிக வேகமாகப் பரவும். நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நோய்த்தொற்று தானாகவே மறைந்துவிடும். இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்," என்கிறார் அவர்.
ஆண்கள், சுகாதாரமாக இருப்பதுடன், கேன்டிடியாசிஸைக் குணப்படுத்த ஆயின்ட்மென்ட்கள் மற்றும் மாத்திரைகள் ஆகியவறைப் பயன்படுத்தப்படலாம், என்கிறார் அவர்.
ஆண்களுக்கான சிகிச்சை, பொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு கிரீம்கள், மற்றும் மாத்திரைகளை உள்ளடக்கியது.
இந்தத் தொற்றினால் அரிதாகவே சிக்கல்கள் ஏற்படுகிறது என்கிறார் மெல்லர். ஆனால் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் இத்தொற்று ஆண்களுக்கு இரண்டாம் நிலை முன்தோல் குறுக்கத்தை உருவாக்கலாம்.
தொற்றினால் ஏற்படும் வீக்கம் மற்றும் குணமடைவதில் உள்ள சிரமங்கள் முன்தோலின் நெகிழ்ச்சித்தன்மையைக் குறைக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தும் போது இது நிகழ்கிறது, என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
கேன்டிடியாசிஸின் பிற வகைகள்
பூஞ்சை வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையைப் பொறுத்து, கேன்டிடியாஸிஸ் உடலின் மற்ற பகுதிகளிலும் ஏற்படலாம்.
வாய்:
கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில், பொதுவாக வாயில் கேன்டிடியாசிஸ் ஏற்படும். இது ‘த்ரஷ்’ என்று அழைக்கப்படுகிறது. இது உதடுகள், வாய் மற்றும் தொண்டையில் ஏற்படுகிறது.
இது நாக்கில், கன்னங்களின் உட்புறத்தில், மற்றும் தொண்டையில் வெள்ளைப் புள்ளிகள் போல் தோன்றும். விழுங்கும்போது அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.
தோல்:
மேலும், உடலில் பொதுவாக ஈரமான, சூடான பகுதிகளான அக்குள், இடுப்பு மற்றும் மார்பகங்களின் கீழே கேன்டிடியாசிஸ் ஏற்படலாம்.
இது தோலில் சிவப்புப் புள்ளிகள், கடுமையான அரிப்பு, மற்றும் தோலை உரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
குடல்:
ஆன்டிபயாடிக் மருந்துகளின் நீண்டகால பயன்பாடு, குடல் நுண்ணியிரிகளின் ஏற்றத்தாழ்வு, ஆகியவற்றின் காரணமாக உடலில் பூஞ்சைகள் பெருகும்போது, குடலிலும் கேன்டிடியாஸிஸ் ஏற்படலாம்.
இது வயிற்று வலி, வயிறு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மற்றும் மலத்தில் சிறிய வெள்ளை எச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
தீவிரமான கேன்டிடியாசிஸ்:
இது ‘சிஸ்டமிக் கேன்டிடியாசிஸ்’ எனப்படுகிறது. இது நோய்த்தொற்றின் மிகவும் தீவிரமான வடிவமாகும். இதில் பூஞ்சை ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது.
சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் போன்றவர்களை இது பொதுவாக பாதிக்கிறது.
இதன் அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், தசை மற்றும் மூட்டு வலி.
சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
அனைத்து வகையான கேன்டிடியாசிஸ் தொற்றுகளுக்கான சிகிச்சையிலும், பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன -ஆயின்ட்மென்ட்கள், மாத்திரைகள், திரவங்கள் ஆகியவை. மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை தேவைப்படலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












