கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்த ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு - பிரமாணப் பத்திரத்தில் உள்ள விவரங்கள்

வயநாடு: ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? பிரமாணப் பத்திரம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பியுமான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்காக புதன்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார்.

அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார். ராகுல் இந்த முறை அமேதியில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து அக்கட்சியினர் மௌனம் காத்து வருகின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வயநாட்டில் 2 கி.மீ. தூரம் ‘ரோட் ஷோ’ (Road show) நடத்தினார். கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான பிபி சுனிரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார்.

இந்தத் தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டார்.

“வயநாடு எனது வீடு, இங்கு உள்ளவர்கள் எனது குடும்பம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் என்னிடம் அதிக அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார்கள். பெருமையுடனும் பணிவுடனும், இந்த அழகான நிலத்தில் இருந்து 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைக்கு மீண்டும் எனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறேன்," என ராகுல் அதில் கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பெயரில் எந்த வாகனமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு

பட மூலாதாரம், @PRIYANKAGANDHI

படக்குறிப்பு, சகோதரி பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் வருமானம் உயர்ந்துள்ளதா?

கடந்த 5 ஆண்டுகளில் 6 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக ராகுல் காந்தி தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார். அதில் தனது மொத்த சொத்து மதிப்பு 20.39 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக 2019இல் 15.88 கோடி ரூபாய் எனத் தெரிவித்திருந்தார்.

பிரமாணப் பத்திரத்தில், ராகுல் காந்தியிடம் ரூபாய் 55 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், இரண்டு வங்கிக் கணக்குகளில் ரூபாய் 26.25 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வசம் உள்ள பங்குகள்

யங் இந்தியன் நிறுவனத்தின் தலா 100 ரூபாய் மதிப்புள்ள 1900 பங்குகள் (1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலானவை) தன்னிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

அவர் 25 நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதாகவும், அதில் 4.33 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தவிர, ஏழு மியூச்சுவல் ஃபண்டுகளில் 3.81 கோடி ரூபாய் மற்றும் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களும் அவரிடம் உள்ளன.

பிரமாணப் பத்திர தகவலின்படி, 61.52 லட்சத்தை ராகுல் காந்தி இன்சூரன்ஸ் தொகையாக டெபாசிட் செய்துள்ளார். அவரிடம் 4.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர நகைகள் உள்ளன. இதன்படி, ராகுல் காந்தியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு 9.24 கோடி ரூபாய்.

ராகுல் காந்தியின் அசையா சொத்துகள்

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு

பட மூலாதாரம், ANI

பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, ராகுல் காந்திக்கு சுமார் 11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.

சகோதரி பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து, டெல்லி மெஹ்ராலியில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் இரண்டு விவசாய நிலங்களை வாங்கியதாகவும், அதில் தான் சமபங்காளியாக இருப்பதாகவும் ராகுல் கூறினார்.

பிரமாணப் பத்திரத்தின்படி, அந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு 2.10 கோடி ரூபாய். இது தவிர குருகிராமில் ராகுல் காந்தி பெயரில் 5 ஆயிரத்து 538 சதுர அடியில் அலுவலக இடம் உள்ளது. இதன் தற்போதைய விலை சுமார் 9 கோடி ரூபாய்.

ராகுல் காந்தியின் கல்வி விவரங்கள்

அந்த பிரமாண பத்திரத்தில், 1989ஆம் ஆண்டு சிபிஎஸ்இ-யில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அதன் பிறகு, 1994ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றதாகவும், 1995ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் எம்.ஃபில் முடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ராகுல் வயநாட்டில் எளிதாக வெற்றி பெறுவாரா?

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வயநாட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ‘ரோடு ஷோ’ (Road show) நடத்தினார்.

வயநாடு தொகுதிக்கான வேட்பாளரின் பெயரை இடதுசாரி கட்சியினர் அறிவித்துள்ளனர். பிப்ரவரி மாதம் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ(எம்) தலைவர் விருந்தா காரத், “சிபிஐ இப்போதுதான் வயநாடு தொகுதிக்கான வேட்பாளரை முடிவு செய்தது. பெண்கள் இயக்கத்தில் மகத்தான பங்கு வகித்தவர் தோழர் அன்னி ராஜா. அவர் முழு எல்டிஎஃப் (இடது ஜனநாயக முன்னணி) சார்பாக வேட்பாளராகக் களம் காண்பார்,” என்றார்.

“ராகுல் காந்தியும் காங்கிரசும் வயநாட்டில் போட்டியிடுவது குறித்து சிந்திக்க வேண்டும். தனது போராட்டம் பாஜகவுக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடாமல் கேரளாவில் வந்து இடதுசாரிகளுக்கு எதிராகப் போட்டியிட்டால், நீங்கள் என்ன செய்தியை மக்களுக்குக் கூற விரும்புகிறீர்கள்? எனவே, ராகுல் தனது தொகுதி குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார் விருந்தா.

இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் அங்கம் வகிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த இரண்டு கூட்டணிக் கட்சிகளும் ராகுல் காந்தியின் தொகுதியில் நேருக்கு நேர் மோதும்.

கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 20 தொகுதிகளில் நான்கில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட்டின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் திங்கள்கிழமை இதை அறிவித்தார்.

சசி தரூர் 2009ஆம் ஆண்டு முதல் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பியாக உள்ளார். இந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பணியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரியில் விருந்தா காரத் வயநாடு வேட்பாளரின் பெயரை அறிவித்து, ராகுல் காந்தியை யோசிக்கச் சொன்னபோது, சசி தரூர் அதற்கு எதிர்வினை ஆற்றியிருந்தார். கேரளாவில் பாஜக பலமாக இருக்கும் தொகுதிகளில் காங்கிரஸுக்கு குறுக்கே இடதுசாரிகள் ஏன் வருகிறார்கள் என்று சசி தரூர் கேள்வி எழுப்பியிருந்தார்.

“உதாரணமாக, எனது தொகுதியைப் பற்றிப் பேசுங்கள். கடந்த இரண்டு தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் பாஜக இரண்டாவது இடத்தில் இருந்தது. பாஜக எதிர்ப்பு வாக்குகளில் பெரும்பகுதி மூன்றாம் இடம் பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு போனது.

திருவனந்தபுரத்தில் இடதுசாரிகள் என்னை எதிர்ப்பது சரி என்றால், ராகுல் காந்தியால் வயநாட்டில் இடதுசாரிகளுக்கு எதிராக ஏன் போட்டியிட முடியாது?” என்றார் சசி தரூர்.

தொகுதிப் பங்கீடு குறித்து அவர் பேசுகையில், “கேரளாவில் இடதுசாரிகள் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை. அண்டை மாநிலமான தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன. ஒரு மாநிலத்திலும் மற்றொரு மாநிலத்திலும் நிலைமைகள் வேறு மாதிரியாக இருக்கின்றன” என்றார்.

இதுகுறித்துப் பேசிய இடதுசாரி வேட்பாளர் அன்னி ராஜா, “எந்தத் தொகுதியில் யாரை நிறுத்துவது என்பதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யட்டும். ஆனால் சுயேச்சைக் கட்சி என்ற வகையில் நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம்.

இந்திய கம்யூனிஸ்ட்டின் வேட்பாளரை ராகுல் காந்தி எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இது 2019லும் நடந்தது. இருப்பினும், இது பாஜகவிற்கு எதிராக 'இந்தியா' என்ற பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான பொறுப்பு காங்கிரஸிடம் தான் உள்ளது தவிர எங்களிடம் அல்ல,” என்று கூறினார்.

யார் இந்த அன்னி ராஜா?

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு

பட மூலாதாரம், ANI

அன்னி ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அன்னி கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி.

இவர் இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். பள்ளிப் பருவத்தில் இருந்தே அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.

அன்னி ஒரு மரபுவழி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் ஒரு விவசாயி மற்றும் கம்யூனிஸ்ட். அன்னி தனது ஆரம்ப நாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார். அன்னி மாணவர் பிரச்னைகளில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, அன்னி இந்திய கம்யூனிஸ்ட்டின் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.கே.வாசுதேவன் நாயரின் உத்தரவின் பேரில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

அன்னி கண்ணூரில் இந்திய கம்யூனிஸ்ட்டின் மகளிர் அணி மாவட்டச் செயலரானார். 22 வயதில் மாநில செயற்குழு உறுப்பினரானார். அன்னி மற்றும் டி ராஜா 1990இல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் டெல்லி வந்தனர்.

டெல்லியில் ஆசிரியர் பணி உட்படப் பல வகையான வேலைகளை அன்னி செய்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது. அன்னி பி.எட் படிப்பையும் முடிந்திருந்தார். பின்னர் அன்னி ராஜா பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

ஜூலை 2023இல், “மணிப்பூர் வன்முறைக்கு அரசுதான் நிதியளிக்கிறது” என அவர் பேசியிருந்தார். இதற்காக அவருக்கு எதிராக இம்பாலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)