மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் வெற்றி பெறும்? ஆனந்த் ஸ்ரீநிவாஸன் கணிப்பது என்ன?

நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா கூட்டணி, காங்கிரஸ்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்தியா கூட்டணிக்கான வாய்ப்புகள், காங்கிரஸ் எதிர்கொள்ளும் கூட்டணிச் சிக்கல்கள், பலவீனங்கள், உட்கட்சிப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார்.

அந்தப் பேட்டியிலிருந்து...

காங்கிரஸ் கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் என்ன?

கேள்வி: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எப்படியிருக்கின்றன?

பதில்: தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 10 இடங்களிலும் வெற்றிபெறுவோம். கேரளாவில் 16 இடங்களில் போட்டியிடுகிறோம். அனைத்து இடங்களிலும் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றிபெற்றோம். இந்த முறை 12- 13 இடங்களாவது கிடைக்கும். தெலங்கானாவிலும் வெற்றிவிகிதம் சிறப்பாகவே இருக்கும். ஆந்திராவில் கடந்த தேர்தலில் 1% வாக்கு தான் கிடைத்தது. இந்த முறை ராஜசேகர் ரெட்டியின் மகள் ஷர்மிளா களம் இறங்கியிருக்கிறார். மகாராஷ்டிராவிலும் பிஹாரிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஏற்படும் பின்னடைவு எங்களுக்கு சாதகமாக அமையும். ஜார்க்கண்ட், ஹரியானா, பஞ்சாப் ஆகியவையும் சாதகமாக உள்ளன.

ஆனால், மிக முக்கியமான மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் என்ன ஆகும் எனத் தெரியவில்லை. ராஜஸ்தானில் கடந்த முறையைவிட சிறப்பான வெற்றி கிடைக்கும் என கருதுகிறேன்.

ஆனால், தேர்தலில் வாக்குப்பதிவு ஆறேழு வாரங்களுக்கு நீடிக்கிறது. அதற்குள் என்ன நடக்கும் எனத்தெரியாது. மக்களைப் பொறுத்தவரை கடைசி 15 நாட்களில்தான் வாக்கு யாருக்கு என்பதைத் தீர்மானிப்பார்கள். பொதுவாக மக்களைப் பொறுத்தவரை, வெற்றிபெறுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என நினைப்பார்கள்.

ஆகவே, காங்கிரசிற்கு எவ்வளவு கிடைக்கும் என சொல்வது கடினம். பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் பெறும் என பிரதமர் சொல்கிறார். ஆனால், அவர்கள் 300-ஐத் தாண்ட மாட்டார்கள் எனக் கருதுகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா கூட்டணி, காங்கிரஸ்

‘தேர்தல் பத்திரப் பணம் மூலம் கட்சி மாற வைக்கும் பா.ஜ.க’

கேள்வி: இந்தியா கூட்டணி நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. இருந்தபோதும், அந்தக் கூட்டணியில் இடங்களைப் பகிர்ந்துகொள்வதில் தேர்தல் அறிவித்த பிறகும் பிரச்னை நீடித்தது. ஏன்?

பதில்: கூட்டணிகள் முறிவதற்கு, தலைவர்கள் கட்சி மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க-விடம் நிறைய பணம் இருக்கிறது. இதை வைத்து பலரைக் கட்சி மாற வைத்திருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மியின் முதல்வரும் துணை முதல்வரும் சிறையில் இருக்கிறார்கள். ஆனால், மாயாவதி போன்றவர்கள் அஞ்சுகிறார்கள். அவர் இந்தியா கூட்டணியில் சேர்ந்திருந்தால், உ.பி-யில் அந்தக் கூட்டணிக்கு 50 -60 இடங்கள் கிடைத்திருக்கும். அவர் இந்தியா கூட்டணியில் சேராதது இழப்புதான்.

அதேபோல சரண் சிங்கிற்கு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டதால், அவருடைய பேரன் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்டது. இதெல்லாம் பின்னடைவுகள்தான். ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, பல இடங்களில் கூட்டணியை உடைத்திருக்கிறது பா.ஜ.க. சிலரை விருதுகள் மூலம் தங்கள் பக்கம் வர வைத்திருக்கிறது, அவ்வளவுதான்.

கேள்வி: பல இடங்களில் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரசிற்கு பிரச்சனை இருப்பது ஏன்? குறிப்பாக, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில்...

பதில்: மேற்கு வங்கத்தில் நடந்தது வேறு விஷயம். மேற்கு வங்கத்தில் காங்கிரசிற்கு இடதுசாரிகளுடன் கூட்டணி இருக்கிறது. அதே கூட்டணிக்கு திரிணாமூல் காங்கிரசையும் அழைக்கிறோம். இருவருமே காங்கிரசிற்கு நெருக்கமாக இருந்தார்கள்.

இடதுசாரிகளுக்கு இரண்டு இடங்களும் காங்கிரசிற்கு நான்கு இடங்களையும் கொடுத்திருந்தால் 42 இடங்களையும் வென்றிருக்கலாம். இப்போதைய சூழலில் அங்கே பா.ஜ.க. 20 இடங்களைப் பிடிக்கும் என்கிறார்கள். கூட்டணி அமையாததுதான் இதற்குக் காரணம்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது. இப்போது கேட்டது 4 இடங்கள். ஆனால், அவர் ஒரு இடத்தைக்கூட கொடுக்க மறுத்தார். மேலும், நாடாளுமன்ற கட்சித் தலைவரும் கடந்த முறை வெற்றிபெற்றவருமான அதிர் ரஞ்சன் சௌத்ரியை தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் கூறினார். இதற்கு யார் ஒப்புக்கொள்வார்கள்?

ராகுல்

பட மூலாதாரம், INC/X

புலனாய்வுத் துறை விசாரணைகள் மூலம் பின்னடைவா?

கேள்வி: இந்தியா கூட்டணி கட்சியில் தலைவர்கள் பலர் மீது அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை விசாரணைகள் நடக்கின்றன. பலர் கைதுசெய்யப்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் இது இந்தியா கூட்டணிக்கு பாதகமாக அமையாதா?

பதில்: இன்று வெளிவந்த ஒரு நாளிதழில் எப்படி பா.ஜ.க-வில் உள்ளவர்களும் பா.ஜ.க-வில் சேர்பவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்பதைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அந்தக் கட்சியில் சேர்ந்தவுடன் புனிதமாகிவிடுகிறார்களா?

கேள்வி: நீதிமன்றத்திற்குச் செல்லலாமே…

பதில்: நீதிமன்றங்கள் மிக மெதுவாக வேலை செய்கின்றன. தேர்தல் பத்திரங்கள் வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஏ.டி.ஆர் அமைப்பு ஆகியவை வழக்குத் தொடர்ந்தன. அந்த வழக்கில் தீர்ப்பு வர ஐந்து வருடங்கள் ஆயின. அதற்குள் பா.ஜ.க. ரூ.6,000 கோடியை திரட்டிவிட்டது. வருமான வரித் துறை வழக்கிலும் எங்களுக்கு நீதி கிடைக்கும். ஆனால், அதற்கு பத்தாண்டுகள் ஆகலாம். அதுவரை தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

காங்கிரசிற்கு நோட்டீஸ் அனுப்பியதைப் போல நோட்டீஸ் அனுப்புவதென்றால், பா.ஜ.க-வுக்கு ரூ.4,000 கோடிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். செய்யவில்லையே?

அல்லது தேர்தல் ஆணையமாவது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். வாசனுக்கு ஒரே நாளில் சைக்கிள் சின்னத்தை அளித்த தேர்தல் ஆணையம், ம.தி.மு.க-வுக்கு பம்பரம் சின்னத்தை அளிக்க வேண்டியதுதானே... டிடிவி தினகரனுக்கு ஒரே நாளில் குக்கர் சின்னத்தை அளித்த தேர்தல் ஆணையம், பல நாட்கள் இழுத்தடித்து வி.சி.க-வுக்கு பானைச் சின்னத்தைக் கொடுக்கிறார்கள். இப்படி எல்லா அமைப்புகளுமே கைப்பற்றப்பட்டுவிட்டன.

நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா கூட்டணி, காங்கிரஸ், தேர்தல் பத்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: இதுபோன்ற விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறதா?

பதில்: அது காங்கிரசின் வேலையல்ல. ஊடகங்களின் வேலை. ஆனால், ஊடகங்கள் பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருக்கின்றன. காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி, மாற்றத்தில் இருக்கும் கட்சி. அந்தக் கட்சியால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்துகொண்டிருக்கிறோம்.

ராகுல் காந்தியின் வீடியோக்கள் அதிக பிரபலமாக இருக்கின்றன. அவர் சமூக வலைதளங்களின் மூலமாக பேசும்போது, அவை அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எல்லா பக்கத்திலும் முடக்கிவிட்ட பிறகு, காங்கிரசால் என்ன செய்ய முடியும்? மக்கள்தான் செய்ய வேண்டும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரு கூட்டம் நடத்துவதற்கு பணம் செலவாகும். ஆனால், வங்கிக் கணக்கையே முடக்கிவிட்ட பிறகு எப்படி கூட்டம் போட முடியும்? காங்கிரஸ் தலைவர்களின் சமூக வலைதளக் கணக்குகள் மட்டுப்படுத்தப்படுகின்றன, அல்லது முடக்கப்படுகின்றன. வேறு என்னதான் செய்வது?

நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா கூட்டணி, காங்கிரஸ்

பட மூலாதாரம், Thirunavukkarasar

மயிலாடுதுறை, திருநெல்வேலியில் வேட்பாளர்களை இறுதிசெய்வதில் தாமதம் ஏன்?

கேள்வி: மாநிலங்களில் கூட்டணிகள் அமைந்த பிறகும் வேட்பாளர்களை இறுதிசெய்வதில் கூட காங்கிரஸ் தாமதம் செய்கிறது… உதாரணமாக மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளில் தாமதம் ஏற்பட்டது...

பதில்: அதற்கான காரணத்தைச் சொல்கிறேன். ராகுல் காந்தி பாத யாத்திரை சென்றபோது பல சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரைச்சந்தித்து இந்தத் தேர்தலில் ஒரு சிறுபான்மையினருக்காவது இடமளிக்க வேண்டுமெனக் கேட்டனர். மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய இரு தொகுதிகளில் எதை சிறுபான்மையினருக்குக் கொடுப்பது என்பதில் தாமதம் ஏற்பட்டது.

கேள்வி: முதலமைச்சர் பிரச்சாரத்திற்குச் செல்வதற்கு சற்று முன்பாக வேட்பாளரை அறிவிக்கிறார்கள். இது பலவீனமான தோற்றத்தை ஏற்படுத்தாதா?

பதில்: இந்த 9 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறப் போகிறோம். மக்கள் வாக்களிக்கப் போவது ராகுல் காந்திக்காக. வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிக்கும் காலம் போய் வெகு நாட்களாகிவிட்டது. 2014-இல் ஜெயலலிதா 37 இடங்களை வென்றாரே, அப்போது வேட்பாளரைப் பார்த்தா வாக்களித்தார்கள்? அப்போது வெற்றி பெற்றவர்களில் யாராவது சிறப்பாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டார்களா?

இப்போது நடப்பது அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பாணியில்தான் தேர்தல் நடக்கிறது. ராகுல் காந்தியா, மோதியா என்பதுதான் கேள்வி. அதில் தமிழ்நாட்டில் நூற்றில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ராகுல் காந்திக்கு வாக்களிப்பார்கள். இந்த 9 பேரும் ராகுல் காந்தியின் பிரதிநிதியாகத்தான் வாக்குகளைப் பெறுகிறார்கள்.

கார்கே

பட மூலாதாரம், INC/X

கேள்வி: அப்படியானால், தனித்துவம்மிக்க தலைவர்களை தமிழக காங்கிரசால் வளர்த்தெடுக்க முடியவில்லையா?

பதில்: ஏன், ப.சிதம்பரம், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் இருந்தார்களே… திருநாவுக்கரசர் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்தானே.

கேள்வி: இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாத திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கையில் தனக்கு இடம் கிடைக்காமல் செய்தவர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இதெல்லாம் காங்கிரசிற்கு சிக்கலான நிலையை ஏற்படுத்தாதா?

பதில்: இதுபோன்றவர்கள் எல்லா கட்சியிலும் இருப்பார்கள். திருநாவுக்கரசர் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர். அவரைப் பற்றி நான் ஏதும் கூற முடியாது. சத்தீஸ்கரின் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், தந்தை-மகன் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பளிப்பது என முடிவுசெய்யப்பட்டது. திருநாவுக்கரசரின் மகன் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருக்கிறார். அதன்படி இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

நிதியமைச்சராக இருந்ததால் ப.சிதம்பரம் ஒரு விதிவிலக்கு. வருத்தத்தில் இருப்பதால் திருநாவுக்கரசர் சில விஷயங்களைச் சொல்லலாம்.

நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா கூட்டணி, காங்கிரஸ், கச்சத்தீவு

இலங்கை இந்துக்களுக்கு சிஏஏ-வின் இடமில்லாதது ஏன்?

கேள்வி: கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டதாக காங்கிரசை குற்றம்சாட்டியிருக்கிறது பா.ஜ.க...

பதில்: கச்சத்தீவின் உரிமை ராமநாதபுரம் ராஜவிடம் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுக்க முடியவில்லை. ஆனால், கச்சத்தீவு ஏன் இலங்கைக்குச் சென்றது என்ற கேள்வி இருக்கிறது. அந்தத் தருணத்தில் இந்தியா அணுகுண்டு சோதனை நடந்தது. அந்தத் தருணத்தில் அமெரிக்கர்கள் திருகோணமலையில் ஒரு ராணுவ தளத்தை அமைக்க முயற்சித்தார்கள். அந்தத் தருணத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தமிழர்கள் மீது பெரிய அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்களே, சி.ஏ.ஏ சட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த இந்துக்களுக்கும் அந்த வாய்ப்பை ஏன் வழங்கவில்லை? ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு வழங்கும்போது இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பை வழங்கவில்லை?

கடந்த 25 ஆண்டுகளில் பல முறை இலங்கைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோதி, எத்தனை முறை கச்சத்தீவை திரும்பக் கொடுக்கும்படி கேட்டார்? அப்போது பெரிய அளவில் நிதியுதவி செய்து கச்சத்தீவைக் கேட்டார்களா?

லடாக்கில் ஏழாயிரம் ஏக்கரை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. வாங்சுக் இதற்காக 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அதைப் பற்றி பேசுவதில்லையே...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)