100% ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு: 2019-ல் நிராகரித்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இம்முறை பரிசீலிப்பது ஏன்?

விவிபேட் வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க முடியுமா என்று அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது இருக்கும் நடைமுறையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

அருண்குமார் அகர்வால் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் இந்த விஷயத்தில் வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

விவிபேட் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்கு தாங்கள் விரும்பிய வேட்பாளருக்குச் சென்றிருக்கிறதா என்று சரிபார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.

விவிபேட் இயந்திரம் ஒரு ஒப்புகைச் சீட்டை அளிக்கிறது, அதில் வாக்காளர் அவர் அளித்த வாக்கைப் பார்க்க முடியும். அதில் ஏதேனும் தவறு இருந்தால், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அந்த ரசீது சீல் வைக்கப்பட்ட உறையில் வைக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தல், வாக்குப்பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள்

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின.

விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல், வாக்குப்பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒரு சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும்

தமிழ்நாட்டில் எதிர்ப்பலை

தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறையால் ஒவ்வொரு தொகுதிகளிலும் 2 சதவீதம் தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என தேர்தல் ஆணையமே கூறியுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஆகவே, 2 சதவீதம் வாக்குகளில் வித்தியாசம் ஏற்படுமானால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டு (விவிபேட்) வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய நடைமுறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இதுவரையில் நடைபெற்ற தேர்தல்களுக்கும், தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கு இடையே புதிய பிரிவை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவறானது என தேர்தல் ஆணையரிடம் முன்பே கூறியிருந்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இப்போது வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்."

"புதிய மாற்றத்தின்படி ஒரு தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையமே கூறுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள 22 லட்சத்து 30 ஆயிரம் வாக்களர்களில் 2 சதவீதம் வாக்கு என்பது 46 ஆயிரம் வாக்குகள். அப்படியெனில் ஏறத்தாழ 46 ஆயிரம் வாக்குகள் வரையில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 46 ஆயிரம் வாக்குகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. கடந்த 2019-ல் விசிக தலைவர் திருமாவளவன் கூட மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்."

விவிபேட் ஒப்புகைச்சீட்டை நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளதாக கூறினார்.

விவிபேட் இயந்திரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை கடந்த மாதம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்து மனு அளித்து இருந்தார்.

அந்த மனுவில், வட இந்திய மாநிலங்களில் இன்றும் மின்னணு எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் கட்சிகளிடையே உள்ளது. 100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல், வாக்குப்பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு விவிபேட்-இல் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 சீட்டுகளை அச்சிட முடியும்

விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது?

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார்.
  • அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும்.
  • அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும்.
  • வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும்.
  • விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது.
  • ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தல், வாக்குப்பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்
படக்குறிப்பு, முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி

முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன?

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார்.

“ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார்.

தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல், வாக்குப்பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும்

EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன?

முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள்.

அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன.

இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன.

பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.

நாடாளுமன்றத் தேர்தல், வாக்குப்பதிவு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது

விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு

கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது.

எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு.

இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.

வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம்.

2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)