இந்தியா உள்பட உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் என்னென்ன வழிகளில் நடக்கின்றன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இசாரியா ப்ரைதாஞ்சியம்
- பதவி, பிபிசி உலக சேவை
இந்த ஆண்டு, உலகின் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.
இந்தியா உள்பட உலகளவில் ஜனநாயகம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தல் நடைமுறைகளில் பல வழிகளில் மோசடிகள் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், மேலும் அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நேர்மையான தேர்தல் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "வாக்காளர்களின் விருப்பங்களையும் அவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் ஒரு முழு தேர்தல் செயல்முறை பிரதிபலிக்கும் போது, அதை ஒரு நேர்மையான தேர்தல் என்று அழைக்கலாம்.
அத்தகைய ஒரு தேர்தல் செயல்முறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும், அப்போது தான் அவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிக்க முன் வருவார்கள்" என்கிறார் செலேரி.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறையில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பிரிவில் பணிபுரியும் செலேரி மேலும் கூறுகையில், "தேவையான அனைத்து தகவல்களையும் மக்கள் எளிதாக அணுகுமாறு இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்தல்கள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்" என்கிறார்.
செலேரியைப் பொருத்தவரை, "தேர்தல் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அது வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிப்பது மட்டுமல்லாது, அனைத்து அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இதில் பங்கேற்கவும் வன்முறை இல்லாமல் பரப்புரை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்கிறார்.
பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகப் பேராசிரியரான டாக்டர். நிக் சீஸ்மேன் கூறுகையில், "வேட்பாளர்களும் குடிமக்களும் சுதந்திரமாகப் பங்கேற்று, பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படுவது தான் ஒரு நல்ல தேர்தல். ஆனால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் செயல்முறையின் தரம் குறைந்து வருகிறது என எனது ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன" என்கிறார்.
தரம் குறைந்த தேர்தல்கள் வழக்கமாகி விடும் அபாயம் உள்ளது என்கிறார் அவர்.
டாக்டர் சீஸ்மேனின் கூற்றுப்படி, "எந்தவொரு தேர்தலும் ஆகச்சிறந்த முறையில் நடப்பதில்லை, ஆனால் நல்ல தரமான தேர்தல்கள் வாக்காளர்களுக்கு அவர்களின் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தையும் அளிக்கின்றன."
தேர்தல் முறைகேடுகள் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பு வரை தேர்தல் செயல்முறை தொடர்கிறது. இந்த சுழற்சியில் எந்த நேரத்திலும் வாக்காளர்களை ஏமாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"புதிதாக வருபவர்களே தேர்தல் நாளன்று மட்டும் மோசடிகளைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் இதில் வல்லுநர்களாக இருப்பவர்கள், ஒரு வருடத்திற்கு முன்பாகவே இதைத் திட்டமிடுகிறார்கள்" என டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார்.
தேர்தல் முறைகேடுகள் என்பது ஆளும் அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு பெரிய அளவில் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவது, எதிர்க்கட்சி செய்திகளைத் தடுக்க ஊடகங்களின் மீதான தணிக்கை மற்றும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குப் பதிவு செயல்முறையை மாற்றி அமைத்தல் ஆகியவை இந்த முறைகேடுகளில் அடங்கும்.
"வழக்கமாக நடப்பது என்னவென்றால், ஆளுங்கட்சி நடுநிலை இல்லாத நீதிபதிகளை நியமிக்கிறது. அதனால் இறுதி தேர்தல் முடிவுக்கு எதிரான எந்த மேல்முறையீடுகளும் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்படாது," என்கிறார் செல்லரி.
இதைப் பற்றிய பரவலான அச்சம் இருந்த போதிலும், அமெரிக்காவில் இது நடக்கவில்லை.
அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளை நியமித்தார். இது உச்ச நீதிமன்றத்தில் 6-3 விகிதத்தில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு வழிவகுத்தது. ஆனால் 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை எதிர்த்து டிரம்ப் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அந்த வழக்கில் டிரம்பிற்கு உச்ச நீதிமன்றம் அதிக பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கான மற்றொரு வழி, நியாயமற்ற ஆதாயங்களை அடையும் நோக்கில் தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வது.
ஆளும் கட்சிகள் அல்லது அரசாங்கங்கள் தங்கள் பிரசாரங்களுக்காகவும், பொய்யான செய்திகளைப் பரப்பி தேர்தல் செயல்முறையை இழிவுபடுத்துவதற்கும், வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துகின்றன.
"அமெரிக்காவில், தொகுதிகளை மறுவரையறை செய்தல், வாக்காளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் பொய்யான செய்திகள் பரவுவது ஆகியவை மிகவும் கவலைக்குரிய பிரச்னைகளாக இருக்கின்றன" என்கிறார் டாக்டர் சீஸ்மேன்.
"தேர்தலில் பிரசாரம் கூட இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாக்களிப்பதைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஜனாதிபதியின் குரலில் ஒரு போலியான டிஜிட்டல் செய்தி வெளியானதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம்" என்கிறார் அவர்.
எல் சால்வடார் மற்றும் இலங்கை தேர்தல்களின் போது பொய்யான செய்திகள் பரவுதல் மற்றும் தேர்தல் மோசடிகள், அரசியல் வன்முறைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர் சீஸ்மேன் கூறினார்.
தேர்தல் மோசடி என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
வாக்களித்த பின் தேர்தல் முடிவை மாற்றும் முயற்சி இது.
வாக்குப்பெட்டியில் முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை போடுவது, வாக்களித்த பிறகு எண்ணிக்கையை மாற்றுவது அல்லது எதிரணியினரின் வாக்குகளை அழிக்க வாக்குப்பெட்டிகளை அழிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
ரஷ்யாவின் 2021 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்த மூன்று நாள் வாக்குப்பதிவில், பரவலான தேர்தல் மோசடிகள், முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டிகளில் போட்டது மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு எதிரான மிரட்டல் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இணையத்தில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் மக்கள் வாக்குப் பெட்டிகளில் காகிதங்களைத் திணிப்பதைக் காண முடிந்தது.
எவ்வாறாயினும், எந்தவொரு 'தீவிரமான தேர்தல் விதிமீறல்களையும்' பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது ரஷ்ய அரசாங்கம்.
"ஆனால், முழு தேர்தல் செயல்முறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் எளிதாக 'பொய்' சொல்லலாம் அல்லவா" என்கிறார் 'How to Rig an Election' புத்தகத்தின் இணை ஆசிரியர் டாக்டர் சீஸ்மேன்.
தேர்தல் செயல்முறை மிகவும் சிறப்பாகப் பேணப்படும் நாடுகளில் கூட வாக்கு மோசடிகள் நடக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
இந்த நாடுகளின் பல வாக்குச்சாவடிகளில், வாக்குகள் பதிவாவதை கண்காணிக்கவும், தேர்தல் முடிவுகளை கணக்கிடவும் உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் உள்ளனர்.
கானாவில் 2016இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிடுகிறார் டாக்டர் சீஸ்மேன், அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளைக் கண்காணிக்க ஒரு கைப்பேசி செயலியைப் பயன்படுத்தின.
இதற்கிடையில், 2021இல் ஜாம்பியாவில், உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேவாலயக் குழுக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஒரு வாக்காளர் பட்டியலைத் தயாரித்தன. இதனால் துல்லியமான தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த முறையை பின்பற்றுவது மிகவும் கடினமாகிவிட்டது என்று டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார். ஏனெனில் தேர்தலின் போது சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்றியுள்ளன சர்வாதிகார அரசாங்கங்கள்.
"தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் செயல்முறையின் கடைசி பகுதியை மட்டுமே கண்காணிக்கிறார்கள், ஆரம்ப கட்ட மோசடிகளை அவர்களால் தடுக்க முடியாது" என்கிறார் செலேரி.

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளால் தேர்தலில் மோசடி செய்ய முடியுமா?
டாக்டர் சீஸ்மேன் கூறுகையில், "எதிர்க்கட்சிகளும் ரகசியமான முறையில் மோசடிகளைச் செய்யலாம், அதிலிருந்து தப்பிக்கவும் அவர்களால் முடியும்.
"தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர், அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் ஆளும் அரசின் மீது சுமத்தலாம். அதில் சில உண்மையானதாகவும், அதிகம் பொய்யானதாகவும் இருக்கலாம். ஆளும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சியாக அவர் அதைப் பயன்படுத்தலாம்."
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள தேவையில்லை. உலக அளவில் ஜனநாயகத்தின் மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயகம் சரிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார்.
பலவீனமான பொருளாதாரம் மற்றும் சதி கோட்பாடுகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கம் இதற்கு காரணம் என்று அவர் கூறுகிறார்.
ஜனநாயகத்தின் எதிர்காலம் இந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை சார்ந்துள்ளது என்கிறார் டாக்டர் சீஸ்மேன்.
"தொடர்ந்து தேர்தல் மோசடிகள் நடக்கும் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் வாழ்ந்தால், விரைவில் அல்லது பின்னர், அதன் மோசமான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உண்மையான தேர்தல்களை நடத்துவதற்கான உரிமையை அமைப்பு நமக்கு வழங்கவில்லை என்றால், வாக்களிப்பது அல்லது அரசியல் பங்கேற்பின் பயன் என்ன?" என்று கேள்வியெழுப்புகிறார் சீஸ்மேன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












