கத்தார்: 8 இந்திய முன்னாள் கடற்படையினர் விடுதலைக்கு நடிகர் ஷாருக் கான் காரணமா?

பட மூலாதாரம், ANI
கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானே காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செவ்வாயன்று தனது ட்வீட்டில், கத்தாரில் இருந்து முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை விடுவித்ததில் ஷாருக் கானின் பங்கு பற்றி குறிப்பிட்டிருந்தார். இது குறித்து ஷாருக் கான் அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை அவரது மேலாளர் பூஜா தத்லானி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். செய்தி நிறுவனமான பிடிஐயும் இதை உறுதி செய்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், "எட்டு பேரில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் திரும்ப அனுமதிக்க கத்தார் எமிர் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் இந்தியக் கடற்படையினர் கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டிருந்தது இரு நாடுகளுக்கிடையே அரசுமுறை பதற்றத்தை அதிகரித்து வந்தது.
மோதி, சுப்பிரமணியன் சாமி ட்வீட்டும், ஷாருக் தரப்பு விளக்கமும்
செவ்வாய்கிழமை காலை, பிரதமர் நரேந்திர மோதி, "அடுத்த இரண்டு நாட்களில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன், இது இரு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும்." என்று ட்வீட் செய்திருந்தார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்வீட்டில், "மோதி சினிமா நட்சத்திரமான ஷாருக் கானை கத்தாருக்கு அழைத்துச் செல்ல வேண்டும், ஏனெனில் வெளியுறவு அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு முகமையும் கத்தார் ஷேக்கை சமாதானப்படுத்தத் தவறியதால், ஷாருக் கானை தலையிடுமாறு மோதி கேட்டுக் கொண்டார்" என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், X/SUBRAMANIAN SWAMY
இந்த விவகாரம் தொடர்பாக ஷாருக் கான் அலுவலகத்தில் இருந்து விளக்க அறிக்கை வந்துள்ளது.
ஷாருக் கானின் மேலாளர் பூஜா தத்லானி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில், 'ஷாருக் கானின் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், "கத்தாரில் இருந்து இந்திய கடற்படை அதிகாரிகளை விடுவிப்பதில் ஷாருக் கானின் பங்கு இருப்பதாக கூறப்படுவதை ஷாருக்கானின் அலுவலகம் மறுக்கிறது. அத்தகைய கூற்றுகள் ஆதாரமற்றவை என்று கூறுகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகள் மட்டுமே அந்த வெற்றிக்குக் காரணம். இதில் ஷாருக் கான் எந்த வகையிலும் ஈடுபடவில்லை.
மேலும், "அரசாங்கத்தின் இராஜ தந்திரம் மற்றும் ஆட்சி தொடர்பான அனைத்து விஷயங்களும் திறமையான தலைவர்களால் சிறப்பாகக் கையாளப்படுகின்றன. மற்ற இந்தியர்களைப் போலவே, ஷாருக் கானும் கடற்படை அதிகாரிகள் இப்போது அவரது வீட்டில் பாதுகாப்பாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். அவருக்கு நல்வாழ்த்துக்கள்." என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், X/POOJA DADLANI
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர்?
இந்த இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காரணத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளின் வாயிலாகவே அறிய முடிகிறது.
அவற்றின்படி, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு, கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.
இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'கடும் குற்றவாளிகளைப்' போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி அப்போது கூறினார்.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது. இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரை தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள்.
கடந்த 2023-ஆம் ஆண்டு, இவர்களது மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவால்
கடந்த ஆண்டு டிசம்பரில், துபாயில் நடைபெற்ற சிஓபி28 மாநாட்டின் போது, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹம்த் அல்தானியை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார். அப்போது, கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலம் குறித்தும், இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோதி கேட்டறிந்தார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இருதரப்பு உறவுகள் குறித்து இருவருக்கும் இடையே நல்லமுறையில் விவாதம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்திய அரசு, இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து அனைத்து சட்ட வாய்ப்புகளிலும் செயல்படுவதாகவும் கூறியிருந்தது.
இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் இந்த 8 இந்தியர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் விடுவிக்க மத்திய மோதி அரசுக்கு பெரிய அழுத்தம் எழுந்தது. காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்த இந்தியர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

பட மூலாதாரம், @HARDEEPSPURI
எரிவாயு ஒப்பந்தம்
இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்). இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது.
இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












