இந்திய சினிமாவை குறி வைக்கும் இலங்கை சுற்றுலாத் துறை - விஜய் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்

பட மூலாதாரம், X/ACTORVIJAYUNIVERSE
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை தனது பொருளாதாரத்தின் மிக முக்கியப் பங்காக, சுற்றுலாத் துறையை எதிர்பார்த்துள்ள போதிலும், சுற்றுலாத் துறை பெரும் பின்னடைவைச் சந்தித்த நிலையில், இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது.
இலங்கையில் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல், உலகம் முழுவதும் 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றின் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலப் பகுதியில் இலங்கையின் சுற்றுலாத்துறை பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சி கண்டிருந்தது.
இவ்வாறான காரணங்களினால் இலங்கை என்றுமே எதிர்கொள்ளாத பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து பிரச்னை, மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களினால் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை முற்றாக தடைப்பட்டது.
இந்த நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, சினிமா சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போது பெரும் பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சினிமா சுற்றுலாத்துறை

பட மூலாதாரம், ZIYA UL HAZAN
இலங்கையின் தற்போது சினிமா படப்பிடிப்புகளின் ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் பெரும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, இந்திய சினிமாவின் படப்படிப்புகளை இலங்கையில் மேற்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை இலகுப்படுத்தி, அதற்கான முன்நகர்வுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்திய சினிமா படப்பிடிப்புகள் கடந்த காலங்களில் இலங்கையில் மிக குறைவாகவே நடத்தப்பட்ட போதிலும், தற்போது அந்த படப்பிடிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியிருந்த தருணத்தில், 800 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் வெற்றிகரமாக இலங்கையில் இடம்பெற்றது.
இதையடுத்து, மலையாளத்தின் பிரபல நடிகரான மம்முட்டியின் திரைப்படம் ஒன்றுக்கான படப்பிடிப்புகளும் வெற்றிகரமாக இலங்கையில் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இலங்கையில் சினிமா சுற்றுலாத்துறை படிப்படியாக முன்னேற்ற பாதையை நோக்கி நகர்ந்தது.
இலங்கையில் படப்பிடிப்பு ஏற்பாட்டாளர்களின் பதில்

பட மூலாதாரம், NADARAJA KARTHIK
இலங்கை மீது இந்திய சினிமாவின் கவனம் திரும்பியமைக்கான காரணத்தை பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார் ஐங்கரன் மீடியா சொல்யூஷன் பிரைவேட் லிமிட்டடின் முகாமைத்துவ பணிப்பாளர் நடராஜா கார்த்திக்.
''கொரோனா காலத்தில் இந்திய சினிமா படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தன. ஆனால், இலங்கையில் கட்டுப்பாடுகள் குறைவாகவே காணப்பட்டன. இலங்கையின் உள்நாட்டு டி20 லீக்கான எல்.பி.எல் போட்டிகள் கூட நடத்தப்பட்டன. கோவிட் பரவல் முடிந்தவுடனேயே இந்திய படப்பிடிப்பொன்றை நாம் உடனடியாக நடத்தியிருந்தோம். அதன்பின், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது” என அவர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி காலத்தில் சுற்றுலாத்துறை முற்று முழுதாகவே பாதிக்கப்பட்டது. அந்த காலப் பகுதியிலேயே 800 படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கூறும் அவர், பொருளாதார நெருக்கடி என்று கூறி 800 திரைப்பட படப்பிடிப்பை ஒத்தி வைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
180 தொழில்நுட்பவியலாளர்கள், 65 முதல் 70 இந்திய கலைஞர்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார்கள். 70 நாட்கள் படப்பிடிப்பு. பொருளாதார நெருக்கடியில் எப்படி படப்பிடிப்புகளை நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.
எனினும், அந்த படப்பிடிப்புகளை எந்தவித பிரச்னைகளும் இன்றி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்துகொடுத்ததாக நடராஜா கார்த்திக் தெரிவித்தார்.
பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, இந்திய சினிமா இலங்கை பக்கம் திரும்பி பார்த்தது என குறிப்பிடும் அவர், பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வரும்போது, பல இந்திய திரைப்பட படப்பிடிப்புகளை இலங்கையில் நடத்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கூறுகிறார்.
"தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல தொழில்நுட்ப கலைஞர்கள் 800 படப்பிடிப்பில் இருந்தமையினால், இந்த செய்தி இந்திய சினிமாவிற்குள் பரவ ஆரம்பித்தது. அதையடுத்து, இலங்கை மீதான நம்பிக்கை இந்திய சினிமாவில் அதிகரித்தது" என, நடராஜா கார்த்திக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், HARIN FERNANDO
மேலும், அவர் கூறுகையில், ''சுற்றுலாத்துறை அமைச்சராக ஹரின் பெர்னான்டோ பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து, நாம் அவருடன் தனிப்பிட்ட ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம். அதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனங்களை நாங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று நேரடியாக கலந்துரையாடியிருந்தோம். இலங்கையில் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் என்பதை அவர்களுக்கு நாம் தெளிவூட்டினோம். சுற்றுலாத்துறை அமைச்சரும் இணைந்திருந்தமையினால், அவர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது” என்றார்.
அதேநேரம், இலங்கை மீது அனைவருக்கும் அந்த சந்தர்ப்பத்தில் கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் அதனாலேயே பலர் இலங்கையை நோக்கி வர ஆரம்பித்திருந்தார்கள் என்றும் நடராஜா கார்த்திக் தெரிவித்தார்.
இலங்கையில் யுத்தம், அரசியல் பிரச்னைகள், கோவிட், பொருளாதார நெருக்கடி என அடுத்தடுத்து பிரச்னைகள் காணப்பட்டமையினால், இலங்கை மீது இந்திய சினிமா பெரியளவில் கவனம் செலுத்தவில்லை என்று கூறும் அவர், அதனால், படப்பிடிப்பு தளங்கள் தொடர்பாக அவர்களுக்கு தெளிவிருக்கவில்லை என்றும் கூறினார்.
"நாம் இது தொடர்பாக தெளிவூட்டியதை அடுத்து இப்போது தான் இலங்கை மீது இந்திய சினிமாவின் கவனம் திரும்பியுள்ளது. இப்படியான படப்பிடிப்பு தளங்கள் இருப்பதையே இந்திய சினிமாத்துறை இப்போது தான் அவதானிக்கின்றது" என அவர் மேலும் கூறினார்.
இந்திய சினிமாவை குறி வைக்கும் இலங்கை சுற்றுலாத் துறை

பட மூலாதாரம், ZIYA UL HAZAN
இலங்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல திரைப்பட படப்பிடிப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றதுடன், அடுத்தகட்டமாக பாலிவுட் திரைத்துறையினரும் இலங்கையை நோக்கி வருகைத் தர ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் ஒரு மாநிலம் போலவே, மிகவும் அண்மித்த பகுதியில் இலங்கை காணப்படுகின்றமையினால், குறைந்த செலவில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதனால், இந்திய சினிமாத்துறை தற்போது இலங்கையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கைக்கு வருகைத் தரும் இந்திய கலைஞர்களுக்கு பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் சுற்றுலாத்துறை அமைச்சகம் பிரத்யேகமாக செய்துகொடுக்கின்றது.
குறிப்பாக மம்முட்டி, பிரபுதேவா உள்ளிட்ட கலைஞர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து படப்பிடிப்புகளை நடத்திய சந்தர்ப்பத்தில், அவர்களுக்கு முக்கிய பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தரும் பிரபலங்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றமை அவர்களுக்கு திருப்தி அளித்ததை அடுத்து, அவர்கள் தமது சமூக வலைதள பக்கங்களில் இலங்கை குறித்து அதிகளவில் பகிர ஆரம்பித்தனர்.
சமூக வலைதளங்களில் பதிவுகள் பதிவேற்றப்பட்டதை அடுத்து, இலங்கை மீதான இந்திய சினிமாவின் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளதாக நடராஜா கார்த்திக் தெரிவித்தார்.
எதிர்கால திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், ZIYA UL HAZAN
''சிங்கிள் வின்டோ சிஸ்டம்" என்ற ஒரு திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக சினிமா படப்பிடிப்பொன்றை இலங்கையில் நடத்துவதற்கான அனுமதியை இரண்டு வாரங்களுக்கு வழங்கிவிடுவார்கள்.
சினிமா படப்பிடிப்பு தொடர்பான 30 முதல் 40 அனுமதிகளை பெற வேண்டும் என்றால், அதனை சுற்றுலாத்துறை அமைச்சகமே பெற்றுக்கொடுக்கும். இந்த ஒத்துழைப்பு காணப்படுகின்றமையினால், ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட திரைத்துறை தொடர்பாக நாம் அவதானம் செலுத்தி வருகின்றோம்” என நடராஜா கார்த்திக் தெரிவித்தார்.
ஹாலிவுட் திரைத்துறையினரையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறும் அவர், எதிர்காலத்தில் பல திட்டங்களை வைத்து முன்னோக்கி நகர்வதாகவும், இதைத்தவிர ஏனைய எதிர்கால திட்டங்களை வெளிப்படையாக கூற முடியாத நிலைமை தற்போது காணப்படுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது முழுமையாகவே சினிமாவை நோக்கி நகர்ந்துள்ளதாக நடராஜா கார்த்திக் குறிப்பிடுகின்றார்.
''இதில் இரண்டு நன்மைகள் காணப்படுகின்றன. பொருளாதார ரீதியில் பார்த்தால், 100 சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். 10 நாட்கள் தங்குகின்றார்கள். அவர்களினால் ஒரு தொகை இலங்கைக்கு கிடைக்கின்றது என்றால், அதேபோன்று 100 படப்பிடிப்பு தொழில்நுட்ப கலைஞர்கள் வருகின்றார்கள், 10 நாட்கள் இருக்கின்றார்கள் என்றால், சாதாரண சுற்றுலா பயணிகளை விடவும், திரைத்துறை ஊடாக குறைந்தது 5 மடங்கு வருமானம் அதிகரித்ததாகவே காணப்படும்” என்றார்.

பட மூலாதாரம், ZIYA UL HAZAN
படப்பிடிப்பு தளங்களுக்குக் கட்டணம், இலங்கை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கட்டணம், இலங்கையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகள், வாகனங்கள், கட்டடங்கள், கலைஞர்கள் போன்றவற்றுக்குக் கட்டணம், ஹோட்டல் துறைக்கு கட்டணம் உள்ளிட்டவையும் வருவாய் ஆதாரமாக இருக்கிறது.
சாதாரண சுற்றுலா பயணி ஒருவர் உணவு, போக்குவரத்து, தங்குமிடம் மட்டுமே செலவிடும் நிலையில், சினிமாத்துறை உணவு, போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றையும் தாண்டி ஏனைய பல செலவினங்களை செய்கின்றது. அதனால், சினிமா சுற்றுலாத்துறை ஊடாக இலங்கைக்கு பெரும் வருமானம் கிடைக்கின்றது என, நடராஜா கார்த்திக் கூறினார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளமையினால், இலங்கைக்கு வருகைத் தரும் திட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும், அது தொடர்பில் உடனடியாக கூற முடியாது எனவும் நடராஜா கார்த்திக் குறிப்பிடுகின்றார்.
விஜய் படப்பிடிப்பு நடக்கும் என தகவல்
''எதிர்வரும் காலங்களில் விஜய், சல்மான் கான் போன்ற நடிகர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இலங்கையின் சினிமா சுற்றுலாத் துறைக்காக தனிப்பட்ட குழுவொன்று பணியாற்றி வருகின்றது. இலங்கைக்கு வருகை தரும் நடிகர்கள் தமது சமூக வலைதள பக்கங்களில் இலங்கை தொடர்பாக பதிவேற்றியவுடன், நாம் அவர்களிடமிருந்து நமக்கான பிரமோசன்களை எடுத்துக்கொள்கின்றோம். இதனால், பல மில்லியன் ரூபாய் வருமானத்தை விடவும், எதிர்காலத்தில் அது பெறுமதி மிக்கதாக இருக்கும்" என, ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












