புவி வெப்பநிலை முதன் முறையாக ஒரே ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வு - பேரழிவை தடுக்கும் வழி என்ன?

புவி வெப்பமாதல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மார்க் பாய்ன்டிங்
    • பதவி, காலநிலை செய்தியாளர்

முதல் முறையாக புவி வெப்பநிலை ஓர் ஆண்டு முழுவதும் 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் சென்றிருக்கிறது, என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்திருக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு, பாரீஸ் நகரில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்கள் நீண்டகால வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்ஷியசுக்குள் கட்டுப்படுத்த உறுதிபூண்டனர். இது மிக ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இப்போது, ஓர் ஆண்டு முழுவதும் அந்த அளவு மீறப்பட்டிருப்பது, ‘பாரிஸ் உடன்படிக்கையை’ மட்டும் மீறுவதல்ல, நீண்டகால அளவில் இது மீண்டும் நிகழ்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், கரிம உமிழ்வுகளைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டால் புவி வெப்பமாதலின் வேகம் குறைக்கப்படலாம் என்கிறனர் விஞ்ஞானிகள்.

“ஓர் ஆண்டு முழுவதுமான சராசரியில் 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேலே போவது சாதாரண விஷயமல்ல. நாம் தவறான பாதையில் செல்வதையே இது காட்டுகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்னவென்று நமக்குத் தெரியும்,” என்றார் பிரிட்டனின் ராயல் வானிலை ஆய்வுக் கழகத்தின் தலைமை நிர்வாகி லிஸ் பென்ட்லி.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

தொழில்மயமாக்கலில் மனிதர்கள் பெருமளவு புதைபடிம எரிபொருளை எரிக்கத் துவங்குவதற்கு முன்னிருந்த வெப்பநிலை அளவைவிட 1.5 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே உயரும் வகையில் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இது, காலநிலை மாற்றத்தைச் சீர்படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் குறியீடாக மாறியுள்ளது.

வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியசுக்கு பதில் 2 டிகிரி செல்ஷியஸாக இருந்தால், காலநிலை மாற்றத்தின் விளைவுகளான தீவிர வெப்ப அலைகள், கடல்மட்ட உயர்வு, பல்லுயிர் வள இழப்பு, ஆகியவை தீவிரமாக நிகழும் அபாயம் பன்மடங்கு உயரும் என்று 2019ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் முக்கியமான அறிக்கை ஒன்று தெரிவித்தது.

ஆனால், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றச் சேவையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் வெப்பநிலை 1.52 டிகிரி செல்ஷியஸை அடைந்தது.

இதைக் கீழே உள்ள வரைபடத்தில் காணலாம்

புவி வெப்பமயமாதல்

உச்சத்தைத் தொட்ட கடல்பரப்பின் வெப்பநிலை

ஆண்டு முழுதும் வெப்பநிலை 1.5 செல்ஷியஸுக்கு மேல் செல்வது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. கடந்த ஜனவரி மாதம் தொடர்ந்து வெப்பமாக இருந்த எட்டாவது மாதமாகும். சொல்லப்போனால், பெர்க்லி எர்த் எனும் அறிவியல் குழு, 2023ஆம் காலண்டர் ஆண்டின் வெப்பநிலை 1.5C-க்கு மேல் இருந்தது என்று தெரிவிக்கிறது. ஆனால், நாசா போன்ற அமைப்புகள் இந்த 12 மாதங்களின் வெப்பநிலை 1.5C-க்கு சற்று கீழே இருந்ததாகச் சொல்கின்றன.

இந்த வித்தியாசங்களுக்குக் காரணம், 1800களின் வெப்பநிலையைக் கணக்கிடுவதில் இருக்கிறது. அப்போது அளவிடும் கருவிகள் மிகச் சொற்பமாகவே இருந்தன.

ஆனால், அத்தனை தரவுகளும், நவீன பதிவுகள் துவங்கியதிலிருந்து பூமி தற்ப்போதுதான் மிக வெப்பமாக இருக்கிறது என்பதில் உடன்படுகின்றன. அதனினும் நீண்ட காலத்துக்குக்கூட இது இருக்கலாம்.

மேலும், கடல்பரப்பின் வெப்பநிலை, பதிவானதிலேயே மிக அதிகமாகனதாக இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின்படி, கடல் வெப்பநிலைகள் பொதுவாக அடுத்த ஒன்றிரண்டு மாதங்கள்வரை அதிகரிக்காது.

இது எப்படி நடந்தது?

புவி வெப்பமயமாதல்

சந்தேகமே இல்லாமல், இந்த நீண்டகால வெப்பமடைதல், புதைபடிம எரிபொருட்களை எரித்தல் போன்ற மனிதச் செயல்பாடுகளால்தான் நடக்கிறது. கடந்த ஆண்டின் உண்டான வெப்பமடைதலில் பெரும்பகுதியும் இதனால்தான் நடந்தது.

கடந்த சில மாதங்களில் எல்-நினோ போன்ற இயற்கையான காலநிலை வெப்பமடையும் நிகழ்வுகளும் காற்றின் வெப்பநிலையை அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் இவை சுமர் 0.2C மட்டுமே உயர்த்தும்.

கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பூமியின் சராசரி காற்று வெப்பநிலைகள் 1.5 செல்ஷியஸுக்கு மேலே செல்லத் துவங்கின. அப்போதுதான் எல்-நினோவும் துவங்கியிருந்தது. இந்த அதிகரிப்பு 2024ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் சிவப்புக்கோடு இதைக் காட்டுகிறது.

புவி வெப்பமயமாதல்

அடுத்த சில மாதங்களில் எல்-நினோ முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியின் வெப்பநிலையைத் தற்காலிகமாக நிலைப்படுத்தி, அதன்பின் அதைச் சற்றே குறைய வைத்து, 1.5 செல்ஷியஸ் அளவுக்கே மீண்டும் கொண்டு செல்லலாம்.

ஆனால், மனித செயல்பாடுகளால் நிகழும் இந்த வெப்பநிலை உயர்வு, அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டாலொழிய, இனிவரும் தசாப்தங்களில் உயர்ந்துகொண்டுதான் இருக்கும்.

“பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வை அதிரடியாகக் குறைப்பதுதான் பூமியின் வெப்பநிலை உயர்வதைத் தடுக்க ஒரே வழி,” என்கிறார் கோபர்னிகஸ் காலநிலை மாற்றச் சேவையின் துணை இயக்குநர் சமந்தா புர்ஜெஸ்.

இது தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும் நிலை வரலாம்

தற்போதைய அளவிலான கரிம உமிழ்வுகளின் மூலம் அடுத்த தசாப்தத்தில் பூமி வெப்பமடைதலை நீண்டகால சராசரியாக 1.5C-க்கு கட்டுப்படுத்தலாம். குறியீட்டளவில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். ஆனால் இது காலநிலை மாற்றத்தின் ஆபத்தான எல்லையைக் குறிக்காது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

“இது, காலநிலை மாற்றம் கட்டுப்பாடின்றிச் செல்லும் அளவைக் குறிக்காது,” என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் மைல்ஸ் அல்லென். இவர் 2018ஆம் ஆண்டின் ஐ.நா காலநிலை அறிக்கையின் தலைமை ஆராய்ச்சியாளராவார்.

ஆனால், கடந்த 12 மாதங்களில் நாம் சந்தித்த வெப்ப அலைகள், வறட்சிகள், காட்டுதீ, வெள்ளங்கள் போன்ற சம்பவங்கள் இன்னும் அதிக அளவில் நடக்கும்.

“ஒரு டிகிரியின் பத்தில் ஒரு பங்கு கூடுதல் வெப்பமும், அதற்கு முந்தைய அதே அளவு வெப்பத்தைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்,” என்கிறார் ஆல்லென். மேலும் அரை டிகிரி வெப்பம், அதாவது 1.5 டிகிரி செல்ஷியஸில் இருந்து 2 டிகிரி செல்ஷ்கயஸ்வரை – ஆபத்தான நிலைகளின் சாத்தியத்தை அதிகரிக்கிறது. இந்தக் காலநிலை புள்ளிகளைக் கடந்தால், சரிசெய்ய முடியாத விளைவுகள் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, கிரீன்லேண்ட் மற்றும் மேற்கு அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் புள்ளியை அடைந்தால், அது அடுத்த நூற்றாண்டில் பேரழிவான கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும், என்கிறார் பேராசிரியர் பென்ட்லி.

பசுமைத் தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பசுமைத் தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் போன்றவை உலகின் பல பகுதிகளிலும் பிரபலமடைந்து வருகின்றன. இது ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

பேரழிவைத் தடுக்கும் ஒரே வழி

ஆனால் மனிதர்களால் பூமி வெப்பமடையும் விதத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திச் சொல்கின்றனர்.

பசுமைத் தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் போன்றவை உலகின் பல பகுதிகளிலும் பிரபலமடந்து வருகின்றன. இது ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் சில பயன்களும் உண்டாகியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த தசாப்தத்தில் பூமியின் வெப்பம் மிக மோசமான நிலையில் 4 டிகிரி செல்ஷியஸை எட்டும் எனக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கருதப்படுகிறது. இதற்குக் காலநிலை கொள்கைகள், மற்றும் தீர்மானங்கள் ஒரு காரணம்.

அத்தனைக்கும் மேலாக, நம்பிக்கை தரும் விஷயம், நிகர கரிம உமிழ்வுகளை முற்றிலுமாக நிறுத்தினால், புவி வெப்பமடைவது கிட்டத்தட்ட நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த தசாப்தத்தில் கரிம உமிழ்வுகளைப் பாதியாகக் குறைப்பது மிகவும் முக்கியமானது.

“இதன் பொருள், ஒரு சமூகமாக, ஒரு உலகமாக, நமது தேர்வுகளின் மூலம், பூமி எவ்வளவு வெப்பமடைதலை எதிர்கொள்ளும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்,” என்கிறார் பெர்க்லி எர்த் அறிவியல் குழுவின் காலநிலை விஞ்ஞானி ஸெக் ஹௌஸ்ஃபாதர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)