கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?

கனடா
படக்குறிப்பு, கரண்

வாய்ப்புகளை தேடி அலையும் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்ப நாடாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் தற்போது அந்த கனடா கனவு தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வளம் மிகுந்த பஞ்சாபின் கிராமப்புறங்களில் பயணித்தால் , அங்கு வெளிநாட்டு பயணங்களுக்கான விளம்பரங்களை அதிகம் பார்க்கலாம்.

அதன் வயல்வெளிகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று உறுதியளிக்கும் நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். மாடி வீட்டின் சுவர்கள் தோறும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் முகவர்களின் விளம்பரங்கள் ஆக்கிரமித்திருக்கும்.

பதிண்டா நகரின் தெருக்களில் பல முகவர்களும், அவர்களை தேடி வரும் இளைஞர்களின் வெளிநாட்டு கனவினை உடனடியாக சாத்தியப்படுத்துவதாக உறுதியளிப்பார்கள்.

இந்தியாவின் வடமேற்கு மாநிலமான இங்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிநாட்டுக் குடியேற்றத்தின் அலை வீசி வருகிறது. அதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கிய வீரர்கள் கனடாவுக்குச் செல்லும் பயணம் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகு கிராமப்புற பஞ்சாபியர்களின் இங்கிலாந்து பயணம் வரை அடங்கும்.

கனடா
படக்குறிப்பு, கனடாவில் குடியேறிய பலரும் தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

கனடா மீதான ஏமாற்றம் ஏன்?

ஆனால், தற்போது கனடா செல்வதற்கான கனவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடாவில் குடியேறிய பலரும் தங்களது தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

அப்படியானவர்களில் ஒருவர்தான், 28 வயதான பால்கர். கனடாவில் ஒரு வருடம் தங்கியிருந்த அவர் 2023 இன் தொடக்கத்தில் இந்தியா திரும்பினார். கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவில் பரவத் தொடங்கியதை அடுத்து அவர் தனது சிறிய கிராமமான பித்தோவை விட்டு வெளியேறினார். அப்போது அவரின் இறுதி இலக்கே கனடாவின் குடியுரிமையை பெறுவது மட்டுமே. எனவே, இவரின் கல்விக்காக இவரது குடும்பம் தங்களது நிலத்தை அடமானம் வைத்துள்ளனர்.

ஆனால், கனடா சென்ற சில மாதங்களில் அவரது கனவு மங்கிவிட்டது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பால்கர், “அங்கு எல்லாமே விலை அதிகம். கல்லூரி முடித்த பிறகு, பிழைப்பிற்காக வாரத்திற்கு 50 மணிநேரம் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக பல மாணவர்கள் தங்களது படிப்பை கைவிடுகின்றனர்” என்றார்.

தற்போது பால்கர் தனது பெரிய முற்றம் கொண்ட தனது பாரம்பரிய பஞ்சாபி வீட்டின் ஒரு சிறிய அறையில் எம்ப்ராய்டரி தொழிலை செய்து வருகிறார். மேலும் தனது விவசாயக் குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவி வருகிறார்.

இது போன்ற கிராமப்புறங்களில் மிகக் குறைவான வேலை வாய்ப்புகளே உள்ளன. ஆனாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இளைஞர்கள் உயரத்திற்கு செல்கின்றனர். பால்கர் தனது வணிகத்தின் பெரும்பகுதியை இன்ஸ்டாகிராம் மூலம் செய்து வருகிறார்.

இதுகுறித்து பேசுகையில், “ வாழ்க்கை வேடிக்கையாக இருக்கிறது. வீட்டிலேயே தங்கி நல்ல சம்பாத்தியம் பெறும்போது, நான் ஏன் அங்கு சென்று கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் பால்கர்.

கனடா
படக்குறிப்பு, "கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களிடம் வலுவாக உள்ளது."

கனடாவிற்கு குடிபெயரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

கனடாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய சுமார் அரை டஜன் நபர்களிடம் பிபிசி பேசியது. அனைவருமே ஒரே மாதிரியான உணர்வுகளையே பகிர்ந்து கொண்டனர்.

அப்படி கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்துள்ள இந்தியர்கள் பலரும் யூடியூபில் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஒரே மாதிரியான தொனியை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதை காணலாம்.

இதுகுறித்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபர் ஒருவர், குடியேற்ற முகவர்களால் (immigration agent) சொல்லப்பட்ட கனடா வாழ்க்கை குறித்த தகவலும், டொராண்டோ மற்றும் வான்கூவரில் குடியேறியவர்களின் உண்மை நிலையும் அப்படியே மாறுபட்டதாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ராஜ் கரண் ப்ரார் பதிண்டாவை சேர்ந்தவர். இவர் வெளிநாடு செல்வதற்காக உதவும் முகவர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் நிரந்தர குடியிருப்பு மற்றும் மாணவர் விசாவைப் பெற உதவி வருகிறார்.

அவரிடம் பேசுகையில், கனடா மீதான மோகம் கொஞ்சம் குறைந்துவிட்டது. குறிப்பாக வீட்டிற்கு திரும்பி வருவதற்கான வாய்ப்புள்ள வசதி படைத்த குடியேறிகள் மத்தியில் அந்த ஆசை குறைந்து விட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும் கூட கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களிடம் வலுவாக உள்ளது. ஆனால், அங்கு சென்று வேலை மற்றும் வீட்டு வசதி கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள் வெளியிடும் வீடியோக்கள் இவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் குடியேற்ற முகவர்.

ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் இருந்து கனடாவில் படிப்பதற்கான அனுமதிக்கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 2023இன் இரண்டாம் பாதியில் 40% குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஒரு காரணமாக, சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய ஏஜெண்டுகள் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னால் இந்தியாவிலிருந்து கனடாவில் குடியேறிய தலைமுறையினரின் கனடா செல்லும் கனவு மங்கி வருவதற்கு, ஆழமான கலாசாரம் சார்ந்த பல காரணங்களும் பங்கு வகிக்கின்றன.

அதில் கனடாவின் சிக்கலான பிரச்னையான பணி அனுபவத் தேவைகள் மீதான தடை, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் சலசலப்பு போன்ற பிரச்னைகள் அடங்கும்.

கனடா
படக்குறிப்பு, "பல முதிய இந்திய கனடியர்களும் கனடாவை விட்டு வெளியேற தயாராகி வருகின்றனர்"

கனடாவை விட்டு இந்தியாவுக்கு திரும்பியவரின் கதை

கரண் அவுலாக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் எட்மண்டனில் வாழ்ந்து, பொருளாதார ரீதியாக தனது வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொண்டவர். இவர் கனடாவில் மேலாளராக இருந்த வேலையை விட்டுவிட்டு, தற்போது பஞ்சாபில் உள்ள தனது பிறந்த ஊரான கான் கி தாப் கிராமத்தில் வசதியான கிராமப்புற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், கனடாவின் LGBT சமூகத்தை உள்ளடக்கிய கல்விக் கொள்கை மற்றும் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவதற்கான முடிவு ஆகியவற்றால் தான் வருத்தத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை , பல முதிய இந்திய கனடியர்களும் கனடாவை விட்டு வெளியேற தயாராகி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மேற்கத்திய வாழ்க்கை முறையுடன் பொருந்தாத தன்மை, மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இந்தியாவில் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை கூறப்படுகின்றன.

இதுகுறித்து கரண் அவுலாக் கூறுகையில், “ நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நாடு திரும்ப விரும்பும் மக்களுக்கு உதவுவதற்காக 'பேக் டு மதர்லேண்ட்' என்ற இணைய ஆலோசனை மையத்தை தொடங்கினேன். குறைந்தது தினமும் இரண்டு மூன்று அழைப்புகளாவது வரும். அவர்களில் பெரும்பாலானோர் கனடாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பஞ்சாபில் வேலை வாய்ப்புகள் குறித்தும், எப்படி நாட்டிற்கு திரும்பி வருவது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள்” என்று தெரிவித்தார்.

குடியேற்ற வழக்கறிஞர் குழுவான கனடிய குடியுரிமை நிறுவனத்தைச் சேர்ந்த டேனியல் பெர்ன்ஹார்ட், குடியேற்றத்தை மதிக்கும் ஒரு நாட்டிற்கு இந்த போக்கு "கவலை அளிக்கிறது" என்று கூறுகிறார்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேகமாக அதிகரிக்கும் வயதானவர்களின் மக்கள் தொகையை தடுப்பதற்காக தாராளவாத குடியேற்றக் கொள்கையை அமல்படுத்தினார்.

கனடிய புள்ளிவிவரங்களின்படி, குடியேற்றம் 2021 இல் கனடாவின் தொழிலாளர் வளர்ச்சியில் 90 சதவீதமும், மக்கள்தொகை வளர்ச்சியில் 75 சதவீதமும் இடம்பிடித்துள்ளது.

கனடா
படக்குறிப்பு, 2022 இல் கனடிய குடியேற்றத்தின் முதன்மை ஆதாரமாகவும் இந்தியா இருந்தது.

கனடா சென்றவர்களில் இந்தியர்களே அதிகமானோர்

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு 14.7 பில்லியன் டாலர்கள் பங்களிக்கின்றனர். அவர்களில் இந்தியர்களே பெரும்பாலானோர். கனடாவில் குடியேறிய ஐந்தில் ஒருவர் இந்தியர் ஆவார்.

2022 இல் கனடா குடியேற்றத்தின் முதன்மை ஆதாரமாகவும் இந்தியா இருந்தது.

கனடாவில் தற்போது குடியேற்றத்தின் அதிகரிப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் விகிதம் குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், கனடா ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் புதிய குடியேறிகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் பெர்ன்ஹார்ட் கூறுகையில், “மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புபவர்களின்(Reverse migration) விகிதம் 2019இல் உச்சத்தை எட்டியது. இது இடம்பெயர்வோர் கனடா மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது” என்கிறார்.

அத்தகைய புலம்பெயர்ந்தோர் அல்லது வெளியேறியவர்கள் குறித்து நாடுகளுக்கான தனித்தனி புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் ராய்ட்டஸின் அதிகாரபூர்வ தகவல்களின்படி, 2021 மற்றும் 2022 இல் 80,000 முதல் 90,000 குடியேறியவர்கள் கனடாவை விட்டு வெளியேறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு அல்லது வேறு இடத்திற்குச் சென்றிருக்கலாம்.

2023 இன் இரண்டாம் பாதியில் சுமார் 42,000 பேர் கனடாவை விட்டு வெளியேறினர்.

கனடா குடியுரிமைக்கான நிறுவனத்தின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி, மிகக் குறைவான நிரந்தர குடியிருப்பாளர்களுக்கே கனடாவின் குடியுரிமை வழங்கப்படுகிறது. அப்படி தகுதி பெற்றவர்களில் 75 சதவீதம் பேர் 2001 இல் கனடிய குடிமக்கள் ஆனார்கள். அந்த எண்ணிக்கை இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 45 சதவீதமாக மாறியது.

கனடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடாவின் மக்கள்தொகை 2023 இல் பன்னிரெண்டு மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கனடாவில் வீட்டு வசதி, சுகாதாரச் சிக்கல்கள்

அதிகமான மக்களுக்கு இடமளிக்க நினைக்கும் கனடாவின் தீவிர குடியேற்ற இலக்குகளில் இருந்து இந்த பிரச்னை தொடங்குகிறது.

கனடா தேசிய வங்கியின் பொருளாதார நிபுணர்களின் சமீபத்திய அறிக்கை, கனடாவின் வீட்டுவசதி நெருக்கடியில் உள்ளதாகவும், அதன் சுகாதார கட்டமைப்பு அழுத்தத்தில் இருக்கும்போது, கூடுதல் மக்கள்தொகை வளர்ச்சி மேலும் சுமையை அதிகரிப்பதாகவும் எச்சரித்தது.

புதிதாக வரும் மக்களால், கனடாவின் மக்கள்தொகை 2023 இல் 12 லட்சம் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு மக்கள் குடியேறும் எண்ணிக்கையை 5 லட்சம் என்ற அளவில் கட்டுப்படுத்தினால் மட்டுமே, வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த முடியும் என்று நிபுணர்களின் அறிக்கை கூறப்படுகிறது.

கொள்கை வடிவமைப்பாளர்கள்(Policy Makers) இந்த அறிக்கையை மறைமுகமாக ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது.

சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத அரசு சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிக்கு வரம்புகளை விதித்தது. இது கல்வி விசாக்களில் தற்காலிகமாக 35 சதவீதத்தை குறைக்கும்.

கனடாவில் இருந்து வெளியேறுவதற்கான அலை வீசிக்கொண்டிருக்கும் சூழலில், இந்த குறிப்பிடத்தகுந்த கொள்கை மாற்றம், மேலும் கனடா மீதான விருப்பத்தை குறைக்கும் சிலர் நம்புகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)