மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு பெண்களின் வாக்கு யாருக்கு? ஜெயலலிதாவின் வாக்கு வங்கி எந்தக் கட்சிக்குப் போகும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக தேர்தல் களத்தில் சத்தமில்லாமல் ஒரு முக்கியமான மாற்றம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களை விட கிட்டத்தட்ட 11 லட்சம் அதிகமாக உள்ளது. இந்த வலிமையான வாக்காளர்களின் ஆதரவைப் பெற அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலையில், பெண்கள் யாருக்காக, எதற்காக வாக்களிக்கப் போகிறார்கள்?
தமிழ்நாட்டில் 2024 ஜனவரி நிலவரபடி ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10.89 லட்சம் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 205 தொகுதிகளிலும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.14 கோடி பெண்கள் மற்றும் 3.03 கோடி ஆண்கள் உள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் 5.91 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதில் 2.92 கோடி ஆண்களாகவும், 2.98 கோடி பெண்களாகவும் இருந்தனர்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 950 வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் போட்டியிடுகின்றனர். இதில் 874 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 76 பெண் வேட்பாளர்கள் ஆவர். அதிகபட்சமாக கரூரில் ஏழு பெண் வேட்பாளர்கள், தென் சென்னையில் ஐந்து பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தென் சென்னையில் பாஜக சார்பாக தமிழிசை சவுந்தரராஜன், திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன், கரூரில் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி, விருதுநகரில் பாஜக சார்பாக நடிகை ராதிகா உள்ளிட்ட பல பிரபலமான முகங்கள் களமிறங்குகின்றன. தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 50% வேட்பாளர்களை பெண்களாக நிறுத்தியுள்ளது.

பெண்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள்?
பிரபலமான முகம் என்பதை விட , அந்த வேட்பாளர் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு அறிமுகமானவரா என்பது தான் வாக்களிப்பதற்கு முக்கியம் என்கிறார், சென்னையை சேர்ந்த பட்டய கணக்காளரான எஸ் வைஷ்ணவி (33). “நான் வேட்பாளர் எப்படி பட்டவர் என்று தான் முதலில் பார்ப்பேன். அதன் பிறகு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பெண்கள் முன்னேற்றத்துக்கு என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பார்ப்பேன். பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது பல குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கலாம். ஆனால் இது பெண்களின் முன்னேற்றத்துக்கு போதுமானது இல்லை. பெண்களுக்கான கல்வி மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செலுத்தப்படும் வரி அதிகமாகிறது, ஆனால் வாழ்வாதார செலவினங்கள் குறைவதில்லை” என்கிறார் அவர்.

சென்னையில், வீட்டு வேலை செய்யும் குமாரி, “ எனக்கு பள்ளி செல்லும் பிள்ளைகள் இரண்டு பேர் உள்ளனர். முன்பெல்லாம் பள்ளி திறப்பதற்கு முன்பே ஸ்கூல் பேக், சீருடை, புத்தகங்கள் எல்லாம் கொடுத்துவிடுவர். லேப்டாப், சைக்கிள்களும் கூட தொடர்ந்து வழங்கப்பட்டன. ஆனால் தற்போது எல்லாம் தாமதமாக தான் கிடைக்கிறது. மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கிறது. காசை வாங்கிவிட்டு குறை சொல்லக் கூடாது, ஆனாலும் எல்லாமே தாமதமா தான் கிடைக்” என்றார்.
பெண்களை பாதிக்கக் கூடியது பெரும்பாலும் பொருளாதார வாழ்வாதார பிரச்னைகளே என்கிறார் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன். “பெண்களின் வாக்குகள் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. டாஸ்மாக் குறித்த அரசின் கொள்கையை பெண்கள் மிக முக்கியமானதாக பார்க்கிறார்கள். வேலையின்மையும் பெண்களின் வாக்குகளை மறைமுகமாக தீர்மானிக்கும்” என்கிறார்.

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY FACEBOOK
ஜெயலலிதாவின் 'பெண்கள் வாக்கு வங்கி' என்ன ஆனது?
அதிமுகவின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவுக்கு பெண்களின் வாக்கு வங்கி இருந்து வந்தது. தேர்தல் குறித்த ஆய்வு நடத்தும் அமைப்புகளின் தரவுகளும் இதை உறுதி செய்தன.
தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதற்கு பெண்கள் வாக்குகள் முக்கிய காரணியாக கூறப்பட்டது.
2016ம் ஆண்டு Lokniti CSDS தரவுகள் படி, அதிமுகவுக்கு வாக்களித்தவர்களில் 46% பெண்களாகவும், 36% ஆண்களாகவும் இருந்துள்ளனர். அதே நேரம் திமுகவுக்கு வாக்களித்தவர்களில் 43% ஆண்கள், 35% பெண்கள் ஆகும். இந்த வாக்குகளே தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சியில் அமர்வதற்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டது.
ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் அரசியலில் அதிரடியாக செயல்பட்டவர் ஜெயலலிதா என்பதை பிற கட்சியை சேர்ந்த பெண் தலைவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். அவர் கட்சியை நடத்திய விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், பல ஆண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வரும் பெண்களின் கண்களில் அவர் சக்திவாய்ந்தவராகவே தெரிந்தார் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பட மூலாதாரம், STALIN FACEBOOK
ஜெயலலிதா இருந்த போது அவருக்கு இருந்த பெண்கள் வாக்குகளை ஒருமுகப்படுத்த தவறியது எடப்பாடி பழனிசாமியின் தோல்வி, என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
“ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, பெண்கள் தாங்கள் தொடர்புப்படுத்திக் கொள்ளும் வகையிலான பெண் தலைவர் ஒருவரை காணவில்லை. ஆனால் அவருக்கு இருந்த வாக்குகளைன் அதிமுக தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள முயலவில்லை. பெண்களின் வாக்கு வங்கி நிலையானதாக இருக்காது. அரசின் டாஸ்மாக் கொள்கை பொருத்து அவர்கள் வாக்குகளை மாறுவதை காணலாம் . தற்போது இருக்கும் நிலைமையில், பெண்கள் வாக்குகள் திமுக பக்கம் இருக்கிறது என்று கூறலாம். இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்தியிருப்பது திமுகவை பெண்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல வாய்ப்புண்டு” என்று அவர் கூறினார்.

'பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பவருக்கே வாக்கு'
பெண்களுக்கான பாதுகாப்பை யார் உறுதி செய்கிறார்களோ அவர்களுக்கே தன் வாக்கு என்கிறார் தஞ்சாவூரை சேர்ந்த ஆர் கலைச்செல்வி. “சமீபத்தில் புதுச்சேரியில் சிறுமிக்கு நடந்த கொடுமையை பார்த்தால் நமது வீட்டுப் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற பயம் வருகிறது. பெண்கள் பாதுகாப்புக்கு யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எங்கள் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டியில் ஒரு கிறித்துவ மாணவி தற்கொலை செய்துக் கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது, பல தலைவர்களும் வந்து பார்த்தனர், அரசியல் ரீதியாக தங்களுக்கு சதாகமாக அந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். ஆனால் இதே போன்ற கவனம் மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்கவில்லை.” என்கிறார்.
தூத்துக்குடி மடத்தூரில் உள்ள இல்லத்தரசி ராதிகா, “எனக்கு விஜய் பிடிக்கும், அவருக்கு தான் என் வாக்கு. அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், சீமானுக்கு வாக்களிப்பேன். அவர் கூறும் கருத்துகள் சரியாக இருப்பது போல் தோன்றுகிறது. பணமதிப்பிழப்பை அமல்படுத்தியவர்களுக்கும் தற்போது மாநிலத்தில் விலைவாசி உயர்வுக்கு காரணமானவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமா என்று யோசிக்கிறேன்” என்று கூறினார்.

பட மூலாதாரம், SEEMAN FACEBOOK
'இலவசங்களை நிறுத்த வேண்டும்'
இலவசங்கள் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும் என்கிறார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தையல் பயிற்றுநராக இருக்கும் ராஜலட்சுமி. “எங்கு சென்றாலும் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும். விலைவாசி உயர்கிறது என்று கூறினால், அதற்கேற்ற சம்பளத்தை ஐடி நிறுவனங்கள் கொடுக்கிறார்களே? விலைவாசி உயர்கிறது என்று யாராவது சினிமா பார்க்காமல் இருக்கிறார்களா? இலவசங்கள் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும். எனது தையல் பயிற்சி அருகில் உள்ள கிராமத்தில் உள்ள எளிய குடும்பத்து பெண்கள் இலவச பேருந்து வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை. வீடு தேடி மாதம் ரூ.1000 கொடுப்பதற்கு பதில், பெண்களை அழைத்து ஏதாவது தொழில் பயிற்சி கொடுக்கலாம்” என்கிறார்.
சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருக்கும் கே கல்பனா, “ தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு வழிகளை கட்சிகளை பயன்படுத்து வருகின்றன. பெண்களின் வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதலான கடன் வழங்கப்படும். ஜெயலலிதாவை வசீகரமான தலைவராக பெண்கள் பார்த்தனர், அதனால் அவருக்கு வாக்குகள் கிடைத்தது உண்மையே. இப்போது அப்படி ஒரு தலைவர் இல்லை. எனவே, ஒரு தலைவருக்காக வாக்குகள் என்ற நிலை மாறி, கட்சிகள் பெண்களுக்காக என்ன கூறுகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகிறது” என்கிறார்.

பட மூலாதாரம், K Kalpana
ஒரு கட்சியின் செயல்பாட்டின் மீது திருப்தி இல்லாத போதும், பாரம்பரியமாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் பெண்களும் உள்ளனர். “யார் வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. எனவே எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு முறையும் எந்த சின்னத்தில் வாக்களித்து வருகிறோமோ அதே சின்னம் தான் இந்த முறையும், எந்த வேட்பாளர் என்று கூட பார்க்க மாட்டோம்” என்கிறார் மன்னார்குடியில் வசிக்கும்,சித்ரா கனகராஜ்.
எனினும் இந்த நிலை மாறி வருகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். “பெண்கள் தாமாக முடிவு எடுத்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர். படிப்பை முடித்து வரும் முதல் முறை வாக்களிக்கும் இளம் பெண்கள், கண்டிப்பாக தாமாக தான் முடிவு எடுக்கிறார்கள். மேலும் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீடு பெண்களின் அரசியல் விழிப்புணர்வை, அரசு இயந்திரம் குறித்த புரிதலை அதிகரிக்க வழி வகுத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பெண்களின் குரல்கள் மேலும் வலுவாகும். தங்கள் சார்ந்த பிரச்னைகள் மட்டுமல்லாமல் பொதுவான பிரச்னைகளிலும் பெண்கள் குரல் எழுப்புவார்கள்.” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












