இந்த 2 தொகுதிகள்தான் திமுகவுக்கு அதிக சவாலாக இருக்கப் போகின்றனவா? - அப்படி என்ன சிக்கல்?

ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/KATHIRANANTH

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில், யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு தொகுதிகள் திமுக கூட்டணிக்கு சவால் விடுக்கின்றன. வேலூர் மற்றும் திருநெல்வேலி. இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று திமுக மூத்த நிர்வாகிகள் கூறினாலும், அங்கு திமுக - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுவதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு காரணம் அந்த தொகுதிகளில் போட்டியிடும் பலமில்லாத அதிமுக வேட்பாளர்கள் அல்லது ஆதரவு இல்லாத திமுக கூட்டணியின் வேட்பாளர்கள் ஆவர்.

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வரும் நிலையில், ஆளுங்கட்சி தனது எல்லாவிதமான பலத்தையும் அந்த தொகுதிகளில் செலவழிக்கலாம். ஆனால் இரு தொகுதிகளிலும் பாஜக களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் – வேலூரில் ஏ சி சண்முகமும், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும் அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள். அண்ணாமலை அல்லது டிடிவி தினகரன் போன்ற கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும், அவர்கள் தேர்தல் களத்துக்கு புதிதானவர்கள் அல்ல. வேலூர், திருநெல்வேலி இரு தொகுதிகளிலும் திமுக - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் அதிமுக நிலை என்ன?

இஸ்லாமியர் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற திமுகவின் கதிர் ஆனந்த் இந்த முறையும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தொகுதி மக்களின் ஆதரவும் கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் கிடைப்பது சிரமமாக இருப்பதாக களப்பணியில் இருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் 8,141 என்ற சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2019ம் ஆண்டு கதிர் ஆனந்திடம் தோற்று இரண்டாம் இடம் பிடித்த ஏ சி சண்முகம் இந்த முறையும் அவருக்கு எதிராக களத்தில் போட்டியிடுகிறார். புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ சி சண்முகம் 2019ம் ஆண்டு அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெற்று, இரட்டை இலை சின்னத்தில் வேலூரில் போட்டியிட்டார். இந்த முறை பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் அவர், தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

திமுகவுக்கு சவாலான தொகுதிகள்

பட மூலாதாரம், Facebook

கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஏ சி சண்முகம் மருத்துவ முகாம்கள், இளைஞர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்வுகள் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வேலூரில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே வி குப்பம், குடியாத்தம் என ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் நான்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வேலூரில் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் ஆகும். இந்த தொகுதியில் இருக்கும் சுமார் 3 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்களையே திமுக பெருவாரியாக நம்பியுள்ளது. கடந்த முறை இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியிலேயே கதிர் ஆனந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. இந்தப் பகுதிகளில் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதில்லை.

வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம், “இரண்டு முறை மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். நான் தொகுதி மக்களுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் நிறைய செய்வேன் என்று மக்களுக்கு தெரியும்” என்றார்.

திமுகவுக்கு சவாலான தொகுதிகள்

பட மூலாதாரம், Facebook

2019ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக 11.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்கள் முன்பு தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கதிர் ஆனந்த் விளக்கம் கூறியிருந்தார். பின்னர் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்துக்கு இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் கண்காணிப்பின் கீழ் அவர் இருக்கிறார்.

வேலூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ் பசுபதி மருத்துவர் ஆவார். அவர் தனது அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிடுகிறார். கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இல்லாத பசுபதி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளர் ஏ சி சண்முகம், வேலூரில் கணிசமாக இருக்கும் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அவர் 1984ம் அதிமுக சார்பாக வேலூர் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டு தேர்தல்களில் அவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிகளில் பாஜகவுக்கு கணிசமான ஆதரவு கிடைக்காது என்றாலும், திமுக - பாஜக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வேலூர் இயக்கம் என்ற தேர்தல் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வரும் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், திமுகவுக்கு எதிரான மனநிலை இல்லை என்ற போதிலும் திமுக வேட்பாளருக்கு எதிரான தீவிர மனநிலை தொகுதியில் நிலவுகிறது என்கிறார். அவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “ திமுகவுக்கு கூட்டணி பலம் இருக்கிறது. ஆனால் திமுக வேட்பாளருக்கு மக்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் ஆதரவு இல்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான அலை கிடையாது இது. அவரது அணுகுமுறையினால் மக்கள் அவருடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பாஜக வேட்பாளருக்கு இரண்டு முறை தோற்று போனவர் என்ற அனுதாபம் தொகுதி மக்களிடம் உள்ளது. அவர் அடிக்கடி தொகுதியில் காணக்கூடியவராக இருக்கிறார். எனினும் அவருக்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாகவே இருக்கும்.

இஸ்லாமிய வாக்குகள் பொதுவாக திமுகவுக்கு தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை அதிமுக தன்னை பாஜகவிடமிருந்து வெளிப்படையாக விலக்கிக் கொண்டுள்ளதால், பாஜகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்ற கருத்தை கொண்டவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கலாம்” என்கிறார்.

திருநெல்வேலி யார் பக்கம்?

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி அரசு ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள் என கலவையான மக்களை கொண்டது. ஒரு புறம் ஆலைகள், தொழிற்சாலைகள் மறுபுறம் விவசாய நிலங்களும் உள்ளன.

இந்த தேர்தலில் திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பாக ஜான்சி ராணி போட்டியிடுகின்றனர்.

கடந்த முறை 50% வாக்குகளைப் பெற்று 1.8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்ற தொகுதி, இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் பாஜக சார்பாக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவர். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் 46% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுகவில் இருந்த அவர், 2001-2006 காலக்கட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2017ம் ஆண்டு அவர் பாஜகவில் இணைந்தார். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.

திமுகவுக்கு சவாலான தொகுதிகள்

பட மூலாதாரம், Facebook

அதிமுகவில் சிம்லா முத்துசோழன் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தார். தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு வாரங்கள் முன்பு திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த அவர், ஆர் கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். பின்னர், சிம்லா முத்துசோழனை மாற்றி நெல்லையில் திசையன்விளை பேரூராட்சித் தலைவராக இருக்கும் ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மகளிரணி செயலாளராகவும் மாவட்ட அதிமுக இணைச் செயலாளராகவும் இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நெல்லைக்கு பிரசாரத்துக்கு வரும் சில மணிநேரங்கள் முன்பு தான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். 62 வயதாகும் அவர் வழக்கறிஞராக உள்ளார்.

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பா சமுத்திரம், பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத்தொகுதிகள் உள்ளன. இதில் பாளையம் கோட்டை, ராதாபுரத்தில் திமுகவும், அம்பா சமுத்திரம், ஆலங்குளத்தில் அதிமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், நெல்லையில் பாஜகவும் வெற்றிப் பெற்றுள்ளன.

திமுகவுக்கு சவாலான தொகுதிகள்

பட மூலாதாரம், Facebook

திருநெல்வேலி பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எங்கள் வேட்பாளர் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். தேர்தல் அறிவிப்பதற்கு முன்பிருந்தே களத்தில் பணியாற்றி வருகிறார். நாடார்கள் அதிகமாக இருக்கும் தொகுதியில் இவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சில வாக்குகள் சிதறலாம். எனினும் காங்கிரஸ் அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது” என்றார்.

கிறித்துவ நாடார் சமூகத்தினர் கணிசமாக இருக்கும் திருநெல்வேலி தொகுதியில், அதே சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸுக்கு சில இடங்களில் களம் சாதகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாஜகவின் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ராபர்ட் ப்ரூஸ் நிறுத்தப்பட்டால், கிறித்துவ நாடார் வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே காங்கிரஸ் அவரை நிறுத்தியுள்ளது.

திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கள நிலவரம் குறித்து கூறுகையில், “திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் புதுமுகம் என்பதால் சற்று சவாலாக தான் இருக்கும். பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட அப்பகுதியில் அறிமுகமான காங்கிரஸ் தலைவர்களை பிரசாரம் செய்ய அறிவுறுத்தியுள்ளோம். அவர் 1989ம் ஆண்டு மற்றும் 1991ம் ஆண்டு தென்காட்சி தொகுதியிலிருந்தும் 2006ம் ஆண்டு கடையநல்லூர் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தனக்கு வாய்ப்பு தரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறார். பாஜகவை எதிர்த்து ஒற்றுமையுடன் இருப்பதே முக்கியம் என்று கூறி அவரையும் பிரசாரத்துக்கு அழைத்து வரவுள்ளோம்” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)