இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை - தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?

இந்தியாவில் வெப்ப அலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோடை காலம் நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென் பகுதி, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சராசரியை ஒட்டியே இருக்கும் என்றாலும் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும் வட கிழக்கின் சில பகுதிகளிலும் வழக்கத்தைவிட மழை குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த வெப்ப அலையின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

இந்தியாவில் வெப்ப அலை

பட மூலாதாரம், Getty Images

வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்ன?

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான வானிலை போக்கான 'எல் நினோ' இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து பலவீனமடைய ஆரம்பித்துவிட்டாலும் மிதமான அளவில் எல் நினோ இன்னமும் அந்தப் பகுதியில் நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பகுதியில் கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்றும் எல் நினோ போக்கு தொடர்ந்து பலவீனமடைந்து, பிறகு இல்லாமல் போகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த ஆண்டின் பருவமழை காலகட்டத்தில் லா நினா போக்கு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"எப்போதுமே எல் நினோ முடியப்போகும் வருடத்தில் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். 2015ல் எல் நினோ முடிவுக்கு வந்தபோது, 2016ல் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, எல் நினோ மறைய ஆரம்பிக்கும் வருடங்களில் தீபகற்ப இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்" என்கிறார் தனியார் வானிலை ஆர்வலரான ஸ்ரீகாந்த்.

அதேபோல இந்த கோடை காலத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை குறைவாக இருக்கும் என்றும், இது வெப்பத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்கிறார் அவர். ஆனால், மே மாதத்திற்குப் பிறகு மழை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

எல் நினோ - லா நினோ போக்குகளை சுமார் 20 ஆண்டுகளாகத்தான் நெருக்கமாக கவனிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வானிலை தன்னார்வலரான ராஜேஷ், இதுபோன்ற ஆண்டுகளில் மழையின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.

அதேவேளை, ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மட்டுமல்ல, ஜூலை, ஆகஸ்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்கிறார் ராஜேஷ்.

இந்தியாவில் வெப்ப அலை

பட மூலாதாரம், Getty Images

வெப்ப நிலை அதிகரிப்பு என்பது எவ்வளவு?

வெப்பநிலை அதிகரிப்பு அல்லது வெப்ப அலை என்பது, ஒரு மாநிலத்தில் இரு மாவட்டங்களிலாவது வெப்ப நிலை 45 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும் அல்லது வெப்ப நிலை 40 டிகிரிக்கு மேல் பதிவாகி, இரு நகரங்களில் வழக்கத்தைவிட 4.5 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தால் அது வெப்ப அலை என அழைக்கப்படுகிறது என்கிறார் ஸ்ரீகாந்த்.

எல் நினோ இருக்கிறதோ இல்லையோ, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

"எல் நினோ காலகட்டத்தில் இருந்த வெப்பம், தற்போது லா நினோ காலகட்டத்திலும் நீடிக்கிறது. எல் நினோவின் தாக்கத்தை காலநிலை மாற்றம் அதிகரிக்கிறது. எல் நினோ போக்கு இல்லாத வருடத்திலேயே வெப்பமானது ஒரு டிகிரி முதல் இரண்டு டிகிரி வரை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுதான் வரலாற்றிலேயே வெப்பமான வருடம், வெப்பமான மாதம் என சொல்ல ஆரம்பித்துவிட்டோம்" என்கிறார் அவர்.

வெப்பநிலை அதிகமாக நிலவும் காலகட்டங்களில் வயதானவர்கள், குழந்தைகள், பிற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

அதீத வெப்பநிலை நிலவுவதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மின்வழித் தடங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, இந்தியா முழுவதும் விவசாயத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)