கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறும் வழி என்ன? நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவு பேசுப்பொருளாக மாறியுள்ளது.
''இந்திய மக்கள் குறித்து சிந்திக்காது காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை இலங்கைக்கு தரைவார்த்தமை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது" என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கடந்த 31ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பில் அனைத்து இந்தியர்களும் கோபமடைந்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கைக்கு மிகவும் தொலைவிலுள்ள தீவாகவும் கச்சத்தீவு காணப்படுகின்றது. தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் நகருக்கு மிகவும் அண்மித்த இடத்தில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவிற்கு 24 கிலோமீட்டரே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கச்சத்தீவு 63 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தல் சமயத்தில் இதுகுறித்து சர்ச்சை எழுப்பப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இந்தியா மீண்டும் கையகப்படுத்த முடியுமா?
கச்சத்தீவை இலங்கைக்கு கையளித்த ஒப்பந்தம்
கச்சத்தீவின் உரிமை தொடர்பான பிரச்னை வரலாற்று ரீதியாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கும், இந்திய பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்திக்கும் இடையில் 1974ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் தேதி ஒப்பந்தத்தின் ஊடாக கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது.
கச்சத்தீவு இந்தியாவின் பகுதி அல்லவெனவும், அது இலங்கையின் ஒரு பகுதி எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு சொந்தமான நிலையில், கச்சத்தீவு உரிமை மற்றும் கச்சத்தீவு கடல் எல்லை தொடர்பான பிரச்னை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பித்திலிருந்தே இருந்துள்ளது.
கச்சத்தீவின் உரிமை குறித்து 1921ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கச்சத்தீவு பிரித்தானிய ஆட்சி காலத்தில் ராமண்டி கட்டுப்பாட்டில் இருந்தது என இந்த கலந்துரையாடலின் போது இந்திய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு எந்தவொரு காலத்திலும் இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்கவில்லை என இலங்கை பிரதிநிதிகள் கூறியுள்ளனர். 1800ஆம் ஆண்டு காலப் பகுதியில் வரையப்பட்ட வரைப்படமொன்றின் ஊடாக கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1860ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது சிவில் நிர்வாகியாக செயற்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் வெளியிட்ட சிலோன் என்ற புத்தகத்தில் கச்சத்தீவு வரைப்படம் இடம்பெற்றிருந்ததாக தொல்லியல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
1974ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு மற்றும் கச்சத்தீவு கடல் எல்லை தொடர்பான கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்து வந்தன.
அத்துடன், 1976ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், கச்சத்தீவை அண்மித்து இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதனால், கச்சத்தீவை தமிழக மக்கள் உரித்தாக்கிக் கொள்வது முக்கியமானது என்கின்றார்கள்.

இந்திய பொதுத் தேர்தல் 2024
இந்தியாவின் பொதுத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஆரம்பிக்கப்படுவதுடன், ஜுன் மாதம் முதலாம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றது.
இந்த தேர்தல் நடைபெறுகின்ற பின்னணியிலேயே கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றியை உறுதி செய்துக்கொள்வதற்கு கச்சத்தீவு பிரச்னை முக்கியமானது என சர்வதேச அரசியல் தொடர்பான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழக வாக்காளர்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சி குறித்து எதிர்வலைகளை ஏற்படுத்துகின்றமை மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றமை ஆகிய நோக்கில் நரேந்திர மோதி கச்சத்தீவு குறித்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உறவுகள் தொடர்பான ஆராய்ச்சியாளரும், ஆலோசகருமான கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா, பிபிசிக்கு தெரிவிக்கின்றார்.

கச்சத்தீவை இந்தியா மீண்டும் கையகப்படுத்த முடியுமா?
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு உரித்தானாலும், குறித்த தீவின் உரிமை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படவில்லை என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா கூறுகின்றார்.
இதன்படி, கச்சத்தீவை இந்தியாவிற்கு உரித்தாக்கிக் கொள்வதற்கான சில வழிமுறைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
''முதலாவது, இந்திய அரசாங்கம் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் தீவின் உரிமையை மீண்டும் பிரச்னையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.
அப்படியில்லையென்றால், ராஜதந்திர கலந்துரையாடல்களின் ஊடாக கச்சத்தீவை மீண்டும் இந்தியா உரித்தாக்கிக் கொள்ள முடியும். அது சிக்கலான விடயம். எவ்வாறாயினும், தேர்தலை இலக்காக கொண்டு நரேந்திர மோதி சில பிரச்னைகளை உருவாக்கினாலும், அவை அதே விதத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்க முடியாது” என அவர் கூறுகின்றார்.
''இந்த இடத்தில் மற்றுமொரு பிரச்னை காணப்படுகின்றது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்பதனால், அது தொடர்பில் சீனா அவதானம் செலுத்தியுள்ளது. இந்தியாவிற்கு அது அச்சுறுத்தல் என்பதனால், இந்தியா அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது" என்கிறார் அவர்.

கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தாவதன் நன்மைகள்
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதன் ஊடாக சில நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறுகின்றார் கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா.
“போர் காலத்தில் இந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கப்படாதமையினால், அங்கு மீன் வளம் மிகுதியாக காணப்படுவது ஒரு முக்கிய நன்மையாகும். அத்துடன், தற்போது நடத்தப்பட்டுள்ள ஆராய்ச்சியின் ஊடாக எரிவாயு அந்த பகுதியில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
12 கடல் மைல் தொலைவான கடல் எல்லை நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு நன்மையாகும். கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருந்தால், அந்தப் பகுதி மன்னாரில் இருந்து கணக்கிடப்படும்” என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா தெரிவித்தார்.
அப்படியானால், இலங்கைக்கு சொந்தமான ஆராய்ச்சி பெருங்கடலின் பரப்பளவு குறையும்.

கச்சத்தீவை இந்தியா உரித்தாக்கிக்கொள்வது இலகுவானதா?
கச்சத்தீவை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வது மிகவும் இலகுவான விடயம் அல்லவென இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
2014ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய சட்டமா அதிபராக இருந்த முகுல் ரோதாகியினால் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பப்பட்ட கேள்வியை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த 31ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
''கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதை இன்று எப்படி மீண்டும் எடுப்பது? கச்சத்தீவை மீண்டும் எடுக்க வேண்டும் என்றால், அது போர் ஒன்றின் ஊடாகவே எடுக்க வேண்டும்", என்பதே அந்தச் செய்தி.
இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் துணைத்தூதர் கூறுவது என்ன?
கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா என்பது குறித்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முன்னாள் இந்திய துணைத்தூதர் நடராஜன் பிபிசி தமிழிடம் பேசினார்.
“இனிமேல் கச்சத்தீவை திரும்ப பெற்றுவிடலாம் என யாராவது சொன்னால் அது சாத்தியமில்லை என்றுதான் அர்த்தம். கச்சத்தீவு வழக்கை பொறுத்தவரை உச்ச நீதிமன்றமே, ‘அது முடிந்த கதை’ என தீர்ப்பை வழங்கி இருக்கிறது. “ என்றார் நடராஜன்.
“கச்சத்தீவை அப்போதைய பிரதமர், இந்திரா காந்தி கொடுத்தார். மாநில அரசு கச்சத்தீவு விவகாரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு. இது நல்ல முடிவாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு” ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
“கிட்டத்தட்ட ஏழாயிரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது புதிதாக இலங்கை அரசு என்ன செய்கிறது என்றால், மீனவர்கள் மீது எப்.ஐஆர். பதிவு செய்கிறது. வழக்கு பதிந்தால், இந்திய மீனவர்கள் வரமாட்டார்கள் என்பதற்காக இலங்கை அரசு இதைச் செய்கிறது. மீனவர்கள் சிறையிலடைக்கப்பட்டால் , வெளியே எடுப்பது சிரமம். அதனால் தான் இந்த ஆண்டு கச்சத் தீவிலிருக்கும் புனித அந்தோணியார் திருவிழாவிற்கு இந்தியா மீனவர்கள் யாரும் போகவில்லை. மேலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டம் சரியானதே” என்றார்.
கூடுதல் தகவல்கள்: சுதாகர், பிபிசி தமிழுக்காக
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












