இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலில் வெடித்தது போராட்டம் - பிரதமர் நெதன்யாகுவை பதவி விலகச் சொல்வது ஏன்?
இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் - என்ன காரணம்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் கூடி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். போர் தொடங்கியதில் இருந்து இதுவரை நடந்ததிலேயே அதிகம் பேர் திரண்ட போராட்டம் இது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவில் ஜெருசலேம் வீதிகளில் அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு முழக்கம் எழுப்பினர். பிரதான சாலைகளும் மறிக்கப்பட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் இழுத்துச் சென்றனர்.

காஸா போர் தொடங்கியதில் இருந்து பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் வசம் சிக்கியுள்ள சுமார் 130 பணயக் கைதிகள் இதுவரை மீட்கப்படவில்லை. இதில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

போர் தொடங்கி 6 மாதங்களாகிவிட்ட நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது.

பணயக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்கூட்டியே இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

மறுபுறம், நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களின் செயலை எதிர்க்கின்றனர். இஸ்ரேலில் உண்மையான எதிரி ஹமாஸ் தான், பிரதமர் நெதன்யாகு அல்ல என்பதை போராட்டக்காரர்கள் மறந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

”பேச்சுவார்த்தை குழு மற்றும் அமைச்சரவையுடன் சேர்ந்து, பணயக்கைதிகள் அனைவரையும் திரும்ப அழைத்து வர நான் 24 மணிநேரமும் உழைத்து வருகிறேன். பணயக்கைதிகளை மீட்க நான் எதையும் செய்வதில்லை என சொல்வது தவறு. அப்படிச் சொல்பவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)