காணொளி: திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக தலைவர்கள் மற்றும் சசிகலா கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, திமுக-வில் இணையும் ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் எதிர்வினை என்ன
காணொளி: திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக தலைவர்கள் மற்றும் சசிகலா கூறியது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வத்தின் இந்த முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் எதிர்வினை என்ன? இதர அரசியல் தலைவர்கள் கூறியது என்ன?

பிப்ரவரி 27-ம் தேதியான இன்று காலையில் இருந்தே முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் திமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. சிறிது நேரத்துலேயே ஜெயலலிதா படம் இருந்த காரில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்தார் ஓ பன்னீர்செல்வம்.

பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் தன்னை அதிகாரபூர்வமாக திமுகவில் இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம், தாய்க்கழகம் திரும்பியுள்ளேன் என தெரிவித்தார்.

ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை திமுக கூட்டணி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஓபிஎஸ் இணைந்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், ஓ பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது என சசிகலா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அதிமுகவின் மூத்த முன்னோடியான ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது. தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் இணைவது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.

மேலும், “ இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இது குறித்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்காத நிலையில், அதிமுகவின் ஆர் பி உதயகுமார், திமுகவில் ஓபிஎஸ் என்ன பதவி பெற்றாலும் அது அவர் அதிமுகவுக்கு செய்த துரோகத்துக்கான பரிசாகத்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வத்தைப் பொருத்தவரை, அவரது அரசியல் வாழ்வில் பல ஆச்சரியங்களை அளித்தவர். 2001-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெ. ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக்கப்பட்டார்.

இத்தனைக்கும் அந்தத் தருணத்தில் உப்பிலியாபுரம் சரோஜா, விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் உள்ளிட்ட வேறு சிலரின் பெயர்கள்தான் முதலமைச்சர் பதவிக்கு அடிபட்டன.

ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட்டதும் அவரது தலைமையிலான அமைச்சரவையிலேயே மீண்டும் பங்கேற்றார் ஓ. பன்னீர்செல்வம்.

இதற்குப் பிறகு, 2014 ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, முதலமைச்சர் வாய்ப்பு மீண்டும் அவரது கதவைத் தட்டியது. முன்பு நடந்ததைப் போலவே இந்த முறையும் நடந்தது.

இதற்குப் பிறகு, 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், முந்தைய முறைகளைப்போல இந்த முறை எதுவும் சுமுகமாக நடக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு