காணொளி: துராந்த் கோடு இன்னும் பதற்றத்தின் சின்னமாகவே இருப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, துராந்த் கோடு இன்னும் பதற்றத்தின் சின்னமாகவே இருப்பது ஏன்?
காணொளி: துராந்த் கோடு இன்னும் பதற்றத்தின் சின்னமாகவே இருப்பது ஏன்?

1893ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் தூதர் ஹென்றி மோர்டிமர் துராந்த், ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் ஒரு எல்லைக் கோடு வரையப்பட்டது.

அது “துராந்த் கோடு” (Durand Line) என அழைக்கப்பட்டது. சுமார் 2,600 கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த எல்லை , வடக்கில் இந்துக் குஷ் மலைப்பகுதியிலிருந்து தெற்கில் பலுசிஸ்தான் வரை நீள்கிறது.

பிரிட்டிஷ் அரசு பல்வேறு வியூக ரீதியான மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த எல்லைக் கோட்டை உருவாக்கியது. ஆனால் நூற்றாண்டுக்கு பின்னரும் துராந்த் கோடு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பதற்றப்புள்ளியாகவே உள்ளது.

உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய எல்லைகளில் ஒன்றாகக் கருதப்படும் துராந்த் கோடு, தெற்கில் ரஷ்யாவின் விரிவாக்கத்திலிருந்து பிரிட்டிஷ் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு பக்க ஒப்பந்தமாக இருந்த இந்த உடன்படிக்கை, ஆப்கான் உரிமையிலிருந்த பஷ்தூன்(Pashtun) மற்றும் பலோச்(Baloch) பகுதிகளை பிரித்தது. இதனால் பல குடும்பங்களும் பழங்குடியினங்களும் பிரிந்தன, நூற்றாண்டுகளாக இருந்த வர்த்தக வழித்தடங்களும் துண்டிக்கப்பட்டன.

1947ஆம் ஆண்டு, புதிதாக உருவான பாகிஸ்தான் துராந்த் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. அதை ஒரு நிலையான சர்வதேச எல்லையாகக் கருதி, வேலிகளை அமைத்தும், சோதனைச் சாவடிகள் நிறுவியும், எல்லை சாவடிகள் மூலம் அதிகாரப்பூர்வ எல்லையை அமைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் இந்த எல்லையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் கையெழுத்திடப்பட்டது என்று அது கூறுகிறது. தொடர்ச்சியான ஆப்கான் அரசுகள் இதை காலனித்துவ திணிப்பாகவும், “சமூகங்களைப் பிரிக்கும் வெறுப்பின் கோடு” என்றும், தமது இறையாண்மைக்கு எதிரானதாகவும் விவரித்துள்ளன.

இந்த சர்ச்சை, எல்லைத் தாண்டிய கிளர்ச்சிகள், கடத்தல்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான ராஜ்ய உறவுகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. டோர்காம் (Torkham) மற்றும் சாமன் (chaman) போன்ற முக்கிய எல்லைப் பகுதிகள் இரு நாடுகளின் மக்களுக்கும் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தாலும், துராந்த் கோடு இன்னும் பிரிவு, காலனித்துவ பாரம்பரியம் மற்றும் தீர்க்கப்படாத பதற்றத்தின் சின்னமாகவே உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு