பாபர் முதல் ஔரங்கசீப் வரை முகலாய மன்னர்களின் ரமலான் நோன்பும், இஃப்தார் விருந்தும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வக்கார் முஸ்தபா
- பதவி, செய்தியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
இந்தியாவை 300 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசர்களின் காலத்தில் ரமலான் பிறை தென்படல், 11 துப்பாக்கிக் குண்டுகள் முழக்கத்துடன் அறிவிக்கப்படும்.
முகலாயப் பேரரசை நிறுவிய முகமது பாபரின் 'துஸ்க்-இ-பாப்ரி' என்ற நாட்குறிப்பில், பாபர் நோன்பைக் கடைப்பிடித்தார் எனக் கூறப்பட்டுளளது. அதோடு அவர் தொழுகைகளைத் தவிர்க்கவில்லை என்றும் ஆனால் மது மற்றும் மாஜூனை (யுனானி கலவை) அவர் விரும்பினார் எனவும் எழுதப்பட்டுள்ளது.
"நான் மாலையில் ஃபைஸாதியை அடைந்தேன். அங்கு காஜியின் வீட்டில் நோன்பைத் திறந்தேன். மதுபானக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். ஆனால் காஜி என்னை எச்சரித்தார். காஜியின் மீதான மரியாதையின் காரணமாக நான் மதுபானக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் விருப்பத்தை விட்டுவிட்டேன்,” என்று ஓரிடத்தில் பாபர் எழுதுகிறார்.
நஃப்லி (விருப்பம்) நோன்புகளை பாபர் கடைபிடித்ததையும் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.
'துஸ்க்-இ-பாப்ரி'யின் விளக்கப் பதிப்பு 1589இல் ஃபரூக் பேக் என்பவரால் தயாரிக்கப்பட்டது. இதில் ஒரு படத்தில் 1519இல் ரமலான் முடிவடைந்ததைக் கொண்டாடுவதற்காக படகு சவாரி செய்த பிறகு பேரரசர் பாபர் குடிபோதையில் முகாமுக்கு குதிரையில் தாமதமாகத் திரும்புகிறார்.
வேலையாட்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள். ஒருவர் விளக்கைப் பிடித்தபடி, மற்றொருவர் மது பாட்டிலை பிடித்தபடி அந்தப் படத்தில் காணப்படுகின்றனர்.
பாபர் எப்போது மதுவை கைவிட்டார்?
பாபர் இந்தியா வந்த பிறகு மது அருந்துவதை விட்டுவிட்டார். ஆனால் மாஜூனின் பழக்கத்தைக் கைவிடவில்லை.
”இந்தியாவில் முகலாயப் பேரரசர்களில் பாபர் முதன்முதலில், 'தீன்' என்று முடிவடையும் பெயரை வைத்துக்கொண்டார். அதாவது ஜஹீருதீன் முகமது பாபர் பாட்ஷா காஜி,” என்று டாக்டர். முபாரக் அலி தனது 'முகல் தர்பார்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அவரது வாரிசுகளும் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்தனர். ஹுமாயூனின் பெயர் நசிருதீன் முகமது ஹுமாயுன் பாட்ஷா காஜி. அதே போல் அக்பரின் பெயர் ஜலாலுதீன் முகமது அக்பர் பாட்ஷா காஜி, ஜஹாங்கீரின் பெயர் நூருதீன் முகமது பாட்ஷா காஜி, ஷாஜஹானின் பெயர் ஷஹாபுதீன் ஷாஜஹான் பாட்ஷா காஜி, ஒளரங்கசீப்பின் பெயர் மோகியுதீன் முகமது ஒளரங்கசீப் ஆலம்கீர்.
ஹுமாயூனும் நோன்பு கைபிடித்திருக்கக்கூடும். இருப்பினும் குல்பதன் பேகத்தின் 'ஹுமாயூன் நாமா' புத்தகத்தில் அவர் அடிக்கடி அபின் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அரசு கருவூல ஊழியர்கள் அவருக்கு முன் எப்போதுமே பணத்தைக் கொண்டு வராத அளவுக்கு தாராள குணம் கொண்டவர் ஹுமாயூன். எந்த கெட்ட வார்த்தைகளும் வாயில் வராத அளவிற்கு உன்னதமானவர்," என்று வரலாற்று ஆசிரியர் அப்துல் காதர் பதாயுனி எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நமாஸ், ரோஸா, ஹஜ் மற்றும் ஜகாத் ஆகியவற்றில் இருந்து அக்பர் எப்போது விலகினார்?
பாபரின் நாட்குறிப்பு 'துஸ்க்-இ-பாப்ரி'யின் படி, பாபர் நோன்பு நோற்பதோடு நமாஸும் படிப்பார்.
ஆரம்பத்தில் அக்பர் சமூக கட்டுப்பாடுகளின்படி நமாஸ் செய்தார். தானே ஆஸான் கொடுத்தார். இமாமத் (நமாஸ் கற்பித்தல்) செய்தார் மற்றும் மசூதியைப் பெருக்கிச் சுத்தம் செய்தார். நமாஸ், ரோஸா, ஹஜ் மற்றும் ஜகாத் (அத்தியாவசியமான தொண்டு) ஆகியவற்றில் இருந்து அவர் விலகிச் செல்லத் தொடங்கிய ஒரு காலம் வந்தது,” என்று சர்வத் சௌலத் 'இஸ்லாமிய சமூகத்தின் சுருக்கமான வரலாறு' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
நமாஸ், ரோஸா மற்றும் ஹஜ் ஆகியவற்றை அக்பர் தடை செய்ததாக பதாயுனி கூறுகிறார். ஆனால் ஸ்ரீ ராம் ஷர்மா தனது 'தி ரிலீஜியஸ் பாலிஸி ஆஃப் முகல்ஸ்’ என்ற புத்தகத்தில், ’அக்பர் இதையெல்லாம் விட்டிருக்கலாம். ஆனால் அவற்றுக்குத் தடை ஏதும் விதிக்கவில்லை’ என்று எழுதியுள்ளார்.
"குறைந்தபட்சம் 1582ஆம் ஆண்டு வரை நோன்பு கடைப்பிடிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. குல்பதன் பேகம் ஹஜ்ஜில் இருந்து திரும்பிய போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது,” என்று அவர் எழுதுகிறார்.
ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் தனது 'தி முகல் எம்பயர்' புத்தகத்தில், "அக்பர் தனது வேண்டுதலை நிறைவேற்ற குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் கல்லறைக்கு கால்நடையாகச் சென்றார். ரமலான் மாதத்தில் அவர் அங்குள்ள கல்லறையை தவாஃப் (சுற்றி வருதல்) செய்தார். ஏழைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கினார். பத்து நாட்களுக்குப் பிறகு ஆக்ரா சென்றடைந்தார்,” என்று எழுதியுள்ளார்.
அக்பரின் வழக்கம் என்னவென்றால், அவர் எப்போதும் தன்னுடன் ரொக்கப் பணத்தை வைத்திருப்பார். யாராவது கேட்டால் பணம் கொடுப்பார் என்று டாக்டர் முபாரக் அலி குறிப்பிடுகிறார்.
முகாம்களில் நோன்பு திறப்பு

பட மூலாதாரம், Getty Images
அவரது ஆட்சியின் 13வது ஆண்டில், ஜஹாங்கீர், ரமலான் நோன்பைக் கடைபிடித்தார். உள்ளூர் உல்மாக்கள் (மத அறிஞர்கள்) மற்றும் சையதுகளுடன் நோன்பு திறப்பு செய்தார் என்பதை ’துஸ்க் இ ஜஹாங்கிரி’ வெளிப்படுத்துகிறது.
"ஜஹாங்கீர் உல்மாக்கள் மூலம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். ஒருமுறை அவர் தனிப்பட்ட முறையில் 55,000 ரூபாய், ஒரு லட்சத்து தொண்ணூறு பிகா நிலம், 14 கிராமங்கள் மற்றும் 11,000 கோவேறு கழுதைகளை உணவு கொண்டு வந்தவர்களுக்கு விநியோகித்தார்," என்று டாக்டர் முபாரக் குறிப்பிடுகிறார்.
'அமீர்'களும் (பேரரசரின் பிரதிநிதிகள்) இஃப்தார் ஏற்பாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பேரரசர் ஜஹாங்கீர் காலத்தில் முகலாய சுல்தானகத்தின் தளபதியாக முபாரஸ் கான் இருந்தார். அவரது படையெடுப்பு ஒன்று ரமலான் காலத்தில் நடந்தது.
முகலாயர்களின் பாரம்பரியம் என்னவென்றால், ரமலானின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடைய முகாமில் விருந்து அளிக்கப்பட்டது. ரமலானின் கடைசி நாளில் (30 ரமலான் 1020 ஹிஜ்ரி அல்லது 5 டிசம்பர் 1611 கி.பி) விருந்து முபாரஸ் கானின் முகாமில் நடைபெற இருந்தது. பெரிய கொண்டாட்டம் நடந்தது. 'அமீர்கள்' நோன்பு திறப்பு செய்தார்கள். பிறையைப் பார்த்தார்கள். பீரங்கிகள் சுடப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பூகம்பத்துடன் ஒப்பிட்டுள்ளார் 'பஹாரிஸ்தான்-இ-கெய்பி' யின் ஆசிரியர் மிர்ஸா நாதுன்.
முகமது சாலே கம்போஹ் லஹோரியின் 'அமல்-இ-சலா' புத்தகத்தின்படி, 1621இல் மதுவை கைவிட்ட பிறகு இளவரசர் குர்ரம், வங்காளத்திலும் பிகாரிலும் ஆட்சி செய்தபோது ரம்லானின் எல்லா நோன்புகளையும் கடைபிடித்தார். மிர்ஸா நாதுன் அவரின் முடிவைக் கண்டு வியந்துபோனார்.
"வெப்பம் அதிகமாக இருந்ததால் மனிதர்களும் விலங்குகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். மிகச் சிலரே நோன்பைக் கடைப்பிடிக்க முடிந்தது. ஆனால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இளவரசர் நோன்பை கடைப்பிடித்தார்.”
”மிர்ஸா நாதுன் மீது மட்டுமே இளவரசர் குர்ரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஜஹாங்கீருக்கு எதிரான கிளர்ச்சியில் வங்காளத்தைச் சேர்ந்த ஏராளமான சூஃபிகளும் உல்மாக்களும் அவருக்கு ஆதரவளித்தனர்,” என்று மோனிஸ் டி ஃபாரூக்கி, 'தி பிரின்ஸஸ் ஆஃப் தி முகல் எம்பயர்' என்ற நூலில் எழுதுகிறார்.
குர்ரம் ஷாஜகானாக மாறியதும், இஸ்லாமியர்களின் எல்லா பண்டிகைகளும் அரச முறைமையுடன் கொண்டாடுவது துவங்கியது.
"நன்கொடை பெறும் நிறுவனங்களுக்கு விநியோகிக்க ஆண்டுக்கு 70,000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. ரமலானில் 30,000 ரூபாய் விநியோகிக்கப்பட்டது. மீதமுள்ள மாதங்களில் முஹர்ரம், ரஜப், ஷபான் மற்றும் ரபியுல் அவல் பண்டிகைகள் போது தலா 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது,” என்று லாஹோரி குறிப்பிடுகிறார்.
ஷாஜகானின் ஆட்சியின்போது முகலாய சுல்தானகம் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் உணவு வண்ணமயமாகவும், சுவையாகவும் நம் முன்னோர்களின் உணவில் இருந்து மாறுபட்டும் இருந்ததாக சல்மா யூசுப் ஹுசைனின் ஆய்வுகள் காட்டுகிறது.
"சாப்பிடுவதற்கு முன் சக்கரவர்த்தி உணவின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு ஒதுக்குவது வழக்கம். பேரரசர் பிரார்த்தனையுடன் உணவைத் தொடங்கி முடிப்பார்."
முகலாயர்கள் நவ்ரோஸை (புத்தாண்டு) ஈத் பண்டிகையைவிட ஆடம்பரத்துடனும் நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடினர்.

அக்பர் காலத்தில் இருந்து ஷாஜகான் வரை, மிகவும் ஆடம்பரமாகவும், குதூகலமாகவும் கொண்டாடப்பட்ட விழா நவ்ரோஸ் என்று டாக்டர் முபாரக் அலி எழுதுகிறார். ஔரங்கசீப் இரண்டு ஈத்களையும் நவ்ரோஸைவிட சிறப்பாகக் கொண்டாடத் தொடங்கினார்.
"ஆலம்கிர் (ஒளரங்கசீப்) தனது முடிசூட்டலுக்குப் பிறகு நவ்ரூஸ் பண்டிகையை ரத்து செய்தார். அதற்குப் பதிலாக ஈத்-உல்-பித்ர், ஈத்-உல்-அஃஸா மற்றும் ரமலான் நாட்களில் இஃப்தார் கொண்டாட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்."
அவரது முடிசூட்டு விழா ஈத்-உல்-பித்ர் அதாவது ரமலானின் போது நடந்ததால் அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமானது. ஔரங்கசீப் தனது முடிசூட்டு விழா கொண்டாட்டத்தை ஈத் வரை நீட்டித்து இரண்டையும் இணைத்தார்.
ஔரங்கசீப் நமாஸ் படிப்பதற்கும் நோன்பு வைப்பதற்கும் கடுமையான விதிமுறைகளை விதித்தார். அவர் எப்போதும் பா-ஜமாத் (கூட்டு) நமாஸ் செய்வார். ரமலானின் போது தாராவீஹ் மீது சிறப்பு கவனம் செலுத்தினார் மற்றும் ரமலானின் கடைசி அஷ்ராவில் (கடைசி ஒன்பது-பத்து நாட்கள்) எத்காஃப் (பகலில் இருந்து இரவு வரை மசூதியில் தங்குவது) செய்தார்.
தாராவீஹ் என்பது ஒரு இரவுத் தொழுகை. அதில் முழு குர்ஆனும் ஓதப்படுகிறது. அதே போன்று வாரத்தில் திங்கள், ஜுமேராத் (வியாழன்) மற்றும் ஜூம்மா (வெள்ளி) ஆகிய மூன்று நாட்களும் நோன்பு நோற்பார். ஒரு நாளில் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்குவார்.
”ஔரங்கசீப் ஜூன் மாதம் டெல்லியை அடைந்தார். வெப்பம் மிகவும் அதிகமாக இருந்தது. இருப்பினும் அந்தக் கோடையில் ரமலான் மாதம் முழுவதும் அவர் நோன்பு நோற்றார். நோன்பு இருக்கும்போதிலும் அரசு வேலைகள் அனைத்தையும் செய்தார்.
மாலை வேளையில் நோன்பு திறப்பைச் செய்வார். இஃப்தாரின் போது அவர் சோள மாவு ரொட்டியைச் சாப்பிடுவார். பின்னர் தாராவீஹ் ஓதி, இரவின் பெரும்பகுதியை தொழுகையில் செலவிடுவார்,” என்று சுற்றுலாப் பயணி பெர்னியர் எழுதியுள்ளார்.
ஔரங்கசீப்பிற்கு பிறகு முகலாய சுல்தானகம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. கடைசி முகலாயப் பேரரசர் ஆங்கிலேயர்களின் உதவித் தொகையில் வாழ்ந்தார். ஆனாலும் ரம்ஜான் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது.
முன்ஷி ஃபைசுதின் தெஹ்லவி தனது 'பாஸ்மே-இ-ஆகிர்' என்ற புத்தகத்தில், பிறை தெரியும்போது காணப்படும் காட்சியை விவரிக்கிறார். "எல்லா பேகம்கள், ஹரேம்கள் (பணிப்பெண்கள் மற்றும் மனைவிகள்), குளியலறையில் இருப்பவர்கள், பாதங்களைப் பிடித்து விடுபவர்கள், பாடல் பெண்கள், இளவரசர்கள் மற்றும் இளவரசிகள், பேரரசரை வாழ்த்த வந்தனர். ரோஷன் சௌகி (ராஜாவின் வண்டியுடன் வரும் வாத்தியக்காரர்கள்), மற்றும் மேளக்காரர்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தொடங்கினர்."
இந்த வாழ்த்து ஒருதலைப்பட்சமானது அல்ல. அரண்மனையில் இருந்து அனைவருக்கும் பனீர்(பாலாடை கட்டி) மற்றும் கல்கண்டு விநியோகிக்கப்பட்டது.
பெளர்ணமி இரவு கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images
குல்பதன் பேகத்தின் 'ஹுமாயூன் நாமா' என்ற புத்தகம் அவர் அடிக்கடி அஃபின் சாப்பிடுவதைக் குறிப்பிடுகிறது.
இந்த கொண்டாட்டத்திற்குப் பிறகு, தாராவீஹ் இப்படி ஏற்பாடு செய்யப்படும்: "இஷா( இரவு) விற்கான ஆஸான் அழைக்கப்படும். திவான்-இ-காஸில் நமாஸுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். பாரிதார் (சாவி வைத்திருப்பவர்) ஜமாத் (வரிசையாக மக்கள்) தயாராக உள்ளது என்று அறிவித்தார்.
மன்னர் தொழுகை நடக்கும் இடத்திற்கு வந்து சபையில் இருந்து தொழுகை நடத்தினார். குர்ஆனின் ஒன்றரை பாராவை (அத்தியாயம்) கேட்டுவிட்டு, தன் அறைக்கு வந்து, சிறிது உரையாடிய பிறகு ஹூக்கா புகைத்துவிட்டு படுக்கையில் ஓய்வெடுத்தார்.”
எளிமையான வார்த்தைகளில் சொன்னால் காலை ஆஸான் முதல் மக்ரிப் (சூரிய அஸ்தமனம்) ஆஸான் வரை உண்ணுவதும் குடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. "ஏழைகள் எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவார்கள். வளமானவர்களில் மிகச் சிலரே ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டார்கள்," என்று கேம்பிரிட்ஜ் பொருளாதார வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
"ஏழையின் உணவில் கோதுமை இருக்காது. அவர்கள் அரிசி, சோளம், தினை மற்றும் பருப்பு வகைகளைச் சாப்பிட்டனர். மேலும் காய்கறிகளைப் பயன்படுத்தினார்கள்."
முகலாய அரசவையில் சஹரி (காலை நோம்பு துவங்குவதற்கு முன்பான உணவு) பற்றி ஃபைசுதீன் எழுதுகிறார். "இரவில் ஒன்றரை மணிநேரம் இருந்தது. அரண்மனைக்கு உள்ளே, நக்கார்கானாவுக்கு (முரசு கொட்டும் இடம்) வெளியே மற்றும் ஜம்மா மஸ்ஜிதில் சஹரியின் முதல் முரசு அடிக்கப்பட்டது.
சஹரியின் சிறப்பு தயாரிப்புகள் தொடங்கின. இரண்டாவது முரசொலியின்போது தஸ்தார்க்வான் (உணவிற்காக வைக்கப்படும் துணி) விரிக்கப்பட்டது. மூன்றாவது முரசொலி கேட்டதும் மன்னர் சஹரியின் காஸா (ராஜாவுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சஹரி) சாப்பிட்டார்.
சஹர் மற்றும் இஃப்தாருக்காக முகலாய சமையலறையில் என்ன தயாரிக்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images
"சப்பாத்திகள், ஃபுல்கா, பராட்டா, ரௌக்னி ரொட்டி, பீரி ரொட்டி, பேசனி ரொட்டி, கமீரி ரொட்டி, நான், ஷீர்மல், காவ் திதா, காவ் ஜபான், குல்ச்சா, பாக்கர் கானி, கௌஸி ரொட்டி, பாதாம் ரொட்டி, பிஸ்தா ரொட்டி, அரிசி ரொட்டி, கேரட் ரொட்டி, மிஸ்ரி கி ரொட்டி, நான் பம்பா, நான் குல்ஸார், நான் கமாஷ், நான் துன்கி, பதாம் நான் கட்டாய், பிஸ்தா நான் கட்டாய், டேட்ஸ் நான் கட்டாய்."
இவை ரொட்டியின் வெவ்வேறு வடிவங்கள். இப்போது புலாவ் மற்றும் பிற அரிசி உணவுகளைப் பார்ப்போம்.
"யக்னி புலாவ், மோதி புலாவ், நூர் மஹலி புலாவ், நுக்தி புலாவ், கிஸ்மிச் புலாவ், நர்கிஸ் புலாவ், ஜமுர்தி புலாவ், லால் புலாவ், முசாஃபர் புலாவ், ஃபால்சாய் புலாவ், ஆபி புலாவ், சுனேஹ்ரி புலாவ், ருப்ஹலி புலாவ், முர்க் புலாவ், பெய்ஸா புலாவ், அனானஸ் புலாவ், கோஃப்தா புலாவ், பிரியாணி புலாவ், சுலாவ், முழு ஆடு புலாவ், பூன்ட் புலாவ், ஷோலா, கிச்சடி, கபூலி, தாஹிரி, முத்தஞ்சன்."
இது தவிர, ஜர்தா முசாஃபர், ஸிவய், மன் மற்றும் சல்வா, ஃபிர்னி கீர், பாதாம் கீர், பூசணி கீர், கேரட் கீர், கங்கினி கீர், யாகுதி, நமிஷ், தூத் கா தால்மா, பாதாம் கா தல்மா, சமோசா சலோன் ஸ்வீட், ஷங்கே, கஜ்லே மற்றும் கத்லமே சமைக்கப்பட்டன.
சலானில் கோர்மா, காலியா, தோ பியாசா, மான் குர்மா, சிக்கன் குர்மா, மீன், புரானி, ரைதா, கீரே கி தோஹ் (ஷர்பத்), பனீர் சட்னி, சிம்னி, ஆஷ், தஹி படே, பைன்கன் கா பர்தா, உருளைக்கிழங்கு, பர்தா, கடலை பருப்பு பர்த்தா, உருளைக்கிழங்கு தல்மா, கத்தரிக்காய் தல்மா, பாகற்காய் தல்மா போன்றவையும் பறிமாறப்பட்டன. பாட்ஷா பஸந்த் கரேலே, பாட்ஷா பஸந்த் தால் ஆகியவையும் தயாரிக்கப்பட்டன.
கபாப்களில் சீக் கபாப், ஷமி கபாப், கோலி கபாப், தீதர் கபாப், படேர் கபாப், நுக்தி கபாப், லவ்ஸாத் கபாப், கட்டாய் கபாப், ஹுசைனி கபாப் ஆகியவை அடங்கும். அல்வாக்களில் ரொட்டி அல்வா, கேரட் அல்வா, பூசணி அல்வா, கிரீம் அல்வா, பாதாம் அல்வா, பிஸ்தா அல்வா, ஆரஞ்சு அல்வா ஆகியவை அடங்கும்.
முரப்பாக்களில் மாம்பழ முரப்பா, ஆப்பிள் முரப்பா, தேன் முரப்பா, தரஞ்ச் முரப்பா, பாகற்காய் முரப்பா, ஆரஞ்சு முரப்பா, எலுமிச்சை முரப்பா, அன்னாசி முரப்பா, பாதாம் முரப்பா, குக்குரோந்தே முரப்பா, மூங்கில் முராப்பா ஆகியவை அடங்கும். இவற்றின் ஊறுகாய்களும் தயாரிக்கப்பட்டன.
பாதாம் நுக்கல் (வாய் புத்துணர்ச்சி இனிப்புகள்), பிஸ்தா நுக்கல், கசகசா நுக்கல், பெருஞ்சீரக நுக்கல், அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, சீதாபழம், ஆப்பிள், கொய்யா, ஜாமூன், மாதுளை போன்றவற்றின் இனிப்பு மிட்டாய்கள்.
மேலும் கோதுமையில் செய்யப்படும் இனிப்புகள்- ஹல்வா சோஹங்கிரி, பாப்டி அல்வா, கோந்த் அல்வா. லட்டு வகைகள்- மோத்திசூர், மூங், பாதாம், பிஸ்தா, கிரீம் ஆகியவற்றால் ஆனது. லவ்சாத் (இனிப்புத் துண்டு) மூங், பால், பிஸ்தா, பாதாம், ஜாமூன், ஆரஞ்சு, ஃபால்ஸே, பூசணி போன்றவற்றால் செய்யப்படும். பிஸ்தா மக்ஸி, இமர்தி, ஜிலேபி, பர்ஃபி, ஃபெனி, கலாகந்த், மோதி பாக், தர்-பஹிஷ்த், பாலுஷாஹி போன்றவையும் தயாரிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இஃப்தார் விருந்துக்கான ஏற்பாடுகள்
"மாலை வர ஆரம்பித்தது. அரண்மனையில் தந்தூரி அடுப்பு சூடாக்கப்பட்டது. ராஜாவின் நாற்காலியின் கால்கள், சிங்கக் கால்கள் வடிவில் இருந்தது.
பின்புறம் தங்கப் பூக்கள் மற்றும் இலைகள் வரையப்பட்டிருந்தன. அதில் ஒரு மென்மையான பட்டு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. தந்தூரின் முன் அது வைக்கப்பட்டது.
பேகம், பணிப்பெண்கள் இளவரசிகள் தங்கள் கைகளால் பேஸ்னி, ரெளக்னி, இனிப்பு ரொட்டி, குல்சா போன்றவற்றை தந்தூரில் தங்கள் கைகளால் வைக்கிறார்கள். ராஜா அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பலவிதமான உணவுகள் அங்கு தயாராகின்றன."
நோன்பு எப்படி திறக்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images
"அஸர் (நாளின் மூன்றாவது பொழுது) நேரம் வந்தது. தொழுகை முடிந்து நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன."
"ஒருபுறம், கண்ணாடிகள், தட்டுகள், கிண்ணங்கள், கோப்பைகள், வண்ணமயமான பொருட்கள் மற்றும் கரண்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மறுபுறம் ஜாடிகள் பானைகள், குடிக்கும் நீர் பாத்திரங்கள் மற்றும் கோப்பைகள் வைக்கப்பட்டுள்ளன."
“நோன்பு திறப்பு நேரம் வந்தது. ராஜா பீரங்கியைச் சுடுமாறு கட்டளையிட்டார். வீரர்கள் கொடிகளை அசைத்தார்கள். நோன்பு திறப்பு பீரங்கி ஒலித்தது. அஸான் தொடங்கியது. இந்த நேரத்தின் மகிழ்ச்சியைப் பாருங்கள், பீரங்கியின் சத்தம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் கொஞ்சம் ஆபே ஜம்ஜம் அல்லது பேரீச்சம்பழம் மூலம் நோம்பு திறப்பு செய்யப்பட்டது.
பின்னர் ஒரு கிளாஸ் சர்பத்தைக் கையில் எடுத்து சிலர் ஸ்பூனால் சர்பத்தைக் குடித்தனர். சிலர் தாகம் காரணமாக கிளாஸை வாயில் வைத்துக் குடித்தனர். சிறிது பருப்பு வகைகள், காய்கறிகள், உலர் பழங்களை ருசித்தனர். நாமாஸ் படித்த பிறகு கிலோரி(வெற்றிலை பீடா) சாப்பிட்டார்கள்."
ரமலான் கடைசி வெள்ளிக்கிழமையில் பிரியாவிடை தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
"ராஜா யானையின் மீது சவாரி செய்தார். ஜம்மா மசூதியின் படிக்கட்டுகளுக்கு அருகில், யானைக்கு நெருக்கமாக பல்லக்கு வைக்கப்பட்டது. அரசர் பல்லக்கில் சவாரி செய்து ஜம்மா மசூதிக்கு வந்தார். நீருற்றுக்கு அருகே பல்லக்கில் இருந்து இறங்கினார்.
மேலும் சிறப்பு பர்தார் (சிறப்பு பணியாள்) மற்றும் ஒலி எழுப்புபவர்கள் ’நகருங்கள் நகருங்கள்’ என்று கூறியபடி சென்றனர். பின்னால் இளவரசர், அரசருக்கு நெருக்கமானவர்கள் ஆகியோரும் வந்தனர்," என்று ஃபைசுதீன் எழுதுகிறார்.
"இமாமின் பின்னால் அரசரின் முஸல்லா (நமாஸ் வழங்குவதற்கான விரிப்பு), இடதுபுறம் பட்டத்து இளவரசரின் முஸல்லா, வலதுபுறம் மற்ற இளவரசர்களின் முஸல்லாக்கள் விரிக்கப்பட்டுள்ளன. ராஜா, பட்டத்து இளவரசர் மற்றும் இளவரசர்கள் அந்தந்த இடத்தில் வந்து அமர்ந்தனர். இமாம் பிரசங்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டார்.
இமாம், மிம்பரில் (சிறப்பு இடம்) நின்றார். கர் கானா (ஆயுதம் வைத்திருக்கும் இடம்) காவலர் வாளை இமாம் ஜியின் கழுத்தில் வைத்தார். வாளின் மீது கையை வைத்தபடி இமாம் பிரசங்கத்தைப் படிக்கத் தொடங்கினார். பிரசங்கத்தை முடித்த பிறகு மன்னர்களின் பெயர்களைச் சொன்னார்.
அங்கிருந்த மன்னரின் பெயரைச் சொன்னபோது, தோஷாகானா (அன்பளிப்பு கூடம்) கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் இமாமுக்கு ’கில்லத்’ (சிறப்பு உடை) அணிவித்தார்.
"தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஓதப்பட்டது. இமாம் அல்லாஹு அக்பர் என்று கூறி நமாஸை ஆரம்பித்தார். அனைவரும் இமாமுடன் சேர்ந்து நமாஸை துவக்கினர். நமாஸ் செய்த பிறகு ஆசி கோரப்பட்டது. மீதமுள்ள நமாஸை படித்தபிறகு, பேரரசர், அசார் ஷரீப் (ஜம்மா மசூதியின் புனிதப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி) சென்றார். ஸியாரத் (தரிசனம்) செய்துவிட்டு, யானை மீது சவாரி செய்து கோட்டைக்கு வந்தார்."
"இருபத்தொன்பதாம் நாள் வந்தது. அனைவரின் பார்வையும் வானத்தை நோக்கியே இருந்தது. பிறையைப் பார்த்தாலோ அல்லது பார்த்ததாக எங்கிருந்தோ செய்தி வந்தாலோ மிகுந்த மகிழ்ச்சி. இல்லையென்றால் முப்பதாம் நாளுக்கான ஏற்பாடுகள் தொடங்கும்."
"ஈத் பிறை தென்பட்டதைக் கொண்டாடும் விதமாக நக்கார் கானா வாசலுக்கு எதிரே 25 பீரங்கிகள் முழங்கின. வாழ்த்துகள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. மகிழ்ச்சியில் பாடல்கள் இசைக்கத் தொடங்கின."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












