காலநிலை நெருக்கடி: நாடாளுமன்ற தேர்தலில் வாழ்வாதாரம், பேரிடர் மேலாண்மையை முன்னிறுத்தும் மக்கள்
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
“எத்தனை தேர்தல் வந்து என்ன செய்வது? ‘தம்பி அண்ணன் வந்துட்டா நீ கேக்குறதை செஞ்சு தரேன்டா, நம்பி ஓட்டு போடு’ என்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு காது புளித்துவிட்டது.”
வட சென்னையின் திருவொற்றியூரில் உள்ள வரதராஜ பெருமாள் நகரைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான டெல்பினின் உள்ளக் குமுறல் இது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் வரதராஜ பெருமாள் நகரையும் மூழ்கடித்தது.
கூடவே டிசம்பர் 5இல் நிகழ்ந்த எண்ணூர் எண்ணெய்க் கசிவு நிலைமையை மேலும் மோசமாக்கியது. டெல்பினின் வீட்டு முற்றத்தில் இந்தப் பேரிடரில் பலியான அவரது கோழிகளின் கூண்டுகள் ஓர் ஓரமாக இன்னமும் இருந்தன. வெல்டிங் தொழில் செய்யும் அவரது பணிசார்ந்த உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், சிலிண்டர்கள் அனைத்தும் வெள்ளம் மற்றும் எண்ணெய்க் கசிவால் வீணாகிக் கிடந்தன.

“அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒருத்தரும் உதவிக்கு வரவில்லை. வேறு வழியின்றி அடுத்த இரண்டு நாட்களை திருவொற்றியூர் மெட்ரோ நிலையத்தின் கீழே சாலையோரத்தில்தான் கழிக்க வேண்டியிருந்தது,” என்றார் டெல்பின். “எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி யாரும் இயற்கைப் பேரிடர்களில் நாங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பற்றி அக்கறை கொண்டதில்லை,” என்பதே இந்தத் துயர்மிகு அனுபவத்தை எதிர்கொண்ட டெல்பினின் கருத்தாக உள்ளது.
டெல்பினை போலவே வடசென்னை மக்களில் பெரும்பாலானவர்கள், அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ பேரிடர்களின்போது தங்களைக் கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையே முன்வைக்கின்றனர். மேலும், அரசியல் கட்சிகள் தம் தேர்தல் திட்டத்தில் இவற்றைக் கொண்டுவர வேண்டும் எனவும் கருதுகின்றனர்.

இயற்கைப் பேரிடர்கள் குறித்த வாக்காளர்களின் மனநிலை
காலநிலை மாற்றம் குறித்த யேல் திட்டத்தின் கீழ் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, காலநிலை நெருக்கடி தீவிரமடைந்து வருவதைப் பெரும்பாலான இந்தியர்கள் உணர்ந்துள்ளதாகவும் அதை உணர்ந்து அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று விரும்புவதாகவும் குறிப்பிட்டது.
இந்த ஆய்வின் மூலம் இந்திய வாக்காளர்களின் மனதில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள் மற்றும் தீவிரமடைந்து வரும் காலநிலை நெருக்கடி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர முடிகிறது.
இந்திய வாக்காளர்கள் மத்தியில் வேலையின்மை, விலைவாசி உயர்வு உட்படப் பல பிரச்னைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில், காலநிலை நெருக்கடி பெரியளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்கிறார் ஐஐடி மும்பையை சேர்ந்த பேராசிரியரும் காலநிலை விஞ்ஞானியுமான ரகு முர்துகுடே. ஆனால், காலநிலை நெருக்கடியின் விளைவாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதை மறுக்க முடியாது என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அவரது கூற்றின்படி, பாரிஸ் உடன்படிக்கை, தூய ஆற்றலுக்கான முதலீடுகள், தேசிய பேரிடர் மேலாண்மையின் செயல்பாடுகள் எனப் பல விஷயங்களில் மத்திய அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆகையால் மக்கள் காலநிலை மாற்றம் குறித்த விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள் மீது திருப்தியடைந்துள்ளனர்.
இருப்பினும், காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பது வேறு, அதன் தாக்கத்தை எதிர்கொள்ளத் தக்க வகையில் தகவமைத்துக் கொள்வது வேறு என்பதை வலியுறுத்துகிறார் பேராசிரியர் ரகு முர்துகுடே.
"அரசின் செயல்பாடுகள் இந்த விஷயத்தில் மக்களுக்குத் திருப்தியளிக்கும் விதமாக இல்லையெனவும், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டும் அரசியல் விளையாட்டையே மேற்கொள்வதாகவும்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் காலநிலை நெருக்கடி
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்தியா முழுக்கப் பல்வேறு இடங்களில் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவானதாக டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தின்(CSE) தரவுகள் கூறுகின்றன.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
புயல், வெள்ளம், உயரும் கடல் மட்டம், வெப்ப அலை, வறட்சி போன்ற பேரிடர்களால் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள்தொகை ஒவ்வோர் ஆண்டும் பாதிப்புகளைச் சந்திக்கிறது.
இதுமட்டுமின்றி, கடந்த 2020ஆம் ஆண்டு தெற்காசிய காலநிலை செயல்பாட்டு அமைப்புகள் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை இந்தியாவில் சுமார் 1.4 கோடி மக்கள் தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்பட்ட பேரிடர்களால் இடம்பெயர்ந்துள்ளனர் எனக் கூறுகிறது.

ஏழை மக்கள் சந்திக்கும் ஆபத்து
வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குப் பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரைகூட ஆகலாம். இந்நிலையில், மக்கள் பேரிடரின்போது பாதுகாக்கப்படுவதையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரம், உடைமைகள் போன்றவற்றையும் பாதுகாக்க அரசிடம் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய திட்டங்கள் எதுவும் அரசிடமோ, அரசியல் கட்சிகளிடமோ இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் சராசரி வாக்காளரான டெல்பின்.
எண்ணூரை சேர்ந்த சமூக ஆர்வலரும் மானுடவியல் ஆய்வாளருமான முனைவர் அ.பகத் சிங் டெல்பினின் கருத்துடன் உடன்படுகிறார்.
ஒவ்வொரு பேரிடரின்போதும் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து, அதிலிருந்து பொருளாதார ரீதியாக மீண்டுவரக் கடுமையாகப் போராடுகிறார்கள். இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சிகளும், ஆள்வோரும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர்.
மழை வெள்ளம், எண்ணெய்க் கசிவு இரண்டும் ஒருசேர ஏற்பட்டிருந்த நேரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட எர்ணாவூர் பகுதியில் பிபிசி கள ஆய்வு மேற்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனங்கள் அனைத்துமே வீணாகிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.
“அந்த இரு சக்கர வாகனங்கள் ஏழை உழைக்கும் மக்களின் வருமானத்திற்கான முதலீடு. உயிர்களைக் காப்பாற்றிவிட்டோம், உடைமைகளைக் காப்பாற்றாவிட்டால் வாழ்வாதாரத்திற்கு என்ன வழி? ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் ஏழைகள் பூஜ்ஜியத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா?” எனக் கேள்வியெழுப்புகிறார் பகத்.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?
அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, காலநிலை பேரிடர்களைக் கையாள்வதற்கான புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
“இயற்கைப் பேரிடர்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படிக் கையாள வேண்டும்” என்பதிலும் “அடிக்கடி பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்களுக்கு என விரைவில் அணுகக்கூடிய பகுதிசார்ந்த பேரிடர் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்” என்பதிலும் அதிமுக கவனம் செலுத்துவதாக அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“தமிழ்நாடு பசுமை இயக்கம், மாநிலத்தில் 33% காடுகள் பரப்பளவு இருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவு போன்ற பல முன்னெடுப்புகளை மாநில அரசு எடுத்து வருவதாக” திமுக சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி கூறுகிறார்.
வறுமைக்கு அடுத்தபடியாக காலநிலை பேரிடர்களே மனித இனம் சந்திக்கக்கூடிய பெரிய பிரச்னையாக இருக்கப் போவதை திமுக உணர்ந்துள்ளதாகவும் அதற்கான திட்டங்களை வரையறுப்பதில் தீவிரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இயற்கைப் பேரிடர்களைக் கையாள்வதையும் தாண்டி அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்டபோது, “பேரிடர் மேலாண்மையை பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாகக் கொண்டு வரும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இன்னொருபுறம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு 29 சதவீத நிதி மட்டுமே திரும்பி வருகிறது. இந்தியா கூட்டணி வென்று ஆட்சிக்கு வந்ததும் போதுமான அளவுக்கு நிதி கிடைக்கும். அதன்மூலம் மக்களின் உயிர் மட்டுமின்றி உடைமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசால் முழுவீச்சில் முன்னெடுக்க முடியும்,” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கிராமங்களுக்கு மின்சாரம், கிராமப்புற நீர்வளப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு, 102 மாசடைந்த நகரங்கள்மீது தேசிய தூய காற்று திட்டத்தின்கீழ் கவனம் செலுத்துவது எனப் பல திட்டங்களை பாஜக தனது கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் முன்வைத்தது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காடுகள் வளர்ப்பு, காட்டுயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்களையும் முன்வைத்தது.
ஆனால், பாஜக ஆட்சியைப் பொறுத்தவரை சர்வதேச சமூகங்களின் மத்தியில் காலநிலை நெருக்கடி குறித்து தீவிர அக்கறை காட்டுவதைப் போன்ற தோற்றம் தென்பட்டாலும் கள நிலவரம் உண்மையில் அப்படியில்லை என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. சுந்தர்ராஜன்.
அவரது கூற்றுப்படி, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, காடுகள் பாதுகாப்பு சட்டம் போன்ற முக்கிய சூழலியல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்தது, சூழலுக்கு ஆபத்தான திட்டங்களைக் கொண்டு வந்தது போன்ற செயல்பாடுகள் மூலம் காலநிலை நெருக்கடியின் அபாயங்களைத் தீவிரப்படுத்தியதே பாஜக அரசு செய்துள்ள பணி.”
காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலின்போது மண் வளத்தை மீட்டெடுத்தல், நீர்நிலைகளை மீட்பது, தரிசுநிலங்கள் மீட்பு போன்ற பசுமைத் திட்டங்களைத் தனது வாக்குறுதியில் முன்வைத்தது. அதோடு, தேசிய காலநிலை ஆணையம் அமைப்பதோடு, தேசிய தூய காற்றுத் திட்டம் மூலம் மாசு அளவைக் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்தது. இந்த முறையும் அக்கட்சி தொடர்ந்து காலநிலை குறித்துப் பேசி வருகிறது.
ஆனால், அரசியல் கட்சிகள் காலநிலை தணிப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி தகவமைப்பு மற்றும் எதிர்செயலாற்றும் திறன் மீதும் கவனம் செலுத்தினால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரம் பேரிடர்க் காலங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
இயற்கைப் பேரிடர்களைப் பொறுத்தவரை அரசுகள் முன்பே செய்துவைக்க வேண்டிய சில நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட முனைவர் அ.பகத் சிங் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இவற்றின்மீதும் கவனம் கொண்டுவர வேண்டும் என்றார்.
பேரிடர்களை எதிர்கொள்ள விரிவான திட்டம் பகுதிவாரியாகத் தயாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று முனைவர். பகத் பரிந்துரைக்கிறார். அதில் வல்லுநர்களின் உதவியோடு “ஒரு பகுதியில் பேரிடர்க் காலங்களில் நிலவியல் ரீதியாக எளிதில் பாதிக்கக்கூடிய பகுதி எது? யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலவியல் அமைப்பில் வசிக்கிறார்கள்? அதில் சமூக பொருளாதாரரீதியாக விளிம்புநிலையில் இருப்பவர்கள் யார்?” என்ற தகவல்களைச் சேகரிக்க வேண்டும்.
இத்திட்டங்களின் செயலாக்கத்தில் “சமூக-பொருளாதார ரீதியில் கீழிருந்து மேலாக பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மேலாண்மையை, சமூக, சூழலியல் பார்வையோடு அனுக வேண்டும்,” என்கிறார் பகத்.

மக்களவை தேர்தலில் காலநிலை நெருக்கடி
அதிகரித்து வரும் இயற்கைப் பேரிடர்கள், அதிதீவிர வானிலை நிகழ்வுகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள், வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இயற்கைப் பேரிடர்கள் மற்றும் காலநிலை தகவமைப்பு, தணிப்பு நடவடிக்கைகளில் போதாமை நிலவுவதாக சுந்தர்ராஜன் வலியுறுத்துகிறார்.
அந்தப் போதாமை குறித்துப் பேசிய ரகு முர்துகுட்டே, “பேரிடர் மேலாண்மை என்பது ஏற்படும் பாதிப்பைக் கையாள்வதை நோக்கியே இருக்கிறது. அதையும் தாண்டி பேரிடரை பாதிப்பின்றி எதிர்கொள்வதற்கான திறனைப் பெருக்குவதில் நமது திட்டமிடல் இருக்க வேண்டும்.” மேலும், பட்ஜெட்டில் அதற்கான நிதிகளை ஒதுக்க வேண்டும், இதற்கென தனி திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.
இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாகத் தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ரகு முர்துகுட்டே அறிவுறுத்துகிறார்.

வாழ்வாதார பாதுகாப்பே வாக்காளர்களின் தலையாய தேவை
கடந்த டிசம்பர் மாத வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து சென்னையில் இழப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
அதனுடன், எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு சேதங்களுக்கு நிவாரணமாக ரூ.7,500 வழங்கப்பட்டது. ஆனால், எண்ணூர் விபி நகரில் சாலையோரமாக சிறு தேநீர் கடை நடத்தி வரும் மூதாட்டியான வள்ளி மற்றும் அவரது கணவருக்கு அது போதவில்லை.
வெள்ளப் பேரிடரும் எண்ணெய்க் கசிவும் சேர்ந்து அவர்களது கடை, வீடு இரண்டிலும் இருந்த பொருட்கள், ஆடைகள் என அனைத்தையும் வீணாக்கிவிட்டது.
மாற்றுத்துணிகூட இல்லாத நிலையில் தவித்த வள்ளிப் பாட்டி அவரது கடைக்கு மட்டும் சுமார் 30,000 ரூபாய் கடன்பட்டு, செலவு செய்து மறுசீரமைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார். இதுபோக, தங்கள் வீட்டிற்கான செலவுகள் தனி. இந்நிலையில், அரசு கொடுக்கும் சொற்பத் தொகையைக் கொண்டு எப்படி மீண்டு வருவது, இயல்பு வாழ்க்கையை வாழ்வது எனக் கேள்வியெழுப்புகிறார்.

“கட்சிக்காரர்கள் வழக்கமாக வந்து வாக்கு கேட்பார்கள், நாங்களும் யாராவது ஒருவரை நம்பிப் போட்டுவிடுவோம். அதோடு அவர்களது பணி முடிந்துவிட்டது. ஆனால், பாதிக்கப்படுவது என்னவோ நாங்கள்தான். தொடர்ச்சியாக இப்படியான பேரிடர்களை எதிர்கொண்டவாறே இருந்தால் நாங்கள் என்ன ஆவது?
எங்களுக்கு வேறு வழி இல்லை, இங்குதான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். அப்படியிருக்கும்போது, அரசியல் கட்சிகள் இங்கு வாழ இருக்கும் சொற்ப வழியையாவது அழியாமல் பாதுகாக்க வழிசெய்ய வேண்டாமா?” என்று வருந்துகிறார் வள்ளி.
டெல்பின், வள்ளி போன்ற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைப் பொறுத்தவரை பேரிடர்களை எதிர்கொண்ட பிறகு அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் அசாதாரணமான, சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது.
ஆகவே, பேரிடர் காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதையும் தாண்டி அவர்களது உடைமைகளும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவதை, இழப்புகளைச் சந்தித்தாலும் இன்னலின்றி மீண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்காளர்கள், ஆர்வலர்கள், வல்லுநர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













