மின்கம்பிக்கு கீழே நின்று பேசினால் செல்போன் வழியே மின்சாரம் பாயுமா? சென்னை இளைஞருக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் சென்னை ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல், நாகம்மை நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (17). பள்ளி மாணவரான இவர் அண்மையில் 12ஆம் தேர்வு வகுப்பு எழுதி முடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 29), தனது வீட்டு மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. பாதி உடல் கருகிய நிலையில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார் சந்தோஷ். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
90 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடுகளின் மேலே அல்லது விவசாய நிலங்களுக்கு மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் குறித்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. வீடு கட்ட நிலம் வாங்கும்போது, அதற்கு மேலே உயரழுத்த மின்கம்பிகள் சென்றால் அல்லது அருகே உயரழுத்த மின்கோபுரங்கள் இருந்தால் அந்த நிலத்தை வாங்க மக்கள் அச்சப்படுகிறார்கள்.
விவசாய நிலங்களிலும்கூட உயரழுத்த மின்கம்பிகள் சென்றால் குட்டைப் பயிர்களைப் பயிரிடுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று செல்போனில் பேசியதால்தான் பள்ளி மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததா? உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா?
மின்கம்பிகளுக்கு கீழே நின்று செல்போன் பயன்படுத்தலாமா?

பட மூலாதாரம், Getty Images
“செல்போனில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சுக்கும் உயரழுத்த மின்கம்பிகளில் செல்லும் மின்சாரத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. அதற்குக் கீழே நின்று செல்போன் பயன்படுத்தினால், எந்தக் குறுக்கீடும் ஏற்படாது” என்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் சக்திவேல்.
தொடர்ந்து, “உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று பேசினால், ஒருவித இரைச்சல் ஏற்படலாம், செல்போன் சிக்னல் குறைவாகக் கிடைக்கும். மற்றபடி செல்போன் பேசுவதால் ஒருவர் மீது மின்சாரம் பாயாது. ஏனெனில் உயரழுத்த மின்சாரமாகட்டும் அல்லது வீட்டில் பயன்படுத்தும் மின்சாரமாகட்டும், கம்பிகள் அல்லது ஒரு மின்கடத்தி இல்லாமல் அதைக் கடத்த முடியாது அவர்,” என்கிறார்.
அதேவேளையில், இதில் கவனிக்க மற்றுமோர் அம்சமும் இருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் சக்திவேல். காற்று என்பது ஒரு இன்சுலேட்டர் மின்கடத்தாப் பொருள்). ஆனால் "காற்றில் ஈரப்பதம் கூடும்போது, இந்த மின்கடத்தாத் தன்மை குறையும். அத்தகைய சூழலில் வீட்டின் மேலே உயரழுத்த மின்கம்பிகள் செல்லும்போது, நிலத்துக்கும் கம்பிகளுக்கு இடையே நிற்கும் நாம் ஒரு மின்கடத்தியாக மாறிவிடுவோம்."
அவரது கூற்றின்படி, அப்போது நமது கையில் செல்போன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் உடலின் வழியாக மின்சாரம் பாயக்கூடும். எனவே அந்தச் சிறுவனுக்கு செல்போன் வழியே மின்சாரம் பாய்ந்திருக்காது. செல்போனின் மின்காந்த கதிர்வீச்சு, உயரழுத்த மின்சாரத்தின் பாதையில் குறுக்கிடும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
"அதுபோல மின்காந்த கதிர்வீச்சால் அல்லது செல்போன் கோபுரங்களால் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறுகிறார் பேராசிரியர் சக்திவேல்.
“உதாரணமாக ரயில் நிலையங்களில் அல்லது ரயிலின் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் உரசி, சிலருக்கு மின்சாரம் பாய்ந்ததாக செய்திகள் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் நிலத்திற்கும் கம்பிகளுக்கும் இடையே ஒரு மின்கடத்தியாக மனித உடல் மாறிவிடும், இதனால் மின்சாரம் பாய்ந்திருக்கும்.
இதேபோல சிறுவன் இருந்த பகுதியில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் சென்றிருக்கும். அதனால் உடலுடன் ஏதேனும் தொடர்பு ஏற்பட்டு இது நடந்திருக்கலாம்,” என்கிறார் பேராசிரியர் சக்திவேல்.
மழைக்காலங்களில் உயரழுத்த மின்கம்பிகளுக்கு கீழே நின்றால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images
தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் என்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணங்களுக்காக இந்த விபத்து நடந்திருக்கும் எனக் கேட்டபோது, “நான் முன்பு கூறியது போல, காற்றின் ஈரப்பதம் கூடும்போது, அதன் மின்கடத்தாத் தன்மை குறையும்.
மழைக்காலங்களில் இது அதிகமாக நடக்கும். அப்போது மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மின்கசிவுகள்கூட ஏற்படும்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில்கூட சிறுவனுக்கு மின்சாரம் பாய்ந்திருக்கலாம். எனவே மழைக் காலங்களில் அல்லது காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள நேரங்களில் உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நிற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்,” என பேராசிரியர் சக்திவேல் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களை வாங்கலாமா?
உயரழுத்த மின்கோபுரங்கள் இருந்தால் அல்லது மின்கம்பிகள் நிலங்களின் மேலே சென்றால், அந்த நிலத்தை வாங்கி வீடு கட்டலாமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் ஒருவர், “மின்பாதைகளுக்குக் கீழே இருக்கும் தரிசு நிலங்களை இரண்டு காரணங்களுக்காக வாங்கலாம், ஒன்று வீடு கட்ட அல்லது விவசாயத்திற்கு," என்று தெரிவித்தார்.
மேலும், "விவசாயத்திற்கு என்றால் அரசே அதற்கான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த நிலங்களில் நெல், காய்கறிகள் போன்ற குட்டைப் பயிர்கள்தான் வளர்க்க வேண்டும். தென்னை போன்ற உயரமான மரங்கள் நடுவதற்குத் தடை உள்ளது. அடுத்ததாக தரிசு நிலங்களை வீடு கட்டும் நிலங்களாக மாற்றும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் சென்றால் அங்கே வீடு கட்டக்கூடாது என நிலத்தை விற்பவர்களுக்குத் தெரியும், ஆனால் குறைவான விலையில் அதை விற்று விடுகிறார்கள். இதனால் ஆபத்து என்பது அங்கு வீடு கட்டி வசிப்பவர்களுக்கே,” என்கிறார் அவர்.
“மின்சாரத்தில் இரண்டு வகை உண்டு, ஹை-டென்ஷன் லைன் (High tension line) மற்றும் லோ-டென்ஷன் லைன் (Low tension line). இதில் ஹை-டென்ஷன் லைனில் 50 கிலோவாட்களுக்கு குறைவாக மின்சாரம் பாய்ந்தால், வீட்டிற்கும் கம்பிகளுக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். 50 முதல் 200 கிலோவாட் என்றால் கண்டிப்பாக 15 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
இதில் 110 கிலோவாட் அல்லது அதற்கு மேல் என்றால் எக்ஸ்ட்ரா ஹை-டென்ஷன் லைன் எனச் சொல்வார்கள். இதன் மூலம் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும். அதில் பயன்படுத்தப்படும் கம்பிகளும் மிகவும் கனமாக இருக்கும். எனவே கண்டிப்பாக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட இடைவெளி விட்டே வீடுகள் கட்டப்பட வேண்டும்,” என்று கூறினார் அந்த அதிகாரி.
தொடர்ந்து பேசிய அவர், “சிலர் வீட்டைப் பெரிதாகக் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டு, இந்த இடைவெளியை ஒழுங்காகப் பின்பற்றுவதில்லை. அது தவறு, அத்தகைய சூழ்நிலைகளில்தான் பல விபத்துகள் ஏற்படுகின்றன.
நாங்களும் பல இடங்களில் ஆய்வு செய்து, ஹை-டென்ஷன் லைன் செல்லும் பகுதிகளில் 15 அடிக்கும் குறைவான இடைவெளியில் வீடுகள் கட்டப்பட்டால் அதற்கு மின்னிணைப்பு கொடுப்பதில்லை அல்லது அந்தப் பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கிறோம்,” என்றார்.
உயரழுத்த மின்கம்பிகளால் ஏற்படும் ஆபத்துகள்

பட மூலாதாரம், Getty Images
“மழைக் காலங்களில் அல்லது இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் கண்டிப்பாக சாதாரண மின்கம்பங்கள் அடியில்கூட நிற்கக்கூடாது. அதிலும் உயரழுத்த மின்கம்பிகள் அல்லது கோபுரங்கள் என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
இப்போதைக்கு இன்சுலேட்டராக (Insulator) பாலிமரை (Polymer) பயன்படுத்தி வருகிறோம். இதனால் முடிந்த அளவு அசம்பாவிதங்களைத் தவிர்த்து வருகிறோம். ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடந்து விடுகிறது. எனவே மக்களும் நிலத்தை வாங்கும்போது, குறைவான விலையில் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு வாங்காமல் கவனமாக இருக்க வேண்டும்," ," என்று விளக்கினார் தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர்.
மேலும், உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் வீடுகளுக்கு இடையே இடைவெளி குறைவாக இருந்தால், சில நேரங்களில் அந்த மின்கம்பிகளில் அதிக மின்சாரம் பாயும்போது வீட்டிலுள்ள மின்சாதனங்கள் சேதமடையும்.
"பொருள் சேதம் மட்டுமில்லாமல் உயிர்ச் சேதமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், இத்தகைய பகுதிகளில் வீடு கட்ட நிலம் வாங்கும்போது ஒரு மின்பொறியாளரிடம் ஆலோசனை கேட்பது நல்லது,” என்று கூறினார் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












