ஹைதராபாத் - குஜராத் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த 2 ஓவர்கள் - சாய் சுதர்சன், விஜய் சங்கர் அசத்தல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பந்துவீச்சில் 20-வது ஓவரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் 16-வது ஓவரும்தான் போட்டியைத் தீர்மானித்தன. இந்த இரு ஓவர்கள்தான் இரு அணிகளுக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த இரு ஓவர்களிலும் கோட்டைவிட்ட சன்ரைசர்ஸ் அணி, வெற்றி வாய்ப்பையும் தவறவிட்டது. மோகித் சர்மாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, டேவிட் மில்லர், சுதர்சனின் பொறுப்பான பேட்டிங் குஜராத் அணிக்கு வெற்றி தேடித் தந்தது.
அகமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பட மூலாதாரம், Getty Images
வெற்றி பெற்றும் உயராத நிகர ரன்ரேட்
இந்த வெற்றி மூலம் குஜராத் அணி அகமதாபாத் அரங்கில் 12 போட்டிகளில் 11வது வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் புள்ளிக்கணக்கில் 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி என்ற ரீதியில் 4 புள்ளிகள் பெற்றது. 4வது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் இருந்தும் அதன் நிகர ரன்ரேட் இன்னும் மைனசில் தொடர்கிறது.
அந்த அணிக்கு கிடைத்த இரு வெற்றிகளும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றி இல்லை என்பதால், நிகர ரன்ரேட் இன்னும் உயராமல் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி 2 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்கிறது. இரு தோல்வி அடைந்தாலும் நிகர ரன்ரேட் 0.204 என்று குறையாமல் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை ஓவர்கள்
அகமதாபாத் மைதானத்தில் 162 ரன்கள் எனும் ஸ்கோர் என்பது சராசரிக்கும் குறைவானது. சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறவும், குஜராத் அணிக்கு நெருக்கடி கொடுக்கவும் கூடுதலாக இன்னும் 25 ரன்களாவது சேர்த்திருக்க வேண்டும். இதுபோன்ற குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணியை சுருட்டுவது கடினம்.
கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 273 ரன்கள் எனும் இமாலய ஸ்கோரை அடித்துவிட்டு, இந்தப் போட்டியில் அதைவிட 100 ரன்களுக்கும் குறைவாக அடித்தது என்பது நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
சன்ரைசர்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தது அதன் ஸ்கோர் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். அது மட்டுமல்லாமல் குஜராத் கேப்டன் குல், மிகவும் புத்திசாலித்தனமாக இளம் வீரர் தர்சன் நல்கண்டேவையும், மோகித் சர்மாவையும் டெத் ஓவரில் பந்துவீசச் செய்து சன்ரைசர்ஸ் பேட்டர்களை கரங்களைக் கட்டிப்போட்டார்.
அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் வெற்றிக்கான கடும் நெருக்கடியில்தான் பேட் செய்தது. கடைசி 30 பந்துகளில் குஜராத் அணி வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. மார்கண்டே வீசிய 16-வது ஓவரில் மில்லர் அடித்த 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, சுதர்சன் அடித்த ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் சேர்த்தது தான் ஆட்டத்தை திருப்பிவிட்டது.
அதேபோல, சன்ரைசர்ஸ் அணி தனது 20-வது ஓவரில் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததும் அந்த அணியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியாமல் போனது. இந்த இரு ஓவர்களும்தான் இரு அணிகளுக்கும் திருப்புமுனையாகும்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டநாயகன் மோகித் சர்மா
சன்ரைசர்ஸ் அணி 20-வது ஓவரில் மட்டும் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெரிய சரிவுக்கு ஆளானது. சன்ரைசர்ஸ் அணிக்கு பதற்றமான சூழலை உருவாக்கி, பந்துவீச்சில் பட்டையக் கிளப்பிய மோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோகித் சர்மா தனது பந்துவீச்சில் ஒரு பவுண்டரிகூட பேட்டரை அடிக்கவிடவில்லை, மாறாக ஒரு சிக்ஸர் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
மில்லரிடம் ‘கில்லர் பவர்’ எங்கே?
குஜராத் டைட்டன்ஸ் பேட்டர் டேவிட் மில்லரின் பேட்டிங் நிலைத்தன்மை இந்த ஆண்டில் மோசமாகச் சரிந்துள்ளது. இந்த ஆண்டில் 15 இன்னிங்ஸில் ஆடிய மில்லர் 3 முறை மட்டுமே 30 ரன்களைக் கடந்துள்ளார். இவரின் சராசரி டி20 போட்டியில் 29 ரன்களாக இந்த ஆண்டு இருக்கிறது.
அதிலும் ஸ்ட்ரைக் ரேட் 119 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 13 ஆண்டுகளில் மில்லரின் ஸ்ட்ரைக்ரேட் இதுபோன்று குறைவது இதுதான் முதல்முறை. 2023ல் 135.20 ஆக இருந்த ஸ்ட்ரைக் ரேட், 2022ல் 147.20 ஆக மில்லர் வைத்திருந்தார். இன்றைய ஆட்டத்திலும் தொடக்கத்தில் 15 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே மில்லர் சேர்த்தார். ஆனால் இறுதியில் சிறிய கேமியோ ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை 167 ஆக உயர்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
15 ரன்கள் குறைவாகச் சேர்த்தோம்
சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நாங்கள் இன்னும் கூடுதலாக 15 ரன்கள் வரை சேர்த்திருக்கவேண்டும். குஜராத் வீரர்கள் நன்றாகப் பந்துவீசினர். கடைசி நேரத்தில் இரு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம், ஒரு பேட்டர்கூட அரைசதம் அடிக்கவில்லை.
விக்கெட் மிகவும் ஸ்லோவாக இருந்தால் தான் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், இரு இன்னிங்ஸ்களிலும் விக்கெட் ஒரு மாதிரியாக இல்லை” எனத் தெரிவித்தார்
சுயநலத்துடன் ஆடுகிறாரா கம்மின்ஸ்
உலகத் தரம்வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களைக் கணக்கெடுத்தால் அதில் டாப்-5 இடங்களில் கம்மின்ஸ் இடம் பெறுவார். சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கம்மின்ஸ் கடந்த 3 போட்டிகளிலும் பந்துவீச்சில் பெரிதாக திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை.
கம்மின்ஸ் போன்ற உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் பந்துவீசி, எதிரணியின் ரன்ரேட்டைக் குறைக்க வேண்டும். ஆனால், சுயநலத்துடன் தனிப்பட்ட சராசரியைத் தக்கவைக்கும் நோக்கில் மிகவும் பாதுகாப்பாக நடுப்பகுதி ஓவர்களில் கம்மின்ஸ் பந்துவீசி தன்னைக் காத்துக் கொள்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
புவனேஷ்வர் குமார் இருக்கிறாரா?
சன்ரைசர்ஸ் அணியில் அனுபவம் மிகுந்த பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் இதுவரை இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி இன்னும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. 8 ஓவர்களை வீசிய புவனேஷ்வர் 104 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்த போட்டியில்தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக 27 ரன்களை புவனேஷ் வழங்கியுள்ளார்.
கொல்கத்தா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக புவனேஷ்வர் குமார் தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசினாலும் டெத்ஓவர்களில் கூடுதலாக ரன்களை விட்டுக்கொடுத்தார். இன்றைய ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசிய புவனேஷ்வர் குமார் பவர்ப்ளே உள்பட 27 ரன்கள் கொடுத்து 3 பவுண்டரிகள் மட்டுமே கொடுத்தார், இதில் 9 டாட் பந்துகள் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
அசத்திய ஆப்கன் பந்துவீச்சாளர்கள்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தபோதும் சரி, தற்போது கில் கேப்டனாக இருக்கும்போதும் சரி, அவர்களுக்கு பெரிய பலமாக இருப்பது ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தான்.
குறிப்பாக எதிரணிகளை மிரளவிடும் லெக் ஸ்பின்னர் ரஷித் கான், மற்றொருவர் சினாமேன் எனப்படும் மணிக்கட்டு பந்துவீச்சாளர் நூர் அகமது.
இருவரும் இணைந்தவிட்டாலே, எதிரணியின் ஸ்கோர், ரன்ரேட் “மல்லாக்கப் படுத்துவிடும்”. அதுபோலத்தான் இன்றைய ஆட்டத்திலும் நூர் அகமது, ரஷித் கான் இருவரும் இரு மிகப்பெரிய, திருப்புமுனை தரும் விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணிக்கு பேரதிர்ச்சி அளித்தனர்.
கடந்த போட்டியில் சரவெடியாக வெடித்த டிராவிஸ் ஹெட்டை 19 ரன்னில் கிளீன் போல்டாக்கினார் நூர் அகமது. நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆமதாபாத் மைதானத்தில் விக்கெட் நன்கு காய்ந்திருந்ததால், சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இந்த ஆடுகளத்தில் நூர் அகமது வீசிய கூக்ளி பந்துவீச்சு அருமையாக கைகொடுத்து விக்கெட் வீழ்ச்சிக்கும், ரன்ரேட் கட்டுப்படுத்தவும் உதவியது.
அதேபோல ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து மிக ஆபத்தான பேட்டர் கிளாசனை கிளீன் போல்டாக்கி 24 ரன்னில் பெவிலியன் அனுப்பினார். இந்த இரு விக்கெட்டுகளையும் இரு ஆப்கன் சுழற்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி குஜராத் அணிக்கு பெரிய உதவியாக இருந்தனர்.
மோகித் சர்மா, நூர் அகமது, ரஷித் கான் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும்தான் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோரை உயரவிடாமல் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்து பயணித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
20 ரன்கள் சராசரியைத் தாண்டாத சன்ரைசர்ஸ்
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்களின் பேட்டிங் இன்றைய ஆட்டத்தில் சராசரிக்கும் குறைவாக இருந்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் 8-வது விக்கெட் வரை ரன்கள் சராசரி என்பது 20 மட்டும்தான். அதிகபட்சமாக அபிஷேக் சர்மா(29), அப்துல் சமது(29) ரன்கள் சேர்த்தனர்.
மற்ற முக்கிய பேட்டர்களான கிளாசன்(24), மார்க்ரம்(17), அகர்வால்(16), ஹெட்(19) என 20 ரன்கள் சராசரியிலேயே விழுந்தனர். இதுதான் சன்ரைசர்ஸ் ஸ்கோர் சராசரிக்கும் கீழாக குறைந்ததற்கு முக்கியக் காரணம். பவர்ப்ளே ஓவரையும், டெத் ஓவர்களையும் சன்ரைசர்ஸ் சரியாகப் பயன்படுத்தி கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கடியாக சென்றிருக்கும்.
இதுவரை மயங்க் அகர்வால் 3 போட்டிகளில் களமிறங்கிவிட்டார், ஒரு போட்டியில்கூட 20 ரன்கள் சராசரியைக் கடக்கவில்லை என்பது வருந்தக்கூடியதாகும். தொடக்க ஆட்டக்காரர் தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் ஸ்கோர் உயர்வை கடுமையாகப் பாதிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
நல்ல தொடக்கம் அளிக்கும் குஜராத் அணி
குஜராத் அணியின் கேப்டன் கில், விருதிமான் சாஹா இருவருமே 3 போட்டிகளாக இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால், அணிக்குத் தேவையான நல்ல தொடக்கத்தை பவர்ப்ளை ஓவரில் அளித்து அடித்தளம் அமைத்துச் சென்றுள்ளனர்.
இந்த ஆட்டத்திலும் விருதிமான் சஹா(25), கில் (36) ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் அளித்தனர். ஆனால் கடந்த தொடரோடு ஒப்பிடும்போது சுப்மான் கில்லின் பேட்டிங் திறமை மங்கியுள்ளது. கேப்டன் பொறுப்பு ஏற்றபின் கில்லின் அதிரடி ஆட்டம், களத்தில் நின்று விளையாடும் நிலைத்தன்மை குறைந்துவிட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்டர் சாய் சுதர்சன் கடந்த 3 போட்டிகளிலுமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இந்த ஆட்டத்திலும் சுதர்சன் 45 ரன்கள் சேர்த்து நடுப்பகுதி ஓவர்களில் மில்லருடன் சேர்ந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
மார்கண்டே ஓவரில் தொடக்கத்தில் சுதர்சன் திணறினாலும், 12வது ஓவரில் பவுண்டரியையும், உனத்கத் ஓவரில் பவுண்டரியையும் விளாசி ரன் சேர்க்கும் கியரை மாற்றினார். மற்ற வகையில் இரு அணிகளிலும் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்காமல் ஆட்டம் முடிந்துள்ளது.
மற்றொரு தமிழ்நாடு வீரர் விஜய் சங்கர் கடைசி வரை களத்தில் நின்று குஜராத் அணிக்கு எளிதான வெற்றியை உறுதி செய்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












