ஹர்திக் பாண்டியாவின் புதிரான முடிவுகளால் அவரது கேப்டன்சி குறித்து எழும் முக்கியமான சந்தேகங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விதான்ஷு குமார்
- பதவி, விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி இந்திக்காக
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி டி20 வரலாற்றில் மிகவும் பரபரப்பான ஆட்டங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். இந்த டி20 போட்டியில் 523 ரன்கள் அடிக்கப்பட்டன, அதில் 38 சிக்ஸர்களும் அடங்கும்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணியினரிடமும் சிறப்பான பேட்டிங் காணப்பட்டது.
இப்போட்டியில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. அதிவேக 100 ரன்கள், அதிவேக 200 ரன்கள், ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர், ஒரு போட்டியில் அதிக ரன்கள், ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் என.
ஆனால் பல சாதனைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் போட்டியில், இரண்டு விஷயங்கள் அதிகம் விவாதிக்கப்பட்டன. ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஹென்ரிச் கிளாசெனின் பேட்டிங் மற்றும் மும்பையின் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. பதிலடியாக, மும்பை இந்தியன்ஸ் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் இலக்கை அடைய முடியாமல் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
‘நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன், கிளாசென்’
இந்தப் போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த கெவின் பீட்டர்சன், “கிளாசென் ஆடியது போன்ற இன்னிங்ஸை இதுவரை பார்த்ததில்லை” என்று கூறினார்.
“இது ஒரு சிறந்த டி20 இன்னிங்ஸ். இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை, கெய்ல் அல்லது டிவில்லியர்ஸின் இன்னிங்ஸை நான் டிவியில் பார்த்திருக்கிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை நான் நேரில் பார்த்ததில்லை” என்றார் கெவின் பீட்டர்சன்.
வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, தான் பார்த்ததை நம்ப முடியவில்லை என்று கூறினார்.
“மும்பை போன்ற அணிக்கு எதிராக 277 ரன்கள் என்பது நம்பமுடியாத ஒரு இன்னிங்ஸ். ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்து” என்று அவர் கூறினார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது, “கிளாசென் பேட்டிங்கை பார்க்கும்போது, அவர் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று தெரிகிறது” என்று கூறினார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனும் ஹென்ரிச் கிளாசெனை டி20 வடிவத்தின் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பும்ரா குறித்த பாண்டியாவின் முடிவு
கிளாசெனின் இன்னிங்ஸ் பாராட்டப்பட்டாலும், இந்தப் போட்டியின் மற்றொரு முக்கிய விவாதப் புள்ளியாக இருந்தது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி.
இந்த சீசனில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக பாண்டியாவை புதிய கேப்டனாக்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஆனால் ரசிகர்களால் இந்த முடிவை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.
மும்பையின் முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியா பார்வையாளர்களால் கேலி செய்யப்பட்டார். அதேபோன்ற சூழல் ஹைதராபாத்திலும் காணப்பட்டது.
ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக களத்தில் அதிக சத்தம் எழுப்பப்பட்டது. சமூக ஊடகங்களில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது.
கடந்த போட்டியைப் போல் இந்த முறையும் டி20 உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதல் ஓவரை பாண்டியா கொடுக்கவில்லை.
அவருக்கு 10வது ஓவரில் தான் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதற்குள் ஹைதராபாத் அணி இன்னிங்ஸை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஹைதராபாத் அணி 10.2 ஓவரில் 150 ரன்களை எட்டியது.
பாண்டியாவின் இந்த வியூகத்துக்கு ஹைதராபாத் தயாராகிவிட்டது. கிளாசென் தனது இன்னிங்ஸுக்குப் பிறகு பேசிய போது, பந்துவீச பும்ராவுக்கு தாமதமாக தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று அவரது அணிக்கு தெரியும் என்று கூறினார்.
ஏனெனில் கிளாசெனுக்காக பந்து வீச பும்ராவைக் கொண்டு வர வேண்டுமென பாண்டியா விரும்பினார். அதனால், அனைத்து தொடக்க பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிதறடிக்க வேண்டும் என்பதே ஹைதராபாத் அணியின் உத்தியாக இருந்தது.
இந்த உத்தியில் ஹைதராபாத்தும் வெற்றி பெற்றது. ஆனால் பும்ராவை தக்கவைத்துக்கொள்வது மும்பை அணியின் தற்காப்பு முடிவாகும், இது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் விமர்சிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பாண்டியா மீதான விமர்சனம்
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான டாம் மூடி ஹைதராபாத் இன்னிங்ஸின் நடுவே எக்ஸில் (முன்னர் ட்விட்டர்), “பும்ரா எங்கே? ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, உங்கள் சிறந்த பந்துவீச்சாளர் ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசியுள்ளார்.” என்று பதிவிட்டிருந்தார்.
பும்ரா நான்கு ஓவர்களில் 36 ரன்களை 9 என்ற எகானமி விகிதத்தில் கொடுத்தார், இது மும்பையின் பந்துவீச்சில் சிறந்த எகானமியாக இருந்தது.
பாண்டியா 4 ஓவர்களில் 46 ரன்களில் ஆட்டமிழக்க, பும்ராவுக்கு பதிலாக பந்துவீச்சைத் தொடங்கிய 17 வயதான குவேனா மஃபாகா 4 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியிலும் பும்ராவை கட்டுக்குள் வைத்திருந்த பாண்டியா, இந்த போட்டிக்கு பிறகு அவர் தனது தவறிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், ஹர்திக்கின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில், “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மிகவும் சாதாரணமாக இருந்தது. குறைந்த பட்சம் இவ்வளவுதான் சொல்ல முடியும். ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்து கொண்டிருந்த போது, பும்ராவை பந்துவீசாமல் தடுத்தது ஏன் என புரியவில்லை" என்றார்.
பதான் கூறிய அதே கருத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸை டேக் செய்து ட்வீட் செய்த அவர், “ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது என்பது கிரிக்கெட் விளையாட்டின் விசித்திரமான முடிவுகளில் ஒன்றாகும். ஹென்ரிச் கிளாசென் ஒரு அற்புதமான வீரர். ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் உள்ளார்” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
தனது முடிவுகள் குறித்து ஹர்திக் பாண்டியா கூறியது என்ன?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு, மும்பையின் பதிலடியும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். ஹர்திக் பாண்டியா மட்டும் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிந்ததும், பாண்டியாவிடம் 277 ரன்கள் எடுத்தது குறித்து கேட்டபோது, தனது பந்துவீச்சாளர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், போட்டியில் அவர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.
இது ஒரு துணிச்சலான பதிலாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு தோல்வியின் பின்னரும் அவர்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கும்.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளை பதிவு செய்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
மும்பை ஸ்லோ ஸ்டார்டர் (Slow starter) என்று அழைக்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லில் அணிகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சீக்கிரமாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது என்பதும் உண்மை.
“போட்டியில் வெல்வதன் மூலம் சமீபத்தில் தான் இழந்த அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் மீண்டும் வெல்ல, பாண்டியாவுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பு” என்று பாண்டியா பேட்டிங் செய்யும் போது கூறினார் கெவின் பீட்டர்சன்.
ஆனால் பாண்டியா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரசிகர்களின் இதயங்களை மீண்டும் வெல்ல பாண்டியா இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












