ராஜஸ்தானுக்கு வெற்றி தேடித் தந்த சாம்ஸனின் அபார ஆட்டமும் சிறந்த கேப்டன்சியும் - கடைசிக் கட்டத்தில் திருப்பம் தந்த அஸ்வின்

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சாம்ஸனின் பொறுப்பான பேட்டிங், போல்டின் துல்லியமான பந்துவீச்சு, டெத் ஓவர்களில் அஸ்வின், சந்தீப், ஆவேஷ் கானின் பந்துவீச்சு ஆகியவை ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

பட்லருக்கு தொடரும் சோகம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

கடந்த சீசனில் இருந்து தொடரும் ஓபனிங் சென்டிமென்ட் இந்தமுறையும் பட்லருக்குத் தொடர்ந்தது. பட்லர் 2 பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கினாலும் 11 ரன்கள் சேர்த்த நிலையில் நவீன் உல்ஹக் வீசிய 2வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

அடுத்து வந்த சாம்ஸன், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். ஜெய்ஸ்வால் கடந்த சீசனில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பேட்டிங்கால் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் தொடர்ச்சியாக, சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக வாய்ப்பு பெற்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அபார பார்மில் உள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் களம் கண்ட ஜெய்ஸ்வால், இந்த ஆட்டத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார்.

ஆனால், மோசின் கான் வீசிய 5-வது ஓவரில் மிட்ஆன் திசையில் குர்னல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 24 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பவர் ப்ளே ஓவருக்குள் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ரியான் பராக், வந்து சாம்ஸனுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

‘ஆங்கர் ரோலில்’ சாம்ஸன்

முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலைக்கு அணி வந்துவிட்டதால், ஆங்கர் ரோல் எடுத்து விளையாட வேண்டிய நிலைக்கு கேப்டன் சாம்ஸன் தள்ளப்பட்டார்.

3-வது விக்கெட்டுக்கு சாம்ஸன், ரியான் பராக் ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இதுபோன்ற தருணத்தைதான் எதிர்பார்த்திருந்தேன் என்பதைப் போல், சாம்ஸன் தனக்குரிய ஸ்டைலில் ஆட்டத்தை நகர்த்திச் சென்றார். தேவையற்ற ஷாட்களை ஆடாமல், மிகுந்த முதிர்ச்சியுடன் மோசமான பந்துகளில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன் ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிய ஷாட்கள் அடிப்பதைக் குறைத்து மிகவும் பொறுமையாக சாம்ஸனும், பராக்கும் பேட் செய்தனர்.

தாக்கூர் வீசிய 9-வது ஓவரை குறிவைத்த சாம்ஸன் 3 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்தது. பிஸ்னோய் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக், சாம்ஸன் தலா ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் சேர்த்தனர்.

ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் ரியான் பராக் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை மோசின்கான் தவறவிட்டது பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்க வைத்தது. அதிரடியாகவும், பொறுமையாகவும் பேட் செய்த சாம்ஸன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

ரியான் பராக் முதிர்ச்சி

நவீன் உல்ஹக் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் வீசிய 14-வது ஓவரில் ரியான் பராக் ஒருபவுண்டரியும், சிக்ஸரும் விளாசி, 5வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரியான் பராக் 43 ரன்னில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடந்த சில சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக எந்தப் போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை, வாய்ப்பும் பெரிதாக வழங்கவில்லை. ஆனால், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஃபார்மில் இருந்த பராக் முதல் ஆட்டத்தில் முதிர்ச்சியுடன் பேட் செய்துள்ளார். 3வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-பராக் கூட்டணி 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4வது விக்கெட்டுக்கு வந்த ஹெட்மெயரும் பெரிதாக நிலைக்கவில்லை. பிஸ்னோய் பந்துவீச்சில் 5 ரன்கள்சேர்த்தநிலையில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு வந்த துருவ் ஜூரெல் சிறிய கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். தாக்கூர் வீசிய 18-வது ஓவரில் சாம்ஸன் ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்களும் விளாசினர்.

நவீன் உல்ஹக் 19-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் ஏதும் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினார். மோசின் கான் வீசிய கடைசி ஓவரில் சாம்ஸன் சிக்ஸரும், ஜூரெல் பவுண்டரியும் விளாசினர். கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து(6 சிக்ஸர், 3பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜூரெல் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

போல்ட், பர்கர் மிரட்டல்

194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ஆட்டத்தைத் தொடங்கியது. குயின்டன் டீகாக், கேஎல் ராகுல் களமிறங்கினர். லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே டிரன்ட் போல்ட் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்தார். போல்ட் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டீகாக் 4 ரன்னில் பர்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த தேவ்தத் படிக்கல் நிலைக்கவில்லை. போல்ட் வீசிய 3வது ஓவரில் க்ளீன்போல்டாகி டக்அவுட்டில் படிக்கல் வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு பதோனி களமிறங்கி, ராகுலுடன் சேர்ந்தார். பந்துவீச்சிலும் மாற்றம் செய்யப்பட்டு பர்கர் அழைக்கப்பட்டார். பர்கர் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தைச் சந்தித்த பதோனி மிட்ஆப் திசையில் லட்டு போல் பந்தை பட்லரிடம் தூக்கிக் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

11 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது, கேப்டன் ராகுல் அதிரடியாக தொடங்கலாம் என்று நினைத்த நிலையில் மிகுந்த பொறுமையாக நிலைக்குத் தள்ளப்பட்டார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

சாம்சன் புத்திசாலித்தனமும் லக்னோ தடுமாற்றமும்

4வது விக்கெட்டுக்கு வந்த தீபக் ஹூடோ, ராகுலுடன் சேர்ந்து சிறிய கேமியோ ஆடினார். களத்துக்கு வந்தவுடனே ஹூடா பவுண்டரி, சிக்ஸர் என பர்கர் ஓவரில் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதன்பின ஹூடா, ராகுல் இருவரும் ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை 10க்கு குறையவிடாமல் கொண்டு சென்றனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பந்துவீச்சில் மாற்றம் செய்த சாம்ஸன், யுஸ்வேந்திர சஹலை அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. சஹல் வீசிய 8-வது ஓவரின் 3வது பந்தை மிட்விக்கெட் திசையில் ஹூடா தூக்கி அடிக்கவே, ஜூரெலிடம் பந்து தஞ்சமடைந்தது. ஹூடா 26 ரன்களில் சிறிய கேமியோவுடன் வெளியேறினார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

பூரன்-ராகுல் நம்பிக்கை

5வது விக்கெட்டுக்கு நிகிலோஸ் பூரன் களமிறங்கி ராகுலுடன் சேர்ந்தார். 2 ஓவர்கள் வரை பூரன் நிதானத்தை கடைபிடித்து, சஹல் வீசிய 10வது ஓவரில் சிக்ஸர் அடித்து கணக்கைத் தொடங்கினார். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 76 ரன்கள் சேர்த்தது. 12 ஓவரில் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது.

பர்கர் வீசிய 11வது ஓவரை ராகுல் கட்டம் கட்டி, கடைசி 3 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என17 ரன்கள் சேர்த்தார். போல்ட் வீசிய 13-வது ஓவரை பூரன் நொறுக்கி அள்ளினார். பூரன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 ரன்களை பூரன் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

வெற்றியை நோக்கி லக்னோ

பூரனும், ராகுலும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்ததால் ஆட்டம் மெல்ல, லக்னோ பக்கம் சாய்வதுபோல் இருந்தது. அதிலும் நிகோலஸ் பூரன் அடித்த ஷாட் ஒவ்வொன்றும் இடிபோல் இறங்கியது. இதனால் பந்துவீச்சில் மாற்றம் செய்த சாம்ஸன், சந்தீப் ஷர்மாவை அழைத்தார்.

தனது முதல் ஓவரை அற்புதமாக வீசிய சந்தீப் சர்மா, 15-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 5 ஓவர்களில் லக்னோ வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ராகுல், பூரன் தள்ளப்பட்டனர்.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப்

சஹல் வீசிய 16வது ஓவரில் பூரன் ஒரு சிக்ஸர் உள்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. 17-வது ஓவரை சந்தீப் சர்மா வீசியபோது அவரின் பந்துவீச்சுக்கு பலன் கிடைத்தது. ஆப்சைடில் விலக்கி வீசப்பட்ட அந்தபந்தை ராகுல் தூக்கி அடிக்கவே டீப் பாயின்டில் ஜூரெலிடம் கேட்சானது. ராகுல் 58 ரன்னில் ஆட்டமிழந்து வெறுப்புடன் வெளியேறினார். பூரன்-ராகுல் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தனர். பூரன் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அடுத்துவந்த ஸ்டாய்னிஷ் 3 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். அடுத்து குர்னல் பாண்டியா களமிறங்கினார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

ஆவேஷ் கான் அற்புதம்

கடைசி 2 ஓவர்களில் லக்னோ வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்களை பூரன் விளாசினார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் கடைசி ஓவரை வீசினார். அற்புதமாக வீசிய ஆவேசன்கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் பூரனைக் கட்டுப்படுத்தினார்.

பூரன் களத்தில் இருந்தவரை லக்னோ வெற்றிக்கு சாத்தியங்கள் இருந்தது. ஆனால், 17-வது ஓவரை அஸ்வின் வீசத் தொடங்கியதில் இருந்து, டெத் ஓவர்களை சந்தீப் சர்மாவும், ஆவேஷ் கானும் அற்புதமாக வீசி, லக்னோ பேட்டர்களைக் கட்டிப் போட்டனர். லக்னோ அணி கடைசி 5 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

பூரன் 64 ரன்களிலும், குர்னல் பாண்டியா 3 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

முதல் ஆட்டமும் சாம்ஸனின் அரைசதமும்

சாம்ஸன் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரம் இருக்கிறது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனில் இருந்து, தொடரின் முதல் ஆட்டம் அனைத்திலும் சாம்ஸன் அரைசதம் மற்றும் சதம் அடித்துள்ளார். 2020முதல் 2024 வரை ராஜஸ்தான் அணியின் முதல் ஆட்டத்தில் சாம்ஸன் அரைசதம் அடிக்காமல் இருந்தது இல்லை என்பது கூடுதலான தகவல்.

2020-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக 72 ரன்கள் சேர்த்த சாம்ஸன், 2021ம்ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சதம் அடித்து 119 ரன்கள் சேர்த்தார். 2022ம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிராக சாம்ஸன் 55 ரன்களும், 2022 சீசனின் முதல் ஆட்டத்திலும் சன்ரைசர்ஸுக்கு எதிராக 55 ரன்களும் சேர்த்தார். 2020 முதல் 2024 வரை அனைத்து சீசன்களின் முதல் ஆட்டத்திலும் சாம்ஸன் அரைசதம் அடித்துள்ளார்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

சரியாக பணியாற்றிய பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், பர்கர் இருவரும் சேர்ந்து முதல் 4 ஓவர்களில் லக்னோவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதே, லக்னோவின் ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டது. அந்த அணியை சரிவில் இருந்து மீட்க விடாமல் அடுத்தடுத்து வந்த வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் புத்திசாலித்தனமான பந்துவீச்சு மாற்றங்களால் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

நிகோலஸ் பூரன், ராகுல் இருவரும் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றபோது, டெத்ஓவர்களில் சந்தீப் சர்மா, அஸ்வின், ஆவேஷ் கான் பந்துவீச்சு ஒட்டுமொத்தமாக லக்னோ அணியை தோல்விக் குழியில் தள்ளியது. 18-வது ஓவரை அனுபவ சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினுக்கு சாம்ஸன் அளித்தது நல்ல பலனைத் தந்தது.

டெத் ஓவர்களில் அற்புதம்

அதிலும் சந்தீப் சர்மா டெத்ஓவர்களில் தனது முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோ ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். சந்தீப் சர்மா 3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ராகுல் விக்கெட்டை வீழ்த்தி தனது வேலை கச்சிதமாக முடித்தார். கடைசி ஓவரில் ஆவேஷ் கான் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடாமல் பூரனை கட்டிப்போட்டு வெற்றியை அணிக்கு பெற்றுக் கொடுத்தனர்.

இதுதவிர 18வது ஓவரை வீசிய அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோவை கூடுதல் நெருக்கடியில் தள்ளினார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 15 ஓவர்களுக்குப் பின் ஆட்டத்தை கையில் எடுத்து வெற்றியை வசப்படுத்தினர்.

RR vs LSG

பட மூலாதாரம், Getty Images

"வெற்றிக்கு உரித்தானவர் சந்தீப் சர்மா"

வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில் “ நான் முதல் போட்டியிலேயே வித்தியாசாமாக ஆங்கர் ரோல் செய்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வருகிறேன் என்பதால் அந்த அனுபவம் எனக்கு உதவியது. நல்ல தொடக்கம் எங்களுக்கு கிடைத்தது ஆனால், அதைக் கொண்டு செல்ல முடியவில்லை.

நம்முடைய பலம், பலவீனத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்தையும் கவனித்து அதற்கு ஏற்றார்போல் விளையாடினேன், அவசரப்படாமல் ஆடினேன். என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கு உரித்தானவர் சந்தீப் சர்மாதான். அவர் இங்கே இல்லை, அவரின் கடைசி டெத் ஓவர்கள் ஆட்டத்தை மாற்றிக்காட்டியது. எங்கள் திட்டப்படி அனைத்தும் நடந்தது” எனத் தெரிவித்தார்

முதலிடத்தில் ராஜஸ்தான்

இந்த ஆட்டத்தில் லக்னோ அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் ஒரு புள்ளி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறிய நிலையில் சாம்ஸன் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடியவிதம் கேப்டனுக்குரிய பொறுப்பை வெளிப்படுத்தியது. 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகிய சாம்ஸனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)