பத்மராஜன்: 240வது முறையாக தோல்வியடைந்த இவர் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

பத்மராஜன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்தல் மன்னன் பத்மராஜன்
    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக தேர்தல் காலம் என்றாலே பலருக்கும் கொண்டாட்டம் தான். நட்சத்திர வேட்பாளர்களில் தொடங்கி வித்தியாசமான வேட்பாளர்கள் வரை பலரையும் களத்தில் பார்க்க முடியும்.

பரபரப்பான பிரசாரம், மேடைப் பேச்சு, பேரணிகள், துண்டுப் பிரசுரங்கள், கலை நிகழ்ச்சிகள் என விதவிதமான நிகழ்வுகளைப் பார்க்க முடியும். இவற்றில் என்ன வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லா வேட்பாளர்களின் எண்ணமும் வெற்றியை நோக்கியதாக மட்டுமே இருக்கும்.

ஆனால், சேலம் மேட்டூரைச் சேர்ந்த கே.பத்மராஜனுக்கோ இலக்கு தோல்வி மட்டுமே. அதற்காகவே 1988ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை 239 தேர்தல்களில் போட்டியிட்டு இந்தியாவில் அதிக தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர்.

பஞ்சாயத்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் தொடங்கி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரை 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் வேட்பாளராகக் களம் கண்டுள்ளார் பத்மராஜன். ஆனால், இதுவரை இதில் எந்தத் தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றதே இல்லை.

இந்நிலையில் 240வது தேர்தலாக தற்போது நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தலிலும் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டுள்ள பத்மராஜன் இந்த முறையும் தோல்வியை தழுவியுள்ளார்.

மாலை 5 மணிநேர நிலவரப்படி அவரது வாக்கு எண்ணிக்கை 539 மட்டுமே. அந்த தொகுதியின் பிரதான வேட்பாளர்களான திமுகவைச் சேர்ந்த மணி 359,415 வாக்குகளும், பாமகவின் சௌமியா அன்புமணி 354,464 வாக்குகளும், அதிமுகவின் அசோகன் 240,101 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை 7629 என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மராஜன்

பட மூலாதாரம், PADMARAJAN

படக்குறிப்பு, கல்வியில் தனது பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாத பத்மராஜன் ஒரு சைக்கிள் கடை தொழிலாளியாகத் தனது வாழ்க்கையை தொடங்கியவர்.

உண்மையில் அவரது இலக்கே அதிக தேர்தலில் தோல்வி பெறுவதுதான் என்று புன்னகை உதிர்த்தவாறே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்மராஜன். இப்படி ஒரு வித்தியாசமான ஆசை யாருக்காவது இருக்குமா? நம்ப முடியாவிட்டாலும் இதுதான் நிஜம்.

பலராலும் ‘தேர்தல் மன்னன் பத்மராஜன்’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் தேர்தல் களத்திற்குள் நுழைந்தது எப்படி? அவர் சந்தித்த அனுபவங்கள் என்ன என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டோம்.

கல்வியில் தனது பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாத பத்மராஜன் ஒரு சைக்கிள் கடை தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இன்று தொலைதூரக் கல்வி வழியாக முதுகலை வரலாறு படித்து வந்தாலும் இன்னமும் சைக்கிள் கடையே அவரது பிரதான தொழில்.

இதுவரை அவர் போட்டியிட்டுள்ள 239 தேர்தல்களிலும் இந்தக் கடையில் வந்த வருமானம் மூலமாகவே செலவு செய்துள்ளார். அப்படி இதுவரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்து 1 கோடி வரை தேர்தல்களுக்காக செலவிட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

அதெல்லாம் சரி முதன்முதலில் எங்கிருந்து இவருக்கு இந்த தேர்தல் ஆசை பிறந்திருக்கும்? அதே சைக்கிள் கடையில் இருந்துதான் என்று 1988ஆம் ஆண்டில் அவரது வாழ்க்கையைத் திருப்பி போட்ட இடத்தைப் பற்றி கூறினார்.

முதன்முதலில் தேர்தலில் நானும் நிற்கப் போகிறேன் என்று அவர் சொன்னபோது, நீ ஒரு சைக்கிள் கடைக்காரன் நீயெல்லாம் தேர்தலில் நிற்க முடியுமா என்று நண்பர்கள் விளையாட்டாக கேலி செய்ததே அடுத்த 240 தேர்தல்களில் பத்மராஜன் போட்டியிடக் காரணமாக அமைந்தது.

பத்மராஜன்

பட மூலாதாரம், PADMARAJAN

படக்குறிப்பு, “நான் படிக்கிற காலத்தில் தந்தை மீது கோபம் இருந்தது. என்ன இவர் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது” என்கிறார் இவரது மகன் ஸ்ரீஜேஷ்.

"தேர்தல்களில் கண்டிப்பாக வெற்றி பெறமாட்டேன் என்று எனக்கே தெரியும். ஆனால், அதிலும் தனித்துவமாக ஒரு சாதனை புரிய வேண்டும். அதுதான் அதிக முறை தேர்தலில் தோல்வியுற்றவன் என்ற சாதனை. அதற்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் சளைக்காமல் போட்டியிடுகிறேன்," என்று இயல்பாகக் கூறுகிறார் அவர்.

சரி உங்கள் வீட்டில் யாரும் கண்டிக்கவில்லையா என்று கேட்டால், அதெல்லாம் எல்லா வீட்டையும் போல முதலில் எதிர்ப்பு கிளம்பினாலும் போகப் போக அவர்களும் புரிந்துகொண்டனர் என்கிறார்.

இவரது மகனும், எம்பிஏ பட்டதாரியுமான ஸ்ரீஜேஷும் தனது தந்தை குறித்து இதே கருத்துகளையே பகிர்ந்துகொண்டார். “நான் படிக்கிற காலத்தில் தந்தை மீது கோபம் இருந்தது. என்ன இவர் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் எனத் தோன்றியது.”

“ஆனால், வளர்ந்த பிறகுதான், சாதாரண மக்களும் தேர்தலில் நிற்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்திப் போராடி வரும் அப்பாவின் இலக்கு என்னவென்று புரிந்தது. அதன் பிறகு அவருக்கு முழு ஆதரவை வழங்கத் தொடங்கி விட்டேன்,” என்கிறார் ஸ்ரீஜேஷ்.

தேர்தலில் நிற்பது இந்த "தேர்தல் மன்னனுக்கு" பண இழப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை. சில நேரங்களில் பயத்தையும் காட்டியுள்ளது.

பத்மராஜன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்றைய பிரதமர் மோதியில் தொடங்கி முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் , வாஜ்பாய், பி.வி.நரசிம்மராவ் வரை எதிர்த்துப் போட்டி போட்டுள்ளார் பத்மராஜன்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஆந்திராவின் நந்தியால் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்துள்ளது. அப்போது பி.வி. நரசிம்மராவ் அந்தத் தொகுதியில் போட்டியிட, அதற்கெதிராகக் களம் கண்ட பத்மராஜனை வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டதாகக் கூறுகிறார்.

அங்கிருந்து எப்படியோ உயிர் பிழைத்து தப்பி வந்திருந்தாலும், அவரின் தேர்தல் தோல்வி ஆசை அவரை விட்டபாடில்லை. அதற்குப் பின் 230க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் வரை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார் இவர்.

அதில் இன்றைய பிரதமர் மோதியில் தொடங்கி (வதோதரா 2014), முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் (அசாம் 2007, 2013), வாஜ்பேயி (லக்னோ 2004), பி.வி.நரசிம்மராவ் (நந்தியால் 1996) வரை எதிர்த்துப் போட்டி போட்டுள்ளார்.

அதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே.ஆர். நாராயணன், அப்துல்கலாம், பிரதிபா பாட்டில், பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் தொடங்கி இன்றைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ வரை அனைவரையும் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.

பத்மராஜன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் முதல் தற்போதைய முதல்வர் வரை அனைவரையும் எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார் பத்மராஜன்.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கர்நாடகத்தில் சித்தராமையா, பசவராஜ் பொம்மை, குமாரசாமி, எடியூரப்பா, கேரளத்தில் பினராயி விஜயன், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆகியோரை எதிர்த்தும் போட்டி போட்டு வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவியுள்ளார் இவர்.

இத்தனை மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்கிறீர்களே இங்கெல்லாம் சென்று பிரசாரம் செய்வீர்களா என்றால், அங்கு செல்வதோடு சரி நான் யாரிடமும் வாக்கெல்லாம் கேட்பதில்லை என்கிறார் பத்மராஜன்.

தேர்தல் விதிமுறைகளுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் தொகுதிகளுக்குச் சென்று மட்டும் வருவதாகக் கூறுகிறார். அப்படியிருந்தும்கூட 2019ஆம் ஆண்டு வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 1887 வாக்குகளைப் பெற்றுள்ளார் இவர்.

அதேநேரம் அவரது சொந்தத் தொகுதியான மேட்டூரில் ஒரு வார்டு தேர்தலில் போட்டியிட்டபோது ஒரு வாக்குகூட இவருக்கு கிடைக்கவில்லை. இதுவரை இவர் பெற்றதில் அதிகபட்ச வாக்குகள் 6273. அதுவும் 2011இல் நடந்த மேட்டூர் சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகள்.

பத்மராஜன்

பட மூலாதாரம், PADMARAJAN

படக்குறிப்பு, பத்மராஜனின் கொள்கையே தேர்தலில் தோல்வி பெறுவதுதான்.

அப்படி என்ன கொள்கையைச் சொல்லி மக்களிடம் வாக்கு சேகரித்தீர்கள் என்று கேட்டபோது, இந்த வாக்குகள்கூட ஏதோ தெரியாமல் நோட்டாவுக்கு போடுவதற்குப் பதிலாக எனக்குப் போட்டிருக்கலாமே தவிர, நானாக வாக்கு சேகரித்து கிடைக்கவில்லை என்றே கூறுகிறார்.

அவருடைய கொள்கையே தேர்தலில் தோல்வி பெறுவதுதான் என்கிறார். அதற்குக் காரணம், “ஒரு தேர்தலில் எத்தனையோ பேர் போட்டியிடுகிறார்கள். அதில் பிரதான கட்சிகள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. இருப்பினும் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடிகிறது. எனவே, வெற்றி பெறும் மனநிலையையே நான் மாற்றிக் கொண்டேன். தோல்வி மட்டுமே நிரந்தர வெற்றி,” என்று கூறுகிறார் அவர்.

இத்தனை ஆண்டுகள், இத்தனை தேர்தல்கள் என அவர் போட்டியிட்டு சாதித்தவையும் சில உள்ளது.

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இவரும், 'அதிக தேர்தல்களில் தோல்வி பெற்றவர்' என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதே போல் ஒரு சில சாதனை பட்டியல்களிலும் இடம் பிடித்துள்ளார் பத்மராஜன்.

ஆனாலும், அவருக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அதிக தேர்தல்களில் போட்டியிட்ட மனிதர் என்ற சாதனையைப் படைக்க வேண்டும் என்பதே இலக்கு. ஏற்கெனவே ஒருமுறை முயற்சி செய்து அவருக்கு அது கிடைக்கவில்லை.

அதற்காக சோர்ந்து போகாமல் இந்த முறையும் 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகரமாக தோல்வியை தழுவியுள்ளார் இந்த ‘தேர்தல் மன்னன்.’

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)