கோவை தொகுதியில் உண்மையான போட்டி யாருக்கு இடையே? - மக்களும் வேட்பாளர்களும் கூறுவது என்ன? - பிபிசி கள ஆய்வு

கோவை தேர்தல் களம்
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகத்தில் அதிக கவனத்தை ஈர்த்த நாடாளுமன்றத் தொகுதியாக கோவை மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாகப் போட்டியிடும் திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி வாக்கு சேகரிக்கிறார்கள்?

களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவை தொகுதி அரசியல் களத்தில் மிகவும் கவனிக்கப்படும் தொகுதியாக உள்ளது.

பத்து ஆண்டுகளுக்குப் பின் கோவையில் திமுக நேரடியாக களமிறங்கி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் படித்த இளைஞரான சிங்கை ராமச்சந்திரன் களம் காண்கிறார். கோவையில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் களம் எப்படி உள்ளது?

கோவை தேர்தல் களம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவை நாடாளுமன்றத் தொகுதி கோவை தெற்கு, வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.

நாடாளுமன்ற தேர்தலும் கோவையும்

நூற்பாலைகள், மோட்டார் பம்பு செட் தயாரிப்பு, இன்ஜினியரிங் உற்பத்தி பொருட்கள், கிரைண்டர் உற்பத்திக்கு கோவை நகரம் பெயர் பெற்றது. பல லட்சம் பேருக்கு அவை வாழ்வாதாரமாக உள்ளன.

கோவை நாடாளுமன்றத் தொகுதி, கோவை தெற்கு, வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நடராஜன் 1.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் பிடித்திருந்தார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை ஏழு முறை கம்யூனிஸ்டுகள், ஆறு முறை காங்கிரஸ், இரண்டு முறை திமுக, இரண்டு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளன. 1998 கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு, 1996 மற்றும் 1980இல் மட்டுமே திமுக நேரடியாகப் போட்டியிட்டு வென்றுள்ளது. அதன்பின், 2014-இல் நேரடியாகப் போட்டியிட்ட திமுக மூன்றாவது இடத்தையே பிடித்தது.

கோவை அதிகம் கவனிக்கப்படும் தொகுதியானது ஏன்?

கோவை தேர்தல் களம்

பட மூலாதாரம், DMK / BJP / AIADMK

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோதி வாகனப் பேரணி நடத்தி தொடக்கி வைத்தார். அப்போதே அரசியல் களத்தில் கோவையின் மீதான கவனம் அதிகரிக்கத் துவங்கியது.

முதல் முறையாக கோவையில் பிரதமர் மோதி வாகனப் பேரணி நடத்தியபோதே அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேரணி முடிந்து சில தினங்களில் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் கோவையில் இருந்து அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இது ஒருபக்கமிருக்க, திமுக கடந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, 10 ஆண்டுகளுக்குப் பின் இம்முறை கோவையில் நேரடியாகப் போட்டியிடுகிறது.

அதிமுகவில் இருந்து வெளியேறி 2020இல் திமுகவில் இணைந்த கணபதி ராஜ்குமார், இம்முறை திமுக சார்பில் கோவையில் போட்டியிடுகிறார். இவர், அதிமுகவில் 2014இல் கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ஏற்கெனவே கவுன்சிலர், மேயர் என்பதால் தொகுதியில் அறியப்படும் வேட்பாளராக உள்ளார்.

கோவை தேர்தல் களம்
படக்குறிப்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடியான ஆதரவைப் பெற்ற ராமச்சந்திரன், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆதரவு பெற்ற வேட்பாளர்

அதிமுக சார்பில் 1991 – 1996ல் சிங்காநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ–வாக இருந்த சிங்கை கோவிந்தராஜின் மகனான சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடியான ஆதரவைப் பெற்ற ராமச்சந்திரன், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் இவரும் தொகுதிக்குள் அறியப்படும் நபராகவே உள்ளார்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை லக்னௌ ஐ.ஐ.எம்-இல் – (Indian Institute of Management) படித்தவர், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆமதாபாத் ஐ.ஐ.எம்-இல் படித்தவர், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பியல் (Journalism and Mass communication) துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர்களுக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சி சார்பில் 36 வயதான இளநிலை பட்டதாரி கலாமணி போட்டியிடுகிறார்.

கோவை தேர்தல் களம்
படக்குறிப்பு, பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தை விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தேர்தல் களத்தில் அண்ணாமலை என்ன செய்கிறார்?

கோவை தொகுதிக்குள் மூன்று வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதைக் காண முடிந்தது.

அதற்கு சளைக்காமல் பதிலளித்து வரும் அண்ணாமலை, திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தை விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

மருதமலை முருகன் கோவிலில் பிரசாரத்தைத் துவங்கிய அண்ணாமலை, ‘‘கோவையின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் போதைப் புழக்கத்தைத் தடுக்கவும், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அலுவலகம் (NCB) அமைக்கப்படும்,’’ என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஆனைமலையாறு நல்லாறு திட்டம், நொய்யல் நதி சீரமைப்பு, சிறு குறு தொழில்கள் மேம்பாடு, நீர் நிலைகள் பராமரிப்பு, கோவை கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பிரச்சினைக்குத் தீர்வு, காட்டுயிர்-மனித எதிர்கொள்ளலைத் தடுப்பது என்பன போன்ற வாக்குறுதிகளை முன்வைத்தும் பிரசாரம் செய்து வருகிறார்.

தென்னை விவசாயிகளைக் காக்க, டாஸ்மாக் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கோவை தேர்தல் களம்

அதிமுக – திமுக வேட்பாளர்கள் பிரசாரம் எப்படி?

வாக்கு சேகரிப்பின்போது அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், மத்தியில் ஆளும் பாஜகவையும் அண்ணாமலையையும் தாக்கிப் பேசுவதைத்தான் முதன்மையாக வைத்துள்ளார். அண்ணாமலை குறித்தான பேச்சுகள் மூலம் சமூக ஊடகங்களில் கவனம் பெறுகிறார். கடந்த முறை திமுக கூட்டணியில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நடராஜன் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்று கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அண்ணாமலை குறித்து நேரடி விமர்சனங்கள் எதையும் முன்வைப்பதில்லை. மாறாக திமுக நிறைவேற்றிய பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான உதவி, சிறு குறு தொழில்களுக்கான திட்டங்களை முன்வைத்தும், சில நேரங்களில் மத்திய பாஜகவை விமர்சித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.

கோவையின் உயிர்நாடியாக சிறு, குறு தொழில்கள் இருப்பதால், இரு வேட்பாளர்களுமே, ஜிஎஸ்டி அமலாக்கம், பண மதிப்பிழப்பு போன்றவை, சாதகமான தொழில் கொள்கைகளை பாஜக ஏற்படுத்தாமல் விட்டதால், கோவையில் உள்ள சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியும் வாக்கு சேகரிக்கின்றனர்.

மேலும், வெற்றி பெற்றால் இங்குள்ள சிறு குறு தொழில்களின் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு காண்போம் என இருவருமே ஒரே கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அதிமுக, திமுக வேட்பாளர்கள், அண்ணாமலை போட்டியிடுவதால் கோவையில் மும்முனை போட்டி நிலவுவதாகக் கூறப்படுவதை மறுத்தனர். கோவையில் திமுக vs அதிமுக என்ற சூழலே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

கோவை தேர்தல் களம்
படக்குறிப்பு, "கோவை தொகுதியைப் பொறுத்தவரை, அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடிப் போட்டி,’’ என்கிறார் சிங்கை ராமச்சந்திரன்.

‘பாஜக நோட்டாவுடன் தான் போட்டியிட்டுள்ளது’

‘பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், ‘‘கோவையில் மும்முனை போட்டி என்பதே தவறான கருத்து. மும்முனைப் போட்டி என்ற கூறினால் ஏன் பாஜகவைவிட அதிக வாக்கு சதவீதத்தை வைத்துள்ள நாம் தமிழர் கட்சியை விட்டுவிடுகிறீர்கள்.

நான்கு முனைப் போட்டி என்றுதானே சொல்ல வேண்டும்? பாஜக நாம் தமிழர் கட்சியைவிடக் குறைவாக வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், நோட்டாவுடனும்தான் போட்டியிட்டுள்ளது. கோவை தொகுதியைப் பொறுத்தவரை, அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் நேரடிப் போட்டி,’’ என்கிறார்.

மேலும், ‘‘எம்.பி.யாக தேர்வானால் உண்மையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை முன்வைத்தும், பாஜக மற்றும் திமுகவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் பேசி வாக்கு சேகரித்து வருகிறேன். கடந்த கால சட்டமன்ற தேர்தல்களின் எங்களுக்குத்தான் மக்கள் பேராதரவைக் கொடுத்துள்ளனர். கோவை அதிமுகவின் கோட்டை, இந்த முறை நாங்கள் வெல்வோம்,’’ என்கிறார் அவர்.

கோவை தேர்தல் களம்
படக்குறிப்பு, கோவை அதிமுகவின் கோட்டை என்ற சிங்கை ராமச்சந்திரன் கருத்தை மறுக்கிறார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்.

‘அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடிப் போட்டி’

பிபிசி தமிழிடம் பேசிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், ‘‘பாஜகவிற்கு கோவை நகரத்தினுள் வேண்டுமென்றால் சிறிய அளவில் செல்வாக்கு இருக்கலாம். ஒட்டுமொத்த நாடாளுமன்றத் தொகுதியில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை. இதனால், அதிமுகவிற்கும் திமுகவிற்கும்தான் நேரடிப் போட்டி,’’ என்கிறார் அவர்.

கோவை அதிமுகவின் கோட்டை என்ற சிங்கை ராமச்சந்திரன் கருத்தை மறுக்கிறார் கணபதி ராஜ்குமார்.

அதுகுறித்துப் பேசிய அவர், ‘‘கடந்த காலம் வேறு நிகழ்காலம் வேறு. கோவையில் திமுகவிற்கு பெரிய அளவில் செல்வாக்கு கிடைத்துள்ளது, உள்ளாட்சி தேர்தல்களின் வெற்றியிலேயே அதை நாம் பார்க்க முடியும்.

நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். பாஜகவினர் என்ன சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் வெற்றி பெற்றால் கோவையை வளர்ச்சியடையச் செய்வோம்,’’ என்கிறார் கணபதி ராஜ்குமார்.

கோவை தேர்தல் களம்
படக்குறிப்பு, தேர்தலில் வேட்பாளரைவிட கட்சியைப் பார்த்துதான் வாக்களிப்பேன் என்கிறார் கம்மங்கூழ் கடை நடத்தி வரும் ராஜ்.

தொகுதியில் மக்களின் மனநிலை என்ன?

தொகுதியில் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, பிபிசி தமிழ் பல வாக்காளர்களிடம் பேசியது.

கோவை ஆவராம்பாளையத்தைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கணேஷ், ‘‘சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை அறிந்து, அவரின் செயல்பாடுகளை அறிந்து நான் வாக்களிப்பது வழக்கம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர் யார் என்பது எல்லாம் எனக்கு முக்கியமில்லை, கட்சியைப் பார்த்துதான் வாக்களிப்பேன்,’’ என்கிறார்.

அதே பகுதியில் உணவகத்தில் பணியாற்றும் மகேஸ்வரி, ‘‘பேருந்தில் தினமும் கட்டணமின்றி வந்து செல்கிறேன். இதன் மூலம் மட்டுமே மாதம் 700 ரூபாய்க்கு மேல் மிச்சமாகிறது. மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற்றுள்ளேன். அதேநேரம் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் பெற்றுள்ளேன்.

எந்தக் கட்சியிடம் நான் திட்டங்கள் பெற்றிருந்தாலும் நான் சொந்தமாக வாக்களிக்க முடிவெடுப்பது இல்லை. எனது கணவர் சொல்லும் கட்சிக்குத்தான் பல ஆண்டுகளாக வாக்களித்து வருகிறேன்,’’ என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை கணபதி பகுதியில் கம்மங்கூழ் கடை நடத்தி வரும் ராஜ், ‘‘கோவையில் அதிமுக, திமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏற்கெனவே கணபதி ராஜ்குமார் மேயராக இருந்ததால் அவரைத் தெரியும், அண்ணாமலை குறித்து தெரியும், மற்ற வேட்பாளர்கள் குறித்துப் பெரிய அளவில் எதுவும் தெரியாது. கட்சியைப் பார்த்துதான் வாக்களிப்பேன்,’’ என்றார்.

கோவை தேர்தல் களம்
படக்குறிப்பு, எங்களுக்கான உரிமைகளை நாடாளுமன்றத்தில் பேசி, உதவிகளைப் பெற முயலத் தகுதியான வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்கிறார் ஜேம்ஸ்.

தொழில்துறையினர் கூறுவது என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய கோவை கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத் தலைவர் ஜேம்ஸ், ‘‘பாஜக சிறு, குறு தொழில்துறையை முறையாகக் கண்டுகொள்ளாமல் விட்டதால் கோவையின் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாநில திமுக அரசின் மின் கட்டண உயர்வாலும் நாங்கள் பாதித்துள்ளோம்.

எங்களுக்கான உரிமைகளை நாடாளுமன்றத்தில் பேசி, உதவிகளைப் பெற முயலத் தகுதியான வேட்பாளருக்கு வாக்களிக்கும் மனநிலையில்தான் கோவையின் பெரும்பாலான சிறு, குறு தொழில்துறையினர் உள்ளனர்.

அதேநேரம், பாஜக அல்லது திமுகவிடம் நேரடியான நட்பில் உள்ள சொற்ப அளவிலான தொழில்முனைவோர், எந்தப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கே வாக்களிக்கலாம் என்ற மனநிலையில் உள்ளனர்,’’ என்கிறார் ஜேம்ஸ்.

கோவை தேர்தல் களம்

பட மூலாதாரம், PRIYAN

படக்குறிப்பு, வேலுமணி அண்ணாமலை குறித்து நேரடியாக விமர்சிக்காமல், வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை வைத்து விமர்சித்து வருகிறார் என்கிறார் பிரியன்.

‘அண்ணாமலையின் தனிப்பட்ட தாக்குதல் எடுபடாது’

மும்முனைப் போட்டிச் சூழல் குறித்து மூத்த செய்தியாளரான ப்ரியன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ‘‘கோவையைப் பொறுத்தவரை அண்ணாமலை போட்டியிடுவதில் அவர்களின் கட்சிக்குள்ளேயே அதிருப்தி இருப்பதையும், கோவையின் அரசியல் முகமாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியும் அவர் போட்டியிடுவதை விரும்பவில்லை என்பதையும் நாம் உணர முடிகிறது," என்கிறார்.

"வேலுமணி அண்ணாமலை குறித்து நேரடியாக விமர்சிக்காமல், வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை வைத்து விமர்சித்து வருகிறார். ஆனால், இதற்கு அண்ணாமலை எதிர்வினையாற்றும் விதம் அடாவடித்தனமாக உள்ளது," என்கிறார் அவர்.

"ஏனெனில் ஆரம்பம் முதலே தனிநபர் தாக்குதல், அது குறித்தான பொய்களைக் கூறும் அண்ணாமலை, அதை கோவை தொகுதி தேர்தலிலும் செயல்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. அண்ணாமலையின் இந்த உத்தியை, சில இளைஞர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடுகின்றனர். ஆனால், இது மாதிரியான மனப்போக்கு நீண்ட காலத்திற்கு உதவாது, தேர்தலில் எடுபடாது,’’ என்கிறார் ப்ரியன்.

தொடர்ந்து பேசியவர், ‘‘இது ஒருபுறமிருக்க சாதிரீதியாகப் பார்த்தால், கவுண்டர்கள் வாக்கு அண்ணாமலை மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு பிரிந்து செல்லும். பாஜக மீது அதிருப்தியில் உள்ள கவுண்டர்கள், சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் மாற்று சமூக வாக்குகளைக் கவர அதிக வாய்ப்புள்ளது,’’ என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)